-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #69...

69. லேசர் பிம்ப ராமர்
உலகம் போப்பால் ஆளப்படுகிறது.
போப் என்றால் போப் அல்ல,
பேப்பல் மாஃபியா உருவாக்கி நிறுத்தும்
சோளக் கொல்லை பொம்மையே போப்.
சர்வ தேச அரசுகள் உளவுத் துறையால் ஊடுருவப்பட்டுள்ளன.
உளவுத்துறைத் தலைவி என்றால்
சர்வதேச உளவு மாஃபியா
சாமர்த்தியமாக உருவாக்கி நிறுத்தும் பொம்மையே.
வளைந்து நெளிந்து ஆடி ஆடி
நம் மதுக் கோப்பைகளை நிரப்புகிறாள் பார் டேன்ஸர்-
அழுகி விஷமாகிப் போன திராட்சை ரசம் கொண்டு.
கேடு கெட்ட கிரிமினல்களைவிடக் கேடுகெட்டவர்கள்
க்ரிப்டோ காமடியன்கள்.
கீழே விழுந்து, கீழே விழுந்து நம்மைச் சிரிக்கவைப்பான்
அவன் ஒவ்வொரு முறை கீழே விழும்போதும்
அதாவது நம் கவனம் ஒவ்வொருமுறை
அவன் பக்கம் திரும்பும் போதெல்லாம்
நம்மைச் சுற்றி மாய வலை ஒன்று
ஒவ்வொரு கண்ணியாக விரிக்கப்பட்டு
நம் ஒவ்வொரு நகர்வும் முடக்கப்படும்.
டோப்பா கிரீடம் என்றால்
உதிர்ந்த முடிகளையெல்லாம் ஒட்டிவைத்து
உருவாக்கியதோர் அலங்கார சாதனமே.
உள்ளும் புறமும் காலியான தலை ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து
கன கச்சிதமாகப் பொருத்தும் கைகளே மோர் டேஞ்சரஸ்.
லேசர் கதிர் வீச்சில்
வெட்ட வெளியில்
பனிமூட்டத்தில்
பளபளக்கும் திரையில்
பிரமாண்டமாக உருவாக்கப்படும்
பிம்பங்களுடன் போரிடுபவர்கள்
பிம்பங்களைவிட படு முட்டாள்கள்.
ப்ரொஜெக்டர்களை இயக்கும் கைகள்…
அதில் பொருத்தப்பட்டிருக்கும் நிரல்கள்…
அது நிறுத்தப்பட்டிருக்கும்
பொத்தல் நட்சத்திரங்கள் தாழத் தொங்கும்.
இருண்ட நாலுமாவடி முற்றங்கள்
விஷ வாயுவைத் தடுப்பதென்றால்
மூல ஊற்றை மூட வேண்டும்
கொதிப்பதை நிறுத்த வேண்டுமென்றால்
எரிவதைப் பிடுங்க வேண்டும்.
லேசர் பிம்ப ராவணனை வீழ்த்தினால்
நிஜ ராவணன் அழிய மாட்டான்.
நிஜ ராவணனைவிட மோசமானவர்
லேசர் பிம்ப ராமர்.
$$$