-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 7…

7. ‘மான் உண்டு எஞ்சிய நீர்’
தெய்வத்தின் திருவருள் கூட்டினமையால் அந்தப் பெண்மகளும், ஆண்மகனும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இரண்டு தலையும் ஓர் உடம்பும் உடைய பறவையைப் போல அவர்கள் இரண்டு உடலும் ஓருயிருமாகப் பழகினர்.
பிறர் அறியாதவாறு அளவளாவி வந்தனர் அவர்கள். காதலியின் உயிர்த் தோழி ஒருத்திக்குத் தான் அந்த இரகசியம் தெரியும். தம் மகள் ஒரு காதலனை தானே நாடி அடைந்திருக்கிறாள் என்ற உண்மையை அவள் பெற்றோர் உணரவில்லை. முதலில் தினைபுனத்திடையே தொடங்கிய காதல் நாடகம் இரவில் வீட்டுப் புறத்தேயுள்ள தோட்டத்தில் நிகழ்வதாயிற்று.
இந்தத் திருட்டுக் காதல் வாழ்நாள் முழுவதும் நிகழ்வதென்பது அமையுமா? என்றேனும் ஒரு நாள் மறைவு வெளிப்பட்டுவிடுமே! அன்றி, கனவிலே காதல் புரியும் அவ்விரண்டு ஆருயிர்க் காதலர்களும் ஒரு நாளில் சேர்ந்து பழகும் காலம் கொஞ்சந்தானே? பகலெல்லாம் ஒருவரை ஒருவர் நினைந்து செயலிழந்து கிடப்பதும், இரவில் பலபல இடையூறுகளுக்கிடையே இருவரும் தலைப்பட்டு அளவளாவி இன்புறுவதும் அவ்வளவு காலம் நடைபெறும்? தம்முள்ளே இருக்கும் காதலைக் காதலி தன் பெற்றோர்களுக்குக் குறிப்பாக அறிவிக்க எண்ணித் தன் உயிர்த்தோழியிடம் அதைச் சொல்லுகிறாள். தலைவி, பகற் காலத்தில் தலைவனை நினைந்து நோயுற்றவளைப்போலக் கிடப்பதை அறிந்த செவிலித்தாய், “இவள் ஏன் இப்படி இருக்கிறாள்?” என்று தோழியைக் கேட்கிறாள். இதுதான் சமயமென்று கருதி அவள் தலைவிக்கு ஒரு காதலன் அமைந்த செய்தியைக் குறிப்பாய்த் தெரிவிக்கிறாள். அந்தக் குறிப்பைச் செவிலி உணரவில்லை.
இதனிடையில் தலைவியை மணந்துகொள்ள யார் யாரோ வேறு முயற்சி செய்கிறார்கள். தன் காதலனையன்றிப் பிறரை மணந்தால் தன் கற்பு வழுவுமாதலால் இந்தச் சிக்கலினின்று நீங்கும் வழி என்னென்று ஆராய்ந்து மறுகுகிறாள் காதலிள நங்கை. தோழி அதனை அறிந்து வழி உண்டாக்குகிறாள். தலைவனைப் பார்த்து, “இவளை மணம்பேச அயலாரெல்லாம் வருகிறார்கள். நீ மணம் பேச வந்தால், தங்கள் செல்வ நிலைக்கு ஏற்றவனல்ல என்று மறுத்தாலும் மறுப்பார்கள். ஆதலால் இவளை ஒருவரும் அறியாமல் உடனழைத்துக் கொண்டு நின் ஊர் சென்று மணம் புரிந்து கொள்வாயாக!” என்று தோழி வழி சொல்லிக் கொடுக்கிறாள். தலைவன் அவள் கூறுவது தக்கதென்று எண்ணி இசைகிறான்.
இரு காதற் பறவைகளும் பறந்து போய் விடுகின்றன.
*
அவ்விரு காதலரும் போனபிறகு வீட்டாருக்கு உண்மை விளங்குகிறது. “ஐயோ! முன்பே தெரிந்திருந்தால் அவனுக்கே இவளைக் கல்யாணம் செய்து கொடுத்திருப்பேனே!” என்று தாய் வருந்துகிறாள். தோழி ஒன்றும் அறியாதவள்போல அந்தச் சோக நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
போன காதலர்கள் மணம் செய்து கொண்டார்கள். “இனிமேல் நம்மைப் பிரிப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? மறைவாக நிகழ்ந்த நம் காதலை அக்கினி பகவானுக்கு முன்னே உலகறியும்படி செய்து விட்டோம். இனி, என்னுடைய ஊருக்கு நாம் தம்பதிகளாய் போய் வருவோம். என்மேல் இருந்த கோபமெல்லாம் இப்போது என் பெற்றோர் களுக்கு ஆறியிருக்கும்” என்று தன் மனைவி கூறும் போது, அவன் தடுப்பானா, என்ன? புறப்பட்டு விடுகிறான், உரிமையுள்ள கணவனாக.
* * *
பிறந்தகத்துக்கு வந்தபோது அந்த மடமகள் எதிர்பாராத ஆச்சரியங்களைக் காண்கிறாள். யாராவது அவர்களுடைய கல்யாணத்தைப் பற்றி முணுமுணுக்க வேண்டுமே! எல்லோரும் முகமலர்ச்சியுடன் இணைமலர் மாலைபோன்ற அவ்விரண்டு அழகுருவினரையும் அன்புடன் வரவேற்று உபசரிக்கின்றனர். தோழிதான் எல்லோரையும்விட அதிக இன்பத்தை அடைகிறாள். இந்தமாதிரி, கணவனும் மனைவியுமாகக் கண்குளிர அவர்களைக் காண வேண்டுமென்று அவள் ஏங்கிக் கிடந்தது அவளுக்குத்தானே தெரியும்?
இல்லற வாழ்க்கையிலே புகுந்த தலைவியைத் தனியே கண்டு தோழி பேசக் களிக்கிறாள்.
தன் சொந்த ஊரிலே அந்தக் காதற் பாவை ஓர் அரசிபோல வாழ்ந்தவள். செல்வம் நிரம்பிய வீட்டில் வளர்ந்தவள். ஒன்றாலும் குறைவு தோன்றாதபடி போற்றி வளர்க்கப் பெற்றவள். அவள் தன் காதலனுடன் வேற்றூரில் எங்ஙனம் வாழ்க்கை நடத்துவாள்?- தோழிக்கு இந்தக் கவலை எழுந்தது. தலைவனுடைய ஊர் தண்ணீர் இல்லாக் காடென்று கேள்வி யுற்றிருக்கிறாள். ஆகவே, அவள் பேச்சிடையே மெல்ல, “நீ சென்ற ஊரில் நல்ல தண்ணீர் இல்லை என்கிறார்களே; நீ எப்படி நுகர்ந்தாய்?” என்று கேட்கிறாள்.
தலைவி அவள் கேட்ட கேள்வியைக் கேட்டு ஆச்சரியப்படுகிறாள். “என்ன, இப்படிச் சொல்லுகிறாய்? தாகம் எடுத்த போதெல்லாம் பாலைக் குடிப்பவளாயிற்றே என்று நினைத்துச் சொல்லுகிறாயோ? என்னுடைய நாவின் வறட்சியைப் போக்க இனிய தண்ணீர் இங்கே இருக்கிறது. ஆனால் என் உயிரின் வறட்சியைப் போக்கும் அன்பு நீர் பொங்கும் இடமல்லவா அந்த ஊர்? நம்முடைய ஊரில் தேனோடு கலந்த பாலைச் சாப்பிட்டுக்கொண்டு பொழுது போக்குவதைவிட, அவர் ஊரில் கலங்கிய நீரை உண்டு வாழ்வதுதான் எனக்கு இனிது!”
“என்ன? கலங்கிய நீரா? அதுதான் அங்கே கிடைக்குமா?”
“நல்ல நீர் கிடைக்கிறதோ இல்லையோ; அது வேறு. நல்ல நீர் கிடைக்காமல் கலங்கிய நீர் கிடைப்பதாயிருந்தாலும் அதுதான் இனிது. தழைகள் நிரம்பிய சிறு பள்ளத்திலே மான்கள் உண்டு எஞ்சியிருக்கிறதே, அந்தக் கலங்கல் நீராக இருந்தாலும் அதை அருந்துவதை வெறுக்க மாட்டேன். அதுதான் இனிது. தோழி! அதை உண்ணும் பொழுதெல்லாம், அது என் உயிர்க் காதலருடைய நாட்டு நீரென்ற பெருமிதம் எனக்கு தெளிவை உண்டாக்குகிறது. உள்ளம் மகிழ்ச்சி பொங்க நிற்கையில் இந்த நீரின் கலக்கம் என்ன செய்யும்?
“இங்கேயோ, அவரை அடையாமல் உள்ளம் கலங்கிக் கிடக்கும்போது, தேனும் பாலும் கலந்து தந்தாலும் அது எப்படி எனக்கு இன்பத்தைத் தரும்?”
தோழி உண்மையை உணர்கிறாள். மானுண்டு எஞ்சிய கலிழி நீரை இனிதாகப் பண்னுவது காதலனது அன்பு என்பதைக் கண்டுகொள்கிறாள்.
தலைவன் கூற்று
அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்
தேன்மயங்கு பாலினும் இனிய, அவர்நாட்டு
உவலைக் கூவற் கீழ
மானுண் டெஞ்சிய கலிழி நீரே.
-ஐங்குறு நூறு - கபிலர் பாட்டு.
[அன்னையென்றது தோழியை. வாழிவேண்டு – நீ வாழ்வாயாக! நான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக. படப்பை – ஊர்ப்பக்கம். மயங்கு – கலந்த. உவலைக் கூவற் கீழ – தழை நிரம்பிய பள்ளத்தின்கீழே உள்ள. எஞ்சிய கலிழி நீர் – மிஞ்சி நிற்கும் கலங்கல் தண்ணீர்.]
$$$