நற்றமிழ் ஏடுகளில் நால்வர் பெருமக்கள்

-கருவாபுரிச் சிறுவன்

சமயக்குரவர்கள் நால்வர் குறித்து வெளியாகியுள்ள தமிழ் நூல்களை இயன்ற வரை தொகுத்து காட்டுகிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்...

சைவப் பெருமைத்தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துள்ளார்க்கு வகுத்து வைத்தானே!

    -திருமூலதேவ நாயனார்

தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்றாள் தமிழ் மூதாட்டி ஒளவையார். அடியார்களின் பாதத்துளி அடியேனின் சிரத்தில் கொள்வேன் என்றார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

தமிழ் இலக்கியத்தின் செழுமைக்குக் காரணமான இலக்கண நூல்களில் ஒன்றாகிய தண்டியலங்காரத்தில் சூரிய பகவானைப்பற்றி  இடம் பெற்ற  பாடல் ஒன்று படித்து இன்புறத்தக்கது. 

ஓங்கல் இடை வந்துயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர்ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது
தன்னேர் இலாத தமிழ்.             

எட்டாம் நூற்றாண்டிற்கு முன்பே இருந்து  எழுந்த இப்பாடல் சொல்ல வரும் கருத்து உறுத்துமிக்கது.  இருளைப் போக்கக் கூடிய ஆற்றல் சூரிய பகவானுக்கும் தமிழ் மொழிக்கும் உண்டு என்கிறார் பெயர் தெரியாத புலவர்.

அதன்பின்  பின்னாளில் அடியார்களின் வரலாற்றினை இவ்வுலகிற்குச் சொல்ல வந்த தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்  அந்த அக, புற இருளைப் போக்கக்கூடியது ஒரே ஒரு சூரிய பகவானின் ஆற்றல்  திருத்தொண்டர் புராணத்திற்கு உண்டு என்கிறார். 

இங்கிதன் நாமம் கூறின்
 இவ்வுலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டின் மாக்கள்
 சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைய புற
 இருளைப் போக்குகின்ற
செங்கதிரவன் போல் நீக்கும்
 திருத்தொண்டர் புராணம் என்பாம்.

இதிலுள்ள சைவசமய உறைப்பையும்,  தண்தமிழையும் எக்காலத்திலும்  பிரிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட சிறுமதியுடைய குள்ளநரிக்கூட்டங்கள் மொழிவாரியாக, சமயம் வாரியாக… அரசியல் செய்கிறார்கள். இது ஒரு புறம் இருக்கட்டும். பின்னர் விரிவாகச் சிந்திப்போம்.

தமிழ், சமய, நூற்றாண்டு இலக்கிய வரலாறுகள், சமூகம் நூற்றாண்டு, பண்பாடு, மன்னர்களின் வரலாறுகள் போன்றவற்றை எழுதிய, எழுதும் ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் நால்வர் பெருமக்களைத்  தொட்டு  எழுதாமல் இருக்க முடியாது.

திருஞான சம்பந்த நாயனார், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள் ஆகியோரை வணங்கி வழிபட்டு அவருடைய வாக்குகளை மேற்கோள் காட்டி  எழுதக்கூடிய நூலே மெய்மையான நூல் என்பதை முதலில் இங்கு நினைவில் கொள்ளுதல் அவசியமானதாகும்.

காலந்தோறும் முதல் மூவர் என்றும், மாணிக்கவாசகர் என்றும் தனித்தனியே இல்லாமல் நால்வர் பற்றிய வரலாறுகளையும், அவர்களுடைய சரிதங்களை பாடல்களாகவும், வசனங்களாகவும்  வெளிப்படுத்திய ஒரு தொகுப்பினை முடிந்தளவு முழுமையாக காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இதுவே முழுமையன்று.  குற்றம் இருப்பின் கற்றறிந்த சான்றோர்கள் பொறுத்தருளுக.

திருவருணைக் கலம்பகம்

சைவத்தின் மேற்சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம்
தெய்வத்தின் மேற்தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள்
வாய்மை வைத்த சீர்திருத்தேவாரமும் திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம்முயிர்த்துணையே!

     -சைவ எல்லப்ப நாவலரவர்கள்

1. திருத்தொண்டர்  புராண சாரம்

சித்தாந்த சாத்திரங்களில் அட்டக நூல்களை அருளிச் செய்தவரும், கொற்றன்குடியில் வாழ்ந்த சிவாசாரியார்களின்  குல திலகருமாகியவர்  உமாபதி சிவாசாரிய சுவாமிகள்.

வேத, ஆகம, புராண, இதிகாசங்களில் தோய்ந்து சிவஞானம் கைவரப்பெற்ற அருளாளர்களில் இவரும் ஒருவர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் அருள் வரலாற்றினை சுருக்கமாகக் கூறும் ஒரு ஒப்பற்ற நூல்  ‘திருத்தொண்டர் புராண சாரம்’.  இதில் பாயிரம், தேவார மூவரையும் சேர்த்து 83 செய்யுள்களை உள்ளடக்கியது. 

இந்நூலின் மூலம் திருத்தொண்டர்  புராணத்தின் முக்கியத்துவத்தை அடியார்களுக்கு உணர்த்துகிறார் சிவாசாரிய சுவாமிகள். மேலும் அவர்கள்  அருளிச்செய்த நூல்கள்:

* தேவார அருண்முறை திரட்டு

* ஞான ஆச்சார சாஸ்திர பஞ்சகம்

* திருமுறை கண்ட புராணம்

* கோயில் புராணம்  

* தெய்வச்சேக்கிழார் சுவாமிகள் புராணம்

* திருப்பதிகக் கோவை

* பெளஷ்கர சங்கிதா பாஷ்யம் 

-என்பவனாகும்.

சிவாசாரிய சுவாமிகள் அருளிய திருத்தொண்டர் புராண சாரத்தில் மாணிக்கவாசகரின் புராண சாரத்திற்கான செய்யுள் இல்லையே என்ற எண்ணம் வரலாம்.

அதற்கு தேவக்கோட்டை சிவாகமச்சங்க பொ. முத்தையாபிள்ளையவர்களும்,  அவர்களுடைய உழுவலன்பருமாகிய வன்தொண்டரின் மாணவர் சொக்கலிங்க செட்டியார் அவர்களும் பதிப்பித்த திருத்தொண்ட புராண சார விளக்கத்தில் மாணிக்க வாசகருக்குரிய வரலாற்றுத்துதி உள்ளது  என்பதை எண்ணி மகிழ்வோமாக.

2. நால்வர் நான்மணிமாலை

15 – 17 நுாற்றாண்டுகளில் அந்நியரின் ஆதிக்கம் அதிகமான போது தென்திசையில் (ஸ்ரீ வைகுண்டம்) இருந்து குமரகுருபரர் என்ற அருள்மேகமும், வடபகுதியில் (காஞ்சிபுரம்) இருந்து சிவப்பிரகாசர் (கி.பி. 1603 – 1654) என்ற ஞான ஒளியும் தோன்றி ஹிந்து மதத்தினைக் காத்து புரந்தருளியது. 

ஊனமில்லாத ஞான நெறி காட்ட வந்த மெய்ஞானிகள் வரிசையில் அணிசெய்யக் கூடியவர் சிவப்பிரகாச சுவாமிகள் ஆவார்.

இப்பெருமான் தமிழ், கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழியிலும் பாண்டித்தியம் பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

இப்பெருமானை நன்னெறி சிவப்பிரகாசர், கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாசர், துறைமங்கலம் நல்லாற்றுார் சிவப்பிரகாசர்,  கவிசார்வ பெளமர் என்றும் அழைப்பார்கள்.

இவர் தோத்திரம், சாத்திரம் , காவியம், சிற்றிலக்கியம் என 34  நுாற்களை இவ்வுலக மக்கள் உய்யும் பொருட்டு அருளிச் செய்துள்ளார்; புரட்டாசி பெளர்ணமி நன்னாளில் சிவஜோதியானார்.

தொன்னூற்று ஆறு வகையான சிற்றிலக்கியங்களில்  நான்மணி மாலையும் ஒன்று. இது வெண்பா, கட்டளை கலித்துறை, விருத்தம், அகவல் என நான்கு பாவினங்களும் ஒன்றான் பின் ஒன்றாக மாறி மாறிக் கலந்து நாற்பது பாடல்களை கொண்டது.  இதனை முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்ற நான்கு  ரத்தினங்களுக்கு நிகராகச் சொல்லுவார்கள்.

இவ்வுலகம் உய்யத் தோன்றிய நமது நால்வர் பெருமக்கள் மீது நான்மணி மாலை இயற்றி ஹிந்து மதத்தின் நிரந்தரக் காவலானாய் திகழ்கிறார்,  நமது கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள். 

3. நால்வர் நான்மணிமாலை – ஆய்வு

மயிலை  பொம்மபுரத்து ஆதினத்தின் வெளியீடாக 1994ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது  ‘ நால்வர் நான்மணி மாலை’ என்னும்  ஆய்வு நுால்.

இவ்வாதினத்தின் 19 வது பட்டம் அருளாணையின் வண்ணம் சிவ. ராஜேந்திரன், சு. திருநாவுக்கரசு, இரா. இராமன் ஆகியோரின் பங்களிப்பின்  மூலம் செம்மையான கருத்துச் செறிவுகளோடு  225 பக்கங்களுக்கு மிகாமல்  இந்நுாலினை உருவாக்கியுள்ளார்கள்.   இதுவே நால்வர் பெருமக்களைப் பற்றி வந்து முதல் ஆய்வு நூல் எனலாம்.

4. நால்வர் நான்மணி மாலை – விருத்தியுரை

ஈசானிய மடம் ராமலிங்க தம்பிரானின் உரை, யாழ்ப்பாணம் வண்ணைநகர் சுவாமிநாத பண்டிதரின் குறிப்புரை,க.வ. திருவேங்கட நாயுடு அவர்களிடம் இருந்து பாடம் கேட்ட அனுபூதி ஆகியவற்றை கொண்டு 1966 ம் ஆண்டு  சென்னை கொ. ராமலிங்க தம்பிரான் அவர்கள் நால்வர் நான்மணி மாலைக்கு விருத்தியுரை  ஒன்றை எழுதி வெளியீடு செய்துள்ளார்கள்.

 இது சென்னை பல்கலைக் கழகம் நடத்திடும் வித்வான் தேர்விற்கு பாடமாக வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

தெய்வச் சேக்கிழார் புராணம்

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலுார் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி! 

      -உமாபதி சிவாசாரிய சுவாமிகள்

5. திருவருட் பிரகாச ராமலிங்க வள்ளல் சுவாமிகள்  

  • எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க…
  • கொல்லா விரதம் குவலயம் எல்லாம் விளங்குக…
  • அருள் நெறி எங்கும் தழைத்தோங்குக…
  • அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை
  • வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்…

-என இத்தரணியில் புகழ் பெற்று விளங்கும் இத்தாரக மந்திரங்களுக்கு சொந்தக்காரர் கருங்குழி  பிள்ளையவர்கள். 

தமிழ் இலக்கிய ஆன்மிகவாதிகளால் அன்போடு அழைக்கப்பெற்ற வடலுார் ராமலிங்க சுவாமிகள் என்னும் வள்ளல் பெருமான் நம் நால்வர் பெருமக்கள் மீது…

* ஆளுடைய பிள்ளையார் அருண் மாலை

* ஆளுடைய அரசுகள் அருண் மாலை

* ஆளுடைய நம்பிகள் அருண் மாலை

* ஆளுடைய அடிகள் அருண்மாலை

என்ற தலைப்புகளில் நால்வர் பெருமக்களை பத்து பத்து பாடல்களில்  துதித்துப் போற்றியுள்ளார்.

6. நால்வர் மீது பதிகங்கள்

ஆங்கிலேய காலத்தின் அரசுப் பணியாளர் ஒருவர். திருவொற்றியூரில் நடைபெறும் பங்குனி உத்திர திருநாளுக்கு விடுப்பு கேட்டார். தரமறுத்தனர் பறங்கியர்கள். அவ்வளவு தான் வேலையைத் துறந்து விட்டு முழு நேரமும் சைவ சமயப்பணி ஆற்றினார். தனித்தமிழ் இயக்க மறைமலை அடிகளாரின் குரு நாதர் இவரே.  இவருடைய சொற்பொழிவினைக் கேட்ட பின்பு தான் திரு.வி.க.விற்கு பேச்சாற்றலின் மீது ஈர்ப்பு வந்தது என ஒரு கட்டுரையில் கூறியுள்ளார். காலம் தவறாத பண்பினர். கண்ணியம் மிக்கவர். சுவாமி விவேகானந்தருக்கு சைவ சமயம் பற்றிய அரிய கருத்துக்களை எடுத்துரைத்த நாயகர் சூளை சோமசுந்த நாயக்கர் பெருமகனார் ஆவார்.

இப்பெருமானார் நால்வர் பெருமக்கள் மீது  தனித்தனியாக பத்து பாடல்கள் வீதம் பதிகம் இயற்றி  சமயக்குரவர்களை போற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. நால்வர் பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ் நூல் என்பது பருவத்திற்கு பத்து பாட்டு வீதம் பத்து பருவத்திற்கு நூறு பாடல்களைக்  கொண்டது என்பது அனைவரும் தெரிந்த ஒன்றாகும்.

ஆனால் இந்நுாலில்  ஒவ்வொரு பருவத்திற்கு ஒரு பாடல்கள் வீதம் பத்து பாடல்களைக்  கொண்டது ஒருவருக்குரிய பிள்ளைத்தமிழ்.

இப்படி நால்வர் பெருமக்களுக்கும்  நாற்பது பாடல்களைக் கொண்டு, வெவ்வேறு ஆசிரியர்களால் பாடப்பெற்றது நால்வர் பிள்ளைத்தமிழ்.

தணிகை மணி வ. சு. செங்கல்வராயப் பிள்ளை-  திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழையும், திருக்காட்டுப்பள்ளி மு. கோ. ராமன்-  திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழையும்,  புதுக்கோட்டை தமிழ் கல்லுாரி வித்துவான் கனகராஜ ஐயர் -சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிள்ளைத்தமிழையும்,  உ.வே. சாமிநாதய்யரின் மாணவர்களில் ஒருவராகிய அரங்கநாதபுரம் வே. முத்துச்சாமி ஐயர் -மாணிக்கவாசக சுவாமிகள் பிள்ளைத்தமிழையும் இயற்றியுள்ளார்கள்.

இதற்கு பாம்பன் சுவாமிகளின் சீடர்களில் ஒருவராகிய ச.சச்சிதானந்தம் பிள்ளை மதிப்புரை தந்துள்ளார்கள்.

காஞ்சிபுரம் முருகேச செட்டியார் அவர்கள் இந்நூலைப்பதிப்பித்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேருபகாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. நால்வர் தாலாட்டு

நல்ல தமிழ் நூற்களை அச்சிட்டு சைவத்தமிழறிஞர்களுக்கு உபகாரம் செய்து வரும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் பணி  இன்றும் போற்றத்தக்கது.

நம் சமயக்குரவர்களான நால்வர் பெருமக்களுக்கு 1929 ஆம் ஆண்டு  ‘நால்வர் தாலாட்டு’ என்ற தலைப்பில் ஒரு சிறு நூல் ஒன்றினை அச்சிட்டு வெளியீடு செய்துள்ளார்கள். ஆனால் இதன் கீர்த்தி அளவிடற்கரியது என்பதை அனுபவிப்பவர்கள் உணருவார்கள். 

இயற்றிய ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை.  முதலில் நால்வர் பற்றிய ஒரு துதிப்பாடல். அதன் பின் நால்வர் பெருமக்களுக்கும் தனித்தனியே தாலாட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.   இது 12 கண்ணிகளை  உடையது. படிப்பதற்கு பொருள் நயமும் சொல் நயமும் கொண்டது  நால்வர் தாலாட்டு.

நமது  குழந்தைகள் நாடு போற்றும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் திகழ நால்வர் தாலாட்டுப் பாடல்களைப் பாடி  தாலாட்டலாமே.

9. நால்வர் சரித்திரம் (8 – 2 – 1924)

மா. துரைச்சாமி முதலியார் என்பவர் நால்வர் திருவுருவப்படங்களுடன் மாணவர்களும், மக்களும் நால்வர் பெருமக்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நுாலை அச்சிட்டு வெளியீடு செய்துள்ளார். 160 பக்கங்களைக்  கொண்டது. அன்றைய கால எளிய தமிழில் இந்நுால் அமைந்திருப்பது நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதமாகும். 

10. நால்வர் சரித்திரமும் அற்புதத் தேவார திரட்டும்

தமிழகத்தில்  நூற்றாண்டு கண்ட சபைகளில் தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையும் ஒன்று. இச்சபையின் தலைவர் நல்லபெருமாள் பிள்ளை அவர்களின் அறுபதாண்டு விழா ஞாபகார்த்தமாக  நால்வர் சரித்திரமும் அற்புதத் தேவாரத்திரட்டும் நுால் விழா மலராக மலர்ந்தது.

இதனைக் கண்ணுற்ற அன்றைய தருமை ஆதினகர்த்தா அவர்களின்  அருளாணையின் வண்ணம் சைவ மக்கள் யாவரும் பயனுறும் பொருட்டு 1941இல் ஆவணி மூலத்திருநாள் அன்று மீண்டும் வெளியீடு செய்தது ஈசன் செயலன்றோ.

இதில் நால்வர் பெருமக்களின் வரலாற்றினை சித்தாந்தச் செல்வரும், உண்மையான சைவ சமய ஆராய்ச்சியாளர்களின் குலதெய்வமாகிய  ம.பாலசுப்பிரமணிய முதலியார் எழுதி இருக்கிறார்.

இவ்வுலகம் இன்றும் உயிர்ப்போடு இயங்குகிறது என்பதற்கு மூலகாரணமாக அமைந்திருப்பது  நமது ஆதின குரு மூர்த்திகளின் ஞானப்பணிகள். அவற்றில் ஒன்று திருநூற்களை அச்சிடுவது,  திருநூற்களை அருளிச் செய்வோரை ஊக்குவிப்பது, அப்பணி புரிவோரை வாழ்நாள் முழுவதும் புரந்தருளி பேணிக் காப்பது என பல பணிகளை  தமக்கே உரிய பாணியில் செய்வது நம் ஆதின திருமடாலயங்கள் என்பதை இவ்விடத்தில் நாம் சிரத்தையோடு நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்நூலினை இன்றும் நாம் வசித்து பூசித்து மகிழ நாம்  கடப்பாடுடையவர்களாக எஞ்ஞான்றும் இருக்க நால்வர் பொற்றாளிணை தினமும் தொழுது உய்வோமாக.

சைவ பூஷணம்

சீர்பூத்த காழிநகர் சிவஞான சம்பந்தர் திருத்தாள் போற்றி
கார் பூத்த கடல் மிதந்த கவிநாவுக்கரசரது கழல்கள் போற்றி
பேர்பூத்த திருத்தொண்டத் தொகை விரித்த பெரியவர் தம் பூந்தாள் போற்றி
ஏர்பூத்த மாணிக்கவாசகனார் இணையடிகள் என்றும் போற்றி!

      -நா.வே.கதிர்வேற் பிள்ளை

11. சமயாசாரியர் சந்தானாசாரியர் சரித்திர சங்கிரகம்

நம் சமயக்குரவர்கள் நால்வர் பெருமக்கள் வரலாறும், சந்தான குரவர்கள் வரலாற்றினையும் திருமயிலை வே. ஜம்புலிங்கம் பிள்ளை  மேலே கண்ட பெயரில்  1948 ஆம் ஆண்டு சர்வதாரி வருடம் பதிப்பித்து வெளியீடு செய்துள்ளார்.

12. சமயக்குரவர் சந்தானக்குரவர் சரித்திரச் சுருக்கம்

நம் நால்வர் பெருமக்களின் அருளாளர்களின் வாழ்வியலை பண்டிதர் ம.வே. திருஞானசம்பந்த பிள்ளையவர்கள் தொகுத்துள்ளார். இது 140 பக்கங்களைக் கொண்டது.  1955 ம் ஆண்டு யாழ்பாணம் சைவ பரிபால சபையின் மூலம் வெளியீடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

13. சைவ சமயக்குரவர்கள் வரலாறு

திருநெல்வேலி   காந்திமதிநாதனின் திருமகன் சுப்பிரமணிய பிள்ளை. இவர் தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் வடமொழி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்தார். சைவ சமய நுால்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதிய பெரியவர்களில் இவரும் ஒருவர். சைவ சித்தாந்தவாதி, ஒரு வழக்கறிஞர்.

இப்பெரியார் சைவ சமய அருளாளர்களுக்கு தனித்தனியாக நுால்கள் எழுதியுள்ளார். யாவும்  தென்னிந்திய நூல்பதிப்பு கழகம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இவர் எழுதிய சைவ சமயக்குரவர்கள் வரலாறு படித்து இன்புறத்தக்கதாகும். 

14. நால்வர்

ஹிந்து மத நுால்களை நயமாக வழங்கும் எழுத்தாளர்களில் ஒருவர் பருத்தியூர் கே. சந்தானராமன் . இவருடைய ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை சமய தேசிய இதழ்களில் படித்து மகிழலாம். ஆன்மிக நூல்களை அள்ளித்தரும் இப்பெரியவர் எழுதிய நுால் தான் நால்வர்.

இந்நூல் பல பதிப்புகளை கண்டுள்ளது. இதை இணையத்தின் வாயிலாகவும், பிரபல பதிப்பகங்கள் வாயிலாகவும் வாங்கிப்பயன் பெறலாம்.

15 . நாயன்மார் நால்வர் வரலாற்றில் நற்றமிழ்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஊற்றுமலையை பூர்வீகமாகக் கொண்ட அன்பர்  ரா. தங்கப்பாண்டியன், சிறந்த இலக்கியவாதி. இப்பெருமகனார் கிறித்தவம், தெரசாளைக் கண்டித்து ஆய்வு நுால் வெளியிட்டுள்ளார்கள். காவடிச்சிந்து, நெட்டுர் புராணம், கழுகுமலை பிள்ளைத்தமிழ் போன்ற நுால்களுக்கு உரையும், தமிழமுதம், ஆழ்வார்கள் வரலாறு, கண்ணனைக் கண்ட பாரதியார்  போன்றவை இவருடைய படைப்புகளாகும். நாயன்மார் நால்வர் வரலாற்றில் நற்றமிழ் என்னும் நுால் சமயக்குரவர்களை பற்றி இப்பெரியவர் எழுதிய திருநுாலாகும்.

16. சைவநெறி தரம்

ஹிந்து மதங்களை போற்றிப் புரந்தருளும் அரசுகளில் இலங்கை அரசு முதன்மை வகிக்கிறது. இவ்வரசின் வழிகாட்டுதலுடன் அங்குள்ள சமய மன்றங்கள் செம்மையான முறையில் சமயப்பணி ஆற்றி வருகின்றன.

அடிப்படை சமயத்தை அங்குள்ள மக்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு சைவநெறி தரம் 1, 2, 3, 4 …. என்ற வரிசையில்  நால்வர் பெருமக்கள் வரலாற்றினை அச்சிட்டு பாடம் நடத்துக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

நிறைவாக,

மேற்கண்டவை யாவும் இணைய தளங்களில் தேடிப்பிடித்து படிக்கக் கூடிய திருநூற்கள்.  நல்லவர் எழுதிய நால்வர் பற்றிய  திருநுால்களை இளைய தலைமுறைக்கு புரியும் வண்ணம் சைவப்பணி செய்வோர் எடுத்துச் செல்லுங்கள்.

சமய மன்றங்கள், பெருஞ்செல்வந்தர்கள் நால்வர் பெருமக்களின் திருநூற்களை மீள் பதிப்பு செய்து வெளியீட்டால் அது அவர்களுடைய வாழ்நாள் மட்டும் அல்லாது தலைமுறைக்கும் பெரும் புண்ணியத்தை சேர்க்கும்.

வாழும் போதும், வாழ்ந்து முடிந்த பிறகும் நல்லவருடைய துணை தேவை என்பதைப் புரிந்தால் நால்வரின் துணை அவசியம் தெரிய வரும். நால்வர் பொற்றாள் எம்முயிர்த்துணை என்பது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்று கூறி இச்சிவச் சிந்தனையை நிறைவு செய்வோமாக.

செப்பறை தல புராண மான்மியம்

மயிலைத் தலத்து என்பினைப் பெண்ணாக்கும் வள்ளல் பதம் போற்றி
கயிலைக்(கு) இறையாம் எழுத்தானீர் கல்லால் கடந்தோன் கழல் போற்றி
சயிலத்திறைவன் மகள் கொழுநன் தனைத் துாதிட்டோன் தாள் போற்றி
எயிலைப் புடைசூழ் பெருந்துறைக்க ணிறைதாள் பெற்றோன் அடி போற்றி

      -சங்கர சுப்பிரமணியப் பிள்ளை.

$$$

Leave a comment