-கோதை ஜோதிலட்சுமி
கற்பு என்பது பண்பு என்பதில் ஒளவைக்கும் உடன்பாடு இருக்கிறது. அதனை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் பொதுவில் வைக்கிறாள். கற்பு என்பது சொன்ன சொல் தவறாமல் நடந்து கொள்வது என்கிறாள். அதாவது உண்மையாக இருப்பதுதான் கற்பு.

கற்பு என்ற சொல் மிகவும் உணர்வுபூர்வமாக தமிழில் வழங்கி வரும் சொல். காலம் தோறும் இந்தச் சொல்லுக்கான மதிப்பு பேசுபொருளாக இருந்து கொண்டே இருக்கிறது.
கற்பு பெண்ணுக்குரிய பண்பு என்று சங்க இலக்கியங்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் பேசப்படுகிறது. அகம், புறம் என இரு தளங்களிலும் இச்சொல் இடம் பெறுகிறது. அகப்பாடல்களில் கூட புனிதத்தன்மையுடன் தொடர்புபடுத்தியும் கற்பு பேசப்படுகிறது. இலக்கணத்திலும் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் கற்பியல் சொல்லியிருக்கிறார்.
‘பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின்’ என்று பெண்ணின் பெருமையைச் சொல்ல வந்த வள்ளுவப் பேராசானும் கற்புடையவளின் பெருமை என்று அடையாளப்படுத்திவிடுகிறார். இதிலே கற்பெனும் திண்மை என்று வரையறை கொடுக்கிறார். திண்மை என்றால் வலிமை, உறுதி, கலங்காத தன்மை, உண்மை என்று அகராதி சொல்கிறது. திருவள்ளுவர் பொதுவாக இந்த அகராதிப் பொருள்கள் எல்லாமும் பொருந்தும் படியாகவே குறளை இயற்றியுள்ளார்.
நமது ஒளவைப் பாட்டி ஒற்றை வரியில் நுட்பமாக வாழ்வியல் உண்மைகளைச் சொல்லி வைத்த அறிவுப் பெட்டகம் அல்லவா! கொன்றைவேந்தன் நூலில் குறிப்பாகவும் கூர்மையாகவும் அவள் கற்பு என்பதை விளக்குகிறாள்.
கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
கற்பு என்பது பண்பு என்பதில் ஒளவைக்கும் உடன்பாடு இருக்கிறது. அதனை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் பொதுவில் வைக்கிறாள். கற்பு என்பது சொன்ன சொல் தவறாமல் நடந்து கொள்வது என்கிறாள். அதாவது உண்மையாக இருப்பதுதான் கற்பு. எளிதாக எந்தக் குழப்பமும் இல்லாமல் மனித குலத்திற்கான இயல்பாக வைத்துவிட்டாள்.
அதே கொன்றைவேந்தனில் பின்னால், ‘நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை’ என்றும் சொல்லி வைக்கிறாள். நல்ல கல்வி கற்றவர்கள் ஒழுக்கம் உடையவர்களாகவும் உண்மை உடையவர்களாகவும் இருக்க வேண்டும். நேற்று ஒன்றாகவும் இன்று வேறாகவும் பேசக் கூடாது என்பதை ஒளவையார், ‘நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை’ (கொன்றைவேந்தன் 50) என்கிறார்.
கல்வியைக் கற்கும்போது அது நம் மனத்தில் பதியும்படியாகக் கற்க வேண்டும். அவ்வாறு மனத்தில் நிலைக்கும்படியாகக் கற்றவர்கள், தாங்கள் சொன்ன சொல்லிலிருந்து தவற மாட்டார்கள் என்பது இதன் பொருள். அதாவது, சொன்ன சொல் தவறாது இருத்தலே நல்ல கல்வி கற்றதற்கு அழகு.
பாரதியைப் போல ஒளவையைப் புரிந்து கொண்டவர் யார்? ஒளவையின் சொற்களைப் போற்றும் பாரதி, தனது ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ பாடலில் பெண்ணே பாடுவதாக இந்தக் கருத்தை, ‘கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்று பாடினார்.
ஒளவை, கற்பு என்பது பெண்ணுக்குரிய பண்பு எனப் பேசப்பட்ட காலத்தில் புதிய கோணத்தில் தனது சிந்தனையை முன்வைத்தாள். அவள் வழியிலேயே பாரதியும் பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டிருந்த காலத்தில் அந்த சிந்தனையிலிருந்து மாறுபட்டு சமத்துவம் பேசத் துணிகிறார். மனித குலம் என்ற பொதுமை மட்டுமே சிந்தனையாளர்களின் பார்வையாக இருக்கிறது என்பதையே பாரதி ஒளவை இருவரின் சிந்தனையும் வெளிப்படுத்துகிறது.
சொன்ன சொல் தவறாது நடந்து கொள்வது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒழுக்கமே ஆகும். கல்வியிற்சிறந்த தமிழகம் இந்தச் சொல்லைப் பெண்ணுக்கு மட்டுமே உரித்தான பொருளில் பயன்படுத்தாது ஒளவை கூறும் பொருளில் கொள்வது ஒளவைக்கு நாம் தரும் மதிப்பாகவும், சமூகத்தின் மேம்பாட்டிற்கான உறுதியான வழியாகவும் இருக்கும்.
- நன்றி: தினமணி- தமிழ்மணி (24.11.2024)
$$$