-துக்ளக் சத்யா, ச.சண்முகநாதன்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக சமூக ஊடகங்களில் தொடர் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவற்றில் இரு பதிவுகள் இங்கே…

1. மக்களிடம் கொண்டு சேருங்கள்!
-துக்ளக் சத்யா
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி அசாதாரணமானது. இனியொரு முறை இந்தியாவுடன் தீவிரவாத விளையாட்டை நடத்த கனவிலும் நினைக்காதபடி, பாகிஸ்தானுக்குக் கடுமையான பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது மோடி அரசு. இந்திய ராணுவத்தின் பலம் எத்தகையது என்று புரிந்து கொண்டுவிட்ட பாகிஸ்தான் ‘ உடும்பு வேண்டாம், கையை விட்டால் போதும்’ என்ற நிலைக்கு ஆளாகியுள்ளது.
ராணுவ ரீதியான பதிலடி மட்டுமின்றி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதன் மூலம் ராஜரீதியான பதிலடியும் கொடுக்கப்பட்டதால், மூச்சுத் திணறி வருகிறது பாகிஸ்தான். இந்தியாவுடனான பேச்சு வார்த்தைக்கு எப்படியாவது வாய்ப்பு கிடைக்குமா என பல வகையிலும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார் அந்நாட்டுப் பிரதமர். (ஒரு ஆறு மாதம் தவிக்க விட்ட பின், திறந்து விடலாம் என்ற எண்ணத்தில் பிரதமர் இருக்கலாம்).
ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதற்கான காரணங்களை, பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட குழுக்கள் விளக்கியுள்ளன. ஆபரேஷன் வெற்றியாலும், மற்ற நாடுகளை மதிக்கும் மோடியின் இந்த அணுகுமுறையாலும், உலக அளவில் இந்தியா மிக மிக உயர்ந்து நிற்கிறது.
இந்தியா என்று கூறவே விருப்பம் இல்லாமல் ‘ஒன்றிய அரசு’ என்று புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்த திமுகவை, இந்தியா என்பது நாடே அல்ல, மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற மன நிலையிலிருந்து மாற்றி, அதன் பிரதிநிதியை இந்திய அரசுக்கு ஆதரவாக பேசச் செய்துள்ளார் மோடி. ‘இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது?’ என்று கேலி பேசிய ராகுலுக்கு காங்கிரஸிலேயே மதிப்பில்லாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், நாட்டுப்பற்று இல்லாத கட்சிகளுக்கும் கூட அந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் மோடி.
முந்தைய U.P.A. அரசாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று ஒரு நிமிடம் யோசித்தாலே, இந்த சாதனையைப் புரிந்து கொள்ள முடியும்.
பாஜக அரசின் இந்த சாதனை மக்களிடையே உரிய முறையில் கொண்டு சேர்க்கப்படவில்லை.
பாஜகவினர் அதிமுகவைத்தான் விமர்சிக்கக் கூடாது, மத்திய அரசை மனம் திறந்து பாராட்டவும் கட்டுப்பாடா?
பாஜக தலைவர்கள் ஓரிருவர் பல விஷயங்களில் ஒன்றாக இதைப்பற்றியும் கொஞ்சம் கூறுகின்றனர். சசி தரூர் அளவுக்கும்கூட விளக்குவதில்லை. தீவிர பிரசாரத்தின் மூலமாகவே, சாதனைகள் மக்கள் மனதை அடையும்.
முதல்வர் சும்மா டெல்லிக்குச் சென்று திரும்பியதையே அபார சாதனையாக திமுகவினர் கொண்டாடுகின்றனர்.
கிடைக்காத மாநில சுயாட்சிக்காக ‘மாநில சுயாட்சியின் நாயகனே’ என்று பாராட்டு விழாவே நடத்தப்பட்டது.
‘சிந்தூர் நாயகனே’ என்று போஸ்டர் அடிக்கக் கூட பாஜகவுக்கு யாராவது கற்றுக்கொடுக்க வேண்டுமா?
பாஜகவின் பிரசாரத்தில் போதுமான வேகம் இல்லாதது ஏன் என்று புரியவில்லை.
திமுகவிடமிருந்து கொஞ்சம் அரசியலும் கற்றுக் கொள்ளுங்கள் சார்.
$$$
2. மோடி பாசறை உளன்
-ச.சண்முகநாதன்
பகைவரை, துவம்சம் செய்து, வெல்வது எல்லோர்க்கும் வசப்படலாம்.
‘இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார் இருஞ் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே’
ஆனால்…
புற்றில் வாழும் விஷமிக்க பாம்புகள் போலவும், கொலைவெறி கொண்ட காளை போலவும் இருக்கிற கொடிய பகைவர் (PAKaiவர்), நம் பாசறையை நோக்கி “ஐயோ! இவன் இருக்கிறான் அந்தப் பாசறையில், இவனிடம் வாலாட்டினால் நம்மை என்ன செய்வானோ” என்று அச்சம் கொள்ளும்படியான வீரன் என் தலைவன். அவன் வீரத்துக்கு இணையேதும் இல்லை.
“நல் அரா உறையும் புற்றம் போலவும், கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும், மாற்று அருந் துப்பின் மாற்றோர், ‘பாசறை உளன்’ என வெரூஉம் ஓர் ஒளி வலன் உயர் நெடு வேல் என்னைகண்ணதுவே.”
மோடியைப் பார்த்தே, மோடிக்காகவே எழுதிய புறநானூற்றுப் பாடல் (309).
நேற்றைய (மே 12ஆம் தேதி) பேச்சில்…
அனல் தெறிக்கும் குரல்,
கோபத்தில் நடுங்கும் விரல்,
பழிதீர்த்த தீர்க்கம் கண்களில்,
தேசத்தின் மீதான காதல் நெஞ்சினில்.
இவையனைத்தும் ஒருங்கே கொண்டிருந்தார் மஹான் நரேந்திர மோடி.
செங்கோல் கொண்டு அரசாளும் அரசன் அல்லவா மோடி.
மனு நீதியின் நீட்சி மோடியின் ஆட்சி.
“இனிமேல் அணு ஆயுதம் வைத்திருக்கிறோம் என்று பூச்சாண்டி காண்பிக்க முடியாது” – இந்த நூற்றாண்டின் வீரமிக்க வார்த்தை.
எதிரியின் அரிவாளால் அவனையே தீர்க்கும் வல்லமை மோடியிடம் இருக்கிறது.
“மதம் பார்த்து, மதவெறி கொண்டு பாரதீயர்களைக் கொன்ற பயங்கரவாதிகளுக்குத் துணை போன ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பட தண்டிக்கப் படுவார்கள்” என்ற தலைவனின் முழக்கத்தை உறுதி செய்தது கிரானா மலையில் கிளம்பிய புகை.
“தாய்த் திருநாட்டை தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்”
-என்று முழங்கிய பாரதி புன்னகைத்திருப்பான்.
பாரதநாடு பார்க்கெல்லாம் திலகம்.
#operationSindoor அதை இந்த உலகுக்கு ஓங்கிச்சொல்லும்.
$$$