அண்ணாமலைக்கவிராயரின் கோமதியந்தாதி

-கருவாபுரிச் சிறுவன் 

தை அமாவாசையை ஒட்டி, காவடிச்சிந்து கவிராயர் அண்ணாமலை ரெட்டியாரின் கோமதியந்தாதி குறித்து இனிய கட்டுரையை வழங்கி இருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...
அடிசேர்வன் என்ன எம்ஆதியை நோக்கி 
முடி சேர் மலைமகனார் மகளாகித் 
திடமா தவம்  செய்து  தேவர் அறியப் 
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே

    -திருமூல தேவ நாயனார் 

கண்ணியது உன்புகழ் கற்பது 
      உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் 
      புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் 
     அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே 
      புவி ஏழையும் பூத்தவளே. 

      -அபிராம பட்டர் 

சொன்னது பலிக்க… 

பாரத தேசத்தில் உள்ள கோமதியம்பிகை உறையும் திருத்தலங்களில் சங்கர நயினார் கோவிலில் எழுந்தருளி இருக்கும் சங்கர கோமதி ஸ்தலம் தென் தமிழகத்தின் பிருதிவியம்பலமாக திகழும் சிவஸ்தலமாகும். (தற்போது சங்கரன்கோவில் என்று வழக்கத்தில் உள்ளது)

இத்தலம் பாண்டிய மண்டலத்திற்கு திலகம் போன்றது என சைவத்தமிழ் இலக்கிய உலகின் முடிசூடா மன்னன் உ.வே.சா. அவர்கள் புகழராம் சூட்டுகிறார்கள். 

திலகமாய்த் திகழும் திருவையுடைவளை திரிகரணத் துாய்மையுடன் அழைத்தால் தானாகவே முன்வுவந்து பேருபகாரம் செய்வாள். 

ஒப்பற்ற  பெருந்தெய்வமாகத் திகழும் திருவை வாம பாகத்தைக் கொண்ட இவள் சன்னிதிக்கு ஒருவர்  வருத்தமுடன் சென்றால்…அவர்களின் வாட்டத்தினைப் போக்குவாள். பின்னர் அதற்குப்  பொருத்தமான காரணத்தை உணர்த்துவாள், இந்த பூவாடைக்காரி.  இவளே இப்புவனத்து அதிபருக்கு  அகிலாண்ட நாயகி. 

சூரிய சந்திர பிரகாஷமாய் ஒளிர்ந்து சகல ஜீவராசிகளையும் காக்க வல்ல கருணை தெய்வமாம் இக் கோமதியம்பிகையை, அந்தணரில் தொடங்கி நந்தனார் குலம் வரை, பீபிலிகள் முதல்  பிரமன் வரையுள்ள சாராசரி உயிர் வர்க்கங்கள் வரை ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், பாமரர், பண்டிதர் என்ற வேற்றுமையில்லாமலும், இம்மண்ணுலக மன்னவரும், விண்ணுலக தேவர்களும் சரணாகதி அடைந்து தொழுது வணங்கி  இன்றும் வழிபடுகிறார்கள் என்பது இத்தலத்திற்குரிய சிறப்பு. 

 சீலம் நிறைந்த சீராசைக்காரியாம்  கோமதி மருத்துவர்களுக்கு எல்லாம் தலைமை மருத்துவச்சி. 

இவளை அதாவது  கோமதியை நினைப்பவர் வாழ்வில் நினைத்தது நடக்கும். 

கோமதியை மொழிந்தவர் வாழ்வில் சொன்னது பலிக்கும். 

கோமதியை வழிபட்டவர் வாழ்வில் நிகழ்த்தியது சிறக்கும்.

இதுவே உண்மை. இதுவே சத்தியமாகும். 

புந்நாக வனமத் யஸ்தா ம்  கோ வித் யாதா யினீம் ஸிவாம்!
கோ பி ர்க வ்யாஸமாநாபி ர்கோ மதீம்  துஷ்டுவே குரு!!

ம்ருத்திகா விஷதாபக் னீயத்க்ருபாரஸபா ஸூரா!
பயஸ்ச விதா தா தீஷ்டம் பீதம் யத் கருணாயிதம்!!

யத்ஸந்நிதெள பிஸாசாதி பா தா  ஸத் யோ நிவர்ததே!
தாம் தே வீம் கோமதீம் கூஷீரைரஸிஞ்சத்  ஸ ஸூதா ஸமை!!

த வலஸ்யாமலாகாரம் தேவம் மத்  யேஸிவாலயம்!
ஆனர்ச ஸ நவை: புஷ்பை: ஸிஷ்ய புண்ய சயைரிவ!!

புன்னாக வனத்தில் இருக்கும் கருணைக்கடலான கோமதியம்பிகையின்  அருட் பிரசாதமாகிய புற்று மண்ணானது விஷத்தினால் ஏற்படும் தொந்தரவுகளை நீக்கும். பேய், பிசாசு, பில்லி சூனியங்கள் யாவும் கோமதி என்று சொன்னால் ஒன்றும் செய்யாது. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. அவளின் அருள் யாவருக்கும் கிடைக்க வேண்டுமென்று ஜெகத்குரு வழிபாடு செய்கின்றார். 

அந்தாதிக்கு இலக்கணம்

ஈறு முதலாகத் தொடுப்பது அந்தாதி என்று 
ஓதினர் மதோ உணர்ந்தி சினோரே

     -யாப்பெருங்கலம் 52 

அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி என்றும் – யாப்பெருங்கலக்காரிகை 17 லும் அந்தாதிக்கு  இலக்கணம் சொல்கிறது. 

ஒரு செய்யுளின் இறுதியிலுள்ள எழுத்து, சீர், அசை, அடியாயினும் அடுத்து வரும் செய்யுளுக்கு முதலாவதாக வருவது அந்தாதி. ஒரு செய்யுளின் முடிவு அடுத்த செய்யுளின் ஆரம்பம்.   

இது வெண்பா, கலிப்பா வகையில் பாடப்படும். இவை பெரும்பாலும் நுாறு பாடல்களைக் கொண்டு அமையும். 

அந்தாதி நுால்களுக்கு சங்க இலக்கியங்கள், பதினோராம் திருமுறையில் அமைந்த அந்தாதிகள், மூவர் முதலிகள் எனப்படும் ஆழ்வார்கள் பாடிய அந்தாதிகள் என காலந்தோறும் தோன்றிய இலக்கியங்களில் நிறைய சான்றுகள் உள்ளன. 

தல இறைவனையோ, இறைவியையோ, பாட்டுடைய தலைவனையோ, தலைவியையோ  போற்றித்துதிப்பதாக அதாவது அவருடைய சிறப்புகளையும் மகத்துவங்களையும் பெருமைகளையும் பேசுவதாக  அமையும் அந்தாதி பாடல்கள்  யாவும் பக்திச்சுவையும் பொருட்சுவையும் நிறைந்தவை. 

அந்தமும் ஆதியும் இல்லாத சிவபெருமானின் அருட்சக்தியாம் அம்பிகைக்கும் அந்தாதி பாடுவது புலவர்களின் இயல்பு. அதன் அடிப்படையில் திருக்கடையூர் அபிராமி பட்டர் அருளிச் செய்த அபிராமி அந்தாதியில் இருந்து  முதலில் படித்து இன்புற….

கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.

     -அபிராமி அந்தாதி - 23 

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.

      -அபிராமி அந்தாதி - 24 

திரிபு அந்தாதி 

* சொல்லணியில் பெயர் பெற்றவை யமகம், திரிபு. 

 *  ஒரு செய்யுளில் சொல்லும் தொடரும்  மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருளைத் தருமாயின் அது யமகம். 

* அதே போன்று செய்யுளின் நான்கு அடிகளிலும் முதல் எழுத்து மட்டும் திரிந்து மாறுபட்டு மற்ற நான்கு எழுத்துக்களும்  பல எழுத்துகளுடன் ஒத்து நின்று பொருள் வேறு பட்டு வருவதே திரிபு. இதனை திருகலென்றும், திருக்கென்றும் கூறுவர். 

* அந்தாதிக்குரிய பொது இலக்கணத்தோடு இவ்விலக்கணத்தின் அடிப்படையில் பாடப்படும் முறைக்கு யமக அந்தாதி,  திரிபந்தாதி என்பர். 

* இதனைப் பாடுவதற்கு சொற்பயிற்சி மிக மிக அவசியம். அதனால் தான் பழங்காலங்களில் நிகண்டினைப்  பாடமாக வைத்து மாணவர்களை மனனம் செய்ய வலியுறுத்தினார்கள். 

* திருவானைக்கா திரிபந்தாதி, திருவாமத்துார் திரிபந்தாதி, திருவெவ்வெளூர் திரிபந்தாதி, திருமயிலை திரிபந்தாதி போன்றவை யாவும் திரிபு அந்தாதிக்கு  சான்றாகும். 

* சிறுவயதில் இருந்தே வார்த்தை உபயோகிக்கும் முறை, இலக்கண நுாற்களில் ஆழ்ந்த புலமை, எடுத்துக் கொண்ட செயலில் தீவிரமான ஈடுபாடு, கொள்கை பிடிப்பு போன்றவற்றை முதன்மையாகக் கொண்டு  இடைவிடாது பயிற்சியும் முயற்சியும் உடையவராக ஒருவர் இருந்தால் மட்டுமே யமகம், திரிபு போன்ற யாப்பமைதிகளில்  செய்யுள் இயற்ற முடியும். அவர்களை கருவிலே திருவுடையவர் எனச் சொல்வர். 

 * அந்த வகையில் யமகத்திற்கு அடுத்தபடியாக உள்ள  திரிபு இலக்கணத்தை நடைமுறைப்படுத்தி இவ்வந்தாதி இயற்றியவர்கள் வெகு சிலரே. அவர்களுள், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வரிசையில் அணிச் செய்பவர்  சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயரும் ஆவார்கள்.

பலவகைகளும் பல பிரிவுகளும் அந்தாதி அமைப்பில்  இருந்தாலும் சென்னிக்குளம் காவடிச்சிந்து கவிராயர்  அண்ணாமலை ரெட்டியார்  தமிழை வளர்க்கக் கையாண்ட முறை, அவர் எடுத்துக் கொண்ட விதம், யாவும்   தற்கால அறிஞர்களுக்குள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அது  சவாலான விஷயம்  தான். 

அவர் எவ்வளவு திறம்பட  இக்கோமதியம்பிகையின் மீது  திரிபந்தாதியை இயற்றியிருக்கிறார்  என சிந்தித்தால், அன்னாரின்  நாவில் வாக்தேவியாகிய கோமதியம்பிகை  குடியிருந்தே  இதைப் பாடச் செய்திருப்பார். 

பொதுவாக இதனை கோமதியந்தாதி என்றே தமிழ் கூறும் நல்லுலகம் அழைக்கிறது. 

ஒரு சமயம் தமிழ் இலக்கியத்தை இலக்கணத்தோடும்  மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்  பிள்ளையவர்கள் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார்களாம். அப்போது ஒரு செய்யுளுக்கு பல்வேறு அந்தாதிகளில் இருந்து மேற்கோளாகச் சொல்லியதோடு கீழ்க்கண்ட பாடலைச் சொல்லி  இந்நுால் முழுவதும் கிடைக்க வில்லை என்றும், கூழை என்னும் நகர் எங்குள்ளது என்பது தெரியவில்லை என்றும் கூறினார்களாம்.  இதோ அப்பாடல்… 

இளந்தென் றலைவட வானல
      மென்னு மிகன்மதன் கா
களந்தென் றலையமன் 
      காணென வேங்குங் கடலகடு 
பிளந்தென் றலைவந் தழிப்பதெந் 
     நாளெனும் பேதையிவ்வா 
றளந்தென் றலையில் எழுத்தெனும் 
      கூழை யரும் பொருளே!

விதிப்படி எழுதியது தான் நடக்கும் என  பொருளமைந்த (அளந்தென் தலையில் எழுத்தெனும்) என்ற வார்த்தை செய்யுளுக்கு அழகு சேர்க்கிறது என்று கூறினார்கள். பிள்ளையவர்களின் ஆசியும் ஊக்கமும் தான் சங்கரநயினார் கோயில் அந்தாதியைப் பதிப்பிக்க மூலகாரணமாக இருந்தது என  முகவுரை தந்திருப்பார் தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள். ஆக, சங்கரன்கோவிலுக்குரிய  அந்தாதி வரலாறு  என்றாலே அது சிங்கார ரசனை நிறைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 

கோமதியந்தாதி பற்றிய அறிவிப்பும் பதிப்பும் 

அகத்திய மகரிஷியின் அத்யந்த பக்தரானவர் அம்பை சங்கரனார். சிறந்த சைவ சித்தாந்தவாதி. சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின்  இதழாசிரியராகப் பணியாற்றியவர். திருநெல்வேலி அருகேயுள்ள அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் 1944 ஆம் ஆண்டுகளில்  தமிழாசிரியாக வேலை பார்த்தவர். அச்சமயம் அருகிலுள்ள இடகால் என்னும் ஊரில் இருந்து குமாரசாமி என்னும் புலவர் ஒருவர் சங்கரனார் வீட்டிற்கு வந்தார். அவருடன் பழகும் வாய்ப்பை இறைவன் திருவருளால் பெற்று, அவருடன் சிவச்சிந்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டார். ஒரு  நாள் ஓலைச்சுவடி பற்றி பேச்சு வந்த போது தன்னிடம் இருக்கும் சுவடிகளை உள்ளன்போடு சங்கரனாரிடம் காண்பித்தார். 

அவற்றில் இருந்த சுவடி நூற்களில் ஒன்று  கோமதியந்தாதி.  இது அண்ணாமலை ரெட்டியார் இயற்றியது என எழுதப்பட்டு இருந்தது. அப்பெரியாரின் துணை கொண்டே அதிலிருந்த 44 பாடல்களையும் பெயர்த்து எழுதினார். 

அதன் பின் 1955 ஆம் ஆண்டு ’சித்தாந்தம்’ இதழில் “இந்நூலின் தொடர்ச்சி யாருக்காவது தெரியுமாயின் தகவல் தந்து உதவுக”  என அறிவிப்பும் விண்ணப்பமும் செய்து அன்னையைப் போற்றும்  பாடல்கள் மூன்றினை இணைந்திருந்தார்.  அவையாவன:

(படிப்பதற்காக சந்தி பிரிக்கப்பட்டுள்ளது)

நான் புரியேன் கொடும் பாவம்
    அல்லா வினை நாளும் கொலை
நோன்பு உரியேன் துயரும் தவிர்த்து
    ஆண்டதை நோக்குறுங்கால்
வான் புரி ஏன் மலர்ப் புன்னை மின் 
    யாரையும் வாழ்வித்தல் பொய்
ஏன் புரிஏன் கதை ஏன் 
    நரகு ஏன் நமனே!

     -கோமதியந்தாதி - 8 

புராதனி அம் பணில கந்தரி புன்னைப்
      பொன் என் நெஞ்சகம் 
ஒர் ஆதனி அம்பு அணியும் 
      சடையார் பங்கில் உத்தமியே!
இராதல் நியம் பணி சுற்று 
     சரீரம் என்று எண்ணித் தொழ 
வராது அனியம் பணி நிற்போர்க்கு
      என்றோ கதி வாய்ப்பதுவே

      -கோமதியந்தாதி - 14

பேதையர் ஆவலை மாற்றேம்
      அவர்தம் பெரும் நிதம்ப 
வாதை அரா அலைக்கப் தளர்ந்தேம் 
     கன்றின் வளை முட்ட 
ஓதை அரா அலைப்பால் சாய்க்கும்
     புன்னைமின் ஊழ்வன் கருந்
தாதை அராவலை என்றால் 
     அருளாததால் உய்யமே

      -கோமதியந்தாதி - 16

இருப்பினும்  ஏனைய செய்யுள்கள் இன்று வரை கிடைத்த பாடில்லை.  இதற்கு  சிறு குறிப்புரை,கருத்துரை  எழுதி முதற்பதிப்பாக  1976 ஆம் ஆண்டு தம் அன்னையின்  நினைவாக இந்நூலை வெளியீடு செய்தார் அம்பை சங்கரனார் அவர்கள். 

கோமதியம்பிகையின் தீவிர பக்தரான  அரங்க சீனிவாசன் அவர்கள் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரின் படத்தை அரும்பாடு பட்டு ஊற்றுமலை ஜமீனில் இருந்து தமிழ்  உலகிற்கு வெளிப்படுத்தியவர். 

பல ஆண்டுகால உழைப்பாக  ‘காவடிச்சிந்து புகழ் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கவிதைத் தொகுப்பு’ என்ற பெயரில் 1989 இல் வெளியீடு செய்யப்பெற்ற  நூலில் கோமதியந்தாதி  இடம் பெற்றுள்ளது.

1994 ஆம் ஆண்டு துறைசை ஆதின வித்துவான் ச. ரத்தினவேலன் அவர்கள் வழங்கிய முன்னுரையுடன் இலவச வெளியீடாக இந்நூல் சங்கரன் கோயில் தேவஸ்தான வளாகத்தில் அம்பை சங்கனாரால்  மீண்டும் இந்நூல்  வெளியீடு செய்யப்பட்டது. 

அம்பை சங்கரனார் கோமதி அந்தாதிக்கு பதவுரை, கருத்துரை, விளக்கவுரை எழுதி தந்து விட்டு விண்ணுலகம் சென்றார்கள்.  

பின்னர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்  நினைவு விழாக்குழுவினரில் ஒருவராகிய  தொழிலதிபர் லட்சுமணப் பெருமாள் ரெட்டியார் அவர்கள் தன்னுடைய சுய முயற்சியால் இந்நூலினை 1996 ஆம் ஆண்டு வெளியீடு செய்தார்கள்.

அதில் இவர்களும் மீதமுள்ள 56 பாடல்களும் கிடைக்க வேண்டும் என்று ஒரு பணிவான வேண்டுகோளை பதிவு செய்கிறார்கள். அதற்கு இன்றுவரை சைவத்தமிழ் உலகம் செவி சாய்க்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. 

இந்நிகழ்வில்  எங்களூர் ஆசிரியர் வை. ஆறுமுகம் (ராஜா) அவர்களும் (கன்னிப்பேச்சு) முதன் முதலில் பேசுகிறார்கள் என்ற தகவல் தெரிந்து அடியேனின் தாயாரின் தந்தை சிவபூஜை செல்வர் பா.கிருஷ்ணாச்சாரியார் அவர்கள் இந்த தமியேனனையும் அழைத்துச் சென்றார்கள்.  

விபரம் அறிந்தும் அறியாத அச்சிறுவயதில் அந்நிகழ்வில்  கலந்து கொண்ட புண்ணியம்  தானோ! என்னவோ, இக்கட்டுரை!

அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு 2002 ஸ்ரீவில்லிபுத்துார் செந்நெல்குளம் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் ஆ. ராமுலு தேசிகன் அவர்கள் கோமதியந்தாதி பற்றிய ஆரோக்கியமான திறனாய்வு ஒன்றினை உணர்வுப்பூர்வமாக  எழுதி நுாலாக வெளியிட்ட  பணி போற்றற்குரியதாகும்.    

2017 ஆம் ஆண்டு தில்லை – திருவிடைக்கழி பாத யாத்திரைக்குழுவினர் டாக்டர் ஆறுமுக மங்கலமுடையார் அவர்கள் அடியேனை தொடர்பு கொண்டு இந்நூலின் பிரதி ஒன்றை கேட்டுப் பெற்று மீள் பதிப்பு செய்தார்கள். 

பல முறை ரெட்டியார் ஜன சங்கத்தினரும் அண்ணாமலைக் கவிராயரின் அபிமானிகளும் காவடிச்சிந்து நூலினை  பதிப்பிக்கும் போது கோமதியந்தாதியையும் பதிப்பித்து வெளியீடு செய்திருப்பார்கள். 

ஏனைய நகரங்களில் வாழும்  சைவ அன்பர்கள்  பலரும்  ஒன்றிணைந்து ஆன்மிக சபைகள் வைத்து நடாத்தி வருபவர்கள் வெளியீடும் இலவச  வெளியீடுகளிலும் அண்ணாமலைக் கவிராயரின் கோமதியந்தாதி இடம் பெற்றிருக்கக் கூடும் என்பது துணிபு. 

அறிமுகம் வேண்டுமா… அண்ணாமலைக் கவிராயருக்கு!

* ஊற்றுமலையரசரின் அவைக்களப் புலவராக அண்ணாமலைக் கவிராயர் விளங்கியதால்  கழுகுமலை முருகன் மீது காவடிச்சிந்து, ஊற்றுமலை தனிப்பாடல் திரட்டு, வீரை தலபுராணம், நவநீதகிருஷ்ணசாமி பிள்ளைத்தமிழ், வீரை  சிலேடை வெண்பா, வீரையந்தாதி, கோமதி அந்தாதி,  சீட்டுக்கவிகள் மற்றும் திருக்கருவை மும்மணிக்கோவை முதலிய நூல்களை  தெய்வ மணம் கமழும்படி இயற்றியுள்ளார். 

* இவரின் சமகாலத்தவர்களாக  புளியங்குடி முத்துவீரக் கவிராயர், செவற்குளம் கந்தசாமிப்புலவர், வண்டானம் முத்துசாமி ஐயர், முகவூர் கந்தசாமிக் கவிராயர், இராமசாமிக் கவிராயர்   வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வீரகேரளம்புதூர் சுப்பிரமணிய சாஸ்திரியார், கரிவலம் வந்த நல்லூர் உத்தண்டம்பிள்ளை(குதவளை ராமசாமி) இன்னும் பலரும் கவிராயருடன் பழகிய சம காலத்தவர்கள்  ஆவார்கள். 

* துறைசை ஆதினத்தின் கீழ் பாடங்களை பயின்று  ‘சாதியிலும் ரெட்டி புத்தியிலும்  ரெட்டி’ என திருவாவடுதுறை ஆதினத்தின் அன்றைய தலைவரால் பாராட்டப் பெற்றவர்.  

*  சங்கரன்கோவிலைச் சார்ந்தவர் சைவ சித்தாந்த நன்மணி ச. ரத்தினவேலன் அவர்கள். துறைசை ஆதின வித்துவானாக பணி செய்தவர்கள். அன்னார்   அவர்கள் அண்ணாமலைரெட்டியாரைப்பற்றியும் கோமதியந்தாதி பற்றியும்  கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறார்கள்…

ஸ்ரீ கோமதியன்னையே குல தெய்வம் எனக் கொண்டு ஒழுகுவார் பாரத தேசத்தில் பல வேறு இடங்களில் வாழ்கின்றனர். இவ்வன்னையைத்  தரிசித்து மனம் உருகாதார் தமிழகத்தில் அரியர். புலவர் பலர் இப்பிராட்டிக்கு சொன்மாலைசூட்டித் தம்மை உய்வித்துக் கொண்டனர். 

அவர்களுள், கவிஞர் திலகராகிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும் ஒருவர். அந்தாதி நுால்களுள் தனிச்சிறப்புடையது இக்கவிஞர் இயற்றிய கோமதியந்தாதி . இப்பெரியார் கழுகுமலை முருகப்பெருமான் மீது பாடிய காவடிச்சிந்து மிக்க புகழுடையது. இப்பாடல்களை வாயாரப் பாடாத பாடகரே தமிழ் நாட்டில் இல்லையெனலாம்.  

கோமதியம்மையை அன்றி பிறிதோர் தெய்வம் நாடிச் செல்லார் என்றும், தம் நெஞ்சைக் கோமதியம்மையைப் பாடிப்பணியவே கட்டளை யிடுவர் என்றும், அவ்வம்மையைப் பாடிப் பரவுதலால் பிறப்பிறப்பு நீங்குவதோடு யமபயமும் ஏற்படாது என்றும், அவ்வம்மையை வணங்கினால் மனவேதனை அறவே நீங்கும் என்றும், ஆசை அறும் என்றும், 

கொடும்பாவிகளும் அம்மையால் ஆட் கொள்ளப்படுவர் என்றும், எம் பெருமான் இடப்பாகத்தினின்றும் எக்காலத்தும் பிரியாதவள் கோமதியன்னை என்றும், கோமதியம்மையின் அருள் வல்லபம் எள்ளையும் புல்லையும் வலிமையுடையதாக்கும் என்றும் இன்னோரன்ன பல அரிய மகிமாதிசயங்களைத்  தம் பாடலில் வெளிப்படுத்துகிறார். 

இந்நூலைக் கற்பதால் பொய்மையாளரைப் பாடாது எம்மன்னையின் பொருள் சேர் புகழைப் பாடுதலே புண்ணியம் என எவரும் எளிதில் அறிந்து உய்வர்.

ரெட்டியார் அவர்கள் திரிபாகப் பாடினும் அந்தாதித் தொடையால் அமைத்துக் கற்பார் நெஞ்சில் இச் செய்யுள்களை நிற்கச் செய்து விடுகிறார்.  

சங்கரன்கோவில் அன்னை கோமதி என்ற பெயரோடு விளங்குவது போலக் களக்காடு, திருநெல்வேலி, பாளையங்கோட்டை போன்ற விடங்களிலும் அம்மை கோமதி என்ற பெயரிலேயே விளங்கித் தோன்றுகிறாள். எனவே அப்படிப்பட்ட ஊரில் வாழ்பவரும் இந்நூலை ஓதி உய்யலாம் என்கிறார். 

கொஞ்சு மொழிப் பைங்கிளிநேர்
      கோலமொடென் நேரில் வந்து 
அஞ்சலளித் தருளிலுன்னை 
       யார் தடுக்க வல்லவரே
தஞ்சமுனை யன்றியிலை 
      தாரணிக்கோர் தாயாம் நீ 
கொஞ்சமுளத் தயவு செய்வாய்
     கோமதிப்பே ரம்பிகையே!

     -கோமதியம்மன் பஞ்சகம்   

சிறப்பினையுடையவள் சீராசைக்காரி 

திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமானால் கோமதியம்பிகையின் திருநுாற்களை பாராயணம் செய்யுங்கள். அதனால் புகழ் மிக்க வாழ்வும், ஒளிமிக்க எதிர்காலமும் உங்களை தானாக வந்தடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.  

சன்னிதிக்கு செல்ல  முடியாவிட்டாலும் கோமதி, கோமதி என வாயார அழையுங்கள். ஓடி வந்து உதவி செய்வாள். அப்படிப் பட்டவளை தவிர வேறு யாரையும் வணங்க முடியாது. யாரையும் வணங்காத முடி நான் என்கிறார் அண்ணாமலைக் கவிராயர். 

திருக்கோ மதிக்கு வரராசை 
      வாழும் திகம்பரிக்கு(ஈ)
சருக்கோ மதிக்கு ரசமெனச்
     சொற்றவன் தந்தவட்குக் 
குருக்கோ மதிக்குளி ரானைத் 
      தாட்கன்பு கூர்வதல்லால் 
சுருக்கோ மதிக்குள் மற்றோர் 
      தெய்வம் நாடத் துணிந்திலமே.

      (கோமதியந்தாதி - 1) 

நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஏனைய அருளாளர்கள் யாவரும் பரம்பொருளை முழுமுதற் தெய்வம் நீயே  என போற்றிப்பாடும் அணியில் நின்று அண்ணாமலைக் கவிராயரும் அருள் செய்கிறார். அவரின் கோமதியந்தாதி நம்முடைய கோ மதிக்கு அந்த ஆதியை காண்பிக்கும் அருமருந்தாகும். 

நால்வர் பெருமக்கள் திருவடியை வந்திப்பது, அவர்களுடைய திருநாமத்தினை செப்புவது, அவர்களின் புகழினை நித்தம் சிந்திப்பது, அவர்களின் அருளாடல்களை பிறரிடம் பேசுவது யாவும் ஒரு  ஹிந்து மத சைவனுக்குரிய லட்சணங்களில் தலையானது. நால்வர்கள் இல்லையெனில் யாவரும் இல்லை. நாலு பேரின் உதவி இடுகாடு வரைக்கும் தேவை என்பதை கனவிலும் மறந்து விடக்கூடாது. 

அந்த நால்வர்கள் தான் சமயக்குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி சுவாமிகள், மாணிக்க வாசகர் ஆகியோர் ஆவார்கள். 

சமணம் மேலோங்கிய காலத்தில் ஆளுடைய பிள்ளையாரையும் ஆளுடைய அரசரையும் அவதரிக்க வைத்தவள்  இந்த கோமதி என்கிறார். 

அவர்களுடைய பாடல் பொன் போன்றது. அடியேனுடைய பாடலே பொன்னிற்குரிய குழம்பு போன்றது என தன்னை தாழ்த்திக் கொள்கிறார். 

இதோ..சுவைத்து மகிழ அத்திருப்பாடல்… 

தகுவரப் பாதங்க ஒட்டார் 
     ஒட்டார் எனத் தாகத்திற்க 
ருகுவரப் பாதங்க மின்றியுண் 
     பாளமுது உம்பர்கள் மூ
துகுவரப் பாதங்களோடு அன்று 
      வேலர் தந்தோய் புன்னையாய் 
மிகுவரப் பாதங்கம் யான்பாகு 
       நீயதன் மேன்மணியே.

       (கோமதியந்தாதி - 32) 

கிடைத்த நிறைவுப்பாடலில் “கோமதித்தாயே ! பிறப்புத் துன்பத்தில் வருந்தாமல் உன் திருவடியாகிய ஓடத்தின் மூலம் அடியார்களை கரையேற்றுவாயாக” என்று கருத்துரை தருகிறார் அம்பை சங்கரனார்.  

புராதனி யம்பிகை கெளமாரி
    மாரி புன்னாகி மலை 
இராதனி  யம்பிகை கூப்பி 
    மகிழும் யாமளை ஓம்
ஒராதனி யம்பிகை மாறின்றி 
     அன்பரை யேற்றிகரு
வராதனி யம்பணி எண்ணா(து) 
அருளும் மனோன் மணியே!

     (கோமதியந்தாதி - 44) 

கோமதியம்பிகையின் புகழ் பாடும்  அந்தாதிகள்  

சங்கரன் கோயில் புகழ் பரப்பும் அருள் நுாற்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டவை. அவற்றில் இடம் பெறும் சிற்றிலக்கிய வரிசையில் அந்தாதிக்கு தனியிடம் உண்டு.

துறைசை யாதின தம்பிரான் சுவாமிகளுக்கு ஏதேனும்  செய்திகளை  சொல்ல வேண்டுமானாலும், வினைப்பயனின் காரணமாக அவர்களுக்கு  உடல் நிலை சரியில்லாமால் போனாலும் அவர்களை சங்கரநாராயணர் அந்தாதியை  சுவடியில் இருந்து பெயர்த்து எழுதுக என அருளாணை செய்வார்களாம் அன்றைய ஆதின தலைவர்கள். 

மேலும் ஆண்டுக்கொரு முறை  வந்து இளைப்பாறி இத்தலத்தின் பிரபாவத்தை மக்கள், பக்தர்கள்  மத்தியில் தவறாது அருளுரை நிகழ்த்தி செல்வார்கள்  என்கிறார் கழகப்புலவர் அ.ராமசாமி அவர்கள். 

சங்கரன் கோயில் அந்தாதியை  சுவடியில் இருந்து பெயர்த்து வெளியிட்ட உ. வே. சா. அவர்களிடம் இந்நுால் குறையுடையதாக இருக்கிறதே நீங்கள் அதன் தொடர்ச்சியைப் பாடி முழுமை பெறச் செய்யக்கூடாதா.. என அன்பர் ஒருவர் கேட்டதற்கு சங்கரலிங்கப் பெருமானே ! குறையுடைய  அரவத்தை (வால் அறுபட்ட பாம்பினை)அணிந்துள்ளான். ஆதலால் அவனுடைய துதி நுால்களில் குறையிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார் என பதில் அளித்தாராம்.

புன்னாக வனமுனிவர் போற்றநடம்
     புரிபவரைப் புகழ்தல் போலென்
புன்னாக வனம் புரிதல் பொருளெனக்கொண்
     டார்வெண்ணம் புயத்தின் மாதைப்
புன்னாக வனந்தேடுந் கடவுளர்க்கு 
    நிழல்தந்து பூத்துக் காய்த்த
புன்னாக வனப்பெருமை புகலவர
    வாயிநா வும்போ  தாவே. 

     -முத்துவீரப்பக் கவிராயர் 

சங்கரன்கோவில் திருத்தலம்  தொடர்புடன் பேசப்படும் அந்தாதிகள்:

* கோமதியம்மன் அந்தாதி – கைலாச நாத தேசிகர்

* கோமதியம்பாள் அந்தாதி – பரமசிவன் பிள்ளை 

* சங்கரன் அந்தாதி – சுப்பையா தேசிகர்

* சங்கரன் திருவந்தாதி – வி. கா. சுப்பிரமணிய முதலியார் 

* சங்கரன் பாதி நாராயணன் பாதி அந்தாதி – திருவாசகமணி பாலசுப்பிரமணியம்.

* சங்கர நயினார் கோயில் அந்தாதி – அழகிய சொக்கநாதபிள்ளை 

* கூழை அந்தாதி, வரராசையந்தாதி, சங்கர நயினார் கோயில் அந்தாதி,  சங்கரநாராயணர் அந்தாதி என்ற நான்கு பெயர்களும் ஒரே நுாலிற்குரியவை தான் என்கிறார்கள் விஷயம் தெரிந்த  தமிழறிஞர்கள் – ஆசிரியர் பெயர் இதுவரை யார் என அறியப்பெறவில்லை.** 

கோமதியந்தாதி – சென்னிகுளம் அண்ணாமலைக்கவிராயர்**

  • ( ** இந்த இரு நுாற்களும் முழுமையடைய வில்லை  என்பது குறிப்பிடத்தக்கது)

இத்தலத்திற்குரிய அந்தாதிகள் யாவும்  சைவ தமிழ் இலக்கிய நோக்கில் ஆய்வு செய்யப்பட்டு வெளியீடு செய்யப் பட  வேண்டும் என்பது திருவருள் சித்தம். 

இப்பணி யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது  பாம்பரசர்களாகிய சங்கன் பதுமனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 

நிறைவாக,

முன்னேற்றத்தை விரும்பும் நாடுகள் எல்லாம் தத்தம் ஊர்களில் உள்ள கவிஞர்கள், பண்டிதர்கள், பாவலர்கள், புலவர்கள் செய்தருளிய தாய்மொழி நுாற்களை விரும்பி படிக்கவும், மற்றவரை படிப்பிக்கவும்  செய்கிறார்கள். அத்துடன் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றினை உணர்ந்து அவர்தம் அன்பு, அறிவு, ஒழுக்கம், வாய்மை, அஞ்சாமை, ஆண்மை, இடைவிடாத உழைப்பு ,கடமை உணர்வு, தன்னலமின்மை, தாய்மொழிப்பற்று, எல்லோருக்கும் உதவுதல், போன்ற நற்பண்புகளையும் கடைப்பிடிக்கின்றார்கள். 

அதைப்போல ஒவ்வொரு  பகுதிகளில் உள்ள கவிராயர்களாகிய புலவர்களின்  அருமையும் அவர் தம் படைப்புகளின் சிறப்பினை யாவரும்  அறிந்துணர வேண்டும். 

அந்தந்த தலத்து சிற்றிலக்கியங்கள், பேரிலக்கியங்கள்  யாவும்  போற்றப்பட வேண்டும்; பேணிக் காக்கப்பட வேண்டும்; மறுபதிப்பு செய்யப்பட வேண்டும். 

மக்கள் மத்தியில் அதன் பெருமையும் அருமையும் பேசப்பட வேண்டும். 

அப்போது தான் ஹிந்து  என்கிற உணர்வுக்கனல் அணையாமல் ஒவ்வொருவர் உள்ளத்திலும்  சுடர் விடும் என்பதற்கு இணங்க, ஒவ்வொரு தை மாதம் அமாவாசையன்று அண்ணாமலைக்கவிராயருக்கு அவர் பிறந்த சென்னிகுளம்  நகரில் முத்தமிழால் அஞ்சலி செய்யும் பெருநிகழ்வினை ஒரு தரமேனும் யாவரும் கண்ணாரக் காண வேண்டும். 

அப்போது தான் நம் வசிக்கும் தலத்திலும் வாழ்ந்த புலவர்கள், கவிஞர்கள், ஞானிகள், மகான்களை போற்றல் செய்ய   வேண்டும் என்கிற உந்துதல் உதயமாகும்  என்று கூறி முன்னோர் வாக்கினை பொன் போல் பாதுகாக்கும் சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயர் விழாக்குழுவினருக்கு வணக்கங்களையும், நன்றிகளையும் உரித்தாக்கிறோம். 

 திருநெல்வேலி தச்சநல்லுார் வ.அழகிய சொக்கநாத பிள்ளையவர்கள் அருளிய கோமதி சங்கரர்  பதிகப் பாடல்களைப் பாடி  இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக. 

கங்கையஞ் சடையொரு புறம்படர ஒருபுறம் 
        கனக மணிமகுடம் மின்னக்
கவின் வளைக் குழையொரு புறந்திகழ, ஒருபுறம்
       மகர குண்டலம் துலங்கச்

செங்கனற் படையொரு புறங்கனிய ஒரு புறம்
         திகிரியம் படை இலங்கத்
தேனிதழி ஒரு புறம் கமழ, ஒரு புறம் வண்
        செழுந்துழாய்ப் படலை செறியப்

பொங்குபுலி யதளாடை ஒருபுறங் கொள ஒரு 
        புறம் பொலந்துகில் பொருந்தப் 
பூண்டு கொண்டு ஒரு பாதி மாலுருந் தாங்கிநீ 
        பூவை கோமதி அம்மையும்

சங்கனும் பத்மனும் காண அருள் தரிசனம்
      தமியனேற்கு அருளல் வேண்டும்
தங்கு பரமானந்தம் அன்பர் பெற வேதந்த 
       சங்கர மகாலிங்க மே!

***

புன்னை வனம் வாழ்க! உயர் பூலோக கயிலாய
     புகழ்ராசை நகரம் வாழ்க
புரிசை விண்தொடு கோபுரத்தொடு விளங்கு நின் 
    பொன்னெடும் கோயில் வாழ்க

கன்னலஞ் சுவையினீர் மதுரித்து: மூழ்குவோர் 
    கருமம் தொலைத்தி ரத்நம் 
கமிழ் நாகசுனை செயும் கம்பலைகள் என்று நீங்
     காத நின் சன்னிதி யின் முன் 

சென்னி தாழ்த்தித் தினந்தொழும் அன்பர் வாழ்க! நின் 
    சேவடிக் கமலம் வாழ்க!
தெய்வ வெண் திருநீறு வாழ்க! அருள் கூர்ந்தவிச் 
    செந்தமிழ்ப் பதிகம் வாழ்க! 

உன்னரும் பதிகமிதை நன்னயம தாய்ப்படிப் 
    போர்களுங்கேட் போர்களும் 
உலகெலாம் பரவுகோ மதியே, நின் அடிமையாய் 
     ஊழி காலமும் வாழ்கவே!

வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு! 

$$$

Leave a comment