ஈசனான எந்தை – 4

-வ.மு.முரளி

பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-4

தொடர் சிகிச்சையில் நன்கு உடல்நலம் தேறி வந்த எனது தந்தையின் திடீர் நலிவு எங்களைத் திகைக்க வைத்தது. அவர் பேசுவது குழறலாக இருந்தது மட்டுமல்ல, சுயநினைவு குறைந்து கை, கால்களை கடுமையாக உதறத் தொடங்கினார். உரத்த குரலில் கத்தவும் செய்தார். கைகளைப் பிடித்து உலுக்கினால் சுயநினைவுக்கு வருவார். 

அவர் படும்வேதனையைப் பார்ப்பதே கடும் வேதனையாக இருந்தது. ஒருமுறை அவர் சுய நினைவுக்கு வந்தபோது ‘ஏன் இப்படி செய்கிறீர்கள் அப்பா? ‘ என்று கேட்டேன். “தெரியலையேப்பா” என்றார். அவரது மூளையின் பாதிக்கப்பட்ட பகுதி இடும் கட்டளைகள் அவரது கை, கால்களின் முரட்டுத்தனமான இயக்கமாக  (behavioral change) மாறின. 

தந்தையின் தலையில் அடிபட்டபோது ஏற்பட்ட ரத்தக்கசிவு இடப்புறம் மட்டுமே நீக்கப்பட்டது. வலப்புறம் இருந்த ரத்தக்கசிவை மருந்தால் கரைத்து விடலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால் அது கரையவில்லை என்று தெரியவந்தது. தவிர மேலும் கசிவு ஏற்பட்டிருப்பதும் உணரப்பட்டது. 

இந்த இடத்தில் ஒரு தவறு நிகழ்ந்தது. தந்தையின் முரட்டுத்தனமான செயல்பாட்டால் அவருக்கு ரத்த நாளத்தில் செலுத்திய மருந்துகளையும் திரவங்களையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அவரது வல,  இடக் கரங்களில் ஊசி குத்திக் குத்தி, வேறெங்கும் ரத்த நாளம் கிடைக்காத நிலை ஏற்பட்டிருந்தது. அதேசமயம் பொட்டாசியம் சத்தும் ஆன்டி பயாட்டிக் மருந்தும் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. 

ஆனால் தொடர்ந்து இரு நாட்கள் அப்பா கை, கால்களை அசைத்துக்கொண்டு ஓலமிட்டபடி இருந்தார். அப்போது அவரை கொஞ்சம் தூங்க வைத்தால் பரவாயில்லை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் மருத்துவர்கள் தூக்க மருந்து கொடுக்க விரும்பவில்லை. அது மூளையின் இயக்கத்தை மந்தமாக்கிவிடும் என்று தயங்கினர். 

என்றபோதும், தந்தையின் கட்டற்ற செயல்பாட்டைக் குறைக்க, எங்கள் வேண்டுகோளை ஏற்று மிகக் குறைந்த அளவு தூக்க மருந்தை மருத்துவர்கள் அளித்தனர். அவரது முரட்டுத்தனமான செயல்பாடு குறைந்து அவர் உறங்கவும் தொடங்கினார். 

அப்போது அவரது மூளையின் தற்போதைய நிலையை அறிய, டிச. 23இல் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யப்பட்டது. அதற்காகவும் சிறிது மயக்க மருந்து அளிக்கப்பட்டது. 

அதையடுத்து அவர் தொடர்ந்து இரண்டு நாட்கள் கண் விழிக்காமல் இடையின்றித் தூங்கினார். எங்களுக்கு பயமாகி விட்டது. 

பிறகு அவர் விழித்தபோது கொஞ்சம் தெளிவாகப் பேசினார். அடுத்த அரை மணிநேரத்தில் மீண்டும் அவரது சுயநினைவு குறைந்து விட்டது. அவரது கை, கால் இயக்கம் வேகமாக இருந்தது. எனவே ஊசி மூலம் செலுத்தப்பட்ட திரவங்கள் நிறுத்தப்பட்டன. மருத்துவமனையில் உள்ள பிசியோதெரபி நிபுணர்களால் அவருக்கு இயன்முறை சிகிச்சை அளிக்க முடியவில்லை. 

இந்நிலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட் வந்தது. அதில் மூளையின் வலப்புறத்தில்  முன்பகுதியில் ரத்தக்கசிவு அதிகரித்திருப்பதும் (Subdural hemorrhage), சுமார் 12 மிமீ அளவுக்கு ரத்தக்கசிவு இருப்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி தூக்க மருந்தின் விளைவால் மூளையின் நரம்பு மண்டலத்தில் நிகழ்ந்து வந்த முன்னேற்றம் தடைப்பட்டது. இது பெரும் பின்னடைவானது. 

அதையடுத்து பலதுறை மருத்துவர்கள் எனது தந்தையைப் பரிசோதித்தனர். நரம்பியல் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவரும் கோவையில் இருந்து வந்து பார்த்தார். 

மூளையின் வலப்புறம் ரத்தக்கசிவு அதிகரித்திருப்பதால் நடத்தை மாற்றத்தில் தீவிரம்  இருப்பதாகவும், அதை சரி செய்ய அங்கும் ஓர் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினர். ஆனால் அதைத் தாங்கும் உடல்வலு அவருக்கு இல்லை என்று நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் கூறினார். எங்களுக்கும் அதே எண்ணம் தான் இருந்தது.

“எங்களால் ஆன முயற்சிகளை செய்துவிட்டோம். ஆனால் மூளையில் இருக்கும் பாதிப்பை இதற்கு மேல் குணப்படுத்த இயலாது. எனவே கூடிய வகையில் மருந்துக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியதுதான்” என்று மருத்துவர்கள் கூறினர். கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலை தான். 

மருத்துவர்கள் இதைத் தான் கூறப் போகிறார்கள் என்பதை நாங்கள் யூகித்திருந்தோம். என்றபோதிலும், அவர்கள் இதைக் கூறியபோது இடிந்து போனோம். 

என் மனைவி கலங்கியதைக் கண்டவுடன், அப்பாவைக் கவனித்து வந்த பொது மருத்துவர் டாக்டர் கே. கருப்புசாமி நம்பிக்கை அளித்தார். “உங்கள் தந்தையின் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள் நன்றாக உள்ளன. எனவே கவலை வேண்டாம். தொடர்ந்து மருந்து உட்கொண்டால் அவரது நிலை சரியாகும்” என்றார். 

மற்றொரு மருத்துவர், மருத்துவமனையிலேயே சிகிச்சையைத் தொடர்வதா, வீட்டில் சிகிச்சையைத் தொடர்வதா என்பதை நீங்களே முடிவு எடுக்கலாம் என்றார். எங்களுக்கு யதார்த்தம் புரிந்தது.

‘சொந்த விருப்பத்தில்’, ‘நோயாளியின் உடல்நிலையை முழுவதும் உணர்ந்துகொண்டு’, எனது தந்தையை மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்வதாக ஒப்புதல் அளித்து, அவரை டிஸ்சார்ஜ் செய்தோம். டிச. 26 மாலை மீண்டும் வீடு திரும்பினோம். 

வழக்கமாக ஒரு மாதத்திற்கு மருந்து எழுதித் தரும் மருத்துவர்கள் இம்முறை ஐந்து நாட்களுக்கு மட்டுமே மருந்து எழுதித் தந்தனர். ஐந்து நாட்கள் கழித்து என்னை மட்டும் நேரில் வருமாறு கூறினர். அது ஏனோ மனதை உலுக்கியது. 

ஆம்புலன்ஸில் வருகையில், கடந்த அக். 18ஆம் தேதியில் இருந்து டிச. 26 வரை நடத்திய தொடர் போராட்டம் நினைவுக்கு வந்தது. இத்தனை முயற்சிகளும் வீண்தானா? இனிமேலும் அலோபதி சிகிச்சையைத் தொடர்வதா? தந்தை பிழைப்பாரா? 

அப்போது தான் எனது நீண்ட நாள் நண்பரும், ஹோமியோபதி மருத்துவ நிபுணருமான டாக்டர் திரு. கே.கிங் நார்சியஸ் அவர்களின் நினைவு வந்தது. அவரைத் தொடர்பு கொண்டால் என்ன? 

எனினும், இந்த 70 நாட்களாக அவரை நினைக்கவே இல்லை என்பது உறுத்தியது. இத்தனைக்கும் எங்கள் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் குடும்ப நண்பர் அவர். நிருபராக இருந்தபோது அவரது பேட்டி, செய்திகளை நான் பணிபுரிந்த நாளிதழில் வெளிவரச் செய்திருக்கிறேன். நோயாளிகள் பலரை அவரிடம் அனுப்பி இருக்கிறேன். எப்படி அவரை இத்தனை நாட்கள் மறந்திருந்தேன்? மனம் குமைந்தது. 

வீடு திரும்பிய பிறகு தந்தையின் நிலை மேலும் மோசமானது. ஒரே இடத்தில் அவரது பார்வை நிலைத்திருப்பது போலத் தோன்றியது. நாங்கள் அழைத்தது அவருக்கு கேட்டதாகவும் தெரியவில்லை. 

மறுயோசனையின்றி நான் டாக்டர் கிங் அவர்களின் வீட்டுக்கு கிளம்பினேன். நான் சென்ற நேரம் அவர் வீட்டில் இல்லை.

(தொடர்கிறது)

$$$

Leave a comment