உருவகங்களின் ஊர்வலம் -63

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #63...

61. அவதாரக் கடமை இன்னமும் முடியவில்லை….

நீ கொடுத்த வரத்தினால்
நீத்தார் கடன்களையெல்லாம்
நிறைவாகச் செய்து வருகிறோம்

நீ திரும்பிய நன்னாளை
நீங்காத செல்வம் நிறைந்தோங்கட்டும் என்று
வழியெல்லாம் ஒளி விளக்கு ஏற்றி
வரவேற்றுக் கொண்டாடுகிறோம்.

பூமிக்கு வந்த முன்னோர்கள்
பொன்னுலகம் திரும்பிச் செல்ல
இருள் வானம் முழுவதும்
மத்தாப்பு வழிகள் காட்டி
மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கிறோம்.

எம் பக்திக்கு
என்றைக்குத் தான் குறைவிருந்திருக்கிறது?

பைநாகப் பாய் விரித்து
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமா,
உன் அனந்த சயனமெல்லாம்
அரக்கவதம் முடித்தபின் செய்ய வேண்டியது அல்லவா?

நில மகளை மீட்ட பின் அல்லவா நீ
நின் ராஜ்ஜியம் திரும்ப வேண்டும்?

பூமிக்கு புது ரத்தம் பாய்ச்சி
புண்யாஜனம் செய்துவி ட்டல்லவா,
முன்னோர்களே நீங்கள்
உங்கள் புண்ய லோகம் மீள வேண்டும்?

தூண் பிளந்து வரும் அரை சிம்மமே
உங்கள் பக்தியில் உண்மை இருக்கிறதா என்று
காகிதச் சுவரை கிழித்தபடி வரும் விளம்பர மங்கை போல் கேட்டுவிட்டு
வெறுமனே திரும்பிச் செல்வது ஏன்?

தர்மத்தைக் காக்க எதையும் செய்வதில்லை
தத்தம் நலனைக் காக்கவே
எல்லாம் செய்கிறோம் என்ற கோபமா?

அத்தனை விரல்களிலும் கூர் நகங்கள் கொண்ட அரக்கக் கைகள்
உன் ஆலயங்களையும் சேர்த்தே சுற்றி வளைப்பது
உன் கண்ணில் படவில்லையா?

உன் தர்க்க நியாயங்களால்
அழிவுக்கு உள்ளாகப்போவது
உன் அவதார பூமி தானே?

ஒரு பக்கச் சிறகு ஒழுங்காக அடிக்காவிட்டால்
இரண்டுக்கும் சேர்த்து அல்லவா
மறு பக்கச் சிறகு துடிக்க வேண்டும்?

அரக்கர் கும்பல் கேட்கும் வரங்களையெல்லாம்
அள்ளிக் கொடுப்பதிலும் குறைவில்லை.

ஒரு அரக்கனையாவது கொன்று காட்டி
பக்தர்களின் உள்ளத்தில்
ஒரு தர்ம சிந்தனையையாவது உருவாக்கேன்.

அவதார நன்மைகள்
இருவழிப்பாதையாக இருக்கட்டுமே!

செல்லக் குழந்தை சேட்டைகள் செய்தால்
பொய்க் கோபம் காட்டி மிரட்டலாம்;
எக்கேடும் கெட்டுப் போ என்று
எட்டி உதைத்துவிட்டுச் செல்லலாமா?

எம்பெருமானே,
எம் பக்தியில் குறைவுபடும் உண்மையை
உம் கருணையின் மிகை கொண்டு பூர்த்தி செய்யுங்கள்.

சுயநல விளக்குகள் எழுப்பும் கரு நிழலின் அடியில்
பதுங்கியிருக்கின்றன அரக்க நாகங்கள்

தீப்பொறி பறக்கச் சீறி பாயட்டும் சுதர்சன சக்கரம்.

தானாகவே முன்வந்து
தர்மத்தைக் காக்கும் பொறுப்பு
உமக்கும் உண்டு தானே.

$$$

Leave a comment