-கார்கில் ஜெய்
ஆன்மநேயம் பேசுபவனும் கூட கொசுவைக் காக்க மாட்டான். கொசுக்களுக்கு கொடி பிடிப்பவன் எவனும், கொசுத்தொல்லை அறியாதவன் அல்ல. கொசு சிற்றுயிர். அதன் ஊசிப்பல் தான் எத்துணை கொடியது! இதோ திரு. கார்கில் ஜெய்யின் கவிதை....

கடித்த கொசுவை
அடித்துப் பார்த்தேன்-
கையில் ரத்தம்;
கழுவினால் சுத்தம்.
கண்ணயர்ந்தேன்..
கனவு நினைவைக் கைப்பற்றிய தருணம்…
கொசுக்கள் பதாகை ஏந்தி கொலைப்பழி சுமத்தின.
முழக்கம் நெஞ்சைப் பிழியும் எழுத்துக்களில்.
‘வேண்டாம் டார்ட்டாய்ஸ் விஷவாயுத் தாக்குதல்’
என்று ஏந்தியது சீரகம் போன்றிருந்த கொசு.
‘வேண்டாம் குட்நைட் ரசாயன த் தாக்குதல்’
என்று ஏந்தியது வறுத்த சோம்புபோல் மெலிந்த கொசு.
‘வேண்டாம் கொசுவலை, அகதிகள் நாங்கள் அடைக்கலம் தாரீர்’
என்று கெஞ்சியது வெந்தய விதை போன்றிருந்த கொசு.
‘மரணம் தரும் மின்சார மட்டை மனிதத் தன்மையற்றது’
என்று அலறியது மிளகின் காம்பு பறப்பது போன்றிருந்த கொசு.
‘கொசுமருந்தடித்தல் முட்டையிலேயே கருவறுக்கும் எங்களை’
என்றது, மலேரியா பரப்பி சிசு கொன்ற கொசு.
‘கொல்லாதீர் எம்மை, எம் உடம்பில் ஓடுவதும் உம் ரத்தம் தானே?’
அப்பீல் செய்தது
-தூங்கும் பெண் குழந்தையின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து
வயிறு புடைத்து கிராம்பு போன்றிருந்த கொசு.
அத்தனையும் மசாலா வாசனை வாசகங்கள்.
“ஒரேநாட்டில் வாழும் எங்கள்மேல் ஏனிந்த வஞ்சம்?
நீங்கள் உண்ணாததை நாங்கள் உறிஞ்சிக் குடிப்பதால் மட்டமா?
ரத்தம் குடித்தல் தவறில்லை… அன்பின் அடையாளம்
இயேசுவும் கோப்பையில் மதுவாக ரத்தம் பரிமாறினார்.
நபியும் ஹலால் என்று ரத்தம் விலக்கியே ஊனைப் புசித்தார்.
துச்சாதனன் ரத்தத்தை பீமன் குடித்தான்.
அரக்கன் மீண்டும் பிறப்பதைத் தடுக்க,
அறுத்து அவன் ரத்தம் காளி அருந்தினள்.
தெய்வங்கள் குருதியை குடிப்பது சரியென்றால்,
சிறு பூச்சி நாங்கள் உதிரம் உறிஞ்சுவதும் சரியே!
உணவெனப் பிரிந்தது போதும்; உணர்வெனச் சேர்வோம்!
சிறுபறவை நாங்கள் சிறுபான்மையும் நாங்கள்
சிறுத்தோரை வெறுத்தல் பாவம் இல்லையா?
சிறுத்தானைப் பேணுதல் ஈகை இல்லையா?”
நானும் கனிந்தேன், தலையைக் குனிந்தேன்,
மனிதம் காக்க நடுநிலைநக்கியாய் மாறினேன்.
வீட்டைத் திறந்துவிட்டு,
ஆல் அவுட் அணைத்து,
வலையும் அகற்றி
மீண்டும் கண்ணயர்ந்தேன்.
கனவும் தொடர்ந்தது… காட்சியும் தொடர்ந்தது…
கட்சிப் பேரணிபோல கோரிக்கைகள் உயர்ந்தன.
“நீங்கள் ஞ, அ, ஆ, + , – என ரத்தத்தில் சாதி பிரிக்கிறீர்கள்.
உயர்ந்தோர் நாங்கள் வர்க்க பேதம் பார்ப்பதில்லை.
ரத்தம் எதையும் வகுப்பதில்லை, பிரிப்பதில்லை , பாகுபாடில்லை.
தீண்டாமை என்னும் தீயொழுக்கம் இல்லை.
வேண்டா ரத்தம் என்றெதுவும் இல்லை.
எல்லா ரத்தமும் எமதென்று எடுத்துக் கொள்வோம்.
நிலவின் பிறையைத் தொழுவோம் நாங்கள்,
இரவில் ரத்தம் குடிக்க தூண்டுவதால்.
ரத்தம் குடிப்பது எங்கள் மதநெறி…
குடிக்க விடுவதே உங்கள் நன்னெறி .
நீங்கள் எங்களை அடித்துக் கொல்வது மதவெறி
-ஐகோர்ட்டே அறிவுரை சொல்லும்;
எங்களை ஏற்றுக்கொள்வதே சமுதாயத்தில் பன்மை…
ரத்தம் கோரிப் பெறுவதே எங்கள் உரிமை.
அதைக் கொடுப்பதே மத சகிப்புத்தன்மை.
எங்களுக்கு வேண்டும் ஒதுக்கீடு.
புதைகுழியும், சாக்கடையும், தேங்கும் நீரும் போதாது எங்களுக்கு.
பல்கிப் பெருகிவிட்டோம் நாங்கள்.
மலேரியா, பைலேரியா, டெங்கு எது வந்தாலும்
பொறுத்துக்கொள்ளவேண்டும் நீங்கள்.
உங்கள் வீட்டில் பாதி வேண்டும். பின்பொரு நாள் மீதி வேண்டும்”.
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர், எஞ்ஞான்றும்
நஞ்சுண்டார் கள்ளுண் பவர்
-என்றார் வள்ளுவராசான்
நடுநிலையார் துரோகிகளின் வேறல்லர் என்பார் இன்றிருந்தால்.
தூக்கம் கலைந்து எழுந்தேன்.
உடலில் தடிப்பாய் கொசுக்கடி மிச்சங்கள்.
“கொல்லுங்கள் கொசுக்களை எங்கொளிந்தாலும்!
வெளிச்சத்தில் ஓடும்,
ரீங்காரம் பாடும்,
அசந்தால் நாடும்,
ரத்தம் தேடும்….
‘ஆல் அவுட்’ என்பது பிரம்மோஸ் ஏவுகணை ‘
‘கொசுவலை’ என்பது ஆகாஷ்தீர்
‘கதவைச் சாத்துதல்’ ந-400
‘கொசுபேட்’ என்பது பிரிதிவி
கொல்லுங்கள் கொசுக்களை
எங்கொளிந்தாலும்.
$$$