-கருவாபுரிச் சிறுவன்
அண்மையில், மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை கம்யூனிஸ்ட் கழிசடை அமைப்பைச் சார்ந்த அற்பன் ஒருவன் கேவலமாக விமர்சித்துள்ளான். அவனுக்குப் புரியும் வகையில் நமது ஆன்மிக எழுத்தாளர் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதிய கட்டுரை இது….

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
-திருமூலதேவ நாயனார்
குரு என்பவர் ஒருவருக்கு இருளை அகற்றி ஒளியைத் தருபவர் என்றும், அறியாமையை நீக்கி புத்தொளியைப் பாய்ச்சுபவர் என்றும் இலகுவாக பொருள் கொள்ளலாம். ஆனால் இதற்கு முழுமையான அர்த்தம் யாராலும் இன்னது என கண்டுகொள்ள முடியாது.
இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குருவினுடைய ஆசிரமத்திற்குச் சென்று தங்கி சீடர்கள் கல்வி கற்கும் முறைக்கு ‘குருகுலக்கல்வி’ என்று பெயர்.
(தற்போது ஒரு பொது இடத்தில் மாணவர்களை ஒன்றாக வரவழைத்து கற்றறிந்தவர்களைக் கொண்டு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் முறைக்கு நவீனபள்ளிக்கல்வி என்று ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பெயர் வழக்கில் இருந்து வருகிறது )
தேசம், காலம், இடம் போன்றவற்றிற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு குருநாதர் உண்டு. அவர்களை குலகுரு என்பர். எல்லாப் பிரிவினரையும் சேர்த்தும், இந்த உலகத்திற்கும், அனைத்திற்குமான குரு ஒருவர் உண்டு அவரே சற்குரு, லோக குரு ஆவார் என்கிறது பழம் பெரும் நுாலான அபிதான சிந்தாமணி.
அந்த குருமார்கள் இப்பூவுலக மக்களுக்காக வசிக்கும் இடத்தினை ஆதினம் என்றும், மடாலயம் என்றும், குருபீடங்கள் என்றும் தொன்று தொட்டு அழைக்கிறோம். அந்த குருமார்களுக்கு என்று ஒரு பாரம்பரிய மரபு இருக்கிறது. அதனை ‘சந்தானப் பரம்பரை’ என்று அழைப்பர்.
இது வழிவழி வாரிசு அடிப்படையில் அமையாது. அவ்விடத்திற்கு யார் தகுதியானவர்களோ அவர்களுக்கு பல முறை அவர்களுக்கு தெரியாமலேயே சோதனை வைத்து அதில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களுக்கு அத்தலைவராகிய பதவி வழங்கப்படும்.
அந்த அடிப்படையில் தமிழகத்தில் மட்டுமல்லாது இப்பாரத தேசத்தில் ஒரு பழமையான ஆதினம் இருக்கிறது என்றால்… அது மதுரை ஆதினம் என்பதை அனைவரும் அறிவர்.
சைவ சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரும், தேவார ஆசிரியர்கள் மூவரில் ஒருவரும், மதுரை ஆதினத்தின் குரு முதல்வருமாகிய திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருநுால்கள் யாவும் ஒளி விளக்காய் சுடர் விட்டு பிரகாசித்து விளங்குகிறது என்பது, இலக்கியங்களைக் கற்றறிந்த பெரும்பான்மை தமிழ் ஆளுமைகளுக்கு நன்கு தெரியும்.
சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்
இனி எதிர்காலத்தின் சிறப்பும்
இன்று எழுந்தருளப் பெற்ற பேறிதனால்
எற்றைக்கும் திருவருளுடையேம்
நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ் வேந்தனும் உய்ந்து
வென்றி கொள் திருநீற்றொளியினில்
விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார்
-திருஞான சம்பந்த நாயனார் புராணம்
அன்னை மங்கையற்கரசியார், நின்ற சீர் நெடுமாற நாயனார், குலச்சிறை நாயனார் ஆகியோர் முன்னிலையில் சைவ சமயத்தை நிலைநிறுத்திய திருஞானசம்பந்தப் பெருமானால் தோற்றுவிக்கப்பெற்ற ஆதினம் மதுரை ஆதினம்.
இவ்வாதினத்தில் 293 வது குருமகாசன்னிதானமாக வீற்றிருப்பவர் லோக குரு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் ஆவார்கள்.
- இவர்கள் குன்றக்குடி ஆதினம், தருமை ஆதினம், திருவாவடுதுறை ஆதினம் ஆகியவற்றில் தம்பிரான் சுவாமிகளாக 40 ஆண்டுகள் சீரிய முறையில் திருத்தொண்டு புரிந்தவர்கள்.
- குறிப்பாக, கல்விக்கரையில்லா காஞ்சிமாநகரில் ஞானமாகிய அறிவின் கருவூல பொக்கிஷமாக விளங்கும் பிள்ளையார்பாளையம் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் பிரான் அதிஷ்டானத்தினைப் பராமரித்து பல ஆண்டுகள் அங்கு நித்திய வழிபாடு இயற்றியவர்கள்.
- தென்தமிழக சைவ சித்தாந்தக் கோட்டையின் நுழைவாயில் என்னும் சிறப்பு பெயரினைப் பெற்ற சங்கரன்கோவில் மாநகரில் குடிகொண்டு விளங்கும் திருவாவடுதுறை ஆதினத்தின் பத்தாவது குருமகா சன்னிதானம் வேலப்ப தேசிகரின் திருமூர்த்தத்திற்கு புரட்டாசி – மூலத்தன்று ஆண்டு தோறும் வழிபாடு இயற்றிய நியமத்தினை உடையவர்கள்.
- சைவத்தின் மீதும் தமிழின் மீதும் அளப்பரிய பற்று கொண்டவர்கள். இச்சுவாமிகளின் வாழ்வியலில் எங்கு பார்த்தாலும் ஞானம் – அறிவு – ஞானம் – அறிவு ஞானம் – அறிவு – ஞானம் – அறிவு தான் வெளிப்பட்டு நிற்கும்.
- இவருக்கு முன்பிருந்த இரு பெரும் ஆதின குரு முதல்வர்கள் நிகழ்த்திய நிகழ்வுகளை இங்கு கோடிட்டுக் காட்டுவது இச்சிந்தனைக்கு பொருத்தமாக இருக்கும்.
- வழி தவறி மாற்று மதம் சென்று அல்லல் பட்ட ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு 291 வது குருமகா சன்னிதானம் தன் கடைக்கண் பார்வையினால் ‘அருளளிப்பு’ என்னும் தீட்சை வழங்கி தாய் மதம் திரும்பச் செய்த ஞான தீரர் ஆவார்கள்.
- குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களால் மண்டைக்காட்டில் ஏற்பட்ட பிரச்னையை எப்படி சமாளிப்பது என அன்றைய தமிழக அரசு யோசித்த தருணங்களில் தவத்திரு குன்றக்குடி அடிகளார், 292 வது குருமகா சன்னிதானம் ஆகியோர் தாமே முன்னுவந்து சென்று அங்குள்ள மக்களை ஆற்றுப்படுத்தினார் என்பது வரலாற்று நிகழ்வு.
- தனக்கு முன்பிருந்த குருமுதல்வர்கள் பணிக்கும், தனக்கேயுரிய தெய்வீகத் திருப்பணிக்கும் மெருகூட்டி தற்போது செயல்வடிவம் கொடுத்து வருபவர், தற்போதைய, 293 வது குருமகா சன்னிதானம் மதுரை ஆதினம் அவர்கள்.
இந்த அடிப்படையில் ஆதின குருமார்களின் உயர்ஞானம் – அன்பு – கருணை – தாய் மதம் திருப்புதல் – தேசப்பற்று – தெய்வீகத் திருப்பணிகளை அவர்களது மனம் மொழி மெய்களால் ஒருங்கிணைத்து செய்கிறார்கள் என்பதை மக்கள் அறிந்து, தெரிந்து, உணர்ந்து வருகிறார்கள்.
மேலும் ஹிந்து சமய மக்கள் யாவரும் நன்கு யோசிக்கத் தொடங்கியுள்ளார்கள்; விழிப்படைந்து வருகிறார்கள்; போலி நாத்தீகம் மண்ணைக் கௌவுகிறது; சுயநலஅரசியல்வாதிகள் தன் மதிப்பை இழக்கிறார்கள் என்பது கண்கூடு.
இதிலிருந்து மக்களின் சிந்தனையை திசை திருப்பவே ஹிந்து மதத்தினை பழித்தல், ஹிந்து வழிபாடுகளை அவமதித்தல், ஹிந்துக்களின் புனித நூற்களை இழிவு படுத்துதல், ஹிந்து மதத் தலைவர்களுக்கு களங்கங்களை ஏற்படுத்துதல்… போன்ற செயல்களை மதச்சார்பற்ற அரசு என்ற பெயரில் ஆளும் அரசிற்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக வரிசையாக செய்து வருகிறது ஒரு அற்பர் கூட்டம்.
‘பூஜை’ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். வில்லன் அல்லக்கை அடியாளிடம் ‘தர்ம கர்த்தா பதவி ஏற்க வருபவரை அனைவர் முன்னிலையிலும் தரக்குறைவாக அவமானப்படுத்து. அவர் அந்தப் பக்கமே வர மாட்டார்’ எனச் சொல்லுவார். இப்படக்காட்சியினைப் போல விஷமத்தனங்களை சிலர் கையாளுகிறார்கள். இதற்கெல்லாம் பதிலடியாக, ஹிந்து மதப் பற்றுக்கொண்ட இளம் சிறார்களே அந்நிலையை தோலுரித்துக் காட்டுகிறார்கள் என்பதை சமூக வலை தளம் வாயிலாக காண முடிகிறது. இவர்கள் எல்லாம் என்ன எம்மாத்திரம்…
நற்பண்புகளில் ஒன்று ஆதங்கம்
தன் மக்களின் தீவினையை நினைத்து வருத்தப்பட வேண்டும். நல்வினையை நினைத்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவனே! நல்ல தலைவனாக இருக்க முடியும் என்பார் சுவாமி விவேகானந்தர்.
அந்த பொன்மொழிக்கு ஏற்ப வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலைக்கு மரியாதை செய்து விட்டு பேட்டி அளித்துள்ளார் மதுரை ஆதினம் 293வது குருமகா சன்னிதானம் அவர்கள்.
நிருபர்களுக்கு பேட்டி அளித்த விபரம் அப்படியே… அக்.17., 2024 தேதியிட்ட தினமலர் நாளிதழில் 5 ஆம் பக்கத்தில் இருந்து…
இளைஞரிடம் பக்தி குறைவால் பருவம் தவறுகிறது மழை -மதுரை ஆதினம் ஆதங்கம் இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதால் தான் பருவம் தவறிய மழை தமிழகத்தில் பொழிகிறது என மதுரை ஆதினம் ஆதங்கப்பட்டார். மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் அவர் கூறியதாவது: இன்றைய தலைமுறை சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். தொடர்நது இளைஞர்களுக்கு அரசு விடுதலை போராட்ட தியாகிகளை நினைவு கூரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மதுரை ஆதினம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அவர்கள் இல்லை என்றால் இன்று நான் இல்லை. தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம். கோயில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதுதில்லை இவ்வாறு கூறினார்.
எப்போதுமே மதுரை ஆதினம் அவர்கள் பக்தர்களிடையே வேடிக்கையாகவும் விவேகமாகவும் அதே சமயத்தில் சிந்திக்கக் கூடிய வகையிலும் பேசக் கூடியவர்கள் என்பதை அவர்களின் பேச்சினை தொடர்ந்து கேட்டவர்களுக்கு கேட்பவர்களுக்கு அது நன்கு புரியும்.
எட்டாண்டுகளுக்கு முன்பு 2016 ஆம் ஆண்டு புரட்டாசி – மூல நட்சத்திர நாளில் இன்றைய மதுரை ஆதினமாகிய சுந்தர மூர்த்தி தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சங்கரன் கோயில் சற்குரு வேலப்ப தேசிகர் சன்னிதியில் கோமதி அம்பிகை பிள்ளைத்தமிழ் உரையுடன் கூடிய நுால் வெளியீட்டு விழா. உரையாசிரியர் கீழவயலி மொட்டயசாமி, எங்கள் மகாராஜா வரதுங்க ராம பாண்டியரின் மார்கழி சதுர்த்தசி திரு விழாவினை நடாத்தும் ஐயா திரு. கதிர்காமம் அவர்கள், அன்புச் சகோதரர்கள் பலரும் உடனிருந்து உற்சாகமூட்டிய தருணம் அது.
அந்நாளில் அன்பர்களுக்கு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் சன்னிதி வளாகத்தில் ஆசி வழங்கி திருநீறு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வரிசையில் நின்றிருந்த அடியேனின் கால் சற்று இடறவே , எப்படி தெரிந்ததோ தெரியவில்லை ‘தமிழைத் தாங்கிப் பிடியுங்கள்’ என்றார்கள். அவ்வார்த்தை இன்றும் பசுமையாக நிழலாடுகிறது. இப்படி எத்தனை அன்பர்களுக்கு ஞான உபதேசம் செய்து இருப்பார்கள் என்பது அந்த மதுரை ஆதின குரு முதல்வர் திருஞானசம்பந்த நாயனாரே அறிவார். ஆக, ஞானத்தின் உச்சம், அறிவின் வெளிப்பாடு, உயர் கருத்தின் உச்சபட்சமாகத் திகழ்பவர்கள் தான் இன்றைய மதுரை ஆதினம் லோக குரு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் அவர்கள்.
பாரதி மூட்டிய தீ பரவட்டும்
பாதகம் செய்பவரைக் கண்டால் - நாம் பயங் கொளலாகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
எனப் பாடிய பாரதியார், ‘நன்மை வந்தெய்துக, தீதெலாம் நலிக, அறம் வளர்த்திடுக, மறமடிவுறுக’ என்று தீதுகள், அதர்மம் மடியவும், வாழ்த்துக் கூறுகிறார்.
தீயவர்கள், கெட்டவர்கள், பாதகர்கள், சமூகத்திற்கு எதிரானவர்கள், கொடுங்கோலர்கள், கொடுமைக்காரர்கள், தேசவிரோதிகள் யாவருக்கும் அஞ்சாமல் அவர்களை எதிர்த்துப் போராடி அத்தீய சக்திகளை மாய்க்க வேண்டும் என்பதை பாரதியார் வலியுறுத்துகிறார். இவ்வாசகங்களை மனதில் இருத்திக் கொண்டு மீண்டும் இச்சிந்தனையில் தொடர்வது சிறப்பாகும்
திசை திருப்பும் திமிர்ப்பேச்சு
இலக்கிய முரண் இயற்கையில் இயல்பானது. செயற்கையின் மானுடன் வகுக்கும் முரண் திமிரானது. ஆராய்பவருக்கு அது தெரியும்.
ஒருவருக்கு பெயர் கண்ணாயிரம் என்று இருக்கும். ஆனால் அவருக்கு இளமையில் இருந்தே கண் பார்வை இருக்காது.
கோடீஸ்வரன் என்று பெயர் இருக்கும் ஆனால் அவர் பிச்சைக்காரராக இருப்பார்.
மதியழகன் என்று பெயர் இருக்கும்; அவர் முட்டாளாக இருப்பார். இன்னும் இது போன்ற உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இருக்கட்டும்.
மதுரை ஆதினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியினை ‘ஆதவன் தீட்சண்யா’ என்பவர் முழுமையாக கவனித்தாரா, படித்தாரா… பார்த்தாரா… அல்லது ஒருவர் சொல்லக் கேட்டாரா… என தெரியவில்லை. அதற்கு தன்னுடைய முரணான பதிவினை கீழ்கண்டவாறு சமூக வலைதளத்தில் (முகநூல்) பதிவு செய்துள்ளார்.
அது அப்படியே இங்கே கீழே…
மக்களிடையே பக்தி குறைந்ததே திடீர் கனமழைக்கு காரணம் -மதுரை ஆதினம் இவ்வளவு அறிவுடன் பேசுவதற்கு எதைத் தின்பாரோ வயித்துக்கு -ஆதவன் தீட்சண்யா
நல்லொழுக்கம் உடையவர்கள் இப்படி பேச மாட்டார்கள். அப்படியானால் இவர் எப்படிப் பட்டவர் என்பதை இவருடைய பதிவே வெளிச்சமிட்டு காட்டுகிறது.
இந்த அநாகரிகர் தான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராம். (இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலைப் பிரிவு) இவரது யோக்கியதையே, இவர் சார்ந்த சங்கத்தின் தரத்தைக் காட்டுகிறது!
ஆதினம் கூறிய பேட்டியில் தேடிக் கண்டுபிடித்து வேண்டுமென்றே இட்டுக்கட்டி குறை கண்டு பிடிக்கவே இவ்வளவு நாளாகி இருக்கிறது என்றால், உமக்கு இப்போது தான் நீங்கள் எதிர்பார்க்கும் அறிவு வந்ததா… என்பதில் ஆச்சரியம் தான்.
இவரது பெயருக்கும், அதன் பொருளுக்கும் ஏற்றாற் போல நடந்து கொள்ளவில்லை என்பதையே இப்பதிவு காட்டுகிறது. (இவரது தலைமையை இப்படி யாராவது சொன்னால்…?)
வயதில் மூத்தவர்களிடம் பேசும் போதோ, அவர்களுடைய கருத்தை மறுக்கும் போதோ இப்படித்தான் பேச வேண்டும் என இவர் படித்த பள்ளி, கல்லுாரிகளில் சொல்லிக் கொடுத்தார்கள் போலும்.
தேச நலனின் மீது அக்கறை கொண்ட அன்றைய பெரியவர்களின் பெயரை வைத்து பிழைப்பை நடத்தும் இவர் இதே போல மாற்று மத, இனத் தலைவர்களுடைய கருத்துக்களுக்கும் பதிலடி கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
விண்ணப்பமும் வேண்டுகோளும்
ஆதினத் தலைவர்கள், ஆதின அணுக்கைத் தொண்டர்கள், ஆதின ஆலோசகர்கள், ஆதின நலம்விரும்பிகள், மற்றும் ஆதின உண்மைப் பணியாளர்கள், ஆதின வழக்கறிஞர்கள் ஆகியோரின் கனிவான கவனத்திற்கு…
இது போன்று ஈனத்தனமான பேச்சுகளை உதிர்க்கும் தரம் தாழ்ந்தவர்களிடம் இருந்து ஒதுங்கி செல்வதையும், காதில் வாங்கிக் கொள்ளாமல் நம் பணியை நாம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
இருப்பினும், அறம் காக்கும் நீதியரசர்களின் கனிவான கவனத்திற்கு தமிழகத்திலுள்ள ஆதினங்களின் பெருமையை அருமையைக் கொண்டு சென்று… முறைப்படி பொது நல வழக்கு ஒன்றினைப் பதிவு செய்யுங்கள்.
அவரவர்களுக்குரிய அடிப்படை மரியாதையைக் கொடுக்க, இந்த ஆநாகரிகனின் பேச்சை ஆவனப் படுத்துங்கள்.
ஆதினத்தின் தொன்மை, மடாலயத்தின் மகிமை , பீடாதிபதிகளின் பெருமை, குருமகா சன்னிதானங்களின் கருணை நோக்கு ஆகியவற்றை அறிந்துணர்ந்து போற்றப்பட வேண்டியவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அரணை அரசு வழங்க வேண்டும் என்பதை இவ்விடத்தில் விண்ணப்பமாகவும், வேண்டுகோளாகவும் வைக்கிறோம்.
ஹிந்து மதத் தலைவர்களின் கருத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராகப் பேசுவோர், நாகரிகத்துடனும், ஆதாரத்துடனும் பேசுவது நல்லது. பேச்சுக்களில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் நியாயமான முறையில் முறையீடு செய்யுங்கள். தங்களுக்கு தகுந்த பதில் கிடைக்கும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஹிந்துக்களுக்குரிய பாதுகாப்புச் சட்டம் ஏட்டளவிலேயே உள்ளது. அதனை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்வோமாக.
தமிழகத்தில்…பாரம்பரியமே இல்லாதவர்கள் பூரணப் பாதுகாப்போடு இருக்கும் போது, தொன்றுதொட்டு இத்தேசத்தில் நீண்ட நெடிய பாரம்பரியத்தை உடைய அருளாளர்கள் அணியில் இம்மாநிலத்தில் வாழும் மாந்தர்கள் நலனில் அக்கறை செலுத்தி ஆதங்கப்படும் மதுரை ஆதின கர்த்தா 293 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் உட்பட தமிழகத்திலுள்ள ஒட்டு மொத்த சைவ வைணவ ஆதின தலைவர்களை அவ்வப்போது தரக்குறைவாக இழித்தும் பழித்தும் பேசும் அடிப்படை சமயறிவு இல்லாதவர்களை தன்னகதே கொண்ட மாநிலமாக இத்தமிழகம் உள்ளது.
யாருக்கு வெட்கக்கேடு என்பதை சிந்தித்து உணர்க…
நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை கடந்தும் இன்னும் போலி முற்போக்கு திடல் தற்குறிகள், பெண்ணடிமை, சமூகநீதி, ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுதல் என்ற வசனங்களைக் கொண்டு இம்மண்ணில் உலா வருகிறார்கள்.
அவர்கள் யாராக இருந்தாலும் உண்மையாக உழையுங்கள். உயர்வு அடைவீர்கள். அடுத்தவரை, அடுத்த மதத்தை, அடுத்த சமூகத்தின் மீதுள்ள கொள்கைகளை , பழக்க வழக்கங்களை சிதைக்க முற்படாதீர்கள். காலம் சின்னபின்னமாக்கி விடும் இது நிதர்சனமான உண்மை.
குருவினை இகழாதீர்! தெருவில் நிர்கதியற்று நிற்பீர்…
வந்தே மாதரம்
வாழ்க பாரதம்! வளர்க பாரத மணித்திருநாடு!
$$$