-கருவாபுரிச் சிறுவன்
கீழ்க்கண்ட சிந்தனைகளை ஹிந்து மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் தத்தமது வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க அவர்கள் வாழ்வு மட்டுமல்ல, எதிர்காலமும் சிறப்பாக அமையும்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்;
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்.
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்;
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்.
மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்;
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்.
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே!
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!
-வடலுார் ராமலிங்க வள்ளலார்
கீழ்க்கண்ட சிந்தனைகளை ஹிந்து மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் தத்தமது வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க அவர்கள் வாழ்வு மட்டுமல்ல, எதிர்காலமும் சிறப்பாக அமையும்.
தீய வழிகளுக்குள் குழந்தைகள் ஆட்பட மாட்டார்கள். இளம் பிராயத்திலேயே அவர்கள் உத்தமானாக வளர்வதற்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் செய்து கொடுங்கள்.
கால மாற்றத்தில் அவர்கள் வழி தவறினாலும் மீண்டும் நல்வழிக்குத் திரும்பி விடுவார்கள் என்பது சான்றோர் வாக்கு.
மங்களம் உண்டாகுக…
- ஆதவன் தோன்றும் முன் படுக்கையில் இருந்து எழுந்திருங்கள்.
- முகம், கை கால்களைக் கழுவுங்கள்.
- சிவபெருமான், ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை நினைத்துக் கொண்டு அவருடைய புகழ் பேசும் திருமுறைகள், திவ்ய பிரபந்தங்கள் முறையே, நமச்சிவாய பதிகங்கள், திருநீற்றுப் பதிகம், கோளறு பதிகம், சிவபுராணம், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம், விஷ்ணு சகஸர நாமம், கருடாழ்வார் துதி, அபிராமி அந்தாதி இவற்றில் ஏதேனும் ஒன்றாயினும் தினசரி கேட்கும் வழக்கத்தினை ஏற்படுத்துங்கள்.
- நேற்று பகலும் இரவும் அடியேனைக் காத்ததற்கும் நல்ல வழியில் செலுத்தியதற்காகவும் பரம்பொருளுக்கு நன்றி சொல்லுங்கள்.
- இன்று எனக்கு நல்லுணர்வு, நல்லெண்ணம், நற்செய்கை கொடுக்கும் படி மீண்டும் பரம்பொருளை வேண்டிக் கொள்ளுங்கள்.
- நேற்று வாழ்வில் கற்றுக் கொண்ட பாடங்களை இன்று மறக்காமல் சிந்தியுங்கள்.
- பெரியோர்களுக்கு வணக்கம் செலுத்தி, அன்றாட வேலைகளைத் தொடங்குங்கள்.
காலை வணக்கம்
கடவுளே! அருட் கடலே! பொறுமையின் குன்றே! நேற்று அடியேன் வாடாமல் இனிய உணவுகளைக் சரியான காலத்தில் கொடுத்ததற்கும், நன்னெறியில் செலுத்தியதற்கும், நல்லெண்ணங்களை கொடுத்ததற்கும் திரிகரணங்களாகிய மனம் மொழி,மெய்களால் நன்றி செலுத்துகிறேன். எம்பரம பிதாவான சிவபெருமானே! இன்நன்றியை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
வேண்டுகோள்
இறைவரே! எல்லாம் வல்லவரே! இன்று அடியேனுக்கு பழுதற்ற உணவும், தீதற்ற எண்ணமும் நோயற்ற வாழ்வும் மறைவற்ற பாடங்களையும் பணித்தருள வேண்டும்.
எம் முதல்வரே! அடியேனை இன்று தீமையில் விட்டு விடாதீர்கள். சிறுவன் என்றும் எம்மை கை விட்டுவிடாதீர்கள். தினந்தோறும் உம்முடைய திருவடிக்கு உரிமைப்படுத்திக் கொள்ளும் பரம் பொருளே!
பெரியோர் வணக்கம்
அம்மையே! அப்பா! ஆசிரியரே! பெரியோர்களே! முற்றும் துறந்த முனிவர்களே! அடியேனை எல்லா வழிகளிலும் காப்பாற்றுங்கள். அனைவருடைய திருவடியையும் இந்நேரத்தில் வணங்கி மகிழ்கிறேன்.
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
-திருவள்ளுவர்
மாலை வணக்கம்
- கதிரவன் மறைந்த பின் கை, கால் முதலிய உறுப்புகளை நன்றாகக் கழுவுங்கள்.
- ஈரம் போக்கி, திருநீறோ திருமண்ணோ நெற்றியில் அணியுங்கள்.
- பூஜை அறை,சுவாமியின் திருப்படம், அல்லது விளக்கு முன்பு நின்று அவருடைய கருணையை நினைத்துப் பாருங்கள். அதற்காக தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லுங்கள்
- இரவில் தம்மைக் காக்கும் படி வேண்டிக் கொள்ளுங்கள். பெரியோர்களுக்கு வணக்கம் செலுத்துங்கள்.
வேண்டுகோள்
மருவிலா மணியே! ஒள்ளொளியே! இன்றிரவுப் பொழுது நல்லெண்ணமும், மாசற்ற உணவும், பிணியற்ற வாழ்க்கையும், கருத்துடைய கல்வியும் அடியேனுக்கு அமையுமாறு பணித்தருள வேண்டுகிறேன்.
பெரியோர் வணக்கம்
தாயே! தந்தையே! குருவே! சான்றோரே! பற்றற்ற அறிவுடைய ஆன்ம நேயம் மிக்கவர்களே! தங்கள் அனைவருடைய திருவடிகளையும் இந்நேரத்தில் பல முறை வணங்கி கொள்கிறேன்.
அடியேனுக்கு எல்லாவற்றிலும் நன்மையைக் கொடுத்து அருளுங்கள்.
என் தீவினையின் காரணமாக ஏற்பட்ட துன்பம் நீங்கவும், பூர்வ ஜென்ம புண்ணியப் பயனால் உண்டாகும் இன்பத்தில் திளைக்கவும் அருளாசி செய்யுங்கள்.
நன்றி மொழிகள்
அருட் கடலே! சுடர்க்குன்றே! முழுமுதலே! எல்லாம் வல்ல பரம்பொருளே!
அடியேன் இன்று காலை தொடர்ந்து நோய் வராமல் காத்தமைக்கும், நல்லுணர்வு தந்தமைக்கும், என்னுடைய மனம் தீய நெறியில் வசப்படாமல் நன்னெறியில் அமையச் செய்தததற்கும், திரிகரணமாகிய மனம் மொழி மெய்களால் நன்றி செலுத்துகிறேன் பரம் பொருளே!
நிறைவாக, பட்டினத்து அடிகள் பாடிய பாடலைப் பாடி இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக.
கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின்னஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.
வாழ்க பாரதம்! வாழ்க தாய்த்திருநாடு!
$$$