-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #74...

74. கூலிப் படைக்குக் கூலி மட்டுமே கிடைக்கும்
தன் படையின் ஒற்றுமையைக் காப்பதினும் அதி அவசியம்
எதிரிப் படையின் ஒற்றுமையைக் குலைப்பது.
அது முடியாத நிலையில்
எந்தத் தரப்புக்கும் ஒரு கூட்டணி
எப்போதும் அவசியமே.
நாயையும் ஓநாயையும் மட்டுமல்ல,
எலியையும் பூனையையும் கூடத்
தன் கூட்டணியில் ஒன்றுகூட வைத்திருக்கிறான்
ஒன்றியத்தின் எதிரி.
எனவே
சிங்கத்தின் படையில் சிறு நரியையும்
சேர்த்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
ஆனால்,
எதிரியின் பொருந்தாக் கூட்டணி
எதிரிக்கு வெற்றியைத் தேடித் தருகிறது…
நம் பொருந்தாக் கூட்டணியும்
நமக்குத் தோல்வியையே தருகிறது.
ஆக,
தோற்கப்போவது உறுதியாகத் தெரிந்தால்,
பொருந்தாக் கூட்டணியை
போருக்குப் புறப்படுவதற்கு முன்பே அமைத்துக் கொள்வது
வெகு பொருத்தமே.
போர் தொடங்கும் முன்பே
தோல்விக்கான ஒரு நியாயம் கிடைப்பது ,
எல்லாத் தளபதிகளுக்கும் எவ்வளவு வசதி!
*
பகைவர்கள், கோட்டை வாசலில் வந்து முட்டும்போது
நேசத் துரோகிகளை மன்னித்து
தேசப் படையில் சேர்த்துக்கொள்ளலாமா கூடாதா?
எந்தப் பக்கக் கோட்டையைக் காக்கும் பொறுப்பை
துரோகிகளிடம் ஒப்படைக்கிறோமோ
அந்த வாசல் வழி பகைவர்களை
உள்ளே நுழைய விட்டுவிடக்கூடும்.
துரோகிகள் திருந்தி,
எதிரியைத் தாக்கி வீழ்த்த உதவவும் கூடும்.
பூவா தலையா போட்டுப் பார்க்க
இது விளையாட்டு மைதானம் அல்ல;
போர்க்களம்.
நினைவிருக்கிறதா
காவியத் தலைவிகள் செய்த கட்சி அரசியல்?
//என்ன சொல்ல என்று அக்கா என்னிடம் கேட்பார்
எதையாவது சொல்லுங்கள் என்று சொல்வேன்//
எதைச் செய்தாலும் தோற்கப் போகிறவர்கள்
எதைச் செய்தால் என்ன…
எதைச் செய்யாவிட்டாலும்தான் என்ன?
*
உண்மை துரோகியைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால்
எல்லாருக்கும் எல்லாரும் எப்போதும் துரோகிகளே…
அதைவிட
தோல்விக்கான உண்மைக் காரணத்தைக் கண்டுபிடிக்காமல்
துரோகமே தோல்விக்குக் காரணம்,
உள் முரணே வீழ்ச்சிக்குக் காரணம் என்று
ஏற்கெனவே எழுதப்பட்டதையே
எப்போதும் படித்துக் கொண்டிருந்தால்
எந்த மாற்றமும் இருக்காது.
படையில் துரோகம் இல்லாமல் இல்லை
அதிகாரவர்க்கத்தில் உள் முரண் இல்லாமல் இல்லை.
ஆனால்,
தோல்வி இவற்றால் அல்ல.
எந்தத் தொழில் குலங்களைக் காக்கப் போராடுகிறோமோ,
அவர்கள் கைகளில் மறைந்திருக்கின்றன குருசடிக் குறுவாள்கள்.
நம் வீரர்கள் நம்பி அணியும்
கவசங்களின் இணைப்புகளில்
கண்ணுக்குப் புலனாகா இடைவெளி விட்டு வார்த்திருக்கும் எளிய கொல்லன்…
நம் வீரர்கள் சீறிப் பாயும் தேர்களின் சக்கரங்களில்
கழறும்படியான கடையாணி செய்திருக்கும் எளிய தச்சன்…
நம் வீரர்கள் பருகும் தாக நீர்க்குவளைகளில்
மயக்க மருந்து பூசிய எளிய குயவன்…
நம் படைவிலங்குகள் உண்ணும் தீவனங்களில்
விஷக்களைகள் கலந்திருக்கும் எளிய விவசாயி…
அத்தனை தொழில் குலங்களிலும் ஊடுருவியிருக்கும்
அந்நியத் துரோகிகளை அடையாளம் காணாமல்,
படைவீரர்களை, தளபதிகளை, ராஜகுருக்களை,
அமைச்சர்களை, ஒற்றர்களை, போர் வியூகங்களை
பரஸ்பரம் சந்தேகித்துக் கொண்டிருக்கும் நம் படை
தோற்பதில் அல்ல;
முற்று முழுவதுமாகத் தோற்கடிக்கப்படாமல்
இன்னும் நீடிப்பதில்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
எதிரியின் நான்கு குல்லா பிடி நம்மிடம் இருந்தால்,
எதிரிகள் நாற்பது பேரின் குரல் வளையை நெரிக்கிறது பாவடை நாடா.
அதைச் சமாளிப்பதே அதி கடினம்.
இதில்
நம்மவர்கள் பதினைந்து பேரின் கேசப் பிடி வேறு
அவர்கள் கையில் இருக்கிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
எதிரியின் போரை நாம் போடுகிறோம்.
நமக்கான வியூகத்தை எதிரி வகுத்துத் தருகிறான்.
எந்தக் கூலிப் படையை
எதிரி வெல்ல வைப்பான் என்பது
எந்தக் கூலிப்படை
எஜமான விசுவாசத்தை
எல்லையற்றுக் காட்டுகிறது என்பதையே பொறுத்தது.
நாம் தோற்றால் அல்ல;
ஜெயித்தால்தான் அதிகம் கவலைப்படவேண்டும் என்றாகிவிட்ட நிலையில்,
எந்தக் கொடியையும்
ஏந்தவேண்டாம் தலைக்கு மேல்.
உயிர்த் தியாகம் செய்யும்
க்ஷத்ரியனுக்கு முக்தி கிடைக்க வேண்டுமென்றால்,
அது தர்மத்துக்கான யுத்தமாக இருக்க வேண்டும்
கூலிப் படைக்குக் கூலி மட்டுமே கிடைக்கும்.
$$$