-கருவாபுரிச் சிறுவன்
அப்பர் சுவாமிகள் கூறியபடி, ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: எட்டையபுரம் டி.வி.எஸ். சண்முகம் பிள்ளை.

நாயன்மார் குருபூசை நன்மை சேர்
உழவாரம் நாடிச் செய்து
துாய அரன் அடிபோற்றி அடியவர்க்கு
அடியவராய்த் தொண்டு பேண
ஏயும் இளையோர்க் கெல்லாம்
எந்நாளும் வழிகாட்டும் எங்கள் ஐயா
சாய்தலிலா அன்புடைய சண்முகனார்
தாள் பணிந்து சார்ந்து வாழ்வாம்!
-ஆதினப்புலவர் சு. குஞசித பாதம்
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
-திருக்குறள்:666
பொருள்: எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால், அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
இத்திருக்குறள் விளக்கத்திற்கும் பொருள் இன்னும் தெளிவாகத் தெரிய வேண்டுமாயின், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரத்தில் வாழும் சிவனடியார்களிடம் சிறிது நேரம் பேசிப் பார்த்தால் அது நன்றாக விளங்கும்.
தேசத்திற்கும் தெய்வீகத்திற்கும் தொண்டு செய்தோர்களில் முக்கியமானவர்கள் வரிசையில் சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, தேசியகவி சுப்பிரமணிய பாரதியார், தமிழறிஞர் இ. மு. சுப்பிரமணிய பிள்ளை மற்றும் பலருடன் டி. வி.எஸ். சண்முகம் பிள்ளை அவர்களும் அவ்வணியில் நின்று அணி செய்கிறார்கள்.
மயிலாடு துறையில் அமைந்துள்ள துறைசை என்னும் திருவாவடுதுறை ஆதினத்தோடு நெருங்கிய தொடர்புடைய தொண்டர்குழாம் அன்பர் குடும்ப பாரம்பரிய பின்னணியைக் கொண்டவர்கள்.
அத்திருத்தலத்தில் எட்டையபுரம் சங்கரன் பிள்ளை என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சங்கரன் பிள்ளையின் சிவப்பணி சீரிய பணி என்பார்கள் அவர்களைப்ப ற்றி அறிந்த அன்பர்கள்.
தேவரீராகிய குருமகா சன்னிதானங்களின் குறிப்பறிந்து பணி செய்வதில் அவருக்கு நிகர் அவரே என்ற புகழ் மொழிக்குரியவர் திரு. சங்கரன் பிள்ளையவர்கள். அன்னாரின் இளவலின் திருமகனார் தான் டி.வி.எஸ். சண்முகம் பிள்ளையவர்கள்.

1990 ஆம் ஆண்டு கோவில்பட்டி திருச்சிற்றம்பலம் அறக்கட்டளை அடியார்களில் ஒருவரான பாலசுப்பிரமணியன் சிவா என்பவர் பல அடியார்களுடன் எட்டையபுரத்தில் உள்ள ஜோதிர்நாயகியம்பிகை சமேத எட்டீஸ்வரர் மூர்த்தி பெருமானின் திருக்கோயிலில் உழவாரப்பணி செய்யும் பெரும் பேறினைப் பெற்றார்கள்.
அவர்களின் நல்வினை, பூர்வ ஜென்ம புண்ணியப் பயனும் இணைந்து அறுபத்து மூவர் குருபூஜை உட்பட பல்வேறு சிவப்பணிகளைச் செய்யும் புண்ணியத்தை டி.வி.எஸ். சண்முகம் பிள்ளை உட்பட அவ்வூர் அன்பர்களும் பெற்றார்கள்.
நாளொரும் மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த அக்குழுவிற்கு திருவாவடுதுறை ஆதினகர்த்தா 23வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் ‘அடியவர்க்கு அடியவர்கள் திருக்குழாம்’ என திருநாமம் சூட்டி மென்மேலும் சிறப்புற வாழ்த்தி அருளினார்.
திருவாவடுதுறை ஆதின வித்துவான் சைவ நன்மணி சங்கரன்கோவில் ரத்தினவேலன் அவர்களிடம் சமயப் பாடங்களைக் கேட்கும் பெரும் பேற்றினைப் பெற்றவர் இவர்.
தூத்துக்குடி, பெருங்குளம் செங்கோல் ஆதின கர்த்தா 103 வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச ஞான தேசிக பரமாசாரிய சுவாமிகள், மதுரை திருஞான சம்பந்த மடாலய ஆதின கர்த்தா 293 வது குருமகா சன்னிதானம் லோக குரு ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆகியோரின் அன்பினைப் பெற்றவர் இவர்.
‘என்கடன் பணி செய்து கிடப்பதே, பாடும் பணியே பணியாய் அருள்வாய்’ என்ற அருளாளர்களின் வாக்கினை சிரமேற்கொண்டு வாழும் திருமுறைவாணர்களாகிய ஓதுவார்கள் பலருக்கும், அகவாழ்விலும் புற வாழ்விலும் மேன்மையடைய வேண்டும் என தனது மனம், மொழி, மெய்களால் எண்ணியது மட்டுமல்லாமல் அவர்களது வாழ்வாதாரம் சிறந்து விளங்க பல செம்மையான பணிகளை சிரத்தையுடன் செய்து காட்டிய செயல் வீரர் இவர்.
நான்கு வேதங்கள், இருபத்தெட்டு சிவாகமங்கள், பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாத்திரங்கள் என்ன சொல்கின்றனவோ அதை அப்படியே எள்ளத்தனையளவு மாறுபடாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கையும் உறுதிப்பாடு உடையவர்கள். அதன் படியே நடந்து நடத்திக் காட்டியவர் இவர்.
‘பிறவியின் நோக்கம் தேவாரம் ஓதுதலும் உழவாரம் செய்தலுமே’ என்ற வாக்கியத்திற்கு இலக்கணமான டி.வி.எஸ். சண்முகம் பிள்ளையவர்களின் வாழ்வு, இங்குள்ள சிவனடியார்களின் உணர்வோடு கலந்தது.
அதனை எழுத்துக்களில் எழுதிக் காட்ட முடியாது. நித்தமும் திருநீறு அணிந்து தேவாரம் பாடி ஆன்ம நாயகனுக்கு பூவாரம் சூட்டி அர்ச்சித்து அகம் குழைந்து நெக்குருகி சிவாலயம் தோறும் உழவாரப்பணி செய்து அங்கிருக்கும் சிவப்பரம்பொருளை வழிபட வேண்டும் என்பது இவரது அமுதமொழிகள்.
இவர் இன்று இப்பூவுலகில் இல்லை. இவரது பூர்விக சிவச் சிந்தனைகள் இங்குள்ள அடியார்களின் உணர்வுகளில் இரண்டறக் கலந்துள்ளது.
நாயன்மார்களின் திருவடியில் கலந்த இவர், சிவப்பணி செய்யும் அன்பர்களுக்கு நிறைந்த ஆசிகளை விண்ணில் இருந்து வழங்குகிறார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமேதுமில்லை.
‘ உழவாரமும் தேவாரமும்’ என்னும் நூனை இவரது முதலாம் ஆண்டு ஞாபகார்த்த நினைவு மலராக வெளியிட்டுள்ளார்கள் எட்டையபுர சிவநேயர்கள்.
அன்னார் அடியொற்றிய பணியான பெரியபுராணச் சிந்தனை, நாயன்மார்கள் குருபூஜை வழிபாடு, திருக்கோயில்களில் உழவாரப்பணி என சிவப்பணிகளை சத்தமில்லாமல் செய்து பிறவிப்பயனை அடைகிறார்கள் எட்டையபுர அடியவர்க்கு அடியவர்கள் திருக்குழாம்.
வாழ்த்துகள் சொல்ல அழைக்கலாமே: 82206 00658
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை
பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!
-திருநாவுக்கரசு நாயனார்.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்!
-சேக்கிழார் சுவாமிகள்
திருச்சிற்றம்பலம்!
வாழ்க பாரதம்! வளர்க தாய்த்திருநாடு!
$$$