நரனே! நாவை அடக்கு – 2 

-கருவாபுரிச் சிறுவன் 

அண்மையில் தமிழக அமைச்சர் ஒருவர் நாத்திக இயக்கம் ஒன்றின் கூட்டமொன்றில் அநாகரிகமாகவும், சைவ, வைணவ சின்னங்களை கேவலப்படுத்தும் விதமாகவும் பேசியிருந்தார். அவருக்கு நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன் அளிக்கும் சாட்டையடி இது…

அங்கணன் கயிலை காக்கும் 
 அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபுக்கு எல்லாம் 
 முதற்குரு நாதனாகிப்
பங்கயத் துளவம் நாறும் 
 வேத்திரப் படைபொ றுத்த
செங்கையெம் பெருமான் 
 நந்தி சீரடிக் கமலம் போற்றி!

    -சிவஞான யோகிகள் 

பங்குனி மாத நன்னாளில்  நந்தியெம்பெருமானின் திருக்கல்யாண வைபவம். இந்த நிகழ்வினை  தரிசித்தோர்கள், நம் பெருமானின் அருமை பெருமையைப் பற்றி நாளும் சிந்தித்தோர்கள் யாவருக்கும் சகல நலன்களும் உண்டாகுக… 

இப்பெருமான் வாங்கிய வரங்கள் பதினாறு என்கிறது திருவையாற்றுப் புராணம். 

அப்பெருமான் பெற்ற வரங்களில்  முதல் வரம்  சிவபெருமானின் திருவாக்காகிய வேதங்களையும், அதன் வழி சொல்லப்படும் விளக்கங்களையும், அவ்வேதமாகவே  திகழும் தத்தம் சமயங்களை யார் தவறாகப் பேசினாலும்  அவர்களுக்கு தக்க தண்டனை அடியேன் கொடுக்க வேண்டும்  என்கிற வரத்தினை முத்தாய்ப்பாகப் பெற்றார் நம் நந்தியெம்பெருமான். 

அவ்வரத்தின் வரிகள் இதோ…

மறைகள் நிந்தனை சைவநிந்தனை பொறா மனமும்
............. ............................................
துறக்கமீ துறையினும், நரகில் தோய்கினும்
இறக்கினும், பிறக்கினும், இன்பம் துய்க்கினும் 
பிறைக்கொழுந் தணிசடைப் பெரும் இவ்வரம் 
மறுத்திடாது எனக்கு நீ வழங்கல் வேண்டுமால்.

மனமும் குணமும் மாறாது

உலகில் வாழும் விலங்குகளில் புலி, சிங்கம், பாம்பு  போன்றவை இயல்பாகவே சீறும். யானை எல்லா விலங்குகளிலும் அதிக பலம் கொண்டதாக இருந்தாலும் அது பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும். புதிய நபர்களைக் கண்டால்  எல்லா நாய்களும் குரைக்கும். இவ்வாறாக பல்வேறு   உயிர்களுக்கும் பிரத்தியேகமான குணங்களைப் படைத்த இறைவன் மனிதர்களுக்கு மட்டும் வேறுபட்ட, மாறுபட்ட குணங்களைக் கொடுத்தது ஏனோ ? என்பது சிந்திக்க தக்கது. 

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நுால் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம்

-என்றார் ஔவை பிராட்டியார். ஒருவன் இளம் வயது முதலே கல்வியிலும் தர்ம நெறிகளிலும் சிறந்து விளங்கும் நல்லோரின் சேர்க்கையைப் பெற்று வளர்வானாகில் அவன் நல்ல குணங்களை பெறுவான். 

தீய குணங்களும் தீய பழக்க வழக்கங்களும் நிறைந்தவருடன் பழகும் சூழ்நிலையில் அவன்  தீய குணங்களைப் பெறுவது இயல்பு.

இயல்பாகவே காமம், குரோதம், கோபம், லோபம், மதம், மாத்சர்யம் முதலிய தீய குணங்களை வளர்த்துக்கொண்ட மனிதர்கள் பொதுவாகத் தம் வாழ்நாளில் என்றும் திருந்துவதில்லை. 

அவர்களது தீய குணத்தாலும், தீய செயல்களாலும் விளைந்த தீமைகள் அவர்கள் இறந்து அவர்களது உடல்களைக் கட்டையில் வைத்து எரிக்கையிலும், பூமியில் குழி தோண்டிப் புதைக்கையிலும்  மறைவதில்லை.

இதற்கு  முற்றிலும் சரியான எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் தான் ஹிந்து மத விரோதக் கட்சிகளில் இருக்கும் நரர்கள். 

இழிவான பேச்சு

ஹிந்து விரோதக் கட்சிகள் மற்றும் இவற்றுடன் இருக்கும் உதிரி கட்சிகளில் இருப்பவர்கள் பிற மதத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதும், ஹிந்து மதத்தினரை இழிவுபடுத்திப் பேசுவதும், ஹிந்துக்கள்  மனதைப் புண்படுத்துவதும்  அவர்களுக்கு வாடிக்கையான விஷயம். ஹிந்துக்களுக்கு வேடிக்கையான விஷயமும் கூட… 

சமீபத்தில்    சைவ, வைணவ மத சின்னங்களை இழிவாகப் பேசிய ஹிந்து விரோத கட்சிக்கார   தறுதலைக்கும் அவரைச்  சார்ந்தோருக்கும் வேறு என்ன பெயரிடலாம் என யோசியுங்கள், ஹிந்து சொந்தங்களே! 

அவர் எவ்வளவு நிதானமாகப் பேசுகிறார் பாருங்கள். அதுவும் பெண்கள் மத்தியில்… 

ஒரு ஹிந்துவிற்கு  இன்று பிறந்த குழந்தையின்  கெண்டைக்கால் மயிருக்கும் இந்த அமைச்சர் கூட சமமாக மாட்டார்.

 (அந்த ஹிந்து விரோத கட்சிக்காரரை  கட்சிப் பணி, அமைச்சர் பணியில் இருந்து  தலைமை நீக்கலாம்; பின்னர் சேர்த்துக் கொள்வார்கள். மற்றவர்கள்  கண்டனங்கள் தெரிவிக்கலாம். அதற்கெல்லாம் மயங்கி விடக் கூடாது ஹிந்து மக்களே!  தேசியக் கட்சியான  பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை தவிர்த்து ஒரு அரசியல் கட்சி கூட இந்த நாராசப் பேச்சைக் கண்டித்து அறிக்கை விடவில்லை. இத்தகைய துப்பில்லாதவர்களுடன் நாமும் சகித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்). 

அறநிலையத் துறையைச் சார்ந்து இருக்கும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், மடாதிபதிகள், ஆதினங்கள், குருபீடங்கள், சைவ வைணவ அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவிக்க தயங்குவது ஏனோ!

உண்மையான ஆன்மிகவாதிகளாக இருந்தால், உங்களுக்கு  ஹிந்து விரோத அரசு கொடுத்த பொறுப்பில் இருந்து வெளியேறுங்கள்.

இவ்விஷயத்தில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து ஹிந்து விரோத அரசுக்கு அறிவுரையும் அறவுரையும் வழங்க முன்வருமா?

மானமுள்ள ஹிந்து சொந்தங்களே!  இது போன்ற செய்திகளையெல்லாம்  ஒன்றாகத் தொகுங்கள். 

திருப்பூர் மாவட்டம்- சென்னிமலை, மதுரை மாவட்டம்-  திருப்பரங்குன்றத்தில் நடந்த நிகழ்வுகளைப் போன்று ஒவ்வொரு புகழ் பெற்ற திருக்கோயில்களிலும்  கண்ணிமைக்கும் நேரத்தில்  மாபெரும் கூட்டத்தை இயல்பாகக் கூட்டி ஆர்ப்பாட்டம் செய்தால், இந்தப் போலிப் பகுத்தறிவு கூட்டம் பல்லிளித்துக் கொண்டு மீண்டும் எண்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடும். 

தரம் கெட்டவர்களின் தராதரத்தை தோலுரித்துக் காட்டுங்கள் ஹிந்துக்களே! தமிழகத்தில்  நியாயமானவர்கள் ஆட்சியில் அமர ஒரு நிமிடமாவது இது பற்றி சிந்தியுங்கள்.

இவர்களைப் போன்றோருக்கு நம் அருளாளர்களின் கூற்றுகள் சில… 

  • கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்… இம்மேதினியில் பாவியேனும் நாமம் படைக்காதே –  ஔவையார்
  • காக்கைக்கு இரையாகப் போவீர்கள் – திருநாவுக்கரசு சுவாமிகள் 
  • இருப்பதுபொய் போவதுமெய் ஒருத்தருக்கும் தீங்கினை நினையாதே – பட்டினத்தார்
  • செத்தும் பிறப்பதையே தொழிலாகக் கொள்வீர் – சிவஞான யோகிகள் 
  • ஏன் பிறந்தார் மானிடராய் இன்று – வரதுங்க ராம பாண்டியர்
  • கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக – ராமலிங்க வள்ளலார்
  • நாஸ்திகர்களின் சகவாசம் செத்த பாம்பினை அடிப்பதற்கு சமம்  – பசும்பொன் தேவர்
  • தி.மு.க.வினை  ஆட்சியில் அமர்த்துவது திருடனை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதற்கு சமம் – காமராஜர்.

காசுக்கு விலை போகாத கற்றறிந்த சான்றோர்கள், தமிழ் அறிஞர்களிடம் சென்று கைகட்டி, வாய்பொத்தி  சிலப்பதிகாரம், சங்க நூல்கள், நீதி நூல்கள், ராமாயணம், மகாபாரதம், திருக்குறள், பெரிய புராணம், விநாயக புராணம் போன்றவற்றைப் படியுங்கள்.

அவற்றில்,  ஒரு நாட்டை ஆளும் மன்னன் குடியாட்சி, முடியாட்சி எதுவாக இருந்தாலும்  எப்படி அரசு புரிய வேண்டும் என்கிற கோட்பாடு கொண்ட அறிவுரை, அறவுரைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை சிரத்தையுடன் கேளுங்கள்.  

இனிமேலாவது தங்களைத்  திருத்திக் கொள்ள  ஆளும் கட்சியினரும், ஆளப்போகும் கட்சியினரும் முன்வர வேண்டும் என்பது இவ்விடத்தில் நினைவில் கொள்ளுங்கள்.

நிறைவாக, 

ஒழுக்கம் என்பது மனித வாழ்வியலின் அத்தியாவசிய அடிப்படைப்  பண்பு. 

நல்லநெறிகளைப் பின்பற்றி மனிதன் வாழ்ந்தால் மேம்பட்ட மனிதராக வாழ முடியும். 

தனிமனித ஒழுக்கமே சமூகம் மேம்பட அடிப்படைக் காரணம். 

தனிமனித வாழ்வியல் ஒழுக்கத்தை இலக்கியங்களும் முதன்மைப்படுத்த என்றும் தவறியதில்லை. 

இருப்பினும், பழமொழி நானூற்றில்  ‘ஒழுக்கத்தை விட உயா்ந்தது ஒன்றுமில்லை’ என்ற கருத்தமைந்த பாடலை  அனைவரும் சிந்தித்து வரும் தேர்தலில் நல்ல மாற்றம் வரும்  என நம்புவோமாக.

கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓா்
பொல்லாதது இல்லை ஒருவருக்கு – நல்லாய்
ஒழுக்கத்தின் மிக்க இழவு இல்லை இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயா்வு.

      (பழமொழி நானூறு- 64)

ஒரு திரைப்பாடல் – இந்தக் கழிசடைகளை நினைத்துதான் எழுதப்பட்டதோ?

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
   மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
   மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
   மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
   மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது.

வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது
   மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது.

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
   மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது!

   மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது!  

 வாழ்க பாரதம்! வளர்க தாய்த்திருநாடு!

$$$

Leave a comment