சக்கரவர்த்தித் திருமகன் அமைத்த ஆசிரமம்

-கருவாபுரிச் சிறுவன்

திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் தனது நூற்றாண்டை கடந்த 04.02.2025 அன்று எட்டியது. அதையொட்டி, நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது…

இன்று மனித சமுதாயம் மட்டுமல்ல… நாய், பூனை, குரங்கு போன்ற விலங்கு இனத்தினையும்  மதுவைக் குடிக்க வைத்து அது படும் துயரச் செயலை வீடியோவாக்கி  லைக்,  ஷேர், கமென்ட் வாங்கும் ஈனச் செயலை புல்லரிக்காமல் செய்வதை சமூக வலைதளங்களில் கண்கூடாகப் பார்க்கிறோம்.

வெட்கமாக இல்லையா? 

மனித சமுதாயத்தைச் சீரழிக்கும் இரு செயல்களில் ஒன்று குடி, மற்றொன்று ஊழல். இவை இரண்டும்  மனித சமூகத்தை காலைச் சுற்றிய பாம்பாக சுற்றிக் கொண்டிருக்கின்றன.  

அதிலும், குசி, அறியாமையாலும், வேண்டுமென்றே இதற்கு அடிமையாகி, அடுத்தவரையும் கெடுக்கும் பழக்கமாகி விட்டது. என்று தான் மடியும். ஏன் இந்த நிலை யோசிப்பார் இல்லை. இவர்களை கேட்பார் இல்லை. 

யோசித்தவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்; கேள்வி கேட்டவர்கள் நடுத்தெருவில் நின்றார்கள்; விண்ணுலகம் சென்றார்கள். 

இந்த இருபெரும் மாயைத்துயரில் சிக்கி அல்லல் படுவோரை ஆற்றுப்படுத்துவோர் எங்கே உள்ளார்கள் என தேசம் முழுக்கும் தேடினாலும் ஒருவரையும் காணோம். 

இன்பமாகத்தெரியும் துன்பம் நிறைந்த இச்சிக்கலில் சிக்கித் தவிக்கும் மக்களை விடுவிக்க  எந்த தேசத்து  தலைவர்கள் முன் வருவார்கள்? 

எங்கும் எதிலும் எப்போதும் ஊழல், சுரண்டல், நயவஞ்சகம், நாதாரித்தனம், ஒழுக்கமின்மை, தற்குறித்தனம், சில்லறைப் புத்தி, பிராபல்யம் என இன்னும் எத்தனையோ சிற்றின்பச் செயல்களுக்கு வித்திடும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகமாவதை  சமுதாயத்தில்  தினந்தோறும் பார்க்கலாம். 

நாளிதழ்களை நன்றாக திருப்பிப் பார்த்து  படிக்கவே  பயமாக இருக்கிறது. 

குடும்பத்தார் மத்தியில் டி.வி.  சேனல்களை  மாற்றி பார்ப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. 

அன்றாட வாழ்வியலில் மனிதனுக்குத் தேவையான பண்பட்ட நிகழ்வுகளைக் காண்பது அரிதாகிவிட்டது. 

 அதனைத் தேடிச் சென்று படிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில் தந்தையும் மகனுக்கும் வெவ்வேறு காலத்தில் இந்த தேசத்திற்கு தேவையான இரு பண்பட்ட நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள்.

அப்படிப்பட்ட மனிதர்கள் இந்த கலியுகத்தில் வாழ்ந்து வழிகாட்டியுள்ளார்களா… அதுவும் சென்ற நூற்றாண்டிலா… அவர்கள் யார் என்பதை இன்றைய இளைய  தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தந்தையை விஞ்சிய தனயன்  

ராஜாஜி

எங்கோ ஒரு குக்கிராமத்தில் தாம் நிறுவிய ஸ்தாபனத்தில்  மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த  பணியாளர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டு இருந்தார் அந்த பெரிய  மனிதர். 

அப்போது தலைவிரி கோலமாய் வந்த பெண், “எஜமான் தங்களிடம் வேலை பார்க்கும் என் கணவர்  தினந்தோறும் சாராயம்குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து போதையில் என்னை துன்புறுத்துகிறார்.  நீங்கள் தான் நியாயம் கேட்க  வேண்டும்” என விம்மினாள், விசும்பினாள்.

 தன் தொழிலாளியை ஏறெடுத்துப் பார்த்த அவர் முன், “எனது  மனைவியை அடிக்கவில்லை” என சொன்னார்  அந்தத் தொழிலாளி.  

உடனே  “நீ செய்யும் இந்தத் தொழிலின் மீது சத்தியம் செய்” என்றார் பெரிய மனிதர். 

தவறை  உணர்ந்த அவர்,  செருப்பின் மீது சத்தியம் செய்து, இனி குடிப்பதில்லை என வாயாரச் சொல்லி மனமாரத் திருந்தினார். பின்னர், அந்தத் தொழிலாளியின்  உயிர் உடலை விட்டு பிரியும் வரை  மதுவைக் குடிக்காமல் வாழ்ந்து காட்டினார். 

அவரையே அந்தப் பிரிவுக்கு மேலாளாராகவும் பணியில் அமர்த்தினார் அந்தப் பெரிய மனிதர். 

பின்னாளில் அவரிடமே தன் அணியும் செருப்பை  எப்படி செய்வது எனக் கற்றுக் கொண்டார் அந்த மாமனிதர். 

அவர் வேறு யாரும் அல்ல… அவர் தான் இந்திய வழக்கறிஞரும், விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல்வாதியும்,  எழுத்தாளரும், இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநரும் (கவர்னர் ஜெனரல்), இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரும், சென்னை மாகாண முதல்வரும், சென்னை மாநில முதலமைச்சரும், மேற்கு வங்க ஆளுநரும், இந்திய அரசின் உட்துறை அமைச்சரும்,  பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவரும், சுதந்திராக் கட்சியின் ஸ்தாபகருமான ராஜாஜி என்னும் மூதறிஞர் ராஜாகோபாலாச்சாரியார்.

விண்ணமுதை யொத்த வியாசர் விருந்தளித்த 
புண்ணியனே! வேதாந்தப் போதகனே!- தண்ணியநீள் 
ஆழிசூழ் இவ்வுலகில் ஆழியான் இன்னருளால் 
வாழிநீ ஐயா! மகிழ்ந்து.

     -கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை 

வால்மீகி ராமயணத்தை  ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்றும், மகாபாரதத்தை  ‘வியாசர் விருந்து’ என்றும் தமிழில் மொழி பெயர்த்து இலக்கியத்திற்கு பெரும் தொண்டாற்றினார் ராஜாகோபாலாச்சாரியார். 

சக்கரவர்த்தித் திருமகன் நுாலின் ஆசிரியருக்கு  ஒரு சக்கரவர்த்தித் திருமகன் இருந்தார்.

அவர் தந்தையோடு பயணித்து சுதந்திர வேள்வியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். தந்தை  தனிக்கட்சி தொடங்கினாலும் தாம்  கண்ட பேரியக்கமான காங்கிரஸில் கடைசி வரை இருந்தார். 

சி.ஆர்.நரசிம்மன்

இப்பாரத தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி  மக்களுக்காகப் பணியாற்றினார். 

ஒரு சமயம் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த அன்னாருடைய  காரை மறித்த காவலர் ஒருவர்  பத்து ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

அவருடைய முழு முகவரியையும் வாங்கி வைத்துக் கொண்டு ,  இன்ன காரணத்திற்காக லஞ்சம் கேட்டுள்ளாய் என சரியான காரணத்தை நிறுவி அவரை பணி இடை நீக்கம் அல்ல…  பணி நீக்கமே செய்தார். 

கடைசி வரை அந்தக் காவலர் காலில் விழுந்து கெஞ்சியும் அப்பணியில் அவரால் ஈடுபட இயலவில்லை. 

அவர் யார் தெரியுமா… அவர் தான் சக்கரவர்த்தியின் திருமகன் சி. ஆர். நரசிம்மன் அவர்கள். 

இவர்களைப் போன்ற  அரசியல் தலைவர்களை  இன்றைய இளைய சமுதாயம் பார்க்க விட்டாலும் அவர்களுடைய நற்குணங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். 

ராஜாஜியும், நரசிம்மன் அவர்களும்  முழு மூச்சாக காந்தியச் சிந்தனைகளை  எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதை அவர்கள் நிறுவிய   காந்தி ஆசிரமத்தில்  தலைவர் பதவியில் வகித்து நிர்வகித்த காலம்  விரிவாக விவரிக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல. 

வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா

கல்லைக் கனிவிக்கும் வலிமையுடைய திருவாசகத்தின் முதற்பகுதியான சிவபுராணத்தில்… 

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! 
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
 கோகழி ஆண்ட குரு மனிதன் தாள் வாழ்க! 
ஆகமம் ஆகிநின்ற அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!

என பரம்பொருளான சிவபெருமானை மூவிரு முறை வாழ்க என வாழ்த்துவார் மாணிக்கவாசகப் பெருமான். அதைப்போல  நம் எட்டைய புரத்தான் காந்திஜியான  தேசப்பிதாவினை வாழ்த்துகிறார். 

அதோடு மட்டுமல்லாமல் மகாத்மா என்ற பட்டத்தையும் முதன்முதலில் வழங்கியது அவர் தான் என்பதை கீழ்க்கண்ட பாடலை மீண்டும் மீண்டும் படித்தால் புரியும். 

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து 
   நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி 
   விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் 
   பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி 
    மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!

தேச பக்தியும் தெய்வ பக்தியையும் இருகண்களெனக் கொண்டு வாழ்ந்த தேசியத் தலைவர்களில் முக்கியமானவர் மகாகவி பாரதி. அவர் பாடிய  ‘காந்தி பஞ்சகம்’ என்ற தொகுப்பிலுள்ள பாடல் இது. 

நூற்றாண்டு கண்ட ஸ்தாபனம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, புதுப்பாளையத்தில் உள்ள காந்தி ஆசிரமம் நூற்றாண்டு கண்ட ஸ்தாபனம். 

இது, திக்கெட்டும் தன் பணியை தனக்கேயுரிய பாணியில் எந்த வித எதிர்பார்ப்புமின்றி செய்து இத்தேசத்திற்கு முன்மாதரியாய்த் திகழ்கிறது. 

இதன் தொண்டு, சேவையை போற்றி பகிரங்கமாக விருது வழங்க ஒரு காரணம் கூட தமிழக அரசிற்கு கிடைக்கவில்லை என்பதுதான் புதிரான புதிர். 

இது நாள் வரை தமிழகத்தை ஆண்ட அரசியல்வாதிகளின் கண்களுக்கு இந்த காந்தி ஆசிரமத்தின் பணிகள் என்ன காரணத்தினாலோ தெரியாமல் போனது! 

தமிழகத்தினை நல்லாட்சி செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் காந்தி ஆசிரமத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும், அங்குள்ள செயல் திட்டங்களையும்  முன் மாதிரியாக எடுத்திருப்பார்கள்; வகுத்திருப்பார்கள்; வரையறுத்திருப்பார்கள். ஆனால், கர்மவீரர்  காமராஜருக்குப் பிறகு ஒரு நல்லாட்சி  தர வேண்டும் என தமிழகத்தை ஆளுபவர்கள் இன்று வரை  நினைக்க வில்லை போலும். 

நினைத்திருந்தால் காந்திஆசிரமங்களின் எண்ணிக்கை பெருகி இருக்கும் அல்லவா?

தமிழகத்தில் எந்தக் கடையின் எண்ணிக்கை பெருகியுள்ளது என்பதை அடியேன் சொல்லித் தெரிய வேண்டுமா… என்ன? 

பூரணத்தில் எப்படி தேமதுரச்சுவை மிகுந்து காணப்படுமோ…  அது போல இன்றும் தனித்தன்மை மாறாமல் தன் பணியைச் செய்கிறது காந்தி ஆசிரமம். 

நூற்றாண்டு கண்ட  இந்த  ஸ்தாபனம் பற்றிய  அரிய நிகழ்வுகளை அவ்வப்போது  நினைவு கூர்வதே இக்கட்டுரையின் நோக்கம். 

காந்திவழி நன்றென்று காட்டி அன்புப் 
 பெரும்படையில் கலந்து வெற்றி
ஏந்து கொடி பிடித்திலங்கிப் பாரதத்தாய் 
 தளையறுத்தான் இந்தி யாவில் 
ஆந்தகவு சொல் நுால்கள் இரண்டைநனி 
  தமிழுருவில் ஆக்கித் தந்தான் 
சாந்தவடி வுடையவன் தன் ஒழுக்கத்தால்
  பகைவர்களும் தாழும் மெய்யன்

அறிவுக்குப் பெருநிலையம் ஒழுக்கத்துக்
  குரையாணி அன்பில் ஒங்கல் 
செறிவுற்ற உறுதிக்கு வச்சிரத்துாண்
  எந்நாளும் சிறிது சோம்பா
துறும்பற்பல எதிர்கால நிகழ்ச்சிகளை 
 நனியோர்ந்தே இயன்ற தொண்டு 
மறுவற்றுச் செய்கின்றான் துறவுளத்தோன் 
 இராஜாஜி வாழி வாழி!

     -ஜோதி 

டிசம்பர் 1924-இல் பெல்காமில் நடந்த மாநாட்டில் காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ராஜாஜி. அப்போது, சபர்மதியில் வைத்து காந்தியைச் சந்தித்த ராஜாஜி,  `காந்தியின்  பெயரில்,  ஒரு ஆசிரமம் அமைக்க விரும்புகிறேன்’ என கூறி அவரிடம் ஆசி வாங்கினார். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம், புதுப்பாளையம் கிராமம் அங்குள்ள ஜமீன்தார் ரத்ன சபாபதி கவுண்டர்  அவர்களால் தானமாக வழங்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்தில் 1925 பிப்ரவரி 6-இல் தொடங்கினார். 

காந்திஜியின் முதன்மைக்  கொள்கைகளான  தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, கதர் ஆடை அணிதல் ஆகிய திரிகரணக் கொள்கைகளைப் பற்றி  மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த ஆசிரமத்தின் முதன்மை குறிக்கோள். 

அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார்
  விடுதலை யார்ந்து, செல்வம்
குடிமையி லுயர்வு, கல்வி
  ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும்
  படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்,
   புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!

மகாத்மா காந்திக்கு தீர்க்கமாக ஆசியளித்த மகாகவி பாரதியின் வைர வரிகளை ஏற்றம் பெறச் செய்தது காந்தி ஆசிரமம்.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், காமராஜர், சர்தார் வல்லபபாய் படேல், லால் பகதுார் சாஸ்திரி,  எம்.எஸ்.சுப்புலட்சுமி, மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரி பாய்  உள்ளிட்ட பல தேசிய தலைவர்களும் இங்கு வருகை தந்துள்ளார்கள். அவை யாவும் ஆவணமாக  இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

இங்கு தயார் செய்யப்படும்  கதர் ஆடைகள்,  ஊதுபத்தி,  சாம்பிராணி, இலவம் பஞ்சிலாலான தலையணை மற்றும் மெத்தைகள், சோப்புகள், வாசனைப் பொருள்கள், தேன் ஆகியன மாநிலம் முழுவதும்  விற்கப்பட்டு வருகின்றன. இன்றளவிலும் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள், இதன் தரத்தினை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

நிறைவாக, காத்தல் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் மீது ராஜாஜிஅவர்கள் இயற்றிய பொருள் வளம் மிகுந்த  இப்பாடலைப் பாடி இந்த முதற்பகுதி சிந்தனையை நிறைவு செய்வோம்.

***

குறையொன்றுமில்லை…

-ராஜாஜி

பல்லவி
(ராகம்: சிவரஞ்சனி)

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா!

அனுபல்லவி  
(ராகம்: சிவரஞ்சனி)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!

சரணம் 1  
(ராகம்: சிவரஞ்சனி)

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா, மலையப்பா, கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா!

சரணம் 2
(ராகம்: காபி)

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா, மலையப்பா, கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா!

சரணம் 3
(ராகம்: சிந்துபைரவி)

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா!
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா!
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!

யாதும் மறுக்காத மலையப்பா,
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு?
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு?

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா, மலையப்பா, கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா!
கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா!

***
வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு!

  • (இக்கட்டுரைக்கான தகவல்களை மனமுவந்து அளித்தவர்கள்: காந்தி ஆசிரமத்தில் பணி நிறைவு பெற்ற  முன்னாள் ஊழியர்கள் கரிவலம்வந்த நல்லுார் கி.பிரமுத்து, கி.ஈஸ்வரன்).

$$$

One thought on “சக்கரவர்த்தித் திருமகன் அமைத்த ஆசிரமம்

Leave a comment