தாய்த் தமிழ் வாழ்க!

-திருநின்றவூர் ரவிகுமார்

இன்று  உலக தாய்மொழிகள் தினத்தை ஒட்டிய பதிவு இது...

பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலேயிருந்து வைகையேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரேன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்”

-வில்லி பாரதம்.

பொருள்:

செந்தமிழ் மொழியானது பொதிகை மலையில் அகத்தியனிடமிருந்து பிறந்து,
பாண்டிய மன்னர்களின் புகழிலிலே தங்கி இருந்து
மூன்று சங்கத்திலும் நிலையாக இருந்தது.
புனல் வாதம் செய்த போது, தமிழ் பாடல்களை ஏட்டில் எழுதி வைகை வெள்ளத்தில் விட்டார்கள். அது கரையேறி வந்தது.
சின்னப் பெண் அவள்.
அனல் வாதம் செய்யும் போது, ஏட்டினை தீயில் இடுவார்கள். நல்ல தமிழ்ப் பாடல்களைக் கொண்ட ஏடுகள் தீயில் கருகாமல் இருக்கும்.
அப்படி வளர்ந்த தமிழ் கற்றவர்கள் நல்ல தமிழ் பாடல்களை நினைவில் வைத்து இருப்பார்கள்.
அவர்கள் நினைவிலே நடந்து வருவாள்.
திருமால் பன்றியாக உருவம் எடுத்து உலகை தன் கொம்பில் தூக்கி காத்த போது அதனுடன் சேர்ந்து பிறந்து வளர்ந்த தமிழ்
-என்கிறார் புலவர் பெருமான்.

தமிழுக்கு முதன்முதலில் தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்ட வாழ்த்துப்பாடல் இதுதான். இங்கே வில்லிப்புத்தூரார் தமிழ் மொழியைச் சின்னப் பெண்ணாக, மகளாக பாவித்து வாழ்த்திப் பாடுகிறார்.

அதேபோல நாமும் நமது தாய்மொழியின் சிறப்பை அறிந்து தமிழாபரணன் போல, தண்டமிழ் நாடனைப்போல, தமிழ் பரணி கொண்ட தமிழ் வேந்தர்களைப்போல, தமிழின் சிறப்பை நமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லி நமது தாய்மொழியாம் செந்தமிழைப் போற்றுவோம்!

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வெல்க தமிழ்!

$$$

Leave a comment