-கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா
கோவையில் 25.05.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ விழாவில் "எல்லைச் சாமிகளுக்கு நன்றிப் படையல்’ எனும் தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில் கவிஞர் திரு. மரபின்மைந்தன் முத்தையா தலைமையேற்று வாசித்த கவிதை இது…

ஊரெல்லை தனிலிருக்கும் காவல் தெய்வம்
.ஒருநொடியும் உறங்காமல் காவல் காக்கும்!
பாரதத்தின் எல்லையிலே மனிதத் தெய்வம்
.பலநூறு அணிதிரண்டு காவல் காக்கும்!
யார்பிள்ளை என்றறியோம்- தேசம் காக்க
.யாக்கையினை யாகத்தில் அர்ப்பணிக்கும்
தீரர்கள் அவர்களெல்லாம் திரண்டிருக்கும்
.திசைநோக்கி கைகூப்பித் தொடங்குகின்றோம்!
*
சுற்றுலா வந்த அப்பாவிகளை
சுட்ட பகைவரை வீழ்த்திவிட்டு
வெற்றி உலா வரும் இந்திய ராணுவ
வீரர்கள் புகழை பாடுகிறோம்!
காளி பராசக்தி கண்களின் சிகப்பில்
கிளர்ந்து வந்ததே சிந்தூரம்!
கோழைகள் சதியால் குங்குமம்இழந்தவர்
கோபத்தில் எழுந்தது சிந்தூரம்!
வாழிய பாரதம், வாழிய என்கிற
வீர முழக்கத்தில் ஓங்காரம்!
பாரத தேசத்தின் வீரத்தை உணர்ந்து
பூமி சிலிர்த்தது இந்நேரம்!
முளைக்கும் பொழுதே கிள்ளிவிடாமல்
முள் மரம் வளர்த்தது பாகிஸ்தான்!
கிழிக்கும் முட்களை சல்லி வேருடன்
சொல்லி அழித்தது ஹிந்துஸ்தான்!
திருடர்கள் ஒதுங்கிட தனியிடம் கொடுத்து
கள்ளம் வளர்த்தது பாகிஸ்தான்!
முரடர்கள் பதுங்கிய முகாம்களை எல்லாம்
சொல்லி அடித்தது ஹிந்துஸ்தான்!
கெட்ட நினைவுடன் எட்டிப் பார்த்ததும்
தட்டிச் சாய்த்தனர் வீரர்களே!
முட்டிப் பார்த்ததும் வட்டியும் முதலுமாய்
முடித்துக் கட்டினர் தீரர்களே!
வல்லரசெல்லாம் வியந்து பார்த்திட
வீரம் விளைத்தது ராணுவமே!
நல்லரசு ஒன்று நடைபெறுதென்று
நிமிர்ந்தது எங்கள் தாயகமே!
சேனைப் பெருக்கில் ஏழு கடல் போல்
சீறி எழுந்தது பாரதமே!
வானப்பரப்பில் வேலி அமைத்து
வென்றது எங்கள் ராணுவமே!
ஞானமும் கானமும் யோகமும் வளர்த்து
நல்லறம் சொன்னது பாரதமே!
வீணர்கள் ஈனர்கள் வெறிகொண்டு வந்தால்
வீழ்த்திடும் எங்கள் தாயகமே!
பாய்கிற நதிக்கரை ஓரத்தில் ஆயிரம்
பண்புகள் வளர்த்தது பாரதம் தான்!
ஆயுதம் ஏந்தி பகைவர்கள் வந்தால்
அடுத்த நொடியே அதகளம் தான்!
எல்லை தாண்டிய பயங்கரவாதம்
இங்கே இனிமேல் நடக்காது!
வில்லை, வேலை ஏந்திய பரம்பரை
வல்லமை என்றும் தோற்காது!
ராணுவம் பேணிடும் வேங்கைகள் ஆயிரம்
பாய்ந்து நடத்தும் நரி வேட்டை!
தீயவர்களுக்கு சிம்ம சொப்பனம்
டெல்லியில் இருக்கும் செங்கோட்டை!
தாயகம் விடுதலை கண்ட நாள் முதல்
தலைவலி பகைவன் தந்துவிட்டான்!
நோயினை நீக்க தலைவலி போக்க
தலைவன் ஒருவன் எழுந்து விட்டான்!
கண்ணசைவால் அவன் களங்களை ஜெயிக்கும்
காவியப் பொழுதினில் வாழுகிறோம்!
மண் தொட வந்தவன் மண்ணாய்ப் போவதை
மௌனசாட்சியாய்க் காணுகிறோம்!
பனியில் குளிரில் மழையில் எங்கள்
எல்லை வீரர்கள் விழித்திருப்பார்!
தனிமை என்பது அவர்களுக்கு இல்லை
பாரதமாதா துணையிருப்பாள்!
பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மறந்து
எல்லை காக்கத் துணிந்திருப்பார்!
வெற்றி முரசுகள் கொட்டி முழக்கிட
கொற்றவை துர்க்கை அருள் கொடுப்பாள்!
கச்சை கட்டிய இலட்சிய வீரரை
உச்சியில் வைத்துப் போற்றுகிறோம்!
மெச்சத் தகுந்தவர் நிச்சயம் வெல்வார்
சத்திய வாக்கு – இது சாற்றுகிறோம்!
பாரதம் என்பது வீரத் திரு நிலம்…
பயங்கர வாதம் எதிர்த்து நிற்போம்!
வீரர்கள் காப்பார் தேசத்தின் எல்லை
தெய்வங்கள் துணைவர இறைஞ்சி நிற்போம்!
$$$