-திருநின்றவூர் ரவிக்குமார்

ஆரம்பத்தில் பண்டமாற்று முறையில் வர்த்தகம் நடந்ததாகத் தெரிகிறது. உப்பு பண்டமாற்றுப் பொருளாக இருந்துள்ளது. அதில் ஏற்பட்ட சீரற்ற தன்மையால் அதை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மன்னர்கள் பொது வர்த்தக மதிப்பாக நாணயங்களை வெளியிடத் தொடங்கினார்கள்.
கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் காலத்து நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவருக்குப் பின் வந்த பாக்ட்ரியா (இந்தோ- கிரேக்க அரசு) அரசைச் சேர்ந்த முதலாம் டெமெட்ரியஸ் வெளியிட்ட நாணயத்தில் லட்சுமி தேவியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பின் வந்த அரசர்கள் வெளியிட்ட நாணயத்தில் பலராமரும் கிருஷ்ணரும் பொறிக்கப் பட்டுள்ளனர்.
மன்னர்கள் தாங்கள் வணங்கிய தெய்வங்களின் வடிவம், மன்னர்கள் மற்றும் ராணிகளின் உருவம் , யானை, சிங்கம், காளை, மயில், மலைகள், ஆற்றில் படகு, வில் வீரர், குதிரை வீரர், பட்டப் பெயர்கள், (இரட்டை மீன் , வில், புலி போன்ற) அரசு சின்னங்களும் நாணயத்தில் பொறிக்கப்பட்டு வந்துள்ளன.
இந்தியாவில் பழமையான நூலான அஷ்டாதாயீ (பொ யு மு 5 முதல் 1) மற்றும் அர்த்த சாஸ்திரம் (பொ யு மு 1 முதல் பொ யு பி 1) ஆகியவற்றில் நாணயங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மௌரியப் பேரரசு காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன. அதன் பிறகு வந்த குப்தர்கள் ஆட்சி காலத்து நாணயங்களில் வீணை வாசிப்பது, வேட்டையாடுவது போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
குமாரகுப்தர் இந்தியாவின் கிழக்குப் பகுதியை வென்றதன் அடையாளமாக அந்தப் பகுதியில் இருந்த காண்டாமிருகம், முதலை ஆகியவற்றை நாணயத்தில் பொறித்துள்ளார்.
‘அஸ்வமேத பராக்கிரமா’ என்ற பட்டப்பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வேதப் பண்பாடு அப்போதே வலுவாக மக்களிடையே இருந்துள்ளது தெரிய வருகிறது.
தமிழகத்தில் சங்ககாலத்தில் இருந்த அரசர்களின் மெய்க்கீர்த்தியில் ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்னும் பெயர்களைக் கொண்டு தமிழகத்தில் சங்ககாலத்திலேயே வைதீக மதம் தழைத்திருந்தது தெரியவருகிறது.
தமிழகத்தில் சங்ககாலத்தில் வேப்பம் பழம் போல் உருண்டையான காசுகள் ஆரம்பத்தில் இருந்துள்ளன என்று சங்கப் பாடல்கள் மூலம் தெரிகிறது. பிறகு அவை தட்டையாக உருமாற்றம் பெற்றன. சதுரம், நீள் சதுரம், வட்டம் என பல வடிவங்களில் நாணயங்கள் கிடைத்துள்ளன. அதில் மன்னர்களின் வடிவம் மட்டுமின்றி பட்டப் பெயர்களும் 3 ,4 வரிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
நாணயங்களில் கிரந்த , பிராமி , தமிழ், தெலுங்கு , சமஸ்கிருதம் எழுத்துக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
தங்கம், வெள்ளி, ஈயம் , செப்பு , போன்ற உலோகங்கள் நாணயத் தயாரிப்பில் பயன்படுத்தப் பட்டுள்ளன. தமிழக நாணயங்கள் சீனா, கிரேக்கப் பகுதிகளிலும் சீன, கிரேக்க நாணயங்கள் இந்தியா, இலங்கையிலும் கிடைத்துள்ளதைக் கொண்டு வர்த்தகப் பரிமாற்றம் இந்தப் பகுதிகளில் நடந்துள்ளதை அறிய முடிகிறது.
பிரிட்டிஷாரின் ஆட்சியில் இந்தியா இருந்தபோது புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் நாணயம் வெளியிட்டுள்ளார். அது ‘அம்மன் காசு’ என்று கூறப்பட்டது.
பொது யுகத்திற்கு முன்பு தொடங்கி பிரிட்டிஷ் காலம் வரையில் இந்தியாவில் புழங்கிய நாணயங்களைப் பற்றி – ஆங்கிலேயர்கள், பிரஞ்சு , டச்சுக்காரர்கள் வெளியிட்டு இந்தியாவில் புழங்கிய நாணயங்களைத் தவிர – ஒரு எளிய அறிமுகத்தை தருகிறது இந்த நூல்.
***
நூல் விவரம்:
நூல்: பண்டைய இந்திய நாணயங்கள் – ஓர் அறிமுகம்
ஆசிரியர் : எஸ். கிருஷ்ணன்
விலை : ரூ. 200/-
வெளியீடு : சுவாசம் பதிப்பகம், சென்னை- 600 127
தொடர்புக்கு: 81480 66645
$$$