-கி.வா.ஜகந்நாதன்
சங்கத் தமிழ் இலக்கியங்களில் அகம்- புறம் இரண்டிலும் உள்ள கவின்மிகு காட்சிகளைத் தொகுத்து மாலையாக்கி இருக்கிறார் அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜ. ஓவியர் திரு. ராஜம் அவர்களின் ஓவியத்துடன் அக்காலத்தில் ‘கலைமகள்’ இதழில் வெளியான கட்டுரைகள் பிற்பாடு ‘காவியமும் ஓவியமும்’ என்ற தலைப்பில் நூலாகின. அந்த நூல் இங்கு நமது கருவூலத்தில் பதிவாகிறது. இது அத்தியாயம்- 5…

5. ஆச்சரியம்
மரமும் செடியும் கரிந்து போன பாலைநில வெம்மையிலே அவர்கள் இந்தக் காட்சியைக் கண்டு வியந்து போனார்கள். செங்கதிரவன் இரக்கமின்றி எரிக்கும் வெய்ய கதிரில் அந்த இளங் காதலர்களின் அன்பு வாடிப் போகவில்லை; ஒளி விடுகிறது. அழகு நிரம்பிப் பருவம் வந்த அக் காதலனும் காதலியும் பாலை நிலத்தில் நடப்பவர்களாகத் தோற்றவில்லை. மலர் மலி சோலைகளும் நீர்மலி வாவிகளும் உள்ள வழியிலே செல்பவர்களைப் போல மகிழ்ச்சியுடன் நடக்கிறார்கள்.
எதிரே வந்த சிறு கூட்டத்தார் இந்தக் காட்சியைக் கண்டு வியக்காமல் இருப்பது எப்படி?
“எவ்வளவு ஒற்றுமை! அழகிலும் அறிவிலும் அன்பிலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவராகத் தோற்றவில்லையே!” என்றார் ஒருவர்.
“முறுக்கேறித் திரண்ட தோள்களையுடைய இந்தக் காளையின் அன்பு நிழலிலே மென்மையே உருவம் படைத்து வந்தாற்போன்ற இந்தப் பெண் செல்லும் காட்சியைக் கண்டது கண்செய்த பாக் கியம். நமக்குக்கூட இது பாலைவனமென்ற நினைவு மறந்துபோகிறதே!” என்றார் மற்றொருவர்.
“நீர் சொல்வது உண்மைதான். இவர்களைக் காணும்போதே கண் குளிர்கிறது. நல்ல மெல்லிய மலர்களால் ஆகிய இரட்டை மாலையைக் கண்டது போல இருக்கிறது. கடவுளின் திருவருள் எத்தனை ஆச்சரியமானது. காதலென்ற ஒன்றை மனிதர்களுக்கு அளித்துத் துன்பத்தையும் வெம்மையையும் பொருட்படுத்தாத இனிமையை அதில் ஊட்டியிருக்கிறாரே! இவர்களுடைய காதல், காட்டிலும் நாட்டிலும் சிறக்கவில்லை; ஜீவனற்றுப்போன தாவரங்களும், உயிர் உடலினின்றும் போய்க்கொண்டிருக்கும் விலங்குகளும், காலோய்ந்து வலியிழந்து செல்லும் நம்மைப்போன்ற மக்களும் உள்ள இந்தப் பாலைநிலப் பெருவெளியிலேதான் இவர்களுடைய காதலுக்குத் தனிச்சிறப்பு உண்டாகியிருக்கிறது. விஷக் கடலினிடையே அமுதம் தோன்றியதுபோலவும், உலகைக் கவிந்த அந்தகாரத்தினிடையே மின்னல் தோன்றியது போலவும் இவர்கள், இங்கே காட்சியளிக்கிறார்கள். இவர்கள் காதல் வாழ்க!”
அவர் உள்ளத்தே எழுந்த உவகைப் பெருக்கு வார்த்தைகளாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த போது வேரொருவர் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. பாலைநிலத்திலும் கவிதை செய்யவைத்த இளங்காதலர்களின் காட்சியிலே கண்ணைப் பறிகொடுத்து நின்றார். உற்றுப் பார்த்தார். அவனைப் பார்த்தார்; அவன் முகவெட்டைப் பார்த்தார். அவளையும் பார்த்தார்; அவள் கண்களைப் பார்த்தார். ஏதோ புதிய பொருளைக் கண்டுபிடித்தவரைப்போலத் துள்ளிக் குதித்தார். “கண்டறியாதன கண்டேன். வியப்பு, பெருவியப்பு!” என்று உரக்கக் கூவினார். நல்ல வேளை, இறற்குள் அந்தக் காதலர் சென்றுவிட்டனர்.
முன்னே பேசிய இருவருள் ஒருவர், துள்ளிக் குதித்தவரைப் பார்த்து, “பெரு வியப்புத்தான்! நாங்களும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். சாதல் நிரம்பிய இங்கே காதலைக் கண்டோம். அந்தக் காதல், வெங்கதிரை நிலவொளியாக்கிற்று. பாலை நிலத்தைப் பூம்பொழிலாக்கிவிட்டது. இவை அதிசயமல்லவா?” என்றார்.
“அதற்கு மேலும் அதிசயம்! கடவுளின் அருள் என்று சொல்லுவார் சொல்லுக! நல்வினையின் வலிமை என்று கூறுவார் கூறுக! இந்த ஊழ்வினைத் திறம் நன்று! என்ன ஆச்சரியம்! ஊழ் வினையே! பாலே! நீ நல்லை!”
பைத்தியம் பிடித்ததுபோலக் கூத்தாடும் அவருடைய வார்த்தைகளைத் தெளிந்து கொள்ளாமல் மற்ற இருவரும் மயங்கி நின்றார்கள்.
“நீர் கண்ட அதிசயம் என்ன, சொல்லும்.”
“இந்த இரண்டு பேர்களையும் நான் அறிவேன்.”
“அறிந்தால் என்ன? அதில் அதிசயம் என்ன இருக்கிறது?”
“இவர்கள் இளங்குழந்தைகளாக இருக்கும் போது நான் பார்த்திருக்கிறேன். அதே சாயல்; அதே முகவெட்டு; அந்தப் பெண் இருக்கிறாளே, அவளுடைய கண்களை நான் மறக்கவில்லை; அன்று கண்ட கண்களே; இப்போது மருட்சியுங்கூடக் கண்டேன்.”
“இளமையிலிருந்து பழகிய நண்பினரென்று தானே சொல்லப் போகிறீர்? அது பெரிய ஆச்சரியமா? வடகடலில் இட்ட நுகத்தில் தென்கடலில் இட்ட கழி சேர்வதுபோல எங்கிருந்தோ வரும் ஆடவனும், எங்கிருந்தோ வரும் மடமகளும் ஒரு கணத்தில் ஊழ்வசத்தால் மனம் ஒன்றி மணமகிழும் வரலாறுகளை நாம் கேட்டிருக்கிறோம்; படித்திருக்கிறோம். அந்தக் காதல்தானே ஆச்சரியம்? பலநாள் பழகினவர் காதல் செய்வதில் என்ன வியப்பு இருக் கிறது?”
“கொஞ்சம் பொறுங்கள். பழகினவர்கள் ஒன்றுவதில் ஆச்சரியம் இல்லை; பழகாதவர்கள் பொருந்துவதுதான் அதிசயமென்பதை நானும் அறிவேன். ஆனால் இவர்கள் காதல் அதனினும் அதிசயமானது!”
“விஷயத்தை விளங்கச் சொல்லாமல் மூடு மந் திரம் போட்டால் நாங்கள் எப்படித் தெரிந்து கொள்வோம்!”
“இப்போது கைகோத்துக்கொண்டு போகின்ற இவர்களே, அன்றைக்கு எப்படி இருந்தார்கள் என்று பார்த்திருந்தால் உங்களுக்கும் இதன் சிறப்புத் தெரியும்.”
“பார்க்காத குற்றத்தை ஒப்புக் கொள்கிறோம். அதை நீர் சொல்லிவிடும். கேட்டு மகிழ்ச்சி அடை கிறோம்.”
“இவனும் இவளும் பகைவர்களாக இருந்தார்கள். சண்டை என்றால் சாமான்யமான சண்டையா? இவன் இவள் தலை மயிரைப் பிடித்து இழுத்தான். இவள் ஐயோ என்று கூவிக்கொண்டு இவனுடைய தலை மயிரைப் பிடித்து இழுத்து ஓடினாள். சண்டைக்கு ஒரு காரணமும் இல்லை. இந்தச் சண்டையைச் செவிலிமார் வந்து தடுத்தார்கள். அப்படியும் ஓயவில்லை. சின்னச் சண்டை தான். ஆனாலும் நாகம்போல ஒருவருக்கு மேல் ஒருவர் சீறிக்கொண்டு எதிர்த்ததைப் பார்த்திருந்தால், அவர்களா இப்படி இணைந்து வாழ்கிறார்களென்று நான் வியப்பதற்குக் காரணம் கண்டு கொள்வீர்கள். பழகாதவர்களை ஒன்றுபடுத்துவது ஆச்சரியமா? பகைசெய்து முரணியவர்களை ஒன்று படுத்துவது ஆச்சரியமா? இந்த ஆச்சரியத்தைக் கடவுள் செய்து காட்டுகிறார்; ஊழ்வலி செய்கிறது. அந்த ஊழை நாம் வியந்து பாராட்டாமல் இருப்பது எப்படி?” என்று முடித்தார்.
“ஆம்! ஆச்சரியத்திலும் ஆச்சரியந்தான். நல்லை மன்றம்ம பாலே! (ஊழ்வினையே, நீ நிச்சயமாக நன்மையை யுடையாய்)” என்று மற்ற இருவர்களும் சேர்ந்து ஊழை வாழ்த்தினார்கள்.
கண்டோர் கூற்று
இவன்இவள் ஐம்பால் பற்றவும், இவள்இவன்
புன்றலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
ஏதில் சிறுசெரு உறுப, மன்னோ
நல்லைமன் றம்ம பாலே! மெல்லியற்
றுணைமலர்ப் பிணையல் அன்னஇவர்
மணமகிழ் இயற்கை காட்டி யோயே!
-குறுந்தொகை - மோதாசனார் பாட்டு.
[ஐம்பால் – கூந்தல். புன்தலை ஓரி – புல்லிய தலைமயிர். வாங்குநள் பரியவும் – இழுத்துவிட்டு ஓடவும். தவிர்ப்பவும் – விலக்கவும். ஏது இல் – காரணம் இல்லாத. செரு – சண்டை. உறுப – செய்வார்கள். மன்ற – நிச்சயமாக. பால் – ஊழ்வினை. துணை மலர்ப் பிணையல் – இரட்டை மலர்மாலை. இயற்கை – இயல்பு. காட்டி யோய் – உண்டாக்கினாய்.]
$$$