இந்தியப் படையின் குங்கும திலகம்!

-சேக்கிழான்

பாரத ராணுவத்தின் மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினமாக, அதன் நெற்றியில் மற்றுமொரு வெற்றித் திலகமாக, மே 7 முதல் 10 வரை பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட  ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை அமைந்திருக்கிறது. மூன்று கட்டமாக நிகழ்த்தப்பட்ட இந்த பதிலடி நடவடிக்கை, ஏப்ரல் 22இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் காஷ்மீரப் பிரிவினைவாதிகளான இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 இந்திய சகோதரர்களின் பலிதானத்திற்கான மிகச் சரியான சமர்ப்பணமாக அமைந்தது.

முதலில் இந்தத் தாக்குதல் நடவடிக்கை நடந்த நாளும், இதன் பெயரும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஏப்ரல் 22இல் கொல்லப்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகளின் மரணம் நிகழ்ந்து 16 நாட்கள் கழித்து – ஹிந்து சமய நம்பிக்கைகளின் படி இறந்தவர்களின் ஆன்மா நற்கதி அடைய அவகாசம் அளித்து –  மிகச் சரியாக மே 7ஆம் தேதி அதிகாலை இந்தத் தாக்குதல் நடவடிக்கை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான  ‘ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பு தான் பஹல்காமில் படுகொலை நிகழ்த்தியது. அதற்குக் காரணமான பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா வலியுறுத்தியபோதும், பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை. இந்திய வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் அரசிடம் நியாயமான செயல்பாட்டை இந்தியா எதிர்பார்க்கவும் இல்லை. அதேசமயம், ராஜதந்திர முறையில் தேவையான நேரம் அந்நாட்டிற்குக் கொடுக்கப்பட்டது. அந்நாடு திருந்தவில்லை. எனவே தான் பதிலடி கொடுக்க இந்தியா தீர்மானித்தது.

இந்தியாவின் ‘நாரி சக்தி’:
கர்னல் ஷோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங்

அதேபோல, குடும்பப் பெண்களின் கண்ணெதிரில் அவர்களது கணவர்கள் கொல்லப்பட்ட அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மிகப் பொருத்தமான பதிலடியாக,  ‘குங்குமத் திலகம்’ என்று பொருள் படும்  ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. இதனை முன்னின்று நடத்தியவர்களில் ராணுவ கர்னல் ஷோபியா குரேஷி (இவர் ஒரு இஸ்லாமியர்), விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரும் உண்டு. இவர்கள் தான், சிந்தூர் நடவடிக்கை குறித்து மே 7ஆம் தேதி செய்தியாளர்களுக்கு விளக்கமும் அளித்தனர்.

துல்லியமான ஊடுருவல் தாக்குதல்கள்:

மே7 அதிகாலை (1.30 மணி முதல் 2.00 மணி வரை) பாகிஸ்தானுக்குள் ஊடுருவிய இந்திய போர் விமானங்கள், ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகளாலும், காமிகேஸ் ட்ரோன்களாலும் பாக். ஆதரவுடன் இயங்கிவந்த பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களைத் தாக்கி அழித்தன. அரைமணிநேரத்திற்குள், ஏவப்பட்ட 24 ஏவுகணைகளால், 9 இடங்களில் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் நடத்தப்பட்டுவந்த பயங்கரவாதிகளின் பயிற்சிப் பாசறைகள் தகர்க்கப்பட்டன.

  1. பஹவல்பூர் (மர்காஸ் சுப்ஹான் அல்லா),
  2. முசாபராபாத் (ஷவாய் நல்லா, சையத்ஷா பிலால் மார்கஸ்),
  3. முரிட்டோ (மர்காஸ் தைபா),
  4. சியால்கோட் (சர்ஜல், மெஹ்மூனா மோயா),
  5. கோட்லி (மர்காஸ் அப்பாஸ், மஸ்கர் ரஹீப் ஷாஹித்),
  6. பர்னாலா (மர்காஸ் அஹ்லே ஹதீஸ்)

-ஆகிய 6 இடங்களில் இருந்த 9 பயிற்சி நிலையங்கள் (அடைப்புக் குறிக்குள் இருக்கும் பெயர்கள் பயங்கரவாதப் பாசறைகளின் பெயர்கள்- அவை மசூதி, மதரஸா பெயர்களில் செயல்பட்டவை) இந்திய ராணுவத்தால் மிகத் துல்லியமாகத் தாக்கப்பட்டன.

துல்லியம் மட்டுமல்ல… துரத்தும் தாக்குதல்!

இதற்கு முந்தைய இரு ஊடுருவல் தாக்குதல்களும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் நடத்தப்பட்டன. ஆனால் இம்முறை பா.ஆ.காஷ்மீரில் மட்டுமல்லாது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முகாம்களும் இந்திய விமானப்படையால் தாக்கப்பட்டுள்ளன.

2016-இல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய யூரி தாக்குதலுக்கு பதிலடி தரும் வரும் வகையில், இந்திய ராணுவம்  எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பயங்கரவாதிகளின் இயங்குதளங்கள் மீது 2016 செப்டம்பர் 29 அன்று இரவு நடத்திய துல்லிய தாக்குதலில் 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, 2019 பிப்ரவரி 26இல் இந்திய ராணுவம் பாலாக்கோட்டில் நிகழ்த்திய துல்லியத் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அவை இரண்டும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிகழ்த்தப்பட்டன. தற்போதைய தாக்குதல்கள், துல்லியமானவை மட்டுமல்ல, துரத்தும் தாக்குதல்களும் கூட.

இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பொதுமக்களுக்கோ, பாகிஸ்தான் ராணுவத்தின் நேரடி தொடர்புடைய இடங்களுக்கோ எந்தச் சேதமும் விளையவில்லை. அதேசமயம், இத்தாக்குதலில் சுமார் 100 பாக். ஆதரவு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக, ஜெய்ஸ்–இ-முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனரான மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவுப் (இவர் காந்தஹார் விமானக் கடத்தலில் தொடர்புடையவர்), அசாரின் மைத்துனர்கள் ஹபீஸ் முகமது ஜலீல், முகமது யூசுப் அசார் ஆகியோரும் ஜேஇஎம் அமைப்பின் மற்றொரு பயங்கரவாதி முகமது ஹாஸன் கான், முரிட்கேவில் இருந்த லஷ்கர்-இ-தொய்பா தலையகத்தின் நிர்வாகிகள் முத்தசார் காதியன் கான், காலித் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் பதான்கோட் தாக்குதல்,  இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள். மேலும், மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேரும் இதில் பலியாகினர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் பாக். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதை உலகம் கண்டது. அதன்முலமாக, இந்தியத் தாக்குதலில் 100க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதையும், பயங்கரவாதிகளுக்கு பாக். அரசு ஆதரவாக இருப்பதையும் உலகம் பட்டவர்த்தனமாக உணர்ந்து கொண்டது. இல்லாவிடில், இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்தத் தாக்குதலுக்கு சாட்சியம் கேட்டுக் கொண்டிருந்திருப்பார்கள்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்த்தப்பட்ட இடங்கள்…

அடங்காத பாகிஸ்தானின் அத்துமீறல்:

இந்திய ராணுவத்தின் இலக்கு மிகவும் தீர்க்கமானது. பஹல்காம் படுகொலைக்குப் பழிவாங்கவே பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மிகவும் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால்,  அவர்களை வழிநடத்திய பாக். ராணுவத்துக்கு இது அவமானமாகிப் போய்விடவே, இந்திய- பாக். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் தரைப்படையால் பீரங்கித் தாக்குதல் கொடுத்தது. மே 7- 8 தேதிகளில் நிகழ்ந்த இந்த அத்துமீறல்களில் இந்தியத் தரப்பில் வீரர்கள், குடிமக்கள் உள்பட 16 பேர் பலியாகினர். தவிர ஒரு சீக்கிய குருத்வாராவும், ஒரு கிறிஸ்தவ தேவாலயமும், பள்ளிக் கட்டடங்களும்  சேதமடைந்தன. 

ஆத்திரத்தின் உச்சத்தில் கண்மண் தெரியாமல் செயல்பட்ட பாக். ராணுவம், இருதரப்பு ஒப்பந்தத்தை மீறும் வகையில் எல்லை நெடுக தாக்குதல் நடத்தியது. அத்துடன் நிற்கவில்லை. இந்தியாவின் முக்கியமான 15 நகரங்கள் மீது ட்ரோன்கள், சீன ஏவுகணைகளைக் கொண்டு தாக்கத் தொடங்கியது. அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகர், புஜ், பலோடி, உத்கர்லாய், நல், பதிண்டா (இவை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் உள்ள நகரங்கள்) ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புகள், ராணுவ மையங்களை நோக்கி இத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. ஆனால், அந்த ட்ரோன்கள், சீன ஹெச்.கியூ. ஏவுகணைகள் அனைத்தையும் வெற்றிகரமாக வானிலேயே எதிர்கொண்டு நமது ஏவுகணை தடுப்பு சாதனங்கள் வீழ்த்தின. நூற்றுக் கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் இவ்வாறு வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தான் எஃப்-16 விமானமும் (அமெரிக்கத் தயாரிப்பு), அவாக் (AEWC) விமானமும் வீழ்த்தப்பட்டன. ஒரு பாக். விமானி பிடிபட்டார்.

இந்த ஏவுகணைத் தடுப்புப் பணியில் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைகள், பராக்-8, எம்.ஆர் – எஸ்.ஏ.எம்., ஸ்பைடர் ஆகிய வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் முக்கியப் பங்கு வகித்தன. இவற்றில் ஸ்பைடர், பராக் 8 ஆகியவை இஸ்ரேலியத் தயாரிப்புகள். மற்றவை நமது பாதுகாப்பு ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பினால் (டிஆர்டிஓ) வடிவமைக்கப்பட்டவை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல். இவை தவிர, ரஷ்யாவின் எஸ்-400 என்ற ஏவுகணைத் தடுப்பும் (சுதர்சனச் சக்ரா) செயல்பாட்டில் இருந்தது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் அனைத்தையும் வானிலேயே முறியடித்த இந்திய ராணுவத்தின் தீரத்தையும் நவீன ஆயுதங்களையும் கண்டு உலக நாடுகள் வியந்தன.

அதுவரை பாகிஸ்தான் மீது இந்தியா நேரடித் தாக்குதல் நடத்தவில்லை. இந்திய நிலைகள் மீதான பாக். தாக்குதலை அடுத்து, இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதையடுத்து, பாக். நகரங்கள் மீது இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது (ஆபரேஷன் சிந்தூர்-2). லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. ராவல்பிண்டி விளையாட்டு மைதானம் இதில் முழுவதும் சீர்குலைந்தது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேலியத் தயாரிப்பான ஹார்பி ட்ரோன்கள் பெரும்பங்கு வகித்தன. லாகூரிலும் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் முக்கியமான மையங்கள் தகர்க்கப்பட்டன. அதன் விளைவாக, பாக். பிரதமர்  செபாஸ் ஷெரீப் பதுங்கு குழியில் ஒளிய வேண்டியதாயிற்று.

இதனால் நிம்மதி இழந்த பாகிஸ்தான் அரசு, தனது நெருங்கிய நட்பு நாடான சீனா, துருக்கியிடமும், இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிடமும் உதவி கோரியது. அவர்கள் அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. அமெரிக்காவையும் பாகிஸ்தான் தலைவர்கள் நாடினர். ஆனால், அமெரிக்காவும் கைவிரித்தது.  “இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை” என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறிவித்தார் (மே 9ஆம் தேதி).

உலக நாடுகளிடையே மரியாதையை இழந்த பாகிஸ்தான் மேலும் கண்மூடித்தனமாக இந்தியாவின் 36 நகரங்களை நோக்கித் தாக்கத் தொடங்கியது. அந்த ஏவுகணைகள் அனைத்தும் நடுவானில் தகர்க்கப்பட்டன. அதன்விளைவாக, இந்திய நிலப்பரப்பில் பெரிய சேதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கப்பட்டது.

அதையடுத்து, அணுகுண்டு ஆயுதத்தைப் பயன்படுத்த பாகிஸ்தான் தயாரானது. அதுதொடர்பான பணிகள் நடக்கத் தொடங்கியவுடன் இந்திய ராணுவம் முன்னெச்சரிக்கையாக, மேலும் பல பாக். படைத்தளங்களை மே10-இல் தாக்கியது (ஆபரேஷன் சிந்தூர்-3). அதிலும் குறிப்பாக, அணு ஆயுதம் பதுக்கி வைத்துள்ள தளங்கள் துல்லியமாகத் தேர்வு செய்யப்பட்டு தாக்கப்பட்டன.

போர் அல்ல; தாக்குதல் நடவடிக்கை மட்டுமே!

இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, தற்போது எதிரி நாட்டின் அபாய சூழ்நிலை கருதியே (இது பூடகமாகவே சொல்லப்படுகிரது. அதிகாரப்பூர்வ தகவல் அல்ல). தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சில ஊடகங்கள் இதனை போர் நிறுத்தம் என்று கூறியுள்ளன. அவர்களுக்கான விளக்கம் இது.

முதலில் இது போர் அல்ல. இந்திய ராணுவத்தின் பதிலடி நடவடிக்கை மட்டுமே. பஹல்காம் படுகொலைக்குப் பழிவாங்கவே  ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை (முதல் கட்டம்) மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பாக். அரசு அத்து மீறியதால் அதன் விமான தளங்கள் மீது இரண்டாவது கட்டத்திலும், முக்கியமான படைத்தளங்கள் மீது மூன்றாவது கட்டத்திலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது போர் நடத்தப்படுவதாக, இந்திய அரசோ, ராணுவமோ, பிரதமரோ அறிவிக்கவில்லை.

மாறாக பாகிஸ்தான் ராணுவம் தான் மே 8ஆம் தேதி இந்தியா மீது போர் தொடுப்பதாக தன்னிச்சையாக அறிவித்தது. எனவே இந்தியாவின் தாக்குதல்கள் அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகள் மாத்திரமே.

1948, 1965, 1971 ஆண்டுகளில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளிடையே நடந்தவைதான் போர்கள். அந்தப் போர்களிலும் இந்தியாவே வென்றது. 1998இல் நடைபெற்ற கார்கில் யுத்தமும் கூட முழு அளவிலான போர் அல்ல. அதுபோலவே தற்போதைய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலும் இந்தியாவின் பதிலடி மற்றும் தற்காப்பு நடவடிக்கை மட்டுமே!

மே 12இல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய பிரதமரின் உரையில், மிகத் தெளிவாக இது தாக்குதல் நடவடிக்கை என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார். அவர் போர் என்ற சொல்லைப் பயன்படுத்தவே இல்லை. அதாவது, தாக்குதல் நடவடிக்கையே இப்படி இருக்குமானால், இந்தியா போரைத் தொடங்கினால் எப்படி இருக்கும் என்பதுவே எதிரிகளுக்கு எச்சரிக்கை!

எனவே,  ‘போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முனைந்தன; இந்தியாவை நிர்பந்தித்தன’ என்று எழுதுவது தர்க்கரீதியாக தவறு. பாகிஸ்தானின் அணு ஆயுதத் தளத்தில் ஏற்பட்டுள்ள சேதம் தற்போது அமெரிக்க அணு கட்டுப்பாட்டுத் துறையால் மதிப்பிடப்படுகிறது. அதன்பிறகே இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை தெரியவரும்.

எதிரியின் முதுகெலும்பை முறித்த பாரதம்:

‘ஆபரேஷன் சிந்தூர்-3’  நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் முக்கியமான 11 விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா 90 நிமிடங்கள் இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்கள் பிராந்திய ராணுவ இயக்கவியலில் ஒரு தீர்க்கமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன எனில் மிகையில்லை. இந்த முன்னெச்சரிக்கை மற்றும் துல்லியமான தாக்குதல்கள் பாகிஸ்தானின் வான்பரப்பு மேலாண்மையைச் சீர்குலைத்துள்ளன. சீனாவிடம் பாக். பெற்ற வான்பரப்பு பாதுகாப்பு அமைப்புகள் எதுவும், இந்திய ஏவுகணைகளையோ, விமானங்களையோ தடுக்கவே முடியவில்லை.

இந்திய விமானப்படையால் சிதைக்கப்பட்ட ஒவ்வொரு பாக். தளமும் ஒரு முக்கியமான செயல்பாட்டைச் செய்துவந்தன. அவற்றின் அழிவு பாகிஸ்தான் ராணுவத்தின் முதுகெலும்பையே முறித்துவிட்டது எனலாம்.

  1. நூர் கான் – சக்லாலா விமானப்படை தளம் (ராவல்பிண்டி),
  2. பாகிஸ்தான் விமானப்படைத் தளம் ரஃபிகி (ஷோர்கோட்),
  3. முரித்கே விமானப்படைத் தளம் (பஞ்சாப்),
  4. சுக்கூர் விமானப்படைத் தளம் (சிந்து),
  5. சியால்கோட் விமானப்படைத் தளம் (கிழக்கு பஞ்சாப்),
  6. பஸ்ரூர் விமான தள ஓடுபாதை (பஞ்சாப்),
  7. சுனியன் ரேடார் (கிழக்கு பஞ்சாப்),
  8. சர்கோதா விமான தளம் (முஷாப்),
  9. ஸ்கர்டு விமானப்படைத் தளம் (கில்கிட்-பல்டிஸ்தான்),
  10. போலாரி விமானப்படைத் தளம் (கராச்சி அருகில்),
  11. ஜகோபாபாத் விமானப்படைத் தளம் (சிந்து-பலூச்சிஸ்தான்)

-ஆகியவை தாக்கப்பட்ட முக்கியமான இலக்குகள்.

இவற்றில் நூர் கான் மீதான இந்தியாவின் தாக்குதல் பாகிஸ்தானின் வான் தளவாடங்கள் மற்றும் உயர் மட்ட ராணுவ ஒருங்கிணைப்பின் மையத்தைச் சீர்குலைத்தது. தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மிக அருகில் உள்ள இத்தளம், விஐபி போக்குவரத்து மற்றும் ராணுவ தளவாடங்களுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அடுத்து முன்னணி போர்ப் படைப்பிரிவுகளை வழங்கும் போர்த் தளமான ரஃபிகி செயல்பட முடியாததாக மாற்றப்பட்டது.  அதன் விமான ஓடுபாதையும் உள்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டதால்,  பாகிஸ்தானின் திறன் கணிசமாக பலவீனமடைந்தது.  முரித்தை குறிவைத்ததன் மூலம், இந்தியா ஒரு பாகிஸ்தானின் ஏவுகணை சேமிப்பு மையத்தைச் சீர்குலைத்தது.  சுக்கூர் விமானப்படைத் தளத்தை அழித்ததன்மூலம், பாகிஸ்தானின் தெற்கு வான்வழிப் பாதை துண்டிக்கப்பட்டது.  

இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சியால்கோட், மோதலின் ஆரம்பத்திலேயே தாக்கப்பட்டது. மூன்றாம் கட்டத்தில் அது முற்றிலும் முடக்கப்பட்டது. அளவில் சிறியதாக இருந்தாலும், பஸ்ரூர் விமான நிலையம் அவசர விமான நடவடிக்கைகளில் முக்கியமானது. அதன் விமான ஓடுபாதை அழிக்கப்பட்டது. சுனியன் மீதான தாக்குதல்கள்,  மத்திய பஞ்சாபின் வான்வெளிக் கண்காணிப்புக்கு அவசியமான ரேடார்  உள்கட்டமைப்பைச் சீர்குலைத்தன.  இது இந்திய விமானங்கள்  தடையின்றி ஊடுருவ அனுமதித்தது.

சர்கோதா விமான தளத்தின் அழிவு முக்கியமானது. ராணுவ அதிகாரிகள் பள்ளி, அணுசக்தி விநியோக தளம், உயரடுக்கு படைப்பிரிவுகள்  இங்கு இருந்ததன; இதன் அழிவு பாகிஸ்தானின் கட்டளைக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பை முடக்கியது. கில்கிட் பகுதியில் உள்ள ஸ்கர்டுவில் ஏற்படுத்தப்பட்ட சேதம், இமயமலையில் சீன- பாகிஸ்தான் ஒருங்கிணைப்பைத் தடுத்தது.  

போலாரி விமானப்படைத் தளம் மீதான தாக்குதல், பாக். கடற்படைக்கு, அதிலும் கராச்சி துறைமுகத்துக்கு பெரும் சவாலாக அமைந்தது. ஜகோபாபாத் தளத்தில் ஏற்பட்ட சேதம், மேற்கு பாகிஸ்தானை மேலும் தனிமைப்படுத்தியுள்ளது.

சீனாவல் நிறுவப்பட்ட ரேடார் வலைப் பின்னல்களும், பாகிஸ்தானின் ராணுவக் கட்டளை மையங்களும்  தாக்கப்பட்டதால், பாக். ராணுவம் நிலைதடுமாறியது. இவை அனைத்தையும் விட, மிக முக்கியமான தாக்குதலையும் இந்திய விமானப்படை நிகழ்த்தியதுதான் உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், சண்டை நிறுத்தத்திற்கும் அடிகோலியது. அது என்ன?

அணு ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல்:

இந்தத் தாக்குதலில் முதன்மையானது இஸ்லாமாபாத் அருகில் உள்ள நூர்கான் படைத்தளம் மீதான தாக்குதல் ஆகும். இதன் அருகிலுள்ள கைரானா மலையைக் குடைந்து அதன் ஆழமான பகுதியில் பாக். அணு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதன் மீதான இந்திய ஏவுகணைத் தாக்குதலை உலக நாடுகள் எதிர்பார்க்கவில்லை.

பாக். ராணுவம் முட்டாள்களின் கரங்களின் சிக்கியுள்ளது. அவர்கள் பாக். அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. எனவே, அரசு உத்தரவின்றி அவர்கள் இந்தியா மீது அணுகுண்டுகளை ஏவ வாய்ப்பு இருந்தது. அதற்கான உளவுத் தகவல்களும் இருந்தன. பாகிஸ்தான் அமைச்சர்கள் பலரும் அணுகுண்டுகளால் இந்தியாவைத் தகர்ப்போம் என்று பொதுவெளியிலேயே  மிரட்டிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே தில்லியை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை நமது வீரர்கள் நடுவழியில் ஹரியானா வான்வெளியில் முறியடித்திருந்தனர். (அது அணு ஆயுத ஏவலுக்கான முன்னோட்டம் என்று கருதப்படுகிறது).

எனவே, பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை முறியடிக்க, கைர்னார் மலை முகாமின் நுழைவாயில் ‘பிரமோஸ்’ ஏவுகணையால் தாக்கப்பட்டது. அதன் விளைவாக அங்கிருந்த அணு ஆயுதம் ஒன்றில் கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது.

முன்னதாக அங்கு அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது. அதன் விளைவாக இரு நில நடுக்கங்கள் பதிவாகின. ரிக்டர் அளவுகோலில் 4.2 ரிக்டர் பதிவாகியது.

பாக். அணு ஆயுதக் கிடங்கான கைர்னார் மலை

அதன் பிறகே, பாக். அரசு உலக நாடுகளிடம் கெஞ்சத் தொடங்கியது. அணு ஆயுதக் கசிவைத் தடுக்கும் தொழில்நுட்பம் இல்லாத பாகிஸ்தானின் அவல நிலையை உணர்ந்த அமெரிக்கா, இந்தியாவிடம் பேசியது. அதன் விளைவாக, சூழ்நிலையை உணர்ந்து இந்தியா சண்டை நிறுத்தத்திற்கு சம்மதித்தது. இவை எதுவும் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. பிறகு செய்திக் கசிவால், திடீர் அமைதிக்குக் காரணம் புரிய வந்தது. அதுமட்டுமல்ல, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் (டிஜிஎம்ஓ) மட்டத்தில் மே12ஆம் தேதி பேச்சு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. (இந்தக் கூட்டத்தில் இரு தரப்பிலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது).

எனினும், “மீண்டும் ஒருமுறை இந்திய மண்னில் பயங்கரவாதிகள் அத்துமீறினால் இந்தியா பதிலடியைத் தவிர்க்காது” என்று திட்டவட்டமாக இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். “இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய யாரும் (அமெரிக்கா உள்பட) தேவையில்லை” என்று பிரதமர் மோடியும் அறிவித்தார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி 12ஆம் தேதி இரவு உரையாற்றியதும் குறிப்பிடத் தக்கது.

இவ்வாறாக, நான்கே நாட்களில் மிகக் குறைந்த சேதாரத்துடன் இந்திய முப்படைகள் நிகழ்த்திய தாக்குதல் உலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துவிட்டது. இந்தியத் தரப்பில் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் சுமார் 10 ராணுவ வீரர்கள், அதிகாரிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அதேசமயம், எதிரி நாடு மிகக் கடுமையாக நாசம் அடைந்திருப்பதுடன், சீன தளவாடங்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறி ஆகியிருக்கிறது. பாக். தரப்பில் சுமார் 500 வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இனி பாக். ராணுவம் தன்னைப் புதுப்பிக்கவே பல ஆண்டுகள் ஆகும் என்று தெரிய வருகிறது.

இந்திய நலனுக்கு ஊறு விளைவித்தால் என்னவாகும் என்று மிகவும் தெளிவான, உறுதியான பதிலடி மூலம் பாகிஸ்தானுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. இது அவ்வப்போது வாலாட்டும் பங்களாதேஷுக்கும் சீனாவுக்கும் சொல்லாமல் சொன்ன பாடம்.

இந்திய விஞ்ஞானிகள் சுயமாக உள்நாட்டில் உருவாக்கிய ஆகாஷ் உள்ளிட்ட ஆயுதங்கள் பல இந்த தாக்குதலில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பின் (இது மேதகு அப்துல் கலாம் ஐயா பணிபுரிந்த நிறுவனம்) சிறப்பான பணித்திறனை உலகம் தற்போது உணர்ந்திருக்கிறது.

தவிர, பாதுகாப்புத் துறைக்கு சிறிதும் சளைக்காமல் வெளியுறவுத் துறையின் பெரும் படை உலக நாடுகளிடையே இந்தியாவின் நிலைப்பாட்டை சமயோசிதமாகவும் தர்க்க ரீதியாகவும் கொண்டுசென்று, உலகின் ஆதரவைப் பெற்றது. உள்நாட்டில் உள்துறை அனைத்து மாநில முதல்வர்களுடனும் தொடர்பு கொண்டு நாட்டினுள் எந்தச் சிக்கலும் வராமல் கவனித்துக் கொண்டது.

பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான், தரைப்படை தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி, கப்பற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி,  விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் ஆகியோர் ஓரணியில் நின்று, எதிரி நாட்டைப் பந்தாடியுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் தீரமும், ஒருங்கிணைப்பும், ஜனநாயக அரசுக்குக் கட்டுப்பட்ட அதன் ஒழுங்குமுறையும், இந்தியாவின் நவீன ஆயுதபலமும் இப்போது அனைவருக்கும் உணர்த்தப்பட்டிருக்கிறது.

இது பயங்கரவாதிகளைக் கண்டு அஞ்சி மிரளும் முந்தைய இந்தியா அல்ல என்பது தற்போதைய அரசால் உலகின் கேளாச் செவிகளுக்கு உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில், இந்தியாவின் இந்த ‘குங்குமத் திலகம்’ நடவடிக்கை, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் நெற்றியில் வெற்றிப் பெருமிதத்துடன் தரித்த நறுந்திலகமாக மிளிர்கிறது.

$$$

தமிழகத்தில் சில அபஸ்வரங்கள்….

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் இந்தியா மாபெரும் வெற்றி பெற்ருள்லது. இருந்தபோதிலும், உள்நாட்டில் சில துரோகிகள் இருப்பதும், அவர்கள் இந்திய நலனுக்கு எதிராகச் செயல்படுவதும்  ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது தெரிய வந்தது. குறிப்பாக, இடதுசாரிகளாலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர்களாலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும் இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. இது அவர்களது சமூக ஊடக பதிவுகளில் வெளிப்பட்டது. சில இடங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களை பொதுமக்களை நையப் புடைத்து காவல் துறையில் ஒப்படைத்த சம்பவங்களும் உண்டு.

இந்திய அதீத ஜனநாயகம் கொண்ட நாடு. எனவே கருத்துரிமை என்ற பெயரில் நாட்டுநலனுக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராகச் செயல்படுபவர்கள் சுதந்திரமாக இயங்குகிறார்கள். தமிழ்நாட்டில் செயல்படும் தமுஎகச அமைப்பின் முனைப்பில் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் வெளியிட்ட இந்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் எதிரான கூட்டறிக்கை இதற்கு தகுந்த உதாரணம்.

காண்க: உடனிருந்து கொல்லும் வியாதிகளின் அறிக்கை

இதுபோன்ற உள்ளடிவேலை செய்யும் துரோகக் குறுங்குழுக்களை முளையிலேயே கிள்ளி எறிவது நாட்டுநலனுக்கு அவசியம் என்பதும் இப்போது உணரப்பட்டிருக்கிறது.

எனினும், இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 10ஆம் தேதி சென்னையில் நடத்திய அமைதிப் பேரணி பாராட்டுக்குரியது. தமிழகத்தின் பிரிவினைவாதிகளுக்கு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அளித்த பதிலாகவே இந்தப் பேரணியைக் கருதலாம்.

$$$

One thought on “இந்தியப் படையின் குங்கும திலகம்!

Leave a comment