இளையராஜாவெனும் இசைப்பெருவெளி

-ச.சண்முகநாதன், இளையபெருமாள் சுகதேவ்

மேற்கத்திய செவ்வியல் இசைக்கோர்வை வடிவமான  ‘சிம்பொனி’யை லண்டனில் அரங்கேற்றி இருக்கிறார் தமிழகத்தின் தவப்புதல்வரும் இசைமேதையுமான  இளையராஜா. இதுகுறைத்த இரு முகநூல் பதிவுகள் இங்கே, மீள்பதிவாக முன்வைக்கப்படுகின்றன...

1. Incredible Ilaiyaraja

-ச.சண்முகநாதன்

அருவிக்கும் காற்றுக்கும் மூப்பு கிடையாது, அதேபோல இளையராஜாவுக்கும்  இளையராஜாவின் இசைக்கும் மூப்பே கிடையாது.

82 வயதில் ஒரு சிம்பொனி சாத்தியமா? சாத்தியமா என்பதை விட வயதில் தேவையா என்ற கேள்வி எழும் பலருக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும் பிரபஞ்சம் விரிவடைவதைப்போல, ராஜாவின் இசைப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டேயிருக்கிறது.

1979. மாணவப்பருவம். ஒரு நாள் மாலைப்பொழுதில் என்னை மறந்து தனியே அமர்ந்திருந்த பொழுது ‘ஆங்கப்பொழுதினிலே’ காற்றினிலே தவழ்ந்து வந்தது ஒரு பாடல்.  ‘சோலைக்குயிலே காலைக்கதிரே’ (பொண்ணு ஊருக்கு புதுசு). காதலியின் பட்டுடை வீசு கமழ்ந்தது போல ஒரு வசீகரம் அந்தப் பாடலில். அடுத்தது  ‘உனக்கென தானே இந்நேரமா’ என்று ஒரு மாயக்குரலில் ஒரு பாடல். இசை கேட்டல் ஒரு சுகானுபவமாக இருக்க முடியும் என்று உணர்ந்த தருணம் அது. இசையைக் காதலிக்க முடியும் என்று உணர்ந்த தருணம் அது. அன்றுமுதல் இன்று வரை செவியும் மனதும் இளையராஜாவின் இசைக்கு அடிமையாகிப் போயின. இப்படி ஒவ்வொரு ரசிகருக்கும் இளையராஜாவின் முதல் இசைத் தீண்டல் அனுபவம் என்றென்றும் நினைவிருக்கும் முதல் காதலைப் போல.

அவரது மெட்டுக்கள் தேனமுது என்றால் , வயலின் கிட்டார் புல்லாங்குழல், தாளவாத்தியங்கள் எல்லாம் தேவாமிர்தம். இப்படி 49 வருடங்கள் விருந்து படைத்த inredible இளையராஜா  மார்ச் 8, 2025  அன்று  சிம்பொனி அரங்கேற்றுகிறார். 82 வயதில் ஒரு அரங்கேற்றம்! அதிசயம். உலகின் தலைசிறந்த வாத்தியக் கலைஞர்கள் இசைக்க, மயிர்கூச்செரியும் இசை அரங்கேறுகிறது.

LP ரெகார்ட், Casette, CD , DVD, MP3, itunes, youtube என்று பல தொழில்நுட்பத்தினூடே வளர்ந்த பெருமை இளையராஜாவை மட்டுமே சேரும்.

33 வயதில் முதல் படம். 82 வயதில் முதல் சிம்பொனி!  ‘நரைகூடிய கிழப்பருவம்’ என்று மற்றவர் சோர்ந்துவிடும் வயதில், இவரோ இன்னும் சிறகடித்து யாரும் செல்ல முடியாத உயரம் செல்கிறார், சிரித்துக் கொண்டே.

மொசார்ட், பீத்தோவன் வரிசையில் இப்பொழுது இளையராஜா. ஆனால் இளையராஜா என்ற வரிசையில் இளையராஜாவைத் தவிர யாருமே இல்லை. கர்நாடக சங்கீதத்தில் ராகங்களுடன் விளையாட்டு, கிராமிய இசையில் உச்சம், மேற்கத்திய இசையில் மணிமகுடம் இப்பொழுது.

இளையராஜா என்றொரு வரிசையில் இளையராஜா மட்டுமே.

லக்ஷ்மி நாராயண ஐயர், டி.வி.பாலகிருஷ்ணன், பாலமுரளிகிருஷ்ணா என்று கர்நாடக சங்கீத உலகின் ஜாம்பவான்களை குருவாக ஏற்றுக்கொண்டு இசை பயின்று, சுயம்புவாக மேற்கத்திய இசை பயின்று, சுவாசத்தில் கிராமிய இசை கொண்டிருக்கும் இளையராஜா என்னைப்போல பலருக்கும் குரு.

“பெருந்தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணைத்

தரும், தான்’ என்றால், நான்முகன் இன்னும் தரலாமே?”

 ‘பெருஞ்சுவை கொண்ட தேன் போல் இன்சொல் கொண்ட சீதையைப் போல இன்னொருவளைப் படைத்துக்கொடு என்றால் பிரம்மனாலும் முடியாது’ என்று பாடினான் கம்பன்.  ‘பெருந்தேன் இன்னிசை செய்யும் இன்னொரு இளையராஜாவை படைத்துக் கொடு’ என்றால் பிரம்மனும் கை விரித்துவிடுவான்.

தியாகராஜ சுவாமிகள் 80 வயது வரை புதுப்புது கீர்த்தனைகள் இயற்றிக் கொண்டேயிருந்தார். ராஜாவும் 82 (இன்னும் பல வருடங்கள்) வயதிலும் இயற்றிக் கொண்டேயிருக்கிறார்.

இளையராஜாவெனும் இசைப்பெருவெளி இன்னும் விரியட்டும்.

  • இளையராஜாவின் அதிதீவிர ரசிகர் திரு. ச.சண்முகநாதன். இவரது முகநூல் பதிவு இது…

$$$

2. இளையராஜாவை அறிதல் என்பது…

-இளையபெருமாள் சுகதேவ்

மிகவும் உணர்வுபூர்வமாக எதிர்பார்க்கப்பட்ட இசைஞானி இளையராஜாவின் Valiant சிம்பொனி இசைத் தொகுப்பு லண்டன் அப்பல்லோ அரங்கில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இதற்கென்றே பயணித்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள். 

இந்த Valiant இசைத் தொகுப்பை, கடந்த ஆண்டே Royal Scottish National Orchestra மூலம் பதிவு செய்துவிட்டார் இளையராஜா. மார்ச் 8, 2025 அன்று நடந்த நிகழ்ச்சியில், அந்த சிம்பொனியை Royal Philharmonic Orchestra குழுவினரைக் கொண்டு அரங்கேற்றியிருக்கிறார்.

இதே ராயல் பில்ஹார்மோனிக் இசைக் குழு மூலம்தான் 1993-ல் தனது முதல் சிம்பொனியை பதிவு செய்தார் இளையராஜா. அதன் Conductor – John Scott (படைப்பாளியின் இசைக் குறிப்பின் அடிப்படையில், உடல்மொழி வாயிலாக – குறிப்பாக கையசைவு வாயிலாக – கலைஞர்களை வழிநடத்துபவர்) அப்போது இளையராஜாவுடன் சேர்த்து அறியப்பட்டவர். அந்த சிம்பொனி குறித்து மாறுபட்ட கருத்துகள் இசையுலகில் எழுந்ததாகவும், அதைத் தொடர்ந்து அதுகுறித்த அடுத்தகட்ட முயற்சிகளைத் இளையராஜா தொடர விரும்பவில்லை என்பதாகவும் நாம் பொதுவில் புரிந்துகொள்ளலாம். 

எப்படியிருந்தாலும், இளையராஜாவே Valiant இசைத் தொகுப்பைத்தான் Symphony Number – 1 என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். நாமும் அவ்வாறே கொள்வோம். இந்த சிம்பொனிக்கான இசைக் குறிப்புகளை 34 நாட்களில் எழுதி முடித்ததாக ஏற்கெனவே தெரிவித்திருக்கும் இளையராஜா, “சிம்பொனி பற்றி விளக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்” என்று அரங்கேற்ற  நிகழ்ச்சியில் கூறியிருப்பது கவனத்திற்குரியது. சிம்பொனி மட்டுமல்ல, அவரது எண்ணற்ற திரையிசைப் பாடல்களும், How to Name it? – Nothing But Wind – திருவாசகம் – An Oratorio, ரமண மாலை, கீதாஞ்சலி, திவ்ய பாசுரங்கள் போன்ற தனியிசைத் தொகுப்புகளையும் கேட்பதே பேரனுபவம். அவரது படைப்புகளை அனுபவித்தவர்களுக்குப் புரியும். 

இதற்கு முன், இந்தியாவிலிருந்து சிதார் இசை மேதை ரவிசங்கர் சிம்பொனி வகையில் ஒரு தொகுப்பை பதிவு செய்திருக்கிறார். ஆனால் அது முழுமையான சிம்பொனி இசை வடிவமா என்று முதல் தேடலில் (எனது) முழுமையாக அறிய முடியவில்லை. இந்துஸ்தானி இசையை மேற்கத்திய உலகில் பிரபலப்படுத்தியவர். அவரது புதல்வி அனுஷ்கா சங்கரும் புகழ்பெற்ற சிதார் கலைஞர். இளையராஜாவைப் போல, ரவிசங்கரும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1999-ல் அவருக்கு  ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது.

இளையராஜாவுக்கு  ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, முன்னரே பலதளங்களில் பலராலும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அது இப்போது கூடுதல் பொருள் பொதிந்ததாக மாறியிருக்கிறது. மத்திய அரசு, இக் கோரிக்கையை உடனடிப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இளையராஜா என்ற இசை மேதையை, இந்திய அரசு தக்க தருணத்தில் உயரிய விருதால் அங்கீகரித்தது என்று வரலாறு பதிவு செய்யட்டும். 

இந்த வரிசையில், இனியாவது ஆஸ்கர் அமைப்பு இளையராஜா மீது கவனம் செலுத்தும் என்று எதிர்பார்ப்பது இயல்பானதே. இந்திய திரையுலகப் பிதாமகன்களில் முதன்மையானவராக கருதப்படும் சத்யஜித் ராய்க்கு, ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது (1992) வழங்கி கௌரவித்தது. அதேபோன்று, இளையராஜாவையும் அங்கீகரிக்க வேண்டும். அவர் இசையமைப்பாளர் மட்டுமல்ல, பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் உள்பட பன்முக ஆளுமைகள் நிறைந்தவர். இப்போது, மேற்கத்திய மரபிசையின் உச்சமாகக் கருதப்படும் சிம்பொனி இசைத் தொகுப்பையும் தந்திருக்கிறார். ஹாலிவுட் படத்துக்கு இசையமைப்பதோ அல்லது ஹாலிவுட் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதோ – இளையராஜாவுக்கு பெரிய விஷயம் அல்ல. அவரது விருப்பம் சார்ந்தது. 

சமீபத்திய பேட்டியொன்றில், உணர்வுதான் அறிவு என்கிறார் இளையராஜா. அறிவால் முன்நடத்தப்படுபவர் அல்ல. 

இதுதொடர்பில், இன்னொன்றையும் யோசித்துப் பார்க்க வேண்டும். இளையராஜாவின் திரையிசைப் பாடல்களுக்கு விருதளிப்பதாக பரிசீலித்திருந்தால் – சென்னையில் ஆஸ்கர் விருதுகளின் நெரிசல் அதிகமாக இருந்திருக்கும். குலுக்கி, வடித்து, நிறுத்து பார்த்தாலும் – சில பத்து பாடல்கள் சேர்ந்துவிடும். எனவே, இளையராஜாவை வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு விருதுக்கு ஆஸ்கர் பரிசீலிப்பதே உகந்ததாக இருக்கும். 

இளையராஜா லண்டனுக்கு செல்வதற்கு முன்பே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வழியனுப்பியிருக்கிறார். அவரும் நெகிழ்ந்து “அப்பா கொடுத்த பட்டமே நிலைத்துவிட்டது” என்றிருக்கிறார். பிற கட்சிகளின் தலைவர்களும் நேரில் சென்று வாழ்த்தியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க முன்நகர்வு. 

இளையராஜா லண்டனிலிருந்து திரும்பியவுடன், அவரைக் கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பலகோணங்களில் யோசிக்கலாம். நவீன வசதிகளுடன்கூடிய இளையராஜா பெயரிலான உயர் பயிற்சி மையம் அல்லது பல்கலைக்கழகம், இளையராஜா பெயரிலான தமிழிசை ஆவணக் காப்பகம், அவர் பெயரில் விருது, அவர் படைப்புகள் குறித்த ஆய்வுத் தொகுப்பு – இப்படியாக பலவற்றைப் பரிசீலிக்கலாம். 

இளையராஜாவின் சிம்பொனி இசைத் தொகுப்புக்கு மட்டுமே உரித்தான – முன்னணி இசைக் கலைஞர்களின் கலந்துரையாடல் அமர்வுகள் கொண்ட அரங்க நிகழ்ச்சிகளை நடத்தலாம். 

அரசு மட்டுமல்ல, இளையராஜா என்ற கலைஞனை உணர்ந்தவர்கள் அனைவரும் முன்வர வேண்டும். 

இத்தனையும் கடந்து, எதுவுமே நடவாதது போல, “என்ன, அங்கே டிராஃபிக் ஜாம் ஆ..?” என்று கேட்பது போன்ற பாவனையில், பலதரப்பினரும் இங்குமங்குமாக சுற்றி வருகிறார்கள். அது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள பெரிய அறிவு நுணுக்கம் தேவையில்லை.

“இசை என்பது அனைத்து விதமான ஞானம் மற்றும் தத்துவத்தைவிட உயர்ந்த வெளிப்பாடு” என்கிறார் சிம்பொனி இசை மேதை பீதோவன். 

இளையராஜாவை அறிதல் என்பது பொதுச் சமூகத்தின் கனிந்த புரிதலில் படர்ந்திருக்கிறது.

  • திரு. இளையபெருமாள் சுகதேவ், எழுத்தாளர். இவரது முகநூல் பதிவு இங்கு நன்றியுடன் மீள்பதிவு ஆகிறது.

$$$

Leave a comment