-வ.மு.முரளி

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகம் பெரும் பங்கு வகித்துள்ளது. அதில் மறக்க முடியாத அத்தியாயம் புரட்சியாளர் வாஞ்சிநாதனின் பலிதானம்.
1911 ஜூன் 17ஆம் தேதி, மணியாச்சி ரயில் நிலையத்தில், கொடைக்கானல் செல்லும் ரயிலில் அமர்ந்திருந்த திருநெல்வேலி கலெக்டர் ஆஷை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டுக் கொண்டு உயிர்நீத்தார் வாஞ்சி நாதன்.
ஆஷ் கொலை ஆங்கிலேய அரசை அதிர வைத்தது. வஉ.சி, திலகர், பாரதி, அரவிந்தர் போன்ற தீவிர தேசியவாதிகளை இம்சித்துவந்த ஆங்கிலேய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் வாஞ்சி.
ஆனால் அவரது உயிர்த்தியாகம் இன்னும் தேசிய அளவில் உரிய மதிப்பைப் பெறவில்லை. வாஞ்சியின் சாகசம் தமிழகத்திலேயே உரிய மதிப்பைப் பெறாத போது, தேசிய அளவில் கவனம் ஈர்ப்பது சிரமம் தான். இந்த நிலையை மாற்ற ஓர் அரும் முயற்சி நெல்லையில் இந்த ஆண்டு தொடங்கி இருக்கிறது.
மணியாச்சியில், வாஞ்சி உயிர்நீத்த ரயில் நிலையத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் தேசிய சிந்தனைப் பேரவை களம் இறங்கியுள்ளது.
***









இந்த ஆண்டு வாஞ்சி நினைவுதினம் மணியாச்சி ரயில் நிலையத்திலும் வாஞ்சி மணி மண்டபத்திலும் அனுசரிக்கப்பட்டது, இறையருளால் இதில் பங்கேற்கும் நல் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நெல்லை மாவட்ட தேசிய சிந்தனைப் பேரவை தோழர்களுடன் இந்நிகழ்வில் பங்கேற்றேன்.
பாளையங்கோட்டை, தமிழ் முழக்கப் பேரவையின் தலைவர் திரு. சு. செல்லப்பா அவர்கள் அஞ்சலி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மணியாச்சி ரயில் நிலையத்திற்கு ‘வாஞ்சி மணியாச்சி’ என்று பெயர் சூட்டுவதற்குக் காரணமான போராட்டத்தில் அமரர் குமரி அனந்தன் ஐயாவுடன் இணைந்து போராடியவர் இவர்.
அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய திரு. சு.செல்லப்பா, “மணியாச்சி ரயில் நிலையத்தில் வீரர் வாஞ்சிநாதனுக்கு சிலை அமைக்க வேண்டும்” என்ற வேண்டுகோளை முன்வைத்தார். இதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தே.சி. பேரவை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதே நாளில் இதற்கான கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கிவிட்டனர்.
நெல்லை தோழர்களின் முயற்சி வெல்ல வேண்டும்; நெல்லை புரட்சிவீரனின் புகழ் தேசமெங்கும் பரவ வேண்டும். இதற்கு தேசபக்தர்கள் உறுதுணை புரிய வேண்டும்.
தொடர்புக்கு:
- பி. வெங்கடாசலபதி (94421 67740)
- பி. வெங்கட்ராமன் (94871 74771)
$$$