-திருநின்றவூர் ரவிகுமார்
மகாகவி பாரதி தமிழுக்கு வழங்கிய அற்புதமான கருவூலம், பகவத்கீதை-தமிழாக்கம். அதனை ‘கடமையைச் செய்’ என்ற தலைப்பில் விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அந்த நூல் குறித்த அறிமுகம் இது…

மாதா, கோமாதா, கங்கா மாதா, பாரத மாதா, கீதா மாதா என்று அன்னையர் வரிசையில் போற்றப்படுவது ஸ்ரீமத் பகவத் கீதை. பிரஸ்தான திரயம் எனப்படுகின்ற மூன்று ஆதார நூல்களில் இதுவும் ஒன்று. இதற்கு குருமார்கள் பலரும் விளக்கவுரை எழுதியுள்ளார்கள்.
கீதை என்றால் பாடல். சமஸ்கிருத மொழியில் உள்ள இந்த நூலைக் கற்றுத் தெளிவது கடினம். தென்மொழியும் வடமொழியும் கற்றறிந்தவர் சுப்பிரமணிய பாரதியார். பாட்டுக்கொரு பாரதி என்பார்கள். கவிஞரான அவர் கவிதையாக உள்ள கீதையை எளியோரும் படித்து தெரிந்து கொள்ளும் விதமாக தமிழ் படுத்தியுள்ளார்.
18 அத்தியாயங்கள் 700 ஸ்லோகங்களைக் கொண்ட பகவத் கீதையை முழுமையாக, எளிய தமிழில் மகாகவி எழுதியதை விஜயபாரதம் வெளியிட்டுள்ளது.
சுப்பிரமணிய பாரதியார் கீதையை தமிழ்ப் படுத்தியதுடன் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு முகவுரையும் மொத்த நூலுக்கு ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார். அதில் ‘கீதை ஒரு கொலை நூல், கீதை சந்நியாசத்தை வலியுறுத்தும் இல்லறவியலுக்கு எதிரான நூல்’ என்பன போன்ற அவதூறுகளுக்கு பதிலளித்துள்ளார்.
முன்னுரையில் புத்த மதம் பற்றியும், அது இந்தியாவில் செல்வாக்கு இழந்தது பற்றியும், அதற்கு வித்திட்ட ஆதிசங்கரர் பற்றியும் எழுதி உள்ளது சுவாரஸ்யமாக உள்ளது.
பகவத் கீதையை எளிய தமிழில், எந்த தத்துவ சாய்வுகளும் இல்லாமல் உள்ளபடியே படிக்க விரும்புவோருக்கு முதல் நூலாக இது முன்வைக்கப்படுகிறது.
நூல் விவரம்:
கடமையைச் செய்
பகவத் கீதையின் தமிழாக்கம்
ஆசிரியர் : மகாகவி பாரதியார்
தொ.ஆ.: சேக்கிழான்
வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம், சென்னை
விலை : ரூ. 150/-
தொடர்புக்கு: +91 89391 49466
$$$