அம்பு வேண்டுமா, அன்பு வேண்டுமா?

-இசைக்கவி ரமணன்

சென்னையில் 15.06.2025அன்று நடைபெற்ற படைப்பாளர்கள் சங்கமத்தில் நிறைவுரையாற்றிய எழுத்தாளர் திரு. இசைக்கவி ரமணன் உரைக்கு முத்தாய்ப்பாகப் பாடிய பாடல் இது….

அகமும் புறமும் அறமே நெறியென
சுகமாய் வாழ்ந்த சுதந்திர நாடு!
சுகமும் துயரும் சூழ்நிலை என்றே
சொல்லிக் கொடுத்த சுந்தர வீடு!
இகத்தில் பரமும் பரத்தில் இகமும்
இணைத்துப் பழகிய ஞானக் கோடு!
அகத்தி லிருத்தி அம்மா வென்றே
அல்லும் பகலும் அழகாய்ப் பாடு!

வந்தே மாதரம்! ஜெய ஜெய
வந்தே மாதரம்!

பாரெனும் மங்கையின் பரந்த நெற்றியில்
பாரதம் தானடி சிந்தூரம்! அது
யாரையும் அணைக்கும், யாரையும் வெல்லும்,
அச்சம் நமக்கு வெகுதூரம்!
ஊரென உறவென உள்ளே வந்தால்
உள்ளன் போடு வரவேற்கும், அது
போரென வந்தால் புடைத்து நொறுக்கிப்
புல்லரைப் புழுதியில் புரளவிடும்!

வந்தே மாதரம்! ஜெய ஜெய
வந்தே மாதரம்!

ஒருநூ றாயிரம் நதிவளைந்தாலும்
ஒற்றைக் கடலில் தான் சேரும்…
ஒற்றுமை யைப்பகை முற்றுகை யிட்டால்
ஒருகுர லில்தான் பேசும்!
அருச்சுனனின் வில், அச்சுதனின் சொல்
காயவே இல்லை ஈரம்!
அம்பு வேண்டுமா, அன்பு வேண்டுமா?
அவரவர் விருப்பம் நிறைவேறும்!

வந்தே மாதரம்! ஜெய ஜெய
வந்தே மாதரம்!

ஒற்றைச் சாமி ஆயிரம் விதமாய்
உவந்த ளித்த பூமி!
ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வொரு பாதை
உரிமை கொடுத்த பூமி!
இற்றைத் திங்களில் அற்றைக் கவிதையை
இணைத்து ரசித்த பூமி!
எங்கள் பாரத பூமி! இதிலே
எல்லா உயிரும் சாமி!

வந்தே மாதரம்! ஜெய ஜெய
வந்தே மாதரம்!

அலைவா யிலிலே அவுணரைக் கொன்றே
அனலுற நிற்பவன் செந்தூரன்!
மலையுச் சியிலே மலினரை வென்றே
மதர்ப்புடன் நிற்பவன் சிந்தூரன்!
தொலைவினி லேயொரு துந்துபி நாதம்
‘தும் துர்காயை’ என்னும்!
உலகம் அனைத்தையும் ஊடுருவும் கனல்
உதித்த பாரதம் வெல்லும்!

வந்தே மாதரம்! ஜெய ஜெய
வந்தே மாதரம்!

$$$

Leave a comment