-சேக்கிழான்
கோவையில் ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) நடைபெற்ற ‘படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வு, தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கமே என்பதை நிலைநாட்டும் வகையில் சிறப்புற அமைந்திருந்தது. கோவையின் முன்னணி எழுத்தாளர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, பஹல்காம் படுகொலையிலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போதும் பலியான நமது சகோதரர்களுக்கு இரங்கல் தெரிவித்திருப்பதுடன், தேசியத்தின் உரத்த குரலாக ஒலித்தது.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக கடந்த மே 7- 10 தேதிகளில் பாகிஸ்தானின் வான்வெளியில் ஊடுருவிய நமது ராணுவம், பாக் ஆதரவு பயங்கரவாதிகளின் முகாம்கள், பாகிஸ்தான் ராணுவ படைத்தளங்களில் பலத்த தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் துல்லியத் தாக்குதல் நடவடிக்கைகளில் சுமார் 300 பயங்கரவாதிகளும், நூற்றுக் கணக்கான பாக். ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்திய நகரங்களைத் தாக்கிய பாக். ஏவுகணைகள் அனைத்தும் நடுவானிலேயே முறியடிக்கப்பட்டன. அந்த யுத்தகள நடவடிக்கைகளை உலகமே வியந்து பார்த்தது; பயங்கவாதிகளின் விதைநிலமான பாகிஸ்தானோ உலகநாடுகளின் ஆதரவின்றி, பரிதாப நிலையில் பரிதவித்தது.
ஆனால், தமிழகத்தில், திராவிட பிரிவினைவாத சிந்தனை, தேச விரோத இடதுசாரி சிந்தனைகளால் பீடிக்கப்பட்ட எழுத்தாளர்கள் சிலர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையையைக் கொச்சைப்படுத்தும் விதமாக, இந்திய ராணுவத்தையும் அரசையும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையின் வாசகங்கள் தமிழகத்தில் உள்ள தேசபக்தர்களின் மனங்களைப் புண்படுத்தின.
தமிழகத்தின் பெருவாரியான மக்களும், அறிவுலகினரும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பதை பலவீனமாகக் கருதும் தேசவிரோத சக்திகள் சிலர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்ற போர்வையில் இந்திய நாட்டிற்கும் நமது படைவீரர்களுக்கும் எதிராகச் செயல்பட்டு மக்களிடையே குழப்பம் விளைவிக்க முயன்றதைக் கண்டு தேசபக்தி கொண்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் மனம் புழுங்கினர்.
நமது ராணுவ நடவடிக்கை குறித்து அரசு என்ன விளக்கம் அளித்தாலும், அதனை மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டியவர்கள் அறிவுலகினரான எழுத்தாளர்களும் கலைஞர்களும் தான். அதனை உணர்ந்து, இந்திய அரசின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைப் பாராட்டும் விதமாக, மாநில அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் முன்னோட்டமாக, தமிழகத்தின் கல்வி, தொழில் மையமான கோவையில், கடந்த 25.05.2025, ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை, ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கொங்கு மண்டலத்தை சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்ட படைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். தேசபக்திப் பாடல்கள், குறும்படம் வெளியீடு, கலந்துரையாடல், கவியரங்கம், கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகளுடன், படைவீரர்களுக்கு நன்றி நவிலும் விழாவாக நடைபெற்றது. இதில் நாட்டைக் காக்கும் படைவீரர்களைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவிளக்கேற்றுதல்:
நமது பாரம்பரிய அடையாளமான திருவிளக்கேற்றுதலுடன் விழா தொடங்கியது. சுயமுன்னேற்றப் பேச்சாளர் பேரா. ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், திருப்பூர் வித்யாமந்திர் பள்ளியின் தாளாளர் ஜெயந்திமாலா, திருப்பூர் விவேகானந்த சேவாலயத்தின் நிர்வாகி ஜோதிலட்சுமி, இ.பி.ஜி. ஃபவுண்டேஷன் நிர்வாகி பிந்து விஜயகுமார், பிரம்மரிஷி தியானபீடம் நிர்வாகி சுவாமி விஸ்வாமித்திரர், கோவை விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயுதம், ஈரோடு- பாரதி இலக்கிய முற்றத்தின் தலைவர் கவிஞர் அரங்க சுப்பிரமணியம், திருப்பூர் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எக்ஸ்லான் கே.ராமசாமி, கோவை சேக்கிழார் நிலையம் பதிப்பகத்தின் பொறுப்பாளர் கே.சிவசுப்பிரமணியம், ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிர்வாகி ராமன்ஜி ஆகியோர் திருவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
மௌன அஞ்சலி:
மகாகவி பாரதியின் திருவுருவப் படத்திற்கு மாலை மரியாதை செய்யப்பட்டது. பஹல்காம் படுகொலையில் பலியானோருக்கும், பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதலில் பலியானோருக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலியுடன் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அடுத்து, சேக்கிழான் எழுத்தாக்கத்தில், திருப்பூர் ஸ்டெப்இன் குழுவினரின் தயாரிப்பில் உருவான ‘வெற்றித்திலகம்’ ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஹரிஹரன் பிரேம்குமார் தலைமையிலான இக்குழுவினர், விழா முழுமையும் ஒளி-ஒலிப் பதிவு செய்துள்ளனர். அவை விரைவில் யூ-டியூபில் வெளியாக உள்ளன.
படைப்பாளர்கள் அறிமுகம்:
இந்த நிகழ்வில் பங்கேற்க கோவை மாவட்டத்தில் 53 பேரும், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 17 பேரும் முன்பதிவு செய்திருந்தனர். தவிர, 16 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இவர்களில் பெரும்பாலோர் விழாவுக்கு வந்திருந்தனர்.
படைப்பாளர்கள் அறிமுகம், கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் இ.பாலகுருசாமி தலைமையில் நடைபெற்றது. கோவையின் முன்னணி தொழிலதிபரும் எழுத்தாளருமான இயகோகா சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பேரூர் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் திருநாவுக்கரசு நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
கவியரங்கம்:
அடுத்து ‘எல்லைச்சாமிகளுக்கு நன்றிப் படையல்’ என்ற தலைப்பிலான கவியரங்கம் நடைபெற்றது. நமது நம்பிக்கை மாத இதழின் ஆசிரியரும், கோவையின் இலக்கிய அடையாளமுமான கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா கவியரங்கத்திற்கு தலைமை வகித்தார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் முன்னிலை வகித்தார். உலக தமிழ் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவர் புலவர் பூ.அ.இரவீந்திரன் நிகழ்வை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
கவிஞர்கள் அரங்க சுப்பிரமணியம், அர்ஜுனன், பன்னீர்செல்வம், சிவதாசன், விக்னேஷ், தென்காசி வே.சுந்தரமூர்த்தி, ஆர்.ஜே.சந்தோஷ்குமார் ஆகியோர் கவிதைமழை பொழிந்தனர்.
கருத்தரங்கம்:
நான்காம் நிகழ்வாக, ‘படைவீரர்களும் படைப்பாளர்களும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஓம்சக்தி மாத இதழின் முன்னாள் ஆசிரியரும் கோவையின் மூத்த எழுத்தாளருமான கவிஞர் பெ.சிதம்பரநாதன் தலைமை வகித்தார். புதுதில்லி- டாக்டர் சியாமபிரசாத முகர்ஜி ஆய்வு நிறுவனத்தின் அறங்காவலர்- செயலாளரும், பாஜக மாநில துணைத் தலைவருமான பேரா. ப.கனகசபாபதி முன்னிலை வகித்தார். இளம் எழுத்தாளர் ராஜேஷ் கோவிந்தராஜுலு இந்நிகழ்வை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.
இறுதியாக, ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வுக்கு தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகியும் நல்லாசிரியருமான தெக்கலூர் க.பழனிசாமி தலைமை வகித்தார். தேசிய சிந்தனைப் பேரவையின் மாநில அமைப்பாளரும் திருப்பூரைச் சார்ந்த எழுத்தாளருமான சேக்கிழான் முன்னிலை வகித்தார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.
(குறிப்பு: இவ்விழாவின் முழுமையான தொகுப்பு, பங்கேற்றோரின் பேச்சுகள் விரைவில் யு-டியூபில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. விழா புகைப்படங்கள் விரைவில் நமது தளத்தில் வெளியாகும்).
.
காண்க:
$$$