-கருவாபுரிச் சிறுவன்
இந்தக் கட்டுரையில் இருப்பவை நாம் அறிந்தவை தான். ஆனால், நாம் மந்த புத்தியால் இவற்றை மறந்திருக்கிறோம். இந்த மந்தச் சாம்பலை ஊதித் தள்ளினால் கனல் மிளிரும். அதுவே இன்றைய தேவை.
(சற்குருநாதர் ஆச்சாரிய சுவாமிகள் அருளுரையைத் தழுவியது )

மனிதனும் கோயிலும்
மனித உடலுக்கும் உயிருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. அதைப் போலவே மனித வாழ்க்கைக்கும் திருக்கோயிலுக்கும் சம்பந்தம் இருக்கிறது. உயிர் இல்லாவிட்டால் உடல் பலனற்றதாகி விடும் அது போல , கோயில் சம்பந்தப்பற்றவர் வாழ்க்கையும் பயனற்றதாகி விடும்.
தவசிகள், மகான்கள் ஆங்காங்கு மரத்தடியில் அமர்ந்து பரம்பொருளை நோக்கி தவமிருந்தார்கள். அவர்கள் அருகே ஒரு குளமோ, கிணறோ இருக்கும். தவசிகள் தங்கியிருந்த மரம் தல விருட்சம் ஆனாது. அருகே இருந்த நீர்நிலைகள் தீர்த்தக் கட்டமாயிற்று. அந்த மரத்தின் அடியில் பெரியது, சிறியதுமாகிய கோயில்களை பிற்காலத்தில் மன்னர்களும் பிரபுக்களும் அங்கு சமைத்தார்கள்.
மகான்கள் தொட்டு அனுபவித்த தீர்த்தம் புனிதமானதாயிற்று. நோய்நொடி தீர்க்கும் தன்மையும் சிறப்பும் பெற்றன. இந்திர தீர்த்தம். சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் என்று சிறப்பித்தும் போற்றப்பட்டன.
கோயில்கள் பிற்காலத்தில் சிறப்பாக அமைந்த போதும் இன்றளவும் ஸ்தல விருட்சங்களும் தீர்த்தங்களும் போற்றிக் காக்கப்பட்டு, புனிதம் நிறைந்ததாக மதிக்கப்பட்டே வருகின்றன.
அவசியம் கோயில் வழிபாடு
ஹிந்து மக்கள் இல்லங்களில் சுவாமி படம் இல்லாத வீடுகள் அநேகம் இருக்காது. ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு சாமி படம் இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் குளித்ததும் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு நடத்தும் போது பக்திப்பாடல்களைப் பாட வேண்டும். அது, நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருளாளர்கள் அருளிய பாடல்களாக இருந்தால் உத்தமம்.
சினிமா பாடல்களைப் பாடுவது சரியாகாது. அருளாளர்கள் பாடல்களில் பலிதமாக உயிர் எழுத்துக்கள் அமைந்திருக்கும். புதிய பாடல்களில் மெட்டும் ராகமும் நன்றாக இருக்கலாம். ஆனால் உள்ளம் உருகும் உணர்வை ஏற்படுத்தும் ஆற்றல் இருக்காது. வீட்டுப்பிரார்த்தனையால் குடும்பம் நலன் அதிகரிக்கும். தான், தன் குடும்பம் மட்டுமே நலமாக இருந்தால் போதுமா..? சூழலும் சுகமாக இருந்தால் தானே பயமோ, கவலையோ இல்லாமல் வாழ முடியும்?
ஊரின் நலத்திற்காகவும் நாட்டின் நலத்திற்காகவும் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். கோயில் பிரார்த்தனை தேசபக்திக்கும் சமுதாய மேன்மைக்காகவுமே ஏற்பட்டது.
பரம்பொருளின் சந்நிதியில் ஏழை – பணக்காரன், உயர்வு -தாழ்வு என்று எதுவுமில்லை.
திருவிழா என்றால் எல்லா மக்களும் சேர்ந்து ஒத்துழைத்து மக்கள் சக்தியைத் திரட்டுவதற்காகவே தேரும் திருவிழாவும் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டன.
தேர்த்திருவிழா என்றால் வீடு, தெருவினை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து மகுட தோரணம் கட்டி, சுகாதார ஏற்பாடுகள் முழுவதுமாக நடத்தப்படுகின்றன.
பொது நன்மைக்குப் பாடுபட மக்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக்கூடமாக கோயில்கள் விளங்குகின்றன.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள். ஏன் தெரியுமா? சுயநலம் மிகுந்து அகம்பாவம் உடையவர்கள் வாழும் இடமாக அந்த ஊர் அமைந்து விடும்.
கோயிலும் தெய்வபக்தியும் இருக்கும் இடத்தில் அக்கிரமம் ஏற்படாது. மனிதனை மனிதன் மதிப்பான். அந்தக்காலத்தில் கோயிலை மையமாக வைத்தே வீடுகள் அமைத்தார்கள்.
இப்பொழுதெல்லாம் வீடு கட்டிய பிறகு கோயிலை அமைத்துக் கொள்கிறார்கள். காலக்கொடுமை அது.
கோயிலில் உயர்ந்த ராஜ கோபுரம் ஏன் அமைத்தார்கள் தெரியுமா? ராமனை நாம் பார்க்காவிட்டாலும் ராமன் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்று ஒரு வாசகம் இருக்கிறது. நாம் கோயிலைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கோபுரம் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது என்பதை மனத்தில் வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்; கோபுர தரிசனம் பாப விமோசனம்’ என்று வாக்கியங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
கோயில்களில் தட்டு (தடை) இல்லாமல் பூஜை நடப்பதற்காக, மன்னர்களும் செல்வந்தர்களும் மானியங்களை வழங்கினார்கள். ஆடுகளும் மாடுகளும் கோயிலுக்குக் காணிக்கையாக விடப்பட்டன. ஆடு மாடுகளை வெட்டுவதற்காக அல்ல. கால்நடைகள் விருத்தியேற்பட்டுக் கோயிலின் வருவாய் பெருகும் என்றுதான் இந்த ஏற்பாட்டை அன்று பெரியவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் இன்று திருக்கோயில்களில் நடப்பதோ வேறு விதம்.
மக்கள் நலனில் பண்பாட்டில் ஒற்றுமையில் கோயில் பிரதானப் பங்கு வகித்திருந்தால் அன்று கோயில் பூஜை தட்டின்றி நடைபெற அரசு கஜானாவில் இருந்து பண உதவி செய்தார்கள். ஆனால் இன்று அரசின் கஜானாவிற்கு திருக்கோயிலுக்குரிய வருமானங்கள் உதவி செய்கின்றன.
அன்று மக்களிடம் தெய்வபக்தி அதிகம் இருந்ததால் குற்றம் குறைகள் குறைந்திருந்தன. இன்று கோயில்களையும், அதனுடைய உண்மைத் தத்துவங்களையும் கோயிலில் வேலை பார்க்கும் அதிகாரிகள் அலட்சியப்படுத்திய காரணத்தால் சிறைக்கூடங்களும் கோர்ட்டுகளும் போலீஸ் ஸ்டேஷன்களும் அதிகம் நிறுவ வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
நிர்கதியற்று அலைபவன் யார்?
’மண்ணைத் தோண்டாதே’ என்றொரு வாசகம் உள்ளது ஆலயத்துக்குச் சேர்ந்த நிலத்தில் வரப்பைக்கூட வெட்டக் கூடாது. ஆலயத்திற்கு நிலம் மானியமாக விட்டவர்கள் ‘இந்த தர்மம் சூரியன் சந்திரன் உள்ள வரை நடை பெற வேண்டும், எவராவது இதற்கு இடர் செய்வார்களானால் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாபத்திற்குள்ளாவார்கள்’ என்று சாபம் கொடுத்து, கோயில் சுவர்களில் கல்வெட்டை வெட்டி வைத்திருப்பார்கள். சிவ பெருமான் கோயிலில் பிரசாதமாகத் திருநீறு கொடுத்தால் கூட நெற்றியில் தரித்துக் கொண்டது போக எஞ்சி இருப்பதை அருகே இருக்கும் கிண்ணத்தில் போட்டு விடுவார்கள். ‘சிவன் சொத்து குல நாசம்’ என்ற மொழியையும் சொல்லியிருக்கிறார்கள். சிவன் கோயில் பிரசாதத்தையே அதிகம் உபயோகிக்கக் கூடாது என்றால், சிவன் கோயில் நிலத்தைத் தனதாக்கலாமா? குத்தகைக்கு ஏற்றுக் கொண்டு குத்தகையைக் கொடுக்காமல் இருக்கலாமா..?
பெருமாள் கோவில் பிரசாதங்களை உண்ணலாம். பெருமாள் சொத்தையும் மோசடி செய்து அனுபவிக்கக் கூடாது. பெருமாள் சொத்து பெருநாசத்தை ஏற்படுத்தி விடும். பொதுவாக கோயில் சொத்து பொதுச் சொத்து; ஆண்டாண்டு காலம் இருக்க வேண்டிய சொத்து. அதனை அகரிப்போன், அபகரிக்க நினைப்போன் ஆகியோர் கிராமப் பொது உடைமைக்கு விரோதிகள். கோயில் சொத்தைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். நமக்கேன் என்பது கூடாது. கோயில்களில் விளக்கு எரிகிறதா பூஜை நடக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.
கோயில்களில் பூஜை நடைபெறாமல் போனால் நாட்டில் பஞ்சமும் பசிப்பிணியும் பரவும் வானம் வழங்காது கிணற்றில் நீர் ஊறாது நோய் மலிந்து நிற்கும்.
தினசரி கோயில் பிரார்த்தனைக்கு ஒவ்வொருவரும் செல்ல வேண்டும்.
தினசரி போக முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாளாவது கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும்.
கோபுர தரிசனம்
தமிழ்நாட்டில் உள்ள கோபுரங்களைக் கண்ட அயல்நாட்டினர் இதனை பூமியில் கட்டி பிறகு நிமிர்த்தி வைத்தார்களோ என வியக்கிறார்கள்.
இந்தியா பூராவும் சுற்றிப் பார்த்திருக்கிறேன் உயர்ந்த கோபுரங்கள். அதிலும் சிறந்த சிற்பங்கள் உள்ளவை தமிழகத்தில் உள்ள கோயில் கோபுரங்களே ஆகும்.
நாம் பார்க்க விட்டாலும் நம்மைப் பார்க்க கோபுரங்கள் உயர்ந்து நிற்கின்றன.
கோபுரங்களைத் தரிசனம் செய்து நாம் உய்ய வேண்டாமா.. என்கிறார் ஒரு மேலை நாட்டு அறிஞர்.
ஆலயம் நாட்டின் நன்மதிப்புக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் சிறந்த சிந்தனையாளர்களால் தோற்றுவிக்கப்பட்டவை.
ஆலயங்கள் இருக்கும் இடங்களுக்கு மக்கள் தான் சென்று வழங்க வேண்டும்.
உள்ளூர்க் கோயிலில் விளக்கு எரிகிறதா என்பதைப் பார்க்காதவர்கள் டூர் பஸ் வைத்து சேத்திர தரிசனம் செய்யப் புறப்பட்டால் பயன் கிடைக்காது. பெற்ற தாயாரைப் பிச்சை எடுக்க விட்டு மகன் வெளியூரில் கோதானம் செய்தால் பயன் கிட்டுமா…?
அந்த அந்த ஊரில் உள்ளவர்கள் அந்தந்தக் கோயில்களை பாதுகாக்க முன்வர வேண்டும்.
கோயில்களில் பரம்பொருள் எங்கும் நிறைந்ததாக யாவும் அறிந்ததாக எல்லாம் வல்லதாக விளங்குகின்றது.
அதனை அப்படியே அனுபவிக்கச் சாதாரண மனிதர்களால் ஆகாது. எனவே பல்வேறு மூர்த்தங்களாக அறிந்து அனுபவித்தவர்கள் நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.
உதாரணமாக மின்சாரம் இருக்கிறது. எதையும் செய்ய வல்ல ஆற்றல் அதற்கு இருக்கிறது.
விளக்கில் மின்சாரம் பொருத்தப்படும் போது அது ஒளியைத் தருகிறது. இந்த ஒலி பெருக்கியில் மின்சாரம் பொருத்தப்படும் போது ஒலியை நெடுந்தொலைவு கொண்டு செல்லும் ஆற்றல் உடையதாகிறது.
விசிறிகளில் மின்சாரம் செயல்படும் போது காற்றைத் தருகிறது. இயந்திரங்களில் பொருத்தப்படும் போது பெரிய இயந்திரம் முதல் சிறிய இயந்திரம் வரை செயல்பட வைக்கிறது. மின்சாரத்தைப் போலப் பரம்பொருளும், அதனால் செயல்படும் கருவிகளைப் போல விக்கிரகங்களும் நமது பெரியோர்கள் கண்டு அறிந்து தேர்ந்து அனுபவித்து நமக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்.
வணங்கு… வளம் பெறு!
வினைகள் தீர வேண்டுமானால், செய்கின்ற காரியங்கள் செம்மையாக நடை பெற வேண்டுமானால், விநாயக மூர்த்தத்தை வணங்கு.
அழகும் வீரமும் ஞானமும் வேண்டுமானால், முருகப் பெருமானை வணங்கு.
இவ்வுலகத்திலே எல்லா விதமான இன்பங்களும் அடைய உன்மனம் விரும்பினால், திருமாலை வணங்கு.
எல்லாச் சக்திகளையும் பெற்று தீரனாக, தைரியவானாக விளங்க வேண்டுமானால் அம்பிகையை வணங்கு.
கல்வியை விரும்பிப் பெற விரும்புகிறாயா, சரஸ்வதியைப் போற்றி வணங்கு.
செல்வத்தை விரும்பி யாசிக்கிறாயா திருமகளை வணங்கிப் போற்று.
முக்தியை விரும்பி நிற்கிறாயா, சிவபெருமானைத் துதித்து அருள் பெறு!
-என்று நமது பக்திக்கு வழியமைத்து இஷ்ட சித்தியைப் பூர்த்தி செய்து கொள்ள மூர்த்தங்களும் ஆலயங்களும் அமைத்திருக்கிறார்கள்.
ஆலயத்தின் மீது அக்கறை வேண்டும் அனைவருக்கும்…
அரசாங்கம் ஒன்றேயாயினும் செயல்பட பல்வேறு டிபார்ட்மென்ட் இருப்பது போல நமக்கு அனுக்கிரகம் செய்ய வல்ல மூர்த்தங்களை வழிகாட்டியிருக்கிறார்கள் முன்னோர்கள். பெரியவர்கள் அமைத்துக் காட்டிய ஆலய மூர்த்தங்களை அவர்கள் அமைத்த ஆகம விதிகளின் படி சாஸ்திரங்களை அனுசரித்து வழிபாடு நடத்தினால் தான் வழிபாட்டுக்குப் பலன் முழுமையாகக் கிடைக்கும்.
உள்ளூர்க் கோயில்களைப் பராமரிக்காமல் வெளியூர்க் கோயில்களைத் தரிசனம் செய்து புண்ணியம் சம்பாதிக்கலாம் என கருதுவது முட்டாள் தனமான செயல் என்பதை மறந்து விடக் கூடாது.
நிறைவாக,
ஆலயம் நமது உயிர், நாம் உடல், ஆலயம் காப்போம் என்று சொல்லும் போது நமது பண்பாடும் கலாச்சாரமும், வகுப்பு ஒற்றுமையும் தேச நலனும் கட்டுப்பாடும், மொழி வளர்ச்சியும் ,பிறருக்கு உதவும் மேலான குணங்களும் நம்மிடையே வளரும்.
அனைவரும் ஆலய நலனில் அக்கறை கொண்டு மேலான நலன்களையெல்லாம் அடையப் பிரார்த்திக்கிறோம்.
வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு!
$$$