குங்குமத் திலக போர்ப் பரணி -2

-கவிஞர் அரங்க.சுப்பிரமணியம்

கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ விழாவில் ‘எல்லைச் சாமிகளுக்கு நன்றிப் படையல்’ எனும் தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில், ஈரோடு பாரதி இலக்கிய முற்றம் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு. அரங்க. சுப்பிரமணியம் வாசித்த கவிதை இது…

அன்பையே போதித் தார்கள்
ஆன்மீகப் பெரியோர் அன்று!
துன்பமே வந்த போதும்
துவண்டிடா மனத்தைக் கொண்டோம்!
மின்னலாய்க் கொடுமை வந்தால்
மிடுக்கென எழுந்து நிற்போம்!
துன்பமே தீயோ ராலே
துடிக்கவே அழிப்போம் என்றும்! 1

எல்லையில் பதற்றம் இன்றே
இதயமே கொதித்து நிற்க,
மெல்லவே நேரம் பார்த்து
மிதித்திட நினைக்கும் கூட்டம்
முல்லையாம் தோட்டத் துள்ளே
முதுபெரும் சூறைக் காற்றாய்ச்
சொல்லிட முடியா வண்ணம்
சுழற்றியே அழித்த தின்று! 2

காஷ்மீர மலையும் அந்தக்
கனிதரும் ஆப்பிள் தோட்டம்
நீசர்கள் பாகிஸ் தானி
நெடுமரம் போன்ற தீயோர்
வேசமே போட்டே அங்கே
வேகமாய் நுழைந்தார் வீணே!
ஆஷாட பூதி யாக
அடைந்தவோர் பள்ளத் தாக்கு! 3

பெகல்காம் இயற்கை அன்னை
பெயருடைச் சுவர்க்க பூமி
இகபரம் எவற்றி னோடே
இதைவிட அழகே இல்லை!
பகைவனாம் தீவி ரத்தின்
பல்வகைக் கொடுமை செய்ய
நகையென முகத்தில் மட்டும்
நாயென நுழைந்தா ரிங்கே! 4

தனக்கென அங்கே உள்ள
தனியொரு ஆளை நம்பி
மனத்துடை ஆசை ஆனால்
மலத்தினை உண்ணும் நாயாய்த்
தினந்தரும் பணத்திற் காகத்
தீயவன் பக்கம் சேர்ந்தான்
நிணமுடன் பிணத்தைத் தின்னும்
நரியென அமைதி காத்தான்! 5

நான்குபேர் ஒன்று சேர்ந்தார்
நடைபெறும் தீமைக் காக.
வான்வழி மலையைத் தாண்டி
வந்தவோர் தீயோர் கள்தாம்
தேன்மொழி பேசி நின்றோர்
திடுமென ஆயு தத்தால்
தானொரு மிருக மாகத்
தடுமாற்ற மின்றிச் செய்தார்… 6

குழந்தைகள், பெரியோர், பெண்கள்
குலவியே பொழுது போக்க
விழைவுடன் மகிழ்ந்தி ருக்க
வேட்டையன் புகுந்து விட்டான்!
அழைத்திடா வீட்டி னுள்ளே
அன்னியன் புகுந்தான் நீசன்!
இழைத்தவோர் வெறியின் நாயாய்
இடரெனச் சுட்டுக் கொன்றான்! 7

காட்டிலே விலங்கெல் லாமும்
காத்திடும் இனத்தை நன்றாய்.
தீட்டியே திட்டம் கொண்டு
தீயவன் அழிக்கப் போந்தான்.
ஊட்டிய பாக்கிஸ் தானி
உறவெனத் தீவி ரவாதி
ஆட்டமும் போட்டான் ஆனால்
அழிப்பதே நமது நோக்கம்! 8

தீவிர வாதந் தன்னைத்
திரும்பிடும் திசைக ளெங்கும்
ஏவியே நாட்டில் நின்றே
இசைவுடன் வேலை செய்யும்
தாவிடும் குரங்கு போலே
தனியொரு பாகிஸ் தானி
மாவடி வைத்துக் கீழே
மடித்தனர் நம்மின் வீரர்! 9

சிந்தூர் ஆப ரேஷன்
சிறப்பாகத் திட்ட மிட்டே
இந்திய எல்லை ஓரம்
இயங்கிடும் தீயர் தம்மை
முந்தியே அழிக்கும் எண்ணம்
முறையுடன் செய்த கொற்றம்!
அந்தியே சாய்ந்த பின்னர்
அழித்தனர் நம்மின் வீரர்! 10

சிங்கமாய் மோடி செய்த
சிறப்புடை ஆப ரேஷன்,
மங்கையர் தாலி வாங்கி
மதியிலாச் செய்கை செய்த
பங்குடைப் பாகிஸ் தானி
பழியினைத் தீர்த்த வீரர்
எங்களின் தாக்கு தலுக்கே
ஈடென எவரும் உண்டோ? 11

தேசத்தின் மக்க ளுக்குத்
தேசியக் கொடியைக் காக்க
ஆசியா மட்டு மல்ல
ஆக்கிய பெருமை கொண்டோம்
மாசுடை வேற்று நாட்டான்
மதியினை இழந்து வந்தால்
நாசமே அவனுக் கென்றும்
நடைமுறை அழிவு திண்ணம்! 12

சுட்டு விரட்டுங்கள் வீரர்களே -வந்து
சூழும் பகைவனை இன்றே – நல்ல
தோள்வலியின் திறம் கொண்டு
கொடும் தொல்லை பல தந்து
எல்லை காஷ்மீர் வந்து
துன்பம் கொடுத்திடும் கோழை -அவன்
தூய்மை அறிவில்லா ஏழை! 13

பக்கத்து நாட்டினைக் கக்கத்தில் வைத்திடப்
பாகிஸ்தான் போட்டவோர் திட்டமே,
அந்தப் பாதகன் நாட்டுக்கு நட்டமே!
திக்குகள் எட்டிலும் தீவிர வாதத்தைத்
தீயவர் எல்லையில் செய்யவே
திட்டத்தில் வந்தவர் நைய்யவே!
சிந்தூர் வெற்றி நாம்கொண்டோம்
வாழியவே பாரதம்! 14

Leave a comment