-ச.சண்முகநாதன்
கம்ப ராமாயணத்தை இலகுவாக முகநூலில் பாடமாக்கும் திரு. ச.சண்முகநாதன் எழுதிய இனிய பதிவு இது….

ராமன் handpicks his team.
Hire for attitude – A management lesson from Ramayanam.
ஓர் உதாரணம் சுக்ரீவன்.
வீழ்த்தப்பட்ட வாலி ராமனைப் பார்த்து சங்கடமான கேள்விகளைக் கேட்பதாக நினைத்துக் கொண்டு சில கேள்விகளைக் கேட்கிறான்.
“ராமா! நீ பயின்ற அரச நீதிப்படி நடக்கவில்லை” என்று ஏளனம் செய்துவிட்டு, “உனக்கு உன் மனைவியை மீட்க வேண்டும் தானே, அதற்கு ஏன் சுக்ரீவனை நாடுகிறாய். என்னிடம் சொல்லி இருந்தால் நான் சுலபமாகச் செய்து கொடுத்திருப்பேனே. என்னை யார் என்று நினைத்தாய்? கோபத்தில் வானில் தாவி, இடி இடிக்கும் மேகத்தைப்பற்றும் வலிமைகொண்ட சிங்கம் நான். நீ என் துணையை நாடி இருக்க வேண்டும். சுக்ரீவனோ வெடிச்சத்தம் கேட்டாலே பயந்து ஓடும் ஒரு முயல் போன்றவன் . அவன் துணையை நாடி இருக்கிறாயே. அட ராமா! அவனால் உனக்கு என்ன உபாயம் வந்து சேரப்போகிறது?” என்று, குருதி படிந்த நெஞ்சில் நிறைய செருக்கோடு பேசுகிறான்.
"புயலைப் பற்றும் அப் பொங்கு அரி போக்கி, ஓர் முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ?"
(புயல் – மேகம்)
வலிமை பொருந்தியவன்தான் வாலி. சர்வ வல்லமை கொண்ட தோள்கள் கொண்டவன் தான். ஆனால் அவனிடம் தர்மம் இல்லையே.
தன் மனைவியைக் கவர்ந்து சென்றவனை வெல்வதற்கு, தம்பி மனைவியைக் கவர்ந்தவனின் உதவியை நாடுவதா? அதை ராமன் செய்வானா?
“என் அண்ணண் இறந்துவிட்டான். அவன் இறப்பின் மூலம் கிடைக்கும் அரச பதவி எனக்கு வேண்டவே வேண்டாம்” என்று கண்ணில் உதிரம் உகுத்தவன் சுக்ரீவன். ஆனால் அவன் பாசத்தின் மீது சந்தேகம் கொண்டு அவனைத் தண்டிப்பதாக நினைத்து அவன் ஆருயிர்த்தேவியை கவர்ந்தவன் வாலி. இதை வாலிக்கு ஞாபகப்படுத்துகிறான் ராமன்.
"அருமை உம்பிதன் ஆர் உயிர்த் தேவியை, பெருமை நீங்கினை, எய்தப் பெறுதியோ?"
இப்படி தர்மமற்ற வாலியை, “புயலைப் பற்றும் அப் பொங்கு அரி”யாகவே இருந்தாலும் தன்னுடன் சேர்ப்பானா ராமன்!
ராமனின் வில்லாற்றலுக்கு ஈடு இணை எதுவுமில்லை. சீதை “என் சொல்லினால்சுடுவேன்; அது, தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.” என்று பெருமை கொள்ளும் அளவு ஆற்றல் படைத்தவன் ராமன்.
தானே தன் அம்பினால் இலங்கை மன்னனின் “கதிர்முடி அவை பத்தும் அம்பினால் அறுக்கும்” வலிமை படைத்தவன். அவனுக்கு தர்மத்தின் துணை மட்டுமே தேவைப்பட்டது, வாலியின் “பொங்கு அரி” வலிமை தூசுக்கு சமானம்.
அதைத் தெளிவாக சொல்லிவிட்டான் வாலியிடம். “என் அணியில் சேர்வதற்கு உனக்கு தகுதி இல்லை” என்று.
மேலும் ராமன் சொல்கிறான், “உன்னை வீழ்த்தியது நீ செய்த அதர்ம செயல் + சுக்ரீவன் என் நண்பன். அதனால் உன்னை வீழ்த்தினேன்”. என் பக்கம் சேர உனக்கு தகுதி இல்லை என்று.
"ஆதலானும், அவன் எனக்கு ஆர் உயிர்க் காதலான் எனலானும், நிற் கட்டனென்"
(கட்டெனன் – களைந்தேன்).
ராமனின் அணியில் பாவிகளுக்கு, பெருமை நீங்கியவர்களுக்கும், இடமில்லை என்று ராமனே சொல்லி விட்டான். எல்லோரும், அவர்கள் விரும்பினாலும், ராமன் பக்கம் சேர முடியாது.
ராமன்’s team is an immaculate one.
$$$