காவியமும் ஓவியமும் -15

-கி.வா.ஜகந்நாதன்

சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 15…

15. அவள் நிலை

நூல் நவின்ற பாக!

இதென்ன புதுமையாக இருக்கிறது? எஜமானன் வண்டிக்காரனை ஸ்தோத்திரம் செய்யவாவது! மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு அடிமையைப்போல உழைக்கும் சாரதிக்கு என்ன பெருமையப்பா! – இப்படி இந்தக் காலத்தில் நினைப்பார்கள்.

ஆனால் இந்த எஜமானன் அப்படி நினைப்பவன் அல்ல. எங்கெங்கே அறிவுத் திறமை இருக்கிறதோ, அங்கங்கே அதற்கு ஏற்ற மதிப்பை அளித்துப் பாராட்டும் உள்ளம் இந்த எஜமானனுக்கு, தலைவனுக்கு, உண்டு. தேர்ப்பாகனுக்கு அவ்வளவு பெருமை தர வேண்டுவதும் நியாயந்தான்.

‘நூல்களைப் பயின்ற அறிவுடைய பாகனே’ என்று தலைவன் சாரதியை விளிப்பது உயர்வு நவிற்சியல்ல. அந்தப் பாகனுக்கு பலவகை நூல்கள் தெரியும். குதிரைகளின் உள்ளந் தெரிந்து பாதுகாத்து அவை ஏவாமலே ஓடும்படி செய்யும் திறமை அவனுக்கு இருக்கிறது. அசுவ சாஸ்திரத்தை அவன் முற்றக் கற்றிருக்கிறான். தான் தேரை ஓட்டிச் செல்லும் இடங்களின் நிலையும், அவற்றிலே எவ்வெவ்வாறு தேரை ஓட்டவேண்டுமென்ற அறிவும் அவனுக்கு இருக்கின்றன. பிரயாணிகளிடமிருந்து தெரிந்துகொண்ட செய்திகளும் நேரிலே கண்டு அநுபவித்த செய்திகளும், நில இயல்பைப் பற்றிய நூல்களினால் உணர்ந்த செய்திகளும் அவனை ஒரு பூகோள சாஸ்திர அறிஞனாக ஆக்கியிருக்கின்றன. அதனால்தான் அவன் வெறும் லகான் பிடிக்கும் குதிரைவண்டிக்காரனாக இல்லாமல், நூல் நவின்ற பாகனாக விளங்குகிறான்.

இந்த நூல்கள் கிடக்கட்டும்; மனிதர்களின் மன இயல்பையும் அவன் நன்கு தேர்ந்திருக்கிறான். தசரதருடைய தேர்ப்பாகனாகிய சுமந்திரன் சிறந்த மந்திரி யென்பது புராணப் பிரசித்தம். தேர்ப்பாகன் மந்திரியாக இருந்தானென்று சொல்வதைவிட ஒரு மந்திரியே அரசனுக்குச் சாரத்தியம் செய்தானென்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இங்கே, தலைவன் நெடுந்தூரம் பிரயாணம் செய்யும்போது அவனுடைய உள்ளம் உவக்கும்படியாகக் கதைகளையும் யோசனைகளையும் சொல்லி ஊக்கம் ஊட்டும் திறமை இந்தத் தேர்ப்பாகனிடம் இருக்கிறது. தலைவனுடைய உணர்ச்சியும் வேகமும் எந்த அளவில் இருக்கின்றனவோ அந்த அளவை அறிந்து தேரைச் செலுத்துவதில் பாகன் வல்லவன். அவனை நூல் நவின்ற பாகன் என்று, சொந்த அநுபவத்தால் உணர்ந்துகொண்ட தலைவன் சொல்வது எப்படி முகஸ்துதியாகும்?

அவனைப் பார்த்துத் தலைவன் என்ன சொல்கிறான்?

தேர் நொவ்விதாச் சென்றீக!

‘நின் தேர் வேகமாகப் போகட்டும்’ என்று சொல்கிறான். சொல்கிற மாதிரிதான் எவ்வளவு கௌரவமாக இருக்கிறது? ‘வேகமாக ஓட்டு’ என்று கட்டளையிடவில்லை. ‘குதிரைகளை முடுக்கு’ என்று சொல்லியிருக்கலாம். அவை உயிருள்ள ஜீவன்களல்லவா? அவற்றை அளவுக்குமேல் முடுக்குவது தவறு. அன்றியும் அந்த குதிரைகளைக் குழந்தைகளைப் போலப் பாதுகாப்பவன் பாகன். அவற்றைப் பதமறிந்து ஓட்டும் உரிமை அவனுக்குத்தான் உரியது. அதை விரட்டும்படி சொல்லும் உரிமை தலைவனுக்கு இல்லை; இல்லையென்று தலைவன் நினைத்தான். ஆனாலும் அவனுக்குத் தேர் வேகமாகப் போய்க் குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டுமென்ற விருப்பம் மட்டுக்கு மிஞ்சி இருக்கிறது. அந்த விருப்பத்தைத் தன் தோழனுக்குச் சொல்வது போலே சொல்கிறான்: ‘அப்பா, கொஞ்சம் தேர் வேகமாகப் போகட்டும்.’

எதற்காக அவ்வளவு வேகம்? பாகன் வெறும் வேலைக்காரனாக இருந்தால், “வேகமாக ஓட்டு” என்று கட்டளையிட்டு விட்டுப் பேசாமல் இருந்துவிடலாம். நாம் வண்டிக்காரனை முடுக்க, அந்த முடுக்குதலுக்குப் பயந்து வண்டிக்காரன் குதிரைகளை முடுக்க, அவை அவன் சவுக்குக்கும் தாற்றுக்கோலுக்கும் அஞ்சி உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடுவது நம்முடைய வண்டிச் சவாரியின் லஷணம்.

பாகனுக்குத் தேர் வேகமாகப் போக வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துவதைத் தன் கடமையாக நினைக்கிறான் தலைவன். அதைச் சொன்னால் தான் தலைவனுடைய மனோவேகம் பாகனுக்குப் புலப்படும். சொல்ல ஆரம்பிக்கிறான்.

தேன் நவின்ற கானம்:

இதோ பார்! இந்தக்காடு முழுவதும் இப்போது எப்படி ஆகிவிட்டது! நாம் முன்னாலே வந்தபோது வெறிச்சென்று இருந்த மரங்களெல்லாம் கார்காலம் வந்தவுடன் பருவமடைந்த கன்னிகை போலத் தளித்துத் தழைத்து மலர்ந்து நிற்கின்றன. வண்டுகள் மலர்களில் மொய்த்துத் தேன் உண்டு மகிழ்கின்றன. கண்ணுக்கு நிறைந்த காட்சியும் காதுக்கு இனிய ரீங்காரமும் உள்ளதாக விளங்குகின்றது இந்தக் கானம்.

கானத்து எழில்:

அந்தக் கானகத்துக்கு முழு அழகையும் தந்திருக் கிறது கார்காலம். இந்த எழிலை நான் பார்க்கிறேன்; நீயும் பார்க்கிறாய். நான் சென்ற காரியம் நிறைவேறியமையால், நல்ல வெற்றியைப் பெற்றுத் திரும்புகிறேன். வெற்றி மிகுதியினால் நிறைந்த மகிழ்ச்சியிலே என் உள்ளம் பூரித்து நிற்பது போல் இந்தக் காடு நிற்கிறது. ஆனால்……?

எழில் நோக்கி:

இந்த அழகைப் பார்த்து நிற்கும் வேறு ஓர் உயிரை என் மனம் இப்பொழுது நினைக்கிறது. அந்த உயிர் என் உயிர் போன்றது. நான் அவ்வுயிருக்கு உயிர் போன்றவன். என் காதலியைத்தான் சொல்கிறேன். அவள் இந்த எழிலை நோக்கி நிற்பாள். நான் மீண்டு வருவேனென்று குறிப்பிட்டுச் சென்ற காலம் இதுதான். இந்தக் காலத்தை எதிர்நோக்கி நின்ற அவள், தேன் நவின்ற (வண்டுகள் பயின்ற) கானத்து எழில் நோக்கி, நாம் வந்துவிடுவோமென்ற துணிவு கொள்வாள். கானத்து எழிலினூடே அவள் இயற்கைத் தேவியின் பேரழகைப் பார்க்க மாட்டாள். நிலமகளின் வளத்தை நினைக்க மாட்டாள். என்னுடைய காரியம் நிறைவேறியிருக்கும் என்பதையும் நான் மீண்டு வந்துவிடுவேன் என்பதையுமே சிந்தித்து நிற்பாள்.

நான்தான் அவளுக்கு உயிர். நான் பிரிந்துவந்து விட்டதனால் அவளுடைய உயிரும் பிரிந்து வந்திருக்க வேண்டும். அப்படி அவ்வுயிர் பிரிந்து போகாமல் அவள் பாதுகாக்கிறாள். எப்படி?

தான் நவின்ற கற்புத்தாள் வீழ்த்து:

அவள் நெடுங்காலமாகப் பயின்று வந்திருக்கிறாள். மகளிர் இலக்கணம் இன்னதென்பதைத் தாய் தந்தையர் கற்பித்ததனாலும் நூல்களைப் பயின்றதனாலும் தன்னுடைய கூரிய அறிவின் திறத்தினாலும் தெரிந்து கொண்டிருக்கிறாள். கற்புத்திறனெல்லாம் முற்றக் கற்ற காரிகை அவள். தலைவன் இல்லற வாழ்வு நிறைவேற வேண்டியும், பொருள் ஈட்ட வேண்டியும் தலைவியைப் பிரிந்து செல்வது இயல்பு. மேலே இன்ப வாழ்வு பெருகுவதற்குரிய பொருளும் அவ்வாழ்வு மிக்க இன்பமுடையதாகும் வாய்ப்பும் அந்தப் பிரிவினால் உண்டாகும். தலைவன் அவ்வாறு பிரியுங்கால் அப்பிரிவைப் பொறுத்துத் துன்பத்தை யெல்லாம் அடக்கி ற்றியிருத்தல்தான் உண்மையான கற்பு நெறி. அதை என் காதலி நன்றாகப் பயின்று தேர்ந்தவள். அப்படி உணர்ந்த கற்பாகிய தாளைச் செறித்து உடம்பாகிய வீட்டினின் றும் உயிரைப் போகவிடாமல் நிறுத்தி வைத்திருப்பாள். அதுவும் ஒருவகைத் தவம். இந்தக் கானம் எழில் நிரம்பி மலர் குலுங்கத் தோன்றும் தோற்றம் அவளுடைய தவத்தின் நிறைவுக்கு அறிகுறி. ஆகவே, அவள் நான் வருவதை எதிர் நோக்கி நிற்பாள். வண்டுகள் ஒலிக்கும் ஒலியினூடே என் தேர் மணியின் ஒலியையும் கானத்தின் எழிலூடே இத்தேரின் எழிலையும் காண வேண்டி நிற்பாள். எவ்வாறு நிற்பாள் தெரியுமா?

கவுள்மிசைக் கை ஊன்றி நிற்பாள்:

தவம் புரிவவர்களுக்கு நெடுங்காலம் தவம்புரிந்த எய்ப்புத் தோன்றாது; அது நிறைவேறும்போது தான் மிகுதியான களைப்பு உண்டாகும். பல காதம் நடந்தவனுக்குக் குறித்த இடம் அணுகியபோதுதான் கால் வலி தெரியும். இவ்வளவு காலம் கற்புத்தாள் வீழ்த்துப் பொறுத்து நின்றவளுக்குக் கார்காலம் வந்துவிட்டதென்று அறிந்தவுடன் அதிகமான சோர்வு உண்டாகும். கானத்தை நோக்கி, அதன் எழிலை நோக்கி நிற்பாள். தன் கன்னத்தில் கையை வைத்து நான் வரும் திக்கை நோக்கி நிற்பாள்.

நிற்பாள் நிலை:

அந்தக் காட்சியை, அவள் நிற்கும் நிலையை, நினைக்கையிலே எனக்கு மயிர் சிலிர்க்கிறது. இவ்வளவு காலம் தன் உயிரைப் போகாமல் தாங்கி, இப்போது, வாடிய கானம் எழில்பெற்று விளங்குவதைப் பார்த்து, அதைப்போலத் தானும் இந்த எழில் பெற்று விளங்கும் செவ்வியை எதிர்நோக்கி, தன் கவுள்மிசைக் கை ஊன்றி ஈற்கும் அந்த அழகிய நிலையிலே அவளைப் பார்க்க வேண்டும் என்று என் நிலை உணர்கம் யாம்:

அந்த நிலையைப் போய் நாம் பார்ப்போம். நீயும் பார்த்து வியக்கலாம். ஆதலின், நூல் நவின்ற பாக, தேர் வேகமாகப் போகட்டும்.

இவ்வாறு சொல்லி முடிக்கிறான் தலைவன்.
கவுள்மிசைக் கையூன்றி நிற்பாளாகிய அவள் நிலையைப் படம் காட்டுகிறது.

தலைவன் கூற்று

நூனவின்ற பாகதேர் நொவ்விதாச் சென்றீக
தேனவின்ற கானத் தெழினோக்கித்--தானவின்ற
கற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி
நிற்பா ணிலையுணர்கம் யாம்.

      -ஐந்திணையைம்பது - மாறன் பொறையனார் பாட்டு.


[நவின்ற – பயின்ற. நொவ்விதா – விரைவாக. சென் றீக – செல்க. தேன் – வண்டு. தாழ் – தாழ்ப்பாள். கவுள் – கன்னம்.]

$$$

Leave a comment