-கருவாபுரிச் சிறுவன்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை விரைவில் (அக். 30) நிகழ உள்ள நிலையில், அவரையும், சுவாமி விவேகானந்தரையும் ஒப்பிட்டு திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரையின் இறுதிப்பகுதி இது...

ஆண்மை உருக்கொண்ட அந்தணன் – எங்கள்
அண்ணல் விவேகா னந்தனின்
மாண்பை அளந்திட எண்ணினால் – இந்த
மண்ணையும் விண்ணையும் பண்ணலாம்.
காமனைப் போன்ற அழகினான் – பொல்லாக்
காமத்தை வென்று பழகினான்;
சோமனைப் போலக் குளிர்ந்தவன் – ஞான
சூரியன் போலக் கிளர்ந்தவன்.
வீரத் துறவறம் நாட்டினான் – திண்ணை
வீணர்வே தாந்தத்தை ஓட்டினான்.
தீரச் செயல்களை நாடினான் – இந்தத்
தேச நிலைகண்டு வாடினான்.
கர்மத் தவநெறி காட்டினான் – நல்ல
காரியம் வீரியம் ஊட்டினான்;
பெண்ணின் பெருமையைப் போற்றினான் – ஆண்கள்
பேடித் தனங்களைத் தூற்றினான்.
மண்ணின் சுகங்களை விட்டவன் – ஏழை
மக்களுக் காய்க்கண்ணீர் கொட்டினான்.
-நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை
சுவாமி விவேகானந்தரும் பசும்பொன் தேவர் பிரானும்
- சுவாமி விவேகானந்தர் அவர்கள் 1902இல் மறைகிறார்கள். பசும்பொன் தேவரவர்கள் 1908இல் பிறக்கிறார்கள்.
- இந்த பாரத தேசத்தின் வடகிழக்கு கடற்கரையில் சுவாமி விவேகானந்தர் அவர்கள் தோன்றினார். இந்த பாரத தேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் பசும்பொன் தேவரவர்கள் தோன்றினார்.
- (இருவருமே கிழக்கு கடற்கரையில் தோன்றுகிறார்கள். கிழக்கே தான் சூரிய பகவான் வீறு கொண்டு உதயமாவார். அவர் ஒரு நாள் உதிக்கவில்லையெனில் இந்த உலகம் ஸ்தம்பித்து விடும். இன்றும் இந்த இரு ஞானச்சூரியர்களின் பெயரை தேசியவாதிகளும், சனாதன தர்மவாதிகளாலும் மனச்சாட்சிப்படி நித்தியம் அனுசந்தானம் செய்து கொள்வர்)
- சுவாமி விவேகானந்தர் அவர்கள் வங்கத்தில் விவேகமுள்ள பிராமணர் குலத்தில் பிறக்கிறார். பசும்பொன் தேவரவர்கள் தமிழகத்தில் வீரமுள்ள மறவர் குலம் தோன்றுகிறார்.
- *சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இளம் வயதில் விவேகானந்தர் அவர்களால் பாராட்டுப் பெற்றவர். தன் முதுமைக்காலத்தில் சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார் பசும்பொன் தேவரவர்களைப் பாராட்டுகிறார்.
- காணும் பெண்களை அன்னையாக பாவித்தார் சுவாமி விவேகானந்தர் அவர்கள். பார்க்கும் பெண்களை எல்லாம் பராசக்தியாக சேவித்தார் பசும்பொன் தேவரவர்கள்
- சுவாமி விவேகானந்தர் அவர்களும், பசும்பொன் தேவரவர்களும் மண்ணாசை, பொன்னாசை, பொருளாசை மூன்றுமில்லாத தெய்வ வாழ்க்கை வாழ்ந்தவர்கள் .
- சுவாமி விவேகானந்தர் அவர்கள் எப்போதும் தன் தலைப்பாகையை நீக்கியதே இல்லை. பசும்பொன் தேவரவர்களும் தன் சிகை முடியை இறக்கியதே இல்லை.
- சுவாமி விவேகானந்தர் அவர்கள் தன் வாழ்நாளில் இயற்கை வைத்தியத்தைத் தவிர செயற்கை வைத்தியம் கூட செய்து கொண்டதில்லை. பசும்பொன் தேவரவர்கள் இயற்கை வைத்தியம், ஆயுர் வேதத்தைக்கூட ஏற்றுக் கொண்டதில்லை
- ‘மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவை’ என்றார் சுவாமி விவேகானந்தர் அவர்கள். ‘தேசியம் என் உடல்; தெய்விகம் என் உயிர்’ என்றார் பசும்பொன் தேவரவர்கள்
- சுவாமி விவேகானந்தர் அவர்கள். வேதாந்தி, காவியாடைத் துறவி; பசும்பொன் தேவரவர்கள் சித்தாந்தி, வெள்ளாடைத் துறவி.
- தன் வாழ்நாளில் முக்கால் பாகத்தை ஹிந்து மதத்திற்காக செலவிட்டார் சுவாமி விவேகானந்தர் அவர்கள். தன் வாழ்நாளில் முக்கால் பாகத்தை ஹிந்து தேச விடுதலைக்காகச் செலவிட்டார் பசும்பொன் தேவரவர்கள்.
- இந்திய ஹிந்து மதப் பெருமையை எழுதா கிளவியாகிய வேதங்கள் மூலம் இவ்வுலகிற்கு எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர் அவர்கள். தமிழக ஹிந்து மதத்தின் அருமை பெருமையை, எழுதிய மறையாகிய திருக்குறள் மூலம் இப்பாரறியச் செய்தார் பசும்பொன் தேவரவர்கள்.

- ஹிந்து மதத்தின் பெருமைகளை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தது மட்டும் அல்லாது அங்கு முதன்முதலில் பிள்ளையார் கோயில் உண்டாக காரண கர்த்தாவானவர் சுவாமி விவேகானந்தர் அவர்கள். சித்தாந்த ஞான நெறிகளை கடைப்பிடித்ததோடு மட்டும் அல்லாது முதன் முதலில் தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயப்பிரவேசம் செய்ய வைத்த காரிய கர்த்தாவானவர் பசும்பொன்தேவர் அவர்கள்.
- ஹிந்து மதத்தின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் சுவாமி விவேகானந்தர் அவர்கள் காரணம். ஹிந்து ஆலயங்கள், ஆஸ்திகர்களின் வளர்ச்சிக்கும், நாஸ்திகர்களின் வீழ்ச்சிக்கும் பசும்பொன் தேவரவர்கள் முதற்காரணம்
- சுவாமி விவேகானந்தர் அவர்கள் எந்த இடத்திலும் யார் முன்னிலை வகித்தாலும் அவர்கள் முன் ஹிந்து மதம் பற்றி பேசாமல் இருந்தாதே இல்லை. பசும்பொன் தேவரவர்கள் எந்த இடத்திலும், யாராக இருந்தாலும் ஹிந்து மத்தினை பற்றி இழிவாகப் பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்காமல் இருந்ததே இல்லை.
- சுவாமி விவேகானந்தர் அவர்கள் சொற்பொழிவுகளில் கிணற்றுத்தவளை, குளத்துத்தவளை, ஆற்றுத்தவளையை மேற்கோள் காட்டி பிற மதத்தினருக்கும் ஹிந்து மதத்தினருக்கும் கடல் தவளையை உதாரணம் காட்டுவார்கள். அதே போல கிணற்று ஆமை, குளத்து ஆமை, ஆற்று ஆமைக்கு மாற்று மதத்தவருக்குக் கூறிவிட்டு கடல் ஆமைக்கு நிகரானவர் ஹிந்து சமயத்தினர் என்பார் பசும்பொன் தேவரவர்கள்.
- அமெரிக்காவின் சிகாகோவில் ஆற்றிய சொற்பொழிவில் புனித வார்த்தைகளை சுவாமி விவேகானந்தர் கையாண்டதால் உலகம் முழுவதும் பரவியுள்ள ஆங்கிலம் புனிதம் அடைந்தது என்றார்கள் அமெரிக்கர்கள். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தேவர்பிரானின் பேச்சைக் கேட்ட சி.பி. ராமசாமி ஐயர் அவர்கள் ‘உலகை ஆளும் ஆங்கில மொழியை பசும்பொன் சிங்கம் மூன்று மணி நேரம் அடக்கியாண்டு விட்டது’ என புளங்காகிதம் அடைந்தார்.
- வங்கத்தில் பிறந்த சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மீது மாறாத நட்பு. ராமநாதபுரத்தில் பிறந்த தேவர்பிரானுக்கு வங்கத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் மீது ஆராத பக்தி.
- சுவாமி தன் விருப்பம் போல தன் உடலை விட்டு சமாதி நிலையை அமைத்துக் கொண்டார். தேவர்பிரானும் தன் விருப்பம் போல் பிறந்த நாள், உதிர்ந்த நாளை ஒன்றாக்கிக் கொண்டார்
- ஹிந்து மதத் தலைவர்கள், பிற மதத் தலைவர்களாலும் பாராட்டப் பெற்றவர் சுவாமி விவேகானந்தர் அவர்கள். தேசியவாதிகள், அறிஞர்கள், சர்வமதத் தெய்வப்பணியாளர்கள், துறவிகள், தமிழ்புலவர்களாலும் பாராட்டப் பெற்றவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள்.
- உலக மக்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் அமைதிக்காகவும் உழைத்தார் சுவாமி விவேகானந்தர் அவர்கள். உலக மக்களின் அமைதி, நாட்டின் விடுதலைக்காகவும் உலக நாடுகளின் ஒற்றுமைக்காகவும் உழைத்தார் தேவரவர்கள்.
- வங்கத்தில் பிறந்த சுவாமி விவேகானந்தருக்கு பாரதத்தாயின் திருவடியில் நினைவாலயம் (கன்னியாகுமரி). ராமநாதபுரம் சீமையில் பிறந்த தேவர் பிரானுக்கு பாரதத்தாயின் திருமுடியில் புகழாலயம் (சிவானந்தர் ஆசிரமம்).
ஏழையின் துன்பங்கள் போக்கவும் – அவற்(கு)
எண்ணும் எழுத்தறி வாக்கவும்
ஊழியம் செய்வதே ஒன்றுதான் – தேவை
உண்மைத் துறவறம் என்றுளாம்.
தேசத் திருப்பணி ஒன்றையே – உண்மை
தெய்வத் திருப்பணி என்றவன்;
தெள்ளிய ஞானத்தைப் போதித்தான் – அவர்
திடுக்கிட உண்மைகள் சாதித்தான்.
சத்திய வாழ்க்கையைப் பேசினான் – அருள்
சாந்தத் தவக்கனல் வீசினான்.
-நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை
நிறைவாக…
இருவரிடமும் வசீகரத் திருவதனம், எழிலார்ந்த உடலமைப்பு, இவர்களது சொற்பொழிவுகளை உற்று நோக்கும் போது அதில் கருணை, அன்பு, தயை, வீரம், விவேகம், நேர்மை, அதிலும் ஒரு ஒழுங்கு, எடுத்துக் கொண்ட தலைப்புகளில் மேற்கோள் கொடுத்து தன் முன்னோர்கள் வழியைப் பின்பற்ற வேண்டும் என கூறும் பாங்கு, எதிரிக்கும் துரோகிக்கும் தக்க பதிலடி போன்ற நவரசமுடைய சிறப்பம்சங்களைக் காணலாம்.
தேவர்பிரான் அவர்கள் “சுவாமி விவேகானந்தரைப் போல வாழுங்கள்! ராமகிருஷ்ண பரமஹம்சர் நெறிமுறைகளைக் கடைப்பிடியுங்கள்! சாரதா தேவியாரின் நல்வழியைப் பின்பற்றுங்கள்! காளி தேவிக்கு வணக்கம் செலுத்துங்கள்!” என்று முன்ஜென்ம நினைவுகளைப் போல அவ்வப்போது தொட்டுப் பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமி விவேகானந்தர், பசும்பொன் தேவரவர்களின் திருநாமம், புகழ் வாழ்க. இருவரின் உத்தம வாக்கும் எங்கும் பரவுக. அதன்படி வாழ்ந்து காட்டுவோர்கள் இவ்வுலக வெளிச்சத்திற்கு வருக. இவ்வுலகிற்கு நிலையான, நல்லாட்சி தருக.
தேசியத்திற்குள் தெய்விகம் அடக்கம்… அந்த தெய்விகத்திற்குள் தேசியம் ஒடுக்கம்.
தேசியத்திற்குள் தெய்விகம் ஒடுக்கம்… இந்த தெய்விகத்திற்குள் தேசியம் அடக்கம்.
மேற்கண்ட வரிகளுக்கு இலக்கணமாகவும், இலக்கியமாகவும் வாழ்ந்தவர்கள் வீரத்துறவி விவேகானந்தரும், பசும்பொன் தேவரவர்களும் ஆவார்கள்.
அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு, அந்நியக் கைக்கூலிகளிடம் இருந்து ஹிந்து மதத்தைக் காப்பதும், இந்திய இறையாண்மையைப் போற்றுவதும் தான். இதுவே ஒவ்வொரு ஹிந்துக் குடிமகனின் தலையாய உண்மையான முக்கிய கடமையாகும்.
அதே நேரத்தில் நம்முடனே இருந்து நம்மிடமே வளர்ந்து நமது தேசத்தை,நமது சமூகத்தை வேரறுக்க நினைப்பவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டி சாத்விக நெறிமுறைகளில், ஹிந்து மதத்தின் ஒப்பற்ற பெருமைகளையும் அருமைகளையும் நம்முடைய செயலால் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதை இந்த நாளில் நம் எடுத்துக் கொள்ளும் உத்தமமான உறுதிமொழியாக இருக்கும்.
நமது வரதுங்க ராம பாண்டிய மன்னர் பிரானின் திருக்கருவை அந்தாதிகளை முதன்முதலில் இவ்வுலகிற்கு குட்டித் திருவாசகம் என்று பிரகடனப்படுத்திய கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகள் நம் தரணியையும், கவிஞர் கண்ணதாசன் பரம்பொருளையும் போற்றியுள்ள பாடல்கள் பல. அவற்றில் இருந்து சில பகுதிகளைப் பாடி இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக.
வேதம் திகழும் தமிழ்நாடு மிக்க மேன்மை யுடைய தமிழ்நாடு! பாதங்க ணாலும் தருமுயர் ஆகமம் பண்புடன் ஓங்கும் தமிழ்நாடு! மன்னிடும் சைவ சமயம் வளரவே பன் முனிவோர்கள் வரும் நாடு! மின்னும் சிவமணம் வீசிக்கதித் தென்றும் மேலாய் விளங்கும் தமிழ்நாடு! விவேகா னந்தன் மகாமுனி சென்றுமே மேனாட்டிற் தன் கொடி நாட்டச் செவே போகவிடை தந்த நம் பாற்கர சேதுபதி வளர் நன்னாடு! சித்தர்கள் வாழும் தமிழ்நாடு இட்ட சித்திகள் காட்டும் தமிழ்நாடு! பக்தர்கள் வாழும் தமிழ்நாடு கலைப் பாக்கியம் ஓங்கும் தமிழ்நாடு! வாழிய வாழிய தென்னாடு தினம் மங்களம் ஓங்கும் தமிழ்நாடு! வாழிய வாழிய இன்னாடு புகழ் மல்கும் திருத்தமிழ் நாடிதுவே!
***
ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், ஒன்றானவன் உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன், நன்றான வேதத்தில் நான்கானவன், நமச்சிவாய என ஐந்தானவன், இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன், இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன், தித்திக்கும் நவரச வித்தானவன், தித்திக்கும் நவரச வித்தானவன், பத்தானவன் நெஞ்சில் பற்றானவன், பன்னிரு கை வேலவனை பெற்றானவன், முற்றாதவன் மூல முதலானவன், முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன், முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன், ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன், அவையொன்று தானென்று சொன்னானவன், ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன், அவையொன்று தானென்று சொன்னானவன், தான் பாதி உமை பாதி கொண்டானவன், சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன், காற்றானவன் ஒளியானவன், நீரானவன் நெருப்பானவன், நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான ஊற்றாகி நின்றானவன், அன்பில் ஒளியாகி நின்றானவன்!
திருச்சிற்றம்பலம்!
வாழ்க பாரதம்! வளர்க நம் தாய்த்திருநாடு!
(நிறைவு)
$$$