-சேக்கிழான்
‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்களைப் பாராட்டும் வகையில் நெல்லையில் படைப்பாளர்கள் சங்கமம், புரட்சியாளர் வாஞ்சிநாதன் நினைவுதினமான ஜூன் 17ஆம் தேதி மாலை நடைபெற்றது. இதில் புரட்சியாளர் செங்கோட்டை வாஞ்சிநாதனுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படைவீரர்களைப் பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெல்லை, வண்ணாரப்பேட்டையில் உள்ள பாலபாக்யா அரங்கில் சங்கம விழா நடைபெற்றது. இதனை திருநெல்வேலி மாவட்ட தேசிய சிந்தனைப் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய சிந்தனைப் பேரவையின் தென் தமிழக அமைப்பாளர் பி.வெங்கடாசலபதி வரவேற்றார். பேரவையின் தமிழக அமைப்பாளர் வ.மு.முரளி, படைப்பாளர்கள் சங்கமத்தின் காரணம், நோக்கங்களை எடுத்துரைத்தார்.
பாளையங்கோட்டை தமிழ் முழக்கப் பேரவையின் தலைவர், தேசிய நல்லாசிரியர் சு.செல்லப்பா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், நெல்லை மண்ணுக்குப் புகழ் சேர்த்த புரட்சியாளர் வாஞ்சிநாதனுக்கு அவர் பலிதானமான மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆளுருவச் சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சமூக சேவகர் பி.வெங்கட்ராமன், செங்கோட்டை வாஞ்சிநாதனுக்கு மணியாச்சியில் சிலை அமைக்க கையெழுத்து இயக்கம் தொடங்கப்படுவதாக அறிவித்தார். பொது மக்களிடம் பல்லாயிரம் கையெழுத்துகளைப் பெற்று ஆளுநரிடம் அளித்து, ஓராண்டிற்குள் மணியாச்சியில் சிலை அமைக்க முயல்வோம் என்றார் அவர்.
பிரக்ஞா பிரவாஹ் அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் சு.விஸ்வநாதன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும், அதில் நமது வீரர்களின் சாகசம் குறித்தும் எடுத்துரைத்தார்.
பத்திரிகையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், மறைக்கப்பட்ட தியாகியான வாஞ்சியின் தியாகங்கள் குறித்தும், அவரைப் பற்றி அவதூறு பரப்பும் புல்லுருவிகள் குறித்தும் விளக்கமாகப் பேசினார்.
எழுத்தாளர் கலைநன்மணி முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள் குறித்து மத்திய அரசு தீவிர கவனம் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
நிறைவாக, நாகர்கோவிலைச் சார்ந்த கவிஞர் லட்சுமி மணிவண்ணன் ‘தேசியமும் படைப்பாளர்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில், இதிகாச சங்கலன் சமிதியின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் பிள்ளை, நாகர்கோவில் கவிஞர் பாபு பிரித்விராஜ், அகவை முதிர்ந்த தமிழறிஞர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கவிஞர் ந.சுப்பையா, புதிய செலபஸ் ஆசிரிரியரான சுரண்டை எழுத்தாளர் மு.வரதராசன், கவிஞர் கருங்குளம் மா.முருகன், தென்காசி வே.சுந்தரமூர்த்தி, எழுத்தாளர் சங்கரன்கோவில் கருவாபுரிச் சிறுவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புரட்சியாளர் வாஞ்சிநாதனின் நினைவுநாள் என்பதால் அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. வாஞ்சிநாதனின் குடும்ப வாரிசுகளான கோ.ஹரிஹரசுப்பிரமணியன், ஹரி.வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்களைப் பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசிய சிந்தனைப் பேரவையின் நெல்லை மாவட்ட அமைப்பாளர் இசக்கி நன்றி கூறினார்.
$$$
One thought on “வாஞ்சி நினைவுதினத்தில், நெல்லையில் கூடிய படைப்பாளர்கள்”