உருவகங்களின் ஊர்வலம்-68

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #68...

68. கொடூரமானது க்ரிப்டோ டோப்பா!

ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று
அவர்கள் சொல்கிறார்கள்.
சொல்லத்தான் செய்வார்கள்.

கான்வென்ட் வந்ததால்
தாய்மொழிக் கல்வி அழிந்ததை
நாம் சொல்லவில்லை.

சர்ச் பாதிரிகள் பெருகியதால்
சாமியாடிகள் ஓரங்கட்டப்பட்டதை
நாம் சொல்லவில்லை.

ஒற்றைப்படை பைபிள் வந்ததால்
பன்மைத்துவ வேதங்கள் ஓரங்கட்டப்பட்டதை
நாம் சொல்லவில்லை.

பரிசுத்த ஆவி புகுந்ததால்
குல தெய்வங்கள் ஓரங்கட்டப்படுவதை
நாம் சொல்லவில்லை.

பேண்ட் வாத்தியம் வந்ததால்
பறை, மேளங்கள் ஓரங்கட்டப்பட்டதை
நாம் சொல்லவில்லை.

கேக் புகுந்ததால்
கூழ், கொழுக்கட்டை ஓரங்கட்டப்பட்டதை
நாம் சொல்லவில்லை.

திராவிட கார்ப்பரேட் பெருகியதால்
பஞ்சமி நிலங்கள் பறிபோனதை
நாம் சொல்லவில்லை.

குலத் தொழில் மறைந்ததால்
தொழில் குலப் பாதுகாப்புகள் அழிந்ததை
நாம் சொல்லவில்லை.

தனி நபர் உரிமைகள் பெருகியதால்
தர்ம சிந்தனைகள் மறைவதை
நாம் சொல்லவில்லை.

நம் தரப்பு உண்மைகளை நாம் சொல்லாவிட்டால்
அவர்கள் தரப்புப் பொய்களை
அவர்கள் பரப்பத்தான் செய்வார்கள்.

*
ஹிந்தியைத் தொடர்ந்து சமஸ்கிருதம் வரும் என்கிறார்கள்.
ஆதியிலிருந்து இருப்பது…
அனைத்து மொழிகளையும் அரவணைத்துக் காத்தது…
ஆன்மிகத்துக்கும் ஆதாரமாக இருப்பது…
அறிவுத் துறைகளுக்கும் அடிப்படையாக இருப்பது…
மீண்டும் வருமானால்
மீண்டு வருமானால்
ஆனந்தத்துடன் வரவேற்க வேண்டியதுதானே?
கண்மூடித்தனமாகப் பிரிக்கப்பட்ட இரு உயிர்கள்
கை கோக்கும் நேரம் வந்தால்
கை கூப்பி வரவேற்கத்தானே வேண்டும்?

*

வந்த பின் காக்கும் அலோபதி வந்தது…
வரும் முன் காக்கும் மருத்துவம் மறைந்தது.

பேண்ட், சட்டை வந்தது…
வேட்டி, தாவணி போனது.

கிரிக்கெட் வந்தது…
கில்லி, கோலி ஒழிந்துபோனது.

விவசாயம் ஓரங்கட்டப்பட்டது…
மாட்டிறைச்சி பெருகுகிறது.

கூட்டுக் குடும்பங்கள் சிதைகின்றன…
குல மரபுகள் வீழ்கின்றன.

மாற்றம் தவிர்க்க முடியாதது
ஆனால்,
மத மாற்றம் தடுக்கப்பட வேண்டியது.

நாம் செய்ய வேண்டியதை
நாமே செய்யாவிட்டால்
அவர்கள் செய்ய வேண்டாததையும்
அவர்கள் செய்யத்தான் செய்வார்கள்.

ராஜாவை விட விசுவாசமான அடிமைகள்
ராஜ்ஜியத்தை ஆண்டால்
பூஜ்ஜியமாகத்தான் ஆகும் எல்லாமே.

முள் கிரீடத்தைவிடக் கொடூரமானது
க்ரிப்டோ டோப்பா!

பறவைகளுக்கு வலை விரிக்கத்
தெரிந்திருக்க வேண்டியதில்லை
ஆனால்
வலையில் சிக்காமல் இருக்கத்
தெரிந்திருக்க வேண்டும்.
மீறிச் சிக்கினால்
ஒன்றாகச் சிறகடித்தால்தான் தப்ப முடியும் –
என்ற உண்மையாவது தெரிந்திருக்க வேண்டும்

$$$

Leave a comment