-கருவாபுரிச் சிறுவன்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய ‘புன்னைவனம் சங்கரன்கோயில் ஆவுடையம்மன் பதிகம்’ என்னும் 12 பாக்கள் கொண்ட சிறு நூலை நமது தளத்தில் பதிவிடுகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்….

கேடாய் வரும்நமனை
கிட்டவராதே தூரப்
போடா எனவோட்டி உன்
பொற்கமல தாள்நிழற்கீழ்
வாடா என அழைத்து
வாழ்வித்தால் அம்ம உனைக்
கூடாதென்று யார் தடுப்பார்
கோமதித்தாய் ஈஸ்வரியே!
-அழகிய சொக்கநாதப் பிள்ளை
அஷ்ட திக்கு பாலகர்களில் தென் திசைக்கு அதிபதியான எமதர்ம ராஜனையே பின்னடிக்கச் செய்யும் வல்லமை எம் அன்னை கோமதியம்பிகையை வணங்கியவர்களுக்கு உண்டு.
அவளுடைய திருவடியின் கீழ் இருப்பவர்களுக்கு குறை ஒன்றும் இல்லை நிறைவே என்கிறார் தச்சநல்லுார் அழகிய சொக்கநாதப் பிள்ளையவர்கள்.
புன்னை வனத்தாளை வணங்காத உயிர்கள் உண்டோ! எதுவுமில்லை… அவளின் திருநாமத்தை நாவழுத்தி, சிந்தையால் நினைந்து, திருக்கோயிலை வலம் வந்து இவ்வுலகில் இன்புற்று வாழ்வாங்கு வாழ்வோரின் எண்ணிகையை அறுதியிட்டு இவ்வளவு தான் என கூற முடியுமா என்னே!
அவளை நாடிச் சென்றோரை அவளால் மட்டுமே அடையாளம் காண்பிக்க முடியும்.
அடிக்கும் முன்னோர் விதிக்கும் இன்சொற் சுவைக்கும் ஒரு
குறைவு வராது அமைத்தோர் பாட்டு
முடிக்கும் முன்னே தாய் கொடுத்த சேனையெலாம்
வாங்குதையோ முதிராக்கல்வி
படிக்கும் முன்னே தொடுத்த டுத்துக் கேட்போர்கள்
பிரமிக்கும் படிக்கும் ஒவ்வோர்
நொடிக்கு முன்னற் இனிய கவி முருகதாச
னைப் போல வல்லார் யாரே!
-அழகிய சொக்கநாதப் பிள்ளை
தவத்திரு. தண்டபாணி சுவாமிகள் பற்றி…
* 19 ஆம் நுாற்றாண்டில் குகபரத்துவத்தை திக்கெல்லாம் பரவச் செய்த பேரருளாளர்களில் குறிப்பிடத்தகுந்தோர்களுள் திருவாமத்துார் தண்டபாணி சுவாமிகளும் ஒருவர் ஆவார்கள்.
* லங்கோடு, கெளபீனம், முழுநீறு, தண்டம், பாதுகை , அக்கமாலை பூண்டு விரிந்த சிகையுடன் திருக்காட்சி தருபவர் தண்டபாணி சுவாமிகள்.
* கொல்லம் ஆண்டு விகாரிவருடம் கார்த்திகை திங்கள் 6ம் நாள் கி.பி. 1839 ஆம் ஆண்டு நவம்பர் 22 ம் நாள் திருநெல்வேலியில் செந்தில் நாயகம் பிள்ளையவர்களுக்கும், பேச்சி முத்தம்மை என்னும் பெண்ணின் நல்லாளுக்கும் திருமகனாய் அவதாரம் செய்தார்.
* சங்கரலிங்கம் என்னும் பிள்ளைத்திருநாமம் கொண்ட இவர் இளம் பருவத்தில் முருகப்பெருமான் திருவருளால் ஓதாது உணரும் பேற்றினைப் பெற்றார்.
* முருகப்பெருமான், வேல் வழிபாட்டினை நாள் தவறாது கை கொண்டு ஆசு, மதுரம், வித்தாரம், சித்திர கவிகளில் சிறந்தவராய் விளங்கினார்.
* ராமலிங்க சுவாமிகள், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, கவிக்குஞ்சர பாரதி, பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர், உடுமலை முத்துச்சாமி கவிராயர், வண்ணக்களஞ்சிய நாகலிங்க முனிவர், பூவை கல்யாண சுந்தர முதலியார், கழுகுமலை ராமகிருஷ்ணப் பிள்ளை, வீரகேரளம்புதுார் இருதாலய மருதப்பத் தேவர், மற்றும் சிவகரி, சேத்துார் ஜமீன்தார்களின் அவைக்களப் புலவர்கள் இன்னும் பலரிடமும் நல்லிணக்கம் கொண்டு இருந்தார்.
* தில்லை திருவாயிரம், பழநித் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம், ஞாயிறு ஆயிரம், புலவர் புராணம், அறுவகை இலக்கணம்,ஏழாம் இலக்கணம், குருபரத்துவம், திருவாமத்துார் புராணம், வண்ணத்தியல்பு, தமிழ் அலங்காரம், பதிகங்கள் அந்தாதிகள், கலம்பகங்கள், வெண்பாக்கள், கீர்த்தனைகள், தனிப்பாடல்கள் என லட்சத்திற்கும் மேற்பட்ட கவிகள் பாடிய நடமாடிய வாக்தேவர் இவர்.
* தமிழ்நாடு , ஈழ நாடு போன்ற தலங்களை தரிசித்து பெருமானின் திருவடியில் தனது சொல் மாலை கொண்டு அலங்கரித்தார்.
* ஒரு லட்சம் கவிகளைப் புனைந்த சுவாமிகள், நாம் செய்த தவப்பயனாக 50,000 கவிகளையே நமக்கு அருளிச் செய்துள்ளார்கள். இப்பெருமான் அருளிய நுாற்கள் யாவும் அறுவகை சமயத்தை அறுதியிட்டுப் போற்றும்.
* இவர் இல்லையெனில் பல புலவர்கள் கவிஞர்கள் ஞானிகளின் வரலாறு நமக்கு கிட்டாமல் போயிருக்கும்.
* எங்கள் மன்னர் பிரான் வரதுங்கராம பாண்டியரின் சரிதத்தை அழகுத்தமிழில் இயற்றிய பெரும் புலவர் இப்பெருமானே ஆவார்.
* இப்பகுதிக்கு தலயாத்திரையாக வந்து அன்னையின் அருள்வெளிப்பாட்டில் நனைந்த வண்ணச்சரபம் கோமதியம்பிகையின் மீது ஒரு பதிகம் ஒன்றினை இயற்றி பாடி அருளிச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாயே எனையாளும் தயா பரியே!
நாயேன் உனை நாளும் நலம் புகழேன்
பேயேன் ஒரு பிள்ளை எனத் துணையா
வாயேன் ஒருவஞ்சம் இலாதவளே!
-செளந்தரியந்தாதி (57)
பதிகத்தின் அமைப்பும் இயல்பும்
* பதிகத்தின் பெயர் ஆவுடையம்மன் பதிகம்.
* இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.
* விநாயகர் காப்புச்செய்யுளுடன் நேரிசை வெண்பாவில் தொடங்கும் இப்பதிகத்தில் இடம் பெற்ற எனைய பாக்களும் யாவும் வெண்டளை கலிவிருத்தத்தால் ஆனவை.
* வெண்பாவிற்குரிய வெண்டளையும், ஒசைநயமும் இடம் பெற்றுள்ளது.
(செப்பல் ஒசை என்பது இருவர் உரையாடுவது போல இடம் பெறும். இக்கூற்று மிகச்சிறப்பாக இப்பதிகத்தில் இடம் பெற்றுள்ளது).
* கலிப்பாவின் ஈற்றடி ஈற்றுச்சீர், ஆசிரியப்பாவிற்குரிய சுரிதகம் இடம் பெறும். இந்த அமைப்பையும் இந்நுாலாசிரியர் ஒவ்வொரு பாடல்களிலும் தெய்வாதீனமாக அமைத்துள்ளார்.
* நான்கு அடிகளைக் கொண்டு, அடி தோறும் நான்கு சீர்களை ஒத்து அமைந்து வருவது விருத்தம். இவ்வமைப்பையும் அனைத்துப் பாடல்களில் கையாண்டுள்ளார்.
* முதற்சீரில் இடம்பெறும் எதுகை ஒரே எழுத்தாக வந்து செய்யுளுக்கு கூடுதலாக அணி செய்கிறது. எனவே இப்பாடல்கள் அனைத்தும் ‘வெண்டளை கலிவிருத்தம்’ ஆயிற்று.
* கம்ப நாட்டாழ்வார், தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் ஆகியோரின் அருள்செயல்கள் வழியே, ஆவுடையம்மை பதிகத்தினையும் இயற்றி, அந்த வரிசையில் வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினர் என வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் செப்புகிறார்.
* பாடல்கள் முழுவதையும் சீர்பிரித்து இலக்கணத்தோடு பொருத்திப் பார்ப்பவர்களுக்கு புரியும். அது ஒரு தெளிவினை கொடுக்கும்.
* சீர்காழி திருஞானசம்பந்த சுவாமிகள் தன்னுடைய பதிகத்தின் கடைசிப் பாடலில் தன் பெயர், தன் ஊரின் பெயரை முத்திரைச் சொல்லாக நிறைவு செய்வார். அதைப்போல, எட்டையபுரம் நாத ஜோதியான முத்துசாமி தீட்ஷிதர் அவர்கள் தன்னுடைய கீர்த்தனைப்பாடல்களில் முத்திரைச் சொல்லாக முருகன் திருநாமத்தைச் சொல்லுவார்.
அதைப்போலவே வண்ணச்சரபம் அவர்களும் இங்கு பாடியருளிய பதிகத்தில் முத்திரைச் சொல்லாக ‘திருப்புகழோன் செப்பும் இவை’ எனச்சொல்லி அருளாட்சி செய்வர் என ஆசியளிக்கிறார்.
* மேலும் மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம் ‘திருச்சாழல்’ பதிகத்தில் எப்படி கேள்வி கேட்டு பதில் சொல்லுவாரோ அதைப்போலவே கோமதியம்பிகையிடம் உயிர்களாகிய நமக்காக வண்ணச்சரபரும் கேள்வி கேட்டு பதில் சொல்லும் விதம் இப்பதிகம் அமைந்தது நாம் செய்த புண்ணியத்தைக் காட்டுகிறது.
விரும்பியதைத் தருபவள்
சங்கரன் கோவிலுக்குரிய இலக்கியங்களை எல்லாம் ஒன்று திரட்டி நூலாக்கம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் திருநூற்களை பல நூலகங்களுக்குச் சென்று தேடி திரட்டிக் கொண்டிருந்த சமயம்.
நூற்கள் எல்லாம் டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருந்த ஆரம்ப கால கட்டம் அது.
கோயம்புத்துார் கெளமார மடாலய ஆதினப் புலவராகப் பணியாற்றிய பா.வெ.நாகராஜன் அவர்கள் அடியேனுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில், எட்டிச்சேரி ச.திருமலைவேற் கவிராயர் இயற்றிய ‘திருக்கருவை தல புராணம்’ மூல நூல் வேண்டும் என்றும், வேறு பல செய்திகளையும் கேட்டு குறிப்பிட்டு இருந்தார்.
சற்றும் தாமதம் செய்யாமல் உடனே அந்நூலினை நகல் செய்து அன்னாருக்கு அனுப்பிவைத்தேன். அது அடியேன் பெற்ற பேறு. அதற்கு அவர்கள் நன்றி தெரிவித்து வாழ்த்துச் சொல்லி பதில் கடிதமும் எழுதி இருந்தார்கள்.
இதை ஏன் இங்கு நினைவூட்டுகிறேன் என்றால், சங்கரன்கோவில் இலக்கியங்களைத் திரட்டும் அடியேனுக்கும், அத்தலத்தின் செங்கோலோச்சும் கோமதியம்பிகைக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்.
அதற்கு அவள் பல ஆண்டுகள் தவமிருந்து தான் கண்டு மகிழ்ந்த சங்கர நாராயணர் வடிவத்தை பின்னாளில் சங்கன், பத்மன் என்ற பாம்பரசர்கள் பல ஆண்டுகள் தவமிருந்து தரிசித்தார்கள்.
அத்திருவிளையாடல்களை நிகழ்த்திய அத்தலத்தின் திருநூற்களைத் தொகுக்கும் அடியேனுக்கு பாம்பரசர் திருநாமம் பெற்ற பெரும்புலவர் வழியே அருளாசி வழங்கினாள் என்பதை பின்னாளில் உணர்ந்து எண்ணி எண்ணி அகம் மகிழ்ந்தேன்.
அதன் பிறகு நாகராஜன் அவர்களைத் தொடர்பு கொண்டு, “வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் புன்னைவனம் (கரிவலம் வந்த நல்லுார் ) என்ற தலைப்பில் கோமதி பதிகம் இயற்றியதாக விழுப்புரம் கெளமார மடாலய வெளியீட்டில் குறிப்பு ஒன்று உள்ளது. புன்னை வனம் என்பது சங்கரன்கோவிலைக்குறிக்கும். இத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் கோமதியம்பிகை. கரிவலம் வந்த நல்லுார் களாவனம். இத்தலத்தில் அருள் செய்யும் தேவியின் திருநாமம் ஒப்பனையாள். சங்கரன் கோயில் இலக்கிய திரட்டிற்காக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய கோமதியம்மன் பதிகத்தின் நகல் வேண்டும்” என விண்ணப்பித்தேன்.
அதைக் கண்ணுற்ற புலவர் பெருமான் அகமகிழ்ந்து, அடியேனை மடாலயம் வரவழைத்து வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கோமதியம்பிகையாகிய ஆவுடைத்தாயின் மீது இயற்றிய பதினொரு பாக்களையும் ஓலைச் சுவடியில் இருந்து பெயர்த்து எழுதிக் கொடுத்தார்.
மேலும் தவத்திரு குமரகுருபர சுவாமிகளிடம் விபரத்தைச் சொல்லி அவர்களிடமும் அருளாசியும் பெற வைத்தார்.
கோமதியம்பிகையின் பக்தர்கள் பயன் பெற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக மட்டும் மூலச் செய்யுளில் இருந்து பாடல்கள் பதம் பிரித்து தரப்பட்டுள்ளது.
பார்ப்பவர்கள், படிப்பவர்கள், படித்ததைக் கேட்பவர்கள், ரசித்தவர்கள் அனைவரும் சங்கர கோமதியம்பிகையின் திருக்கடைக்கண் பார்வைக்குப் பாத்திரமாக வேண்டுகிறோம்.
***

புன்னைவனம் சங்கரன்கோயில் ஆவுடையம்மன் பதிகம்
-வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
வெண்பா புன்னைவனத்து ஆவுடையே! பொங்கரவம் பூண்ட பிரான் தன்னையொரு பாகம் வைத்த சங்கரியே - என்னையுனது ஆளாக்குவாய் என்று அடுத்தேன் அருவினை தோய்த் தேளால் தளராமல் செய். நூல் (வெண்டளை கலிவிருத்தம்) எத்தனையோ தொண்டர்க்கு எளிதில் அருள் கூரும் உன்தன் சித்தம் என்தன் மட்டில் சிறிது இரங்கல் ஆகாதோ? சத்தமறை தேடரியார் சங்கு அணியும் காது அருந்தும் புத்தமிழ்தில் சொல்ப்பயில்வாய் புன்னைவனத்து ஆவுடையே! (1) ஏதமிகக் கொண்டு இளைத்தேன் இரங்கிநின் பொற் பாதமலர் சூட்டிப் பரிந்தருள மாட்டாயோ? காதளவும் நீடுவிழிக் கார்க் கோல மனையாய் பூத கணத்தார் புரக்கும் புன்னைவனத்து ஆவுடையே! (2) நற்பார் புரக்கும் நரராதியர்க்கு ஒல்கி நிற்பான் விடலாமோ நீயிரங்க ஒண்ணாதோ? கற்பார் பரவும் கவுணியற்குப் பால்சுரந்த பொற்பார் முனலக்குயில் நேர் புன்னைவனத்து ஆவுடையே! (3) ஒன்னார் மகிழ உறுகண் பெருத்துளத்தோடு என்னாகம் குன்றாது இரங்கியருள் செய்திடுவாய், பல் நாகம் பூண்டார் தம் பாலமரும் பைங்கிளியே! பொன்னார் மதிளுடுத்த புன்னைவனத்து ஆவுடையே! (4) எல்லா நலமும் இனிதருளி ஆண்டுகொள்ள வல்லா நீ யென்றடுத்தேன் மாநிலத்தோர் ஏச விடேல் கல்லால் நீழற் கடவுளருட் காதலியே! பொல்லார் அணுகரிய புன்னைவனத்து ஆவுடையே! (5) ஆற்றும் பணிநலம் ஆய்ந்தறியேன் ஆயினும் நான் சாற்றும் துதி நின்றனது செவிக்கு ஏறாதோ? கூற்றும் குலைகுலையக் கோபித்தார் கொஞ்சி மிகப் போற்றும் புகழ்ப் பொலிவார் புன்னைவனத்து ஆவுடையே! (6) ஆங்கடியேற்கு அவ்வாறு அருளும் அருள்கருதில் ஈங்களவில் இன்னல் எனைச்சேரல் நீதி கொல்லோ? தீங்கனந்தம் தீர்ப்பாய் திருமால் அயன் விரும்பும் பூங்கமலத்தார் பரவும் புன்னைவனத்து ஆவுடையே! (7) ஐவருக்கோர் தாயாம்நின் அன்பிலமிழ்ந்து ஆர்வமுறு மெய்வழியில் தோய்வார்பால் மேவுநலம் ஈந்தருள்வாய் தெய்வநிலை சற்றும் தெளியாது இறுமாக்கும் பொய்வழக்கர் சேரரிதாம் புன்னைவனத்து ஆவுடையே! (8) திண்ணியவேல் ஆகியருள்ச் சேந்தன் திருக்கரத்தில் நண்ணிலையேல் விண்ணுலகும் நானிலமும் வாழ்வதுண்டோ? புண்ணியச் சொல் பாவலவர் பற்பலர்க்கோர் மெய்த்துணையே புண்ணியச்சீர் மிக்கிலகும் புன்னைவனத்து ஆவுடையே! (9) காமியமும் வீடும் கருதுமவர்க் கீந்தருளும் நீமிடிநோய் தீர்க்க நினைத்தால் இளப்பமதோ? பாமிகச் சொல் சங்கரப்பேர்ப் பத்தனையன்று ஆண்ட நங்காய் பூமியெங்கும் போற்றுமே எழில்ப் புன்னைவனத்து ஆவுடையே! (10) வேதமுடன் ஆகமமும் மிக்கொலிக்கும் வீறுமிஞ்சிப் போத நலம்காட்டும் புன்னைவனத்து ஆவுடையைச் சீதம்மலி நெல்லைத் திருப்புகழோன் செப்புமிவை ஆதாரமாக் கொள்வார்க்கு அருளாட்சி நல்குமன்றே. (11)
$$$