நூற்பணி செய்வோம் வாரீர்! 

– கருவாபுரிச் சிறுவன் 

நமது பகுதியில் உள்ள திருக்கோயில்களின் தலபுராணங்கள், இலக்கியங்களை மீட்டு பத்திரப்படுத்தும் பணி அவசியம் என்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்....

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது? 
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்;
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்-
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!

    -திருமூலதேவ நாயனார்

பாரத தேசத்திலுள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்புகளை உடைய எண்ணற்ற திருத்தலங்களுக்குரிய திருநூற்களை பல அருளாளர்கள்  இயற்றியுள்ளார்கள். அதை புண்ணியம் செய்த தனவான்கள் பலரும்  அச்சிட பொருளுதவியும் செய்துள்ளார்கள். 

அவை யாவும் அவர்களுடைய காலத்திலும், அவர்களுடன் வாழ்ந்தவர்கள் காலத்திலும் பேசப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றிய  அன்பர்கள், அறியாமையில் உள்ள மக்கள் யாவரும் பூரண ஞானம் பெற வேண்டும் என்பதற்காக மீண்டும் அதை வெளியீடு செய்துள்ளனர்.

அத்தகைய பணியில் திருமடங்களும் ஆதினங்களும் முதன்மை வகித்தன என்பது யாவரும் அறிந்ததே. 

இன்றைய சூழலில் திருநூற்கள்  யாவும் பாதுகாக்கப்பட்டு மாபெரும் அங்கமாக வகிக்கின்றன என்பதை மக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசின் ஒரு துறையாகத் திகழ்வது நல்லதொரு சான்று.

பெரும் செல்வந்தர்கள், சமய அறிவுடையோர், சொற்பொழிவாளர்கள், சரஸ்வதி தேவியின் அருளினைப் பெற்ற பலரும் தம் வீட்டில் திருநூற்களைப் பேணிப் பாதுகாத்து வைத்திருந்தனர். 

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தனிநபர்களாகிய அவர்கள்  உருவாக்கிய நூல் நிலையங்கள் அரசுடன் இணைந்து தன்னாட்சி பெற்று செயல்பட்டு பலரையும் பயன் அடையச்  செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

காலச்சூழலில் திருக்கோயிலின் தல புராணங்கள், தலப்பனுவல்கள் அதைச் சார்ந்த இலக்கியங்கள் யாவும் பின்னாளில் ஒரு சில நுட்பதிட்பம் தெரிந்தோர், தக்கோரைக் கொண்டு உரையெழுதச் செய்து வெளியீடும் செய்துள்ளனர். 

சில சான்றோர்கள் அருளிச் செய்த, பயன்படுத்திய  நூற்கள் யாவும் ஒரு சில இடங்களில் பூதம் காத்த புதையலாகவும், கரையானுக்கு இரையாகியும் உள்ளன என்பது  செவிவழிச் செய்தியாகக் கேட்கும் நிகழ்வு. 

புகழ் பெற்ற திருத்தலங்கள் மட்டும் அல்லாது, அந்தந்த திருத்தலங்களுக்குரிய தல புராணங்கள், இதர இலக்கிய தலப்பனுவல்களைக் கண்கொண்டு பார்ப்பவர்கள், மனம் கொண்டு படிப்பவர்கள்,  செவி கொண்டு கேட்பவர்கள் சமீப காலத்தில் அரிதாகி விட்டனர். 

உயிர்த்துடிப்போடு செயல்படும் சைவசபைகள், சமய மன்றங்கள், திருக்கூட்டங்கள் மற்றும் இலக்கியம், சமூகம் சார்ந்த அமைப்புகள், வளமுடைய செல்வந்தர்கள்  முறையே, திருநூற்களில் இருந்து முற்றோதல், ஆண்டுக்கு ஒரு முறை மாபெரும் அன்னதானம், மாதந்தோறும் உழவாரப்பணி, ஆண்டு விழாக்களில் பரிசளிப்பு, புரவலர்கள் கவுரவிப்பு  என பணி செய்தும் விழா எடுத்தும் மகிழ்கின்றனர். 

இவை யாவும்  பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருப்பது மகிழ்ச்சி தான். இதோடு, நாம் வாழும் பகுதிகளில் உள்ள சிறப்பு வாய்ந்த தல வரலாறு, அதன் மகத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள், பண்பாடு,பழக்க வழக்கம்  யாவற்றையும் அறிவதற்கு  அங்குள்ள திருநூற்கள் உதவும் என்பதை யாரும் மறந்து விட முடியாது. 

ஒரு நூல் வெளியீட்டின் சிறப்பினை தமிழ்த் தாத்தாவின் சீடரான கி.வா.ஜ.  நமக்கு எப்படி உணர்த்துகிறார் பாருங்களேன்…

திங்களணி சடைப்பெருமான் திருநாமம் 
  மறவாத சிந்தை கொண்டோன் 
சங்கமலிநூல் மீண்டும் தண்டமிழ் தாய்
  பூணும் வகை சமைத்த வள்ளல் 
துங்கமுறு தன்னடிக்கீழ் என்னையும் 
 அடிமை கொண்டு தொன்னூல் ஈந்த 
அங்கணன் அந்தணசாமி நாத குரு 
 பேரருளை அடைந்து உய்ந்தேனே!

     -கி.வா.ஜகநாதன்

சிறுவயதில் திரு.வி.க. அவர்கள் சென்னை, ராயப்பேட்டையில்  ‘பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை’ என்னும் அமைப்பை நடாத்தி வந்தார். ஒரு சமயம் அதன் ஆண்டு விழாவிற்கு உ.வே. சாமிநாதையர்  அவர்கள் தலைமை வகித்தார். 

 ‘உப்புமா கிண்டியது, மேடை அமைத்தது… என உப்புக்கும் சப்புக்கும் இல்லாத செய்தியை ஆண்டு விழா அறிக்கையாக வாசிப்பது நன்றாகவா இருக்கு…?’ என்று  அதில் பேசினார் தமிழ்த் தாத்தா. சாமிநாதையரின்  நாடித்துடிப்பினை  அறிந்த திரு.வி.க. அவர்கள் அடுத்த ஆண்டு சந்தானக்குரவர்கள் வரலாற்றினை நூலாக்கம் செய்து ஆண்டு விழாவில் வெளியிட்டு,  அதே மேடையில் சபாஷ் பெற்றுக் கொண்டார் என்பது வரலாற்றில் காணப்படும்  நெகிழ்ச்சியான செய்தி.  

அவரவர் பகுதிகளில் உள்ள  தலம் தொடர்புடைய இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட சைவ / வைணவ  அமைப்புகள் முன்வர வேண்டும். 

அத்தகைய செயல் ஏற்கனவே இனிதே நடைபெற்று இருந்தால், அப்பணியை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டுசெல்ல ஆயாத்தமாக வேண்டும்.

இந்நிலையினை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியம் ஏனென்றால்… கொல்லன் தெருவில் ஊசி விற்க ஒருவர் கிளம்பியதைப்  போல தல புராணங்களைத் திருத்தி எழுத  சில பகுத்தறிவுவாதிகள் புறப்பட்டு  அதற்கான நிதியையும் பெற்று விட்டார்கள். 

எனவே, ஹிந்து விரோதக் கட்சிகளிடம் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும்  இருக்க வேண்டும்.  அதே சமயம் நமது பாரம்பரிய வரலாறு கூறும் ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டும். 

சமய, இலக்கிய அமைப்புகள் ஆண்டு விழாக்களில்  தத்தம் பகுதியில் இருக்கும் குருமகா சன்னிதானங்களை அழைத்து அருளுரை வழங்கச் செய்தும், நூல் வெளியீட்டினையும் நடத்திட  கட்டாயம் ஏற்பாடு செய்யுங்கள். 

அவ்வைபவம் நிகழும் பட்சத்தில் ஹிந்துக்களின் ஆத்மிக சக்தியும், தேச ஒற்றுமையும் என்ன என்பது ஹிந்து விரோதக் கட்சிகளுக்கு புரியும் என்பதை   நினைவில் கொள்க.  

இப்படி யாராவது இப்பணியில் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டால் அவர்களுடைய பணியை பின்னாளில் அறிந்துணர்ந்து கொள்ளும் தமிழ் கூறும் நல்லுலகம் எள்ளளவும் அங்கிகரிக்கத் தயங்காது. 

அவரவர் வசிக்கும் பகுதியிலுள்ள புராண இலக்கியங்களை அப்படியே மீட்டெடுங்கள்.

-என்பதை வேண்டுகோளாகவும், விண்ணப்பமாகவும் வைத்து, திருத்தல நூற்பணிகள் ஏழேழு தலமுறையையும் காக்கும் எனச் சொல்லி  இச்சிந்தனையை நிறைவு செய்வோம். 

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் - திருந்த 
உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன்
பதிப்பிக்கவே கடைக்கண் பார். 

     (தமிழ்விடு தூது)

வாழ்க பாரதம்! வளர்க தாய்த்திருநாடு!

$$$

Leave a comment