குழந்தைகள் உலகுக்கு உருவம் கொடுத்த வாண்டுமாமா

-சந்திர.பிரவீண்குமார்

தமிழில் மழலை இலக்கியத்துக்கு பெரும் ரசிகர் படையை உருவாக்கியவர்; தனது படைப்புகளின் மூலமாக சிறுவர்களை எழுத்தாளராக்கியவர் ‘வாண்டுமாமா’. அவரது நூற்றாண்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. சந்திர.பிரவீண்குமார்  ‘தினமலர்’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது.
வாண்டுமாமா

பல ஆண்டுகளுக்கு முன்பு, ‘ஆனந்த விகடனில்’ ஓவியராக இருந்த ஒரு இளைஞர், சிறுகதை ஒன்றை எழுதி தனது மேலதிகாரியிடம் காண்பித்தார். அதைப் படித்துப் பார்த்த மேலதிகாரி, ‘‘தம்பி, பெரியவர்களுக்கான கதைகளை எழுத பலர் இருக்கின்றனர். நீ சின்னப் பசங்களுக்கு எழுது’’ என்றார்.அவர் சொன்னதில் ஓவியருக்கு விருப்பமில்லை என்றாலும், சிறுவர்களுக்கான 3 கதைகளை எழுதித் தந்தார். விகடன் பாப்பா மலரில் ‘மூர்த்தி’ என்ற பெயரில் வந்த அந்தக் கதைகள், ஓவியரின் வாழ்க்கையையே திசை மாற்றின எனலாம்.

அந்த ஓவியர், வி.கிருஷ்ணமூர்த்தி. ஆனால், அப்படிச் சொன்னால் எத்தனை பேருக்கு அவரை அடையாளம் தெரியுமோ, ‘வாண்டுமாமா’ என்றால் எல்லாருக்கும் புரியும். அவரை ஊக்குவித்த மேலதிகாரி ஓவியர் மாலி.


அடுத்த 50 ஆண்டுகளுக்கு வாண்டுமாமா, குழந்தைகளின் நாயகராகத்தான் இருந்தார். குழந்தைகளுக்கு எழுதுவது தனித்துவமானது. அவர்கள் வயதுக்கு இறங்கி வந்து, அவர்களின் மாய உலகில் சஞ்சரிக்க வேண்டும். தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டு அவர்களுடன் பேச வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளின் மனது வேண்டும். இதெல்லாம் வாண்டுமாமாவுக்கு ஒருங்கே இருந்தது.

குழந்தை பத்திரிகை ஆரம்பித்தாலே சம்பாதித்து விடலாம் என்ற நிலைமை அன்று இருந்தது. டஜன் கணக்கில் முக்கிய குழந்தை எழுத்தாளர்கள் இருந்தனர். ஆனாலும், வாண்டுமாமாவுக்கென தனி முத்திரை கிடைத்தது.

‘கௌசிகன்’ என்ற பெயரில் பெரியவர்களுக்கும்,  ‘வாண்டுமாமா’ என்ற பெயரில் சிறுவர்களுக்கும் அவர் எழுதிக் குவித்தாலும், பெயர் கிடைத்தது குழந்தை எழுத்துக்களில்தான்.

குழந்தை இலக்கியங்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், அறிவியல் தகவல் நூல்கள், வெளிநாட்டு குழந்தை நூல்களின் மொழிபெயர்ப்புகள், பழந்தமிழ் இலக்கியங்களான மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியவற்றை உள்ளடக்கிய சதுரநீதி நூல்கள்… இப்படி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார்.

ஓவியர் செல்லத்துடன் இணைந்து அவர் எழுதிய சித்திரக்கதைகள் தமிழில் குறிப்பிடத்தக்கவை. அமர் சித்திர கதைகளையும் தமிழில் கொண்டு வந்தார். அவர் உருவாக்கிய ‘பலே பாலு’, ‘சமத்து சாரு’ போன்ற கதாபாத்திரங்கள், சிறுவர் உலகின் நிரந்தர நாயகர்களாகவே மாறிவிட்டனர்.

வாண்டுமாமாவின் படைப்புகளில் ‘தோன்றியது எப்படி’, ‘ஓநாய்க் கோட்டை’, ‘கனவா நிஜமா?’, ‘மருத்துவம் பிறந்த கதை’, ‘நமது உடலின் மர்மங்கள்’ போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. 4 பாகங்களாக வெளிவந்த ‘தோன்றியது எப்படி’ புத்தகத்தின் 2 பாகங்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் விருது கிடைத்தது.

சுகாதார வகைப்பாடு, பொறியியல் வகைப்பாடு என குழந்தைகளுக்கு தேவையான எல்லா துறைகளிலும் எழுதியிருக்கிறார். ராணா சங்கா, மாமன்னன் பிருத்திவிராஜ் சவுகான் போன்ற வரலாற்று நாயகர்களைப் பற்றியும் குழந்தைகள் விரும்பும் வகையில், எளிய தமிழில் கொடுத்தார்.

வாண்டுமாமா, பத்திரிகை துறையிலும் முக்கிய இடம் பிடித்தார். திரிலோக சீதாராம்  நடத்திய ‘சிவாஜி’ பத்திரிகையின் துணையாசிரியராக அச்சுக் கோர்ப்பது முதல் கடைகளுக்கு விற்பனை செய்வது வரை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார்.

‘வானவில்’, ‘மின்னல்’ போன்ற குழந்தைகள் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து அவற்றை நடத்தினார். சில நாட்கள் தனது நண்பருடன் இணைந்து ‘கிண்கிணி’ என்ற சிறுவர் இதழை நடத்தினார். தொடர்ந்து அரு. ராமநாதனின் காதல், கலைமணி போன்ற இதழ்களிலும், ராஜா என்பவரின் ‘சுதந்திரம்’ இதழிலும் பணியாற்றினார். சுதந்திரம் இதழ் விரைவிலேயே நிறுத்தப்பட்டதால், திருச்சியில் உள்ள இ.ஆர். உயர்நிலைப்பள்ளியில் நூலகராக வேலைக்கு சேர்ந்தார்.

வாண்டுமாமாவுக்கு ‘கல்கி’ பத்திரிக்கையில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. முதலில் விற்பனைப் பிரிவில் பணியாற்றியவர், பிறகு ஆசிரியர் குழுவில் இணைந்தார். ‘பாப்பா மலர்’ என்ற சிறுவர் பகுதியைத் திறம்பட நடத்தினார். அது ‘கோகுலம்’ என்ற சிறுவர் இதழைத் தொடங்க வழிவகுத்தது.

தொடர்ந்து, 23 ஆண்டுகள் கல்கி குழுமத்தில் பணியாற்றிய வாண்டுமாமா கதை, கட்டுரைகளுக்காக பல போட்டிகள் நடத்தி பல வாசக குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமையும் உண்டு.  ‘கோகுலம்’ பத்திரிகை நின்று போகவே, குங்குமம் இதழில் சேர்ந்தார். பின், எழுத்தாளர் நா. பார்த்தசாரதியின் அழைப்பை ஏற்று ‘தினமணி கதிரில்’ சேர்ந்தார். அங்கு 4 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். தொடர்ந்து பத்திரிகைகளுக்குக் கதை, சிறுகதை, கட்டுரைகளை எழுதி வந்தார்.

1984ஆம் ஆண்டு, ‘பூந்தளிர்’ இதழை பைகோ பிரசுரம் தொடங்கியது. அதற்கும் வாண்டுமாமா ஆசிரியராக பொறுப்பேற்றார். பூந்தளிரில் படக்கதைகள், நீதிக் கதைகள், அறிவியல் தொழில்நுட்பங்கள், பொது அறிவு தகவல்களை குழந்தைகள் விரும்பும் வண்ணம் எளிய தமிழில், அழகான படங்களுடன் கொடுத்தார்.

அவர் அடிப்படையில் ஓவியராகவும், இதழ் வடிவமைப்பாளராகவும் இருந்ததால் பல்வேறு புதுமைகளை அவரால் அதில் செய்ய முடிந்தது. அப்போது வேட்டைக்கார வேம்பு, சுப்பாண்டி, கபீஷ், காளி போன்ற கதாபாத்திரங்களை உருவாக்கிய வாண்டுமாமா, தனது 77-ஆம் வயதில் உடல்நிலை காரணமாக ‘பூந்தளிர்’ பத்திரிக்கையில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இப்படி வாண்டுமாமா என்ற கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி சிலாகிக்க, சாகாவரம் பெற்ற அவரது எழுத்துக்களை மீண்டும் நினைவுபடுத்த இப்போது ஒரு வாய்ப்பு. ஆம், 70 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை தனது எழுத்துக்களால் கட்டிப்போட்ட வாண்டுமாமாவின் நுாற்றாண்டு இது.

1925ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் என்ற ஊரில் அவர் பிறந்தார். 2 வயதில் தந்தையை இழந்த அவர், திருச்சியில் உள்ள தனது அத்தை வீட்டில் வளர்ந்தார். ஆரம்பக் கல்வியைத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். 1944ஆம் ஆண்டில் பள்ளி இறுதித் தேர்வை முடித்தார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ‘குட்வின் பிக்சர்ஸ்’ என்ற சினிமா நிறுவனத்தில் சில காலம் பிரதிநிதியாகப் பணிபுரிந்தார்.

பள்ளிக் காலத்தில் கரும்பலகையில் ஓவியம் தீட்டிய அனுபவத்தில், திருச்சியில் இருந்த பல நகைக் கடைகளுக்கு லேபிள்கள், விளம்பரப் படங்கள், வாசகங்களை வரைந்து தரத் தொடங்கினார். தொடர்ந்து பாடப் புத்தகங்களுக்கு படம் போடும் வாய்ப்பு கிடைத்தது. பிரபல பதிப்பகங்களுக்கு அட்டைப்படம் தயாரிக்கவும், ஓவியம் வரையவும் வாய்ப்பு வந்தது. பிறகு, மாலியின் மூலமாக ஆனந்த விகடனில் சேர்ந்தார். அப்புறம் நடந்ததுதான் இந்தக் கட்டுரையின் முதல் பாராவில் சொன்னது.

.

  • நன்றி: தினமலர் (வேலூர் பதிப்பு)– 21.04.2025


$$$

Leave a comment