-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #65...

65. நாம் அந்தணர் ஆவோம்!
அந்தணர் ஆவதே நம்
ஆகப் பெரிய இலக்காக இருக்க வேண்டும்.
அவரவர் முன்னோர் வழியில்
அனுதினமும் நடப்போர் அனைவரும் அந்தணரே.
அவரவர் தொழிலில்
அறவழியில் சாதனைகள் செய்வோர் அனைவரும் அந்தணரே.
அறவாழி அந்தணர் சேர்ந்து வாழ
அந்தணச் சேரியாம் அக்ரஹாரம்
ஆலயங்களை மையமாகக்கொண்டு அமைய வேண்டும்
சிறப்பு ஆன்மிக மண்டலம்…
ஸ்பெஷல் ஸ்பிரிச்சுவல் ஜோன்…
அதி சிறந்த சனாதன மண்டலம்…
சர்வ ஸ்ரேஷ்ட சனாதன் மண்டல்…
பிறப்பு அல்ல;
குண கர்மங்களின் அடிப்படையில்
அவரவர் கருமங்களையே கட்டளைக் கல்லாகக் கொண்டு
அது அமைய வேண்டும்.
அறம்
பொருள்
இன்பம்
மோக்ஷம்
-என நான்கு வீதிகள்.
தீக்ஷை பெறும் அனைவருக்கும்
செய்யும் சத்தியத்தை/சங்கல்பத்தை
உடலில் உடனிருந்து நினைவூட்ட புனித நூல்.
அதிகாலைத் துயில் எழுதல்…
ஆற்றங்கரையில் ஸ்நானம்…
அரச மரத்தடியில் தியானம்…
நறுந் திலகம் தரித்தல்…
கர்ம சிரத்தையாக சமிதாதானம்,
காணாமல், கோணாமல், கண்டு சந்தியாவந்தனம்.
யாக, யக்ஞங்கள், பஸ்ம தாரணங்கள்..
தான தர்மங்கள்.
கோசாலைப் பராமரிப்பு (கன்று குடித்ததுபோகவே கறவை)
மூலிகைத் தோட்டம்,
வயல் வெளிகள், தோப்பு துரவுகள்…
வரும் முன் காக்க சித்த, ஆயுர்வேத மருத்துவம்,
வந்த பின் போக்க அலோபதி…
சமஸ்கிருதப் பாடம்…
வேத பாராயணம்…
வேதாந்த விசாரம்…
தாய்மொழி வழிக் கல்வி…
தர்ம போதனைகளே பாடம்…
மரபின் ஞானங்களை
அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லுதல்.
கோயில் ஓவியங்கள், சிலைகள், கலைகள்
கல்வெட்டுகள், ஸ்தல புராணங்கள், ஸ்தல விருட்சங்கள்
அத்தனையும் ஆகமப்படுத்துதல், ஆவணப்படுத்துதல்…
நவீன ஆலயங்கள் கட்டி
தாய்மொழிகளில் அர்ச்சனை,
அனைவருக்கும் கருவறைப் பிரவேசம்,
அபிஷேக அனுமதி செய்து தருதல்
நடிகைகளை தெய்வ தாசிகளாக்குதல்…
நல்லவர்களை தேவரின் அடியார் ஆக்குதல்…
அரசியலில் ஆன்மிகம்…
ஆன்மிகத்துக்காகவே அரசியல்…
அறவாழி அந்தணர் நூற்கும் அறத்துக்கு
ஆதியாக மன்னவன் செங்கோல்.
தொலைக்காட்சிகள், செல்போன்கள் கிடையாது…
குளிர்சாதனம், குளிர் பதனம் கிடையாது…
முழு வாழ்க்கையும் இதுபோல் வாழலாம்.
ஒரு வாரம், ஒரு மாதம் என
முழு வாழ்க்கைக்கான முன் பயிற்சிகளும் பெறலாம்.
மானுடராகப் பிறப்பது அரிது.
குறைவற்ற ஆயுள் பெறுதல் அரிதினும் அரிது.
அரிதினும் அரிதாகக் கிடைத்த வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள
அந்தணராகும் ஆர்வம் பெறுவதோ அதனினும் அரிது.
ஓர் இந்து இதைப் புரிந்துகொள்ள முடியும்
ஒரு பெளத்தர் இதை ஏற்றுக்கொள்ள முடியும்
ஒரு சமணர் இதை அனுசரிக்க முடியும்.
நேற்றைய இந்துவுக்கு இது தெரியும்…
நாளைய இந்துவுக்கும் இது தெரிய வேண்டும்.
ஏனென்றால்,
அறவாழி அந்தணர் ஆகாதார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் எப்போதும் அரிது.
$$$