எங்கே உள்ளது திருக்கருவை மும்மணிக்கோவை?

-கருவாபுரிச் சிறுவன்

அண்ணாமலைக் கவிராயர் எழுதிய ‘திருக்கருவை மும்மணிக்கோவை’ நூல் எங்கே இருக்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்….
அறம் பொருள் இன்பம் அனைத்தும் துய்த்துத்
திறம்பட வீடாம் செல்வமும் எய்த 
மகிதலம் அனைத்தும் வாழ்த்து நற்றாயே!
அகிலாண் டவளே  அருளுவை இனிதே! 

   -சங்கரன்கோயில் டிசங்கரலிங்கம் பிள்ளை 

எல்லோருக்கும் தெரியுமே! 

எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான். இருந்தாலும், மீண்டும் ஒரு முறை நினைவூட்டி இச்சிந்தனையைத்  தொடங்குவது பொருத்தமாக இருக்கும். 

ஒரு சமயம் எம்.எஸ்.சுப்புலட்சுமி  அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

செம்மங்குடி சீனிவாச ஐயர்  தலைமை  தாங்கினார். 

ஒரு  பெரிய   மாலையை  அவருக்கு அணிவிக்க செம்மங்குடியிடம் வழங்கப்பட்டது.

அவரும் அதனைப்  பெற்று  எம்.எஸ்.சுப்புலட்சுமி   அவர்களுக்கு அணிவிக்கும்  முகத்தானாக  மைக்கை  பிடித்தவர், “எம்.எஸ்.சுப்புலட்சுமி ஒரு பெண்மணி. அவருக்கு  நான் மாலை போட இந்த சபை அனுமதிக்கிறதா?” என்று  கேட்டார். 

அவையில் இருந்தவர்கள்  அனுமதி தந்தனர். 

அடுத்து எம்.எஸ்.சுப்புலட்சுமி ”கணவர்  சதாசிவம் அனுமதி  அளிக்கிறாரா?” எனக் கேட்டார்.

அவரும் அனுமதித்தார். அடுத்து   “என்னுடைய துணைவியார் இதனை அனுமதிக்கிறாரா?” என்று கேட்டார். 

அவரும் சம்மதம் தெரிவித்தார். 

இறுதியாக  எம்.எஸ்.சுப்புலட்சுமி இதற்கு ஒப்புக் கொள்கிறாரா? என்று  கேட்டார்.

அவரும்  மகிழ்ச்சியாக தலையை  ஆட்டினார்.

மீண்டும்  மைக்கைப் பிடித்த  செம்மங்குடி, “எத்தனை பேர்  அனுமதி தந்தாலும் எனக்கு ஏதோ ஒன்று உறுத்துகிறது. அதனால் திரு. சதாசிவம் அவர்களே மாலை அணிவிக்கும்படி கேட்டுக்  கொள்கிறேன்”  என்று கூறி, மாலையை  சதாசிவத்திடம்  ஒப்படைத்தார்.

 சதாசிவமும் மாலையைப் பெற்று எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு அணிவித்தார். 

அவையில் கரகோஷம்.

செம்மங்குடியைத் தடுத்த அந்த  ஏதோ  ஒன்றுதான் என்ன?

அதன் பெயர்தான் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம்.

இது இன்றளவும் இந்தியாவில் நாதஜீவிதமாக  இருக்கிற காரணத்தினால்  தான் உலகமே பாரதத்தைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. நிற்க.

ஐ.நா. தினத்தை முன்னிட்டு, பொதுச் செயலாளர் யூ தாண்ட் (U Thant) அவர்களுடைய சிறப்பு அழைப்பின் பேரில், 1966 ஆம் ஆண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் நியூயார்க் சென்றார்கள்.  வாய்ப்பாட்டை விட அமெரிக்காவில் இசைக்கருவிக்கே மவுசு அதிகம். பாடுவோர்கூட, கருவிகளை மிகவும் சத்தமாக ஒலிக்க விட்டுப் பாடுவார்கள்! இங்கே இது மாதிரி மெல்லிய இசை எல்லாம் எடுபடுமா என  ஐ.நா.சபையில் கேள்வி எழும்பியது. அதை முறியடிக்கும் விதமாக, காஞ்சி மகாபெரியவர், ராஜாஜி ஆகியோர் தொகுத்து வழங்கிய பாடல்களுடன்,  அவருக்கே உரிய பாணியில், சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயாரின்   காவடிச்சிந்து பாடலைப் பாட, அங்கிருந்தோர்கள் அனைவரும்  மீண்டும் மீண்டும் ரசித்துக்  கேட்டார்கள். 

அத்தகைய தனித்துவம் மிகுந்த  காவடிச்சிந்து ஒலி நயமும், மொழி நயமும் கொண்டது. சிந்துப்பாடல்களைப் படிப்பவர்களும் கேட்பவர்களுக்கும்  நாடி, நரம்புகளும் சிலிர்க்கும். சிறுவர் முதல் பெரியோர் வரையிலும் கற்றோர் முதல் கல்லாதார் வரையிலும் வேறுபாடு இல்லாமல் அனைவரையும் மனம் மகிழச் செய்யும் ஒப்பற்ற இசை வடிவம் தான் காவடிச் சிந்து.  

அதனால் தான் சிந்து இசைக்குத்  தந்தை  சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார் என பெயர் பெற்றார்.

இக்கவிராயரின் மற்றுமொரு அரிய படைப்பு  திருக்கருவை  மும்மணிக்கோவை. 

 இந்நூல் இலக்கிய உலகில் எத்தகைய இடத்தில் உள்ளது என்பதைப் பற்றிய ஒரு சாமானியனின் பார்வையாக  இக்கட்டுரை அமைகிறது.  

சென்னி குளநகர் வாசன் - தமிழ்
          தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
     செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
          தீரன்; அயில் வீரன்.
வன்ன மயில்முரு கேசன், - குற
          வள்ளி பதம்பணி நேசன் - உரை
     வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
          வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர்
          கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள்
     கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
          குலவும் புவி பலவும்.
நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத
          நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே
     நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என
          நோக்கும் படி தாக்கும்.

சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில்
          தாவி வருகின்ற கும்பம் - எனும்
     சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே
          தாங்கும்; உயர்ந் தோங்கும்.
உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு
          உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக
     உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும்
          உறங்கும்; மின்னிக் கறங்கும்.

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
          அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல
     அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி
          அடைக்கும்; அண்டம் உடைக்கும்.
கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
          காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்
     கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி
          காண்பார்; இன்பம் பூண்பார்.

முதல் வணக்கம் எங்கள் வீரசண்முகத்திற்கே…  

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே  உள்ள கரிவலம் வந்த நல்லுாரில் பால்வண்ண நாதர் கோயிலில் வட மேற்கு மூலையில் இருக்கும் வீரசண்முகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. 

வள்ளி, தேவசேனாவுடன் பன்னிரு கரங்களுடன் திருவாட்சி பொலிய மயில் மீது காட்சி தருகிறார். 

எங்களது சற்குருநாதர்  பனையூர் ஆண்டவர்  சங்கர நாராயண குரு சிஷ்ய மரபு குன்றக்குடி மேல மடம் நான்காவது பட்டத் தலைவர் கணபதி சுவாமிகளின் பிரதம சீடர்களில் ஒருவரான கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகள் இவ் வீரசண்முகப் பெருமான்  மீது பதிகம் ஒன்று பாடியுள்ளார். 

மேலும் சிவஞானயோகிகளின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் பாடியருளிய  ஷேத்திரக்கோவை பிள்ளைத்தமிழிலும் இவருக்குரிய செய்யுள் ஒன்று உள்ளது. 

ஆண்டுதோறும் இப்பெருமானுக்கு  பூர்வ ஜென்ம புண்ணியத்தினால் நேர்ச்சைபட்டோர் தாயும் சேயும்  நாலிரு நாட்கள் திருக்கோயில் வளாகத்திலே கடுமையான விரதம் பூண்டு காவடி, பால் குட நியமங்களை அவரவர் விருப்பத்தின் படி செலுத்துவார்கள். இது கண்கூடு. 

(இன்றைய காலச்சூழலில் இதுபோன்ற விரத நியமங்கள் யாவும்  குன்றி வருவதும் குறிப்பிடத்தக்கது). 

மற்ற தலங்களைப் போல சாமானியமாக இத்தல வீரசண்முகருக்கு காவடி, பால்குடங்களைச் செலுத்தி விட முடியாது.

அவ்விழா நாட்களில் இப்பெருமானுக்கு தவில், நாதஸ்வரம், பம்பை , உருமி, முழங்க, காவடி எடுத்து ஊர் விளையாடி வருவார்கள். அத்துடன்  அன்பர்களின் தேவார, திருவாசக, திருப்புகழ் முழக்கத்துடன்  அண்ணாமலைக் கவிராயர் பாடிய காவடிச்சிந்துவும் அதில் முக்கிய இடம் பெறும். இதை பாடகர்கள் அபிநயத்துடன் தன்குழுவினரோடு பாட, அதைக் கேட்ட இசைக்கலை வித்துவான்கள் அப்படியே   தவில்  நாதஸ்வரத்தில் வாசிக்கும் போது அதை குழுமியிருப்போர்  கேட்பதற்கும், காவடியாட்டத்தினைக்  காண்பதற்கும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 

ஆடாத கால்களும் ஆடும். பாடாத வாய்களும் பாடும். 

மேலும் நான்காவது காலத்தில் சென்னிகுளம், அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும்,  பக்தர்களுக்கும் தரிசனம் தருவார் இவ்வூர் வீர சண்முகர். (காவடி, பால் குடம் எடுப்பவரை வீரசண்முகராகவே கருதி  வழிபடுவது இப்பகுதி மரபு).

இதுவே அண்ணாமலைக் கவிராயரின் காவடிச்சிந்துவுக்கு  கரிவலம் வந்த நல்லுார் ஆஸ்திக மக்கள் காலந்தோறும் கொடுக்கும் நன்மரியாதையாகும். 

வாழ்வியலோடு வழிபாட்டினையும் இணைந்த எங்கள் முன்னோர்களின் அமுதச் செயலுக்கு ஈடுஇணையுண்டோ!    

மும்மணிக்கோவை என்றால்… 

  • மும்மணிக்கோவை என்பது 96 வகை தமிழ் சிற்றிலக்கியங்களில் ஒன்று. 
  • இது ஆசிரியப்பா, வெண்பா, கலித்துறை என்ற பாவினங்களால் முறையே அந்தாதியாக மண்டலித்து முப்பது செய்யுள்களைக்  கொண்டு விளங்கும். 
  • புருடாரகம், வைரம், கோமேதகம்  ஆகிய மூன்றும் உடலுக்கும் கண்களுக்கும் எவ்வாறு விருந்தளிக்கிறதோ அதைப்போல மூன்றுவகைப் பாக்களால் ஆகி உள்ளத்திற்கும் உடலுக்கும் விருந்தளிப்பதாக அமையும் நன்னூலே மும்மணிக்கோவை. 

இதன் இலக்கணத்தை… 

வெள்ளை அகவலும் நேரிசையாகக்
கலித்துறை வர  அந்தாதி ஆக
முறைமையின் இயல்வது மும்மணிக்கோவை.

-என செப்புகிறது பன்னிரு பாட்டியல்.

மும்மணிக்கோவை இலக்கியங்கள் சில… 

  • சேரமான் பெருமானின்  திருவாரூர் மும்மணிக்கோவை 
  • நக்கீர தேவ நாயனாரின் திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
  • இளம் பெருமான் அடிகளின் சிவபெருமான் மும்மணிக்கோவை 
  • அதிராவடிகளின்  மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை 
  • பட்டினத்து சுவாமிகளின் திருக்கழுமல மும்மணிக்கேவை,  திருவிடை மருதுார் மும்மணிக்கோவை 
  • நம்பியாண்டார் நம்பிகளின் திருஞானசம்பந்தர் மும்மணிக்கோவை 
  • குமரகுருபர சுவாமிகளின் பண்டார மும்மணிக்கோவை, சிதம்பரம் மும்மணிக்கோவை 
  • பலபட்டடைச் சொக்கநாதப் புலவரின்  மதுரை மும்மணிக்கோவை 
  • வேதாந்த தேசிகரின் செந்தமிழ் மும்மணிக்கோவை

-போன்ற இலக்கியங்கள் யாவும் வழிபடும் கடவுளின் சிறப்புகள், அதன் பெருமைகள், அற்புதங்கள் யாவற்றையும் எடுத்துரைப்பதாகும். 

மும்மணிக்கோவை முத்துக்கள் மூன்று…

 கழுமலத்தினைப் போலவே கரிவலம் வந்த நல்லூருக்கும் பன்னிரு பெயர்கள் உள்ளன என்பது யாவரும் அறிந்ததே 

சீர்காழி என்னும் கழுமலத்தின் அவதாரம் செய்த  காழி வள்ளலின் பெருமையை சொல்லவும் வேண்டுமோ! 

அப்பெருமானின் பெருமையைப் போற்றும்  நூற்கள் பல இருப்பினும் பதினொன்றாம் திருமுறைகளில்  இடம் பெறும் மூவிரு நூற்கள்:

* ஆளுடைய பிள்ளையார் திருச்சபை விருத்தம்

* ஆளுடையபிள்ளையார் திருவுலா மாலை 

* ஆளுடைய பிள்ளை யார் திருக்கலம்பகம்

* ஆளுடையபிள்ளை யார்  திருத்தொகை

* ஆளுடைய பிள்ளை யார் திருவந்தாதி

* ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை 

திருஞானசம்பந்த நாயனார்  அருளிச் செய்த தமிழை ‘ஞானத்தமிழ்’ என்கிறார் நம்பியாண்டார் நம்பிகள். 

அந்தத் தமிழ் என்ன செய்யும் தெரியுமா… அது பிறவி என்னும் பொல்லாப் பெருங்கடலை கடக்கச் செய்யும் வல்லமை உடையது. 

பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் 
துறவியெனும் தோற்றோணி கண்டீர் - நிறையுலகில் 
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன் 
தன்மாலை ஞானத் தமிழ்.

      -ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை - 11

திருஞானசம்பந்த சுவாமிகளின் திருநாமத்தை நினைத்தாலே போதும்.  நாம் உய்வு பெற்று விடுவோம் என்பார்  ராணுவ வீரராகப் பணியாற்றிய தோபா சுவாமிகள். 

நாம் உய்ய, இந்த ஞாலம் உய்ய, இப்பூவுலக ஆன்மாக்கள் உய்ய மான் மழுவோடு கழுமலத்தில் ஒரு ஒளி தெரிகிறது… அது வானவர்களோடு நம்மையும் காப்பாற்றும் என்கிறார் பட்டினத்து சுவாமிகள்.

மானும் மழுவும் திருமிடற்றில் வாழும் இருள்
தானும் பிறையும் தரித்திருக்கும் – வானவர்க்கு
வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்து என்
உள்ளத்தே நின்ற ஒளி.

   -திருக்கழுமல மும்மணிக்கோவை - 4 

சிதம்பரம் திருக்கோயில்  எப்படி ஹிந்து மதத்தினருக்கு முக்கியமானதோ அதைப் போலவே  மதுரைப்பதியும் மிகவும்  முக்கியமானது. காலந்தோறும் நடந்த படை யெடுப்புகளில் மதுரையைக் கைப்பற்ற பல்வேறு தந்திரங்களை அந்நியர்கள்  கையாண்டன்பர்.  அதனால் இதன் வளம் ஒருபோதும் குன்றியதில்லை. 

இங்கு ஆலவாய் அண்ணலையும் அங்கயற்கண்ணியையும் போற்றும் இலக்கிய திருநூற்கள் நூற்றிற்கு மேற்பட்டவையுள்ளன. அவற்றுள் ஒன்று பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் அருளிய மதுரை  மும்மணிக் கோவை.   

அதில் உள்ள ஒரு பாடலில்  “நான் உன்னை வணங்காமல் இருந்தாலும் கோபப்படாமல் எனக்கு இரங்கி அருள் செய். அப்போது தான் கவிஞர்கள் உன்னை அவர்களது பெரிய வாக்கினால்  நின் பெருமையைப் போற்றிப் புகழ்வார்கள்” எனப் பாடுவது முரணுடையதாயினும்  நயக்கத்தக்கது. ரசிக்கத்தக்கதும் கூட. பாடல் முழுவதையும்  ரசித்து விடுவோமே…   

ஆண்டாய் தமிழ்க்கூடல் அண்ணலே நின்பாதம்
வேண்டா வெனையும் வெகுளாமல் - ஈண்டிரங்கிக் 
காவாக்கால் உன்னைக் கவிஞரெடுத் தெவ்வாறு 
மாவாக்கால் சொல்வார் வளம்.

    -மதுரை மும்மணிக்கோவை - 5 

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் திருவாக்கின் படி இவ்வளவு நாட்களாக திருக்கருவை மும்மணிக்கோவை பற்றி விருப்பம் இல்லாமல் இருந்து விட்டேன். பால்வண்ணப் பெருமானே! எங்களுக்கு இரங்கி அருள் செய்யுமய்யா… என்ற விண்ணப்பத்தினை அனைவர் சார்பிலும் தமிழ்க்கூடல் ஆலவாய் அண்ணல்  திருவடியில்  சமர்ப்பிக்கின்றேன்.  

விண்ணப்பமும் வேண்டுகோளும்

நாடு, நகரம், மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு, மக்களின் பழக்க வழக்கங்கள், அங்கு வாழ்ந்தோரின் வாழ்வியல் முறைகள், அவர்களின் நம்பிக்கை  போன்றவற்றை அறிய பெரிதும் துணை நிற்பது அப்பகுதியில் உள்ள இலக்கியம் தான்  என தமிழறிஞர் மு.வரதராசன் கூறுவார். 

சுமார் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் எங்கள் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தலத்திற்கு வடக்கே இருந்து புலவர் ஒருவர்  வந்தார்; திருக்கோயிலில் சுவாமி தரிசனமும் செய்தார். அரசு  அதிகாரி ஒருவர் இக்கோயில் தல புராணத்திற்கு உரை  எழுதித் தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தனர். அவரும் ஒப்புக் கொண்டார். அவருக்காக அன்றைய சூழலில்  போக்குவரத்து படித்தரம், தங்கும் விடுதி, அன்பளிப்புப் பணம் மற்றும் இதரச்செலவுகள்  யாவும் முறையாக வழங்கப்பட்டது.

ஆனால் அவர் ஒரு சில மாதங்கள் கழித்து எழுதித் தருகிறேன் என சொல்லி நழுவிக் கொண்டார். 

பின்னர் விசாரித்த போது தான் தெரிந்தது. அத்தல புராணத்தில் இப்பகுதியிலுள்ள புழக்கச்  சொற்கள் நிறைய உள்ளன. அதனால் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட  நிகண்டு நூல் வேண்டும் என கேட்டுக் கொண்டு விடைபெற்றார் அவர். 

ஒவ்வொரு பகுதியிலும்  உள்ள பழமையான இலக்கியங்கள் யாவும் செம்மைப் படுத்தப்பட்டால் புதிதாக  நூல்களுக்கும், அரிய செய்திகளை அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.  இன்னும் சீர்மிகுந்த செய்திகள் யாவும்  தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கும். அவை யாவும்  மென்மேலும்  பொலிவு பெறும்  என்பதில் ஐயமேதுமில்லை என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்வோமாக. 

கவிராயர் அண்ணாமலையார் பெயரில் பல்வேறு தொண்டுகளைப் புரியும் நல்லுள்ளங்கள், தமிழார்வலர்கள்,  ஆகியோரை இந்த நேரத்தில் நன்றியோடு வணங்கி மகிழ்கிறேன். ஏனென்றால்  எடுத்துக் கொண்ட கொள்கையில் உடனுக்குடன்  நிலைமாறும் உலகில், ஒரு கவிஞனுக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி சிரம் மேற்கொண்டு அவர் புகழை தொடர்ந்து  பறை சாற்றி வரும்  அத்துணை அன்பர்களையும் மீண்டும் வணங்கி கொள்வதில் மகிழ்ச்சி. 

அதே சமயம் புகழ் பெற்ற கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் மீது சென்னிகுளம் காவடிச்சிந்து அண்ணாமலைக் கவிராயர் பாடியருளிய  ‘திருக்கருவை மும்மணிக்கோவை’ என்னும் நுால் மட்டும்  இன்று வரை அச்சிடப்படாமல் இருப்பது ஏன் என்று தான் தெரியவில்லை!

அதை அச்சிட்டு வெளியுலகிற்கு அண்ணாமலைக் கவிராயரின் கவித்துவத்திற்கு  மெருகூட்ட வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கும்கூட  உதிக்கவில்லையே ஏன், எதனால் என்ன காரணம் என்பதை கவிராயரே  அறிவார்… 

அந்நூல் பற்றிய போதிய தெளிவு தமிழக தமிழ் வளர்ச்சித் துறையின் பார்வைக்குக் கிட்ட வில்லை போலும். 

அரசு நடத்திடும் போட்டித்தேர்வுகளின்  தமிழ்ப்பகுதிகளில் அண்ணாமலைக் கவிராயர் பற்றிய வினாக்கள்   இடம் பெறுகிறதே…. பின்னர் ஏன்  கல்லுாரி, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள்  ‘திருக்கருவை மும்மணிக்கோவை’ பற்றிய ஆய்வினை  மேற்கொள்ளத் தயங்குகிறார்கள்? 

தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியப் பெருமக்கள் இத்தலைப்பினைப் பற்றி  பாராமுகமாக இருப்பது ஏனோ?

இவ்விஷயத்தை மேற்கொண்டால் சொல்ல முடியாத சிக்கல்களும் சிரமங்களும் உண்டாகும் எனத் தெரிந்து ஒதுங்கி இருக்கிறார்களோ என்னவோ, தெரியவில்லை!

அண்ணாமலைக் கவிராயரின்  உழுவலன்பர்களாவது திருக்கருவை மும்மணிக்கோவைப்பற்றிய நுாலினை வெளிக்கொணர முயற்சி எடுத்திருக்கலாமே. 

அச்செய்யுள்கள்  யாவும் குடத்தில் இட்ட விளக்காக எங்கோ ஒரிடத்தில் சுவடியாக இருக்கலாம். அல்லது கையெழுத்துப் பிரதியாகக்கூட  இருக்கலாம். 

அதனைக் குன்றின் மீதிட்ட விளக்காக ஒளிரச் செய்வது அப்பகுதி  தமிழார்வலர்களின் கடமை. தமிழாளுமைகளின் பொறுப்பு.

இனிமேலாவது திருக்கருவை மும்மணிக்கோவை நுால் பற்றிய முழுமையான  முத்தாய்ப்பான  அதி அற்புதத் தகவல்களை தமிழ் கூறும் நல்லுலகம் வழங்குமா…என்பதை  பொறுத்திருந்து பார்ப்போம். 

நிறைவாக, 

திருக்கருவைப்பரமன் பால்வண்ணநாதர் மீது அண்ணாமலைக் கவிராயர் பாடிய பாடல் ஒன்றையும், நடேச கும்மியில் இருந்து ஒரு பாடலையும்  இவ்விடத்தில் பாடி  இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக.

கவுரிய வீரா! குண அதீத நாத! கங்காளகை 
நாகவுரிய வரகுணன் போற்றும் அர! தொண்டர்க்காத்திட
மிகவுரிய ரகுகுல சரா! என் கவி சொல்மின்!
ஏகவுரிய வரகுக்கும் கவி பாடும் கவிஞர்களே!


காமம் அகற்றிய தூயன் அவன்
 சிவகாம செளந்தரி நேயன் அவன்
மாமறை ஓதும் செவ்வாயன் அவன்
 மணிமன்றம் எனும் ஞானஆ காயன் அவன்

கல்லை கனிவிக்கும் சூட்சன் அவன்
 முடி கங்கைகருளிய கர்த்தன் அவன்
தில்லைச்சி தம்பர சித்தன் அவன் - தேவ
 சிங்கம் அடியுயர் தங்கம் அவன்.

அம்பலத் தாடல்செய் ஐயன் அவன் - அன்பர்
 அன்புக்கு எளிதரும் மெய்யன் அவன்
தும்பை முடிக்கணி துாயன் அவன்- சுயஞ்
 சோதி அவன் பரஞ் சோதி அவன்.

பரம்பொருளைப் பணிந்தாடுவோம் அவன் 
புகழ் பாடுவோம் நித்தமுமே!

இதுவே  சத்தியம்… பலருடைய லட்சியம் இதுவே யாம்!

***

திருக்கருவை மும்மணிக்கோவை என்னும் தெய்வ மகளே!
திடமான வாழ்வு தருவாயாக...
திருக்கருவை மும்மணிக்கோவை என்னும் திரு மகளே! 
நல்வரம் பல தருவாயாக... 
திருக்கருவை மும்மணிக்கோவை என்னும் நா மகளே! 
நல்லருள் புரிவாயாக...
திருக்கருவை மும்மணிக்கோவை என்னும் பா மகளே! 
திருவருள் செய்வாயாக... 

வாழ்க அண்ணாமலைக் கவிராயர்  புகழ்!  வளர்க அவரது கவித்துவம்!

வாழ்க பாரதம்! வளர்க மணித்திருநாடு! 

$$$

Leave a comment