உருவகங்களின் ஊர்வலம் – 66

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #66...

66. குருதித் தாரையும் பாலபிஷேகமும்

நிஜமா என்று கேட்டது தாய்ப்பசு.

ஆமாம் என்றது கன்று.

எப்போது பார்த்தாய்?

அவிழ்த்துவிட்டபோது துள்ளிக் குதித்து ஓடினேனே,
அந்த நந்தவனத்தைத் தாண்டி பிரகாரம்
அதன் வழியே போனால் அந்தக் கருவறை வந்ததம்மா!

அங்கு நீ பார்த்தது நிஜம்தானா?

ஆமாம் அம்மா…
கறந்த பால் அத்தனையையும்
கற்சிலைக்கு வார்த்துக் கொண்டிருந்தார்கள்.

உன்னை நம்பலாமா குழந்தாய்?

உன்னிடம் எதற்கம்மா பொய் சொல்லப் போகிறேன்?
அதுவும் இந்த விஷயத்தில் பொய் சொல்லி
என்ன கிடைக்கப் போகிறது எனக்கு?

தாய்ப்பசு தனக்குள்ளேயே யோசித்தது…
தாம்புக்கயிறின் முடிச்சைத்
தானாக அவிழ்த்துக்கொண்டு புறப்பட்டது.

அதிகாலை பிரகாரம் இருள் மண்டிக் கிடந்தது.
நந்தவனம் தாண்டி
நிருத்த மண்டபம் கடந்து
ஸ்தலவிருட்சம் தாண்டி
கொடிமரம் கடந்து
மெள்ள கருவறை நோக்கிச் சென்றது.

அபிஷேகப் பாற்குடங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

குழந்தை சொன்னது சரிதான்.

கறந்தவற்றையெல்லாம்
கற்சிலை மேல்தான் ஊற்றப் போகிறார்களா..?

தாய்க்கு மடியைத் தந்தவரே
தாய்ப்பால் முழுவதையும் பறித்துக் கொள்கிறாரா?

நல்ல தெய்வம்…

முகத்தில் ஒரு தெய்வம்
முதுகில் ஒரு தெய்வம்
காலில் ஒரு தெய்வம்
வாலில் ஒரு தெய்வம்
யோனியில் ஒரு தெய்வம்
கோமியம் புனிதம்; கோ மூத்ரம் புனிதம்
புனிதம் புனிதம் தெய்வம் தெய்வம் என்று
நா இனிக்கப் பேசியதெல்லாம் இதற்குத்தானா?

ஒரு குழந்தைக்குக் கொடுத்ததுபோக
ஊர் குழந்தைகளுக்குக் கொடுத்ததாக அல்லவா நினைத்தேன்?

உலர்ந்த மடிக் காம்பில்
உயவு எண்ணெய் தேய்த்தது இதற்குத்தானா?

மேயும் சிரமம் கூட வேண்டாமென்று
புல்லும் வைக்கோலும்
புண்ணாக்கும் கழுநீரும்
பழமும் கீரைக்கட்டுமென
கொண்டு வந்து ஊட்டியதெல்லாம் இதற்குத்தானா..?

இருண்ட கருவறையிலிருக்கும் தெய்வம்
எதுவென்று தெரிந்துகொள்ள முடியாவண்ணம்
கண்ணில் வழிந்தது கடவுளாலும் கைவிடப்பட்ட சோகம்.

மெள்ளப் பின்நகர்ந்து
ஆகமக் கோவிலை விட்டு வெளியேறியது.

*

அதிகாலைத் தொழுகைப் பாடல்
அலை அலையாக ஆகாயத்தில் மிதந்தது.

ஓங்கி ஒலித்த ஏக ஒலியின் மூலம்தேடி
ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நடந்தது.

நிசப்தமான உலகில்
புரியாத மொழியிலான அந்தப் பாடல்
(புரியாமல் இருந்ததால்)
மந்திரித்ததுபோல
மாயக் கயிறால் இழுத்துச் சென்றது.

வெண் பளிங்குக் கும்மட்டம்
அன்னையின் முலைபோல ஆறுதல் தந்தது.

வாசலில் வழிவிட்டு நின்று பார்த்தது.

இதமான ஒளி உள்ளே நிறைந்திருந்தது.
எந்த உருவமும் இல்லாத வெண் சுவர்
கூடுதல் இனிமையைத் தந்தது.

மண்டியிட்டுத் தொழும் அத்தனை பேரையும்போல
மண்ணில் தன் காலையும் மடக்கி அமர முயன்றது

முன்வாசல் வளாகத்தில்
ஏதோ முனகல் சத்தம் கேட்கவே
மெள்ள எட்டிப் பார்த்தது.

கன்று ஒன்று கால் பரத்திப் படுத்திருந்தது.
வான் பார்ந்து உறைந்திருந்தன கண்கள்.

கண்ணைத் திறந்தபடி தூங்குவதுபோலவே இருந்தது.

இந்த நிம்மதிதானே நமக்கு வேண்டும் என்று
தாய்ப்பசு நினைத்தது.

அப்போதுதான் அது கண்ணில் பட்டது.

கன்றின் கழுத்தின் அருகில்
ஒரு கலயம் மின்னிக் கொண்டிருந்தது.

அதில் சொட்டுச் சொட்டாகச்
சேகரமாகிக் கொண்டிருந்தது செங்குருதி.

கன்று மயங்கிக் கொண்டிருந்தது.

கால்கள் மண் தரையில் எழுதிய இறுதி லிபிகள்
கண்ணிருப்போருக்கெல்லாம் புரியக்கூடியதுதான்.

அதிர்ச்சியில் உறைந்தது அம்மா பசு.

சற்று தொலைவில் இருந்த இரும்புக் கொக்கியில்
தோலுரிக்கப்பட்டுத் தொங்க விடப்பட்டிருந்தது
இன்னொரு குழந்தை.

குருதித் தாரை மெல்லிய ஓடையாக ஒழுகிக் கொண்டிருந்தது.

பதறியபடியே
திரும்பிப் பார்க்காமல் திரும்பியது.

ஆகம படிகளில் விழுந்து வணங்கி
ஆலயத்தினுள்ளே நுழைந்தது.

பஞ்ச முக வாத்தியங்கள் ஒலிக்க
பாலபிஷேகம் நடந்துகொண்டிருந்தது.

தாயின் மடி தானாகச் சுரக்க ஆரம்பித்தது.

*

அபிஷேகம் முடிந்த பின்னும் கற்சிலையில்
கண்ணுக்கு அருகில் இருந்து கசிந்தது-
கையறு நிலையில் இருக்கும் கடவுளின்
கையளவு கருணை.

கழுத்தறுபட்டுப் பீய்ச்சியடிக்கும் செங்குருதியைவிட
கலம் நிறையப் பீய்ச்சப்படும் வெண் குருதி மேலானதுதானே?

எந்தக் கயிறாலும் கட்டப்படாமல்
காட்டில் அலைந்து திரிந்த காலமும்
இருக்கத்தான் செய்தது.

ஆனால்,
வன விலங்குகளிடமிருந்து காத்தவர்களுக்கு
கறக்கக் கறக்கச் சுரப்பதில்
கலக்கம் கொள்ள எதுவும் இல்லை

வன விலங்குகள் இல்லா காட்டை
உருவாக்கத் தெரியாத கடவுள்
குழலூதி மேய்க்கும் கோ குலங்களையும்
கோசாலை கட்டிக் காக்கும் குலன்களையும்
உருவாக்கித் தந்தானே!

பாதாளத்தில் விழ வைத்தவன்
தாங்கிப் பிடிக்கும் தாய் மடிபோல
ததும்பத் ததும்ப நீர் நிலையை
தரையில் தவழ வைத்திருக்கிறானே!

தாயின் மடி தடையற்றுச் சுரக்கிறது…
அதில் நன்றி குமிழியிடுகிறது…
ஸ்நேகம் குமிழியிடுகிறது…
தாய்மை குமிழியிடுகிறது.

பஞ்ச முக வாத்தியத்தையும் மீறி ஒலிக்கிறது
பாங்கு ஒலி-
பக்கத்திலேயே வெகு பக்கத்திலேயே.

பசுத்தாய் திரும்பிப் பார்க்கிறாள்-
அவள் கண்ணில் இப்போது ஒளிர்வது தாய்மை அல்ல.

தாய் தன் தர்மத்தைத் தடையற்றுச் செய்கிறாள்…
மகவுகள் தம் தர்மத்தைச் செய்ய
எப்போது ஆரம்பிப்போம்?

$$$

Leave a comment