-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #60...

60. சீரிளமைத் திறம்…
வையம் ஓர் அழகிய பெண்ணாக இருந்தது.
வான்புகழ் கொண்ட நம் பாரத தேசம்
அதன் அழகிய வதனமாக இருந்தது.
அழகிய வதனத்தின் வளர் பிறை நெற்றியாக
ஆகம தர்மம் செழித்த தக்ஷிணம் திகழ்ந்தது.
அதில் நறுமணம் வீசும் திலகமாக ஒளிர்ந்தது
நம் நற்றமிழ் பூமி.
வழக்கொழிந்து அழியாத ஆரியம்போல
சீரிளமையுடன் திகழ்ந்தாள் நம் தமிழன்னை.
*
திலகம் போல் திகழ்ந்த
நம் மாநிலத்தில் இருந்துதான்,
நெற்றியில் வழிவது ரத்தமா என்றான்
ஆட்டுக்கண்ணன் ஒருவன்.
என்றைக்கு அவன் அப்படிக் கேட்டுவிட்டு சென்றானோ
அன்றிலிருந்து அந்தத் திலகம்
அழியத் தொடங்கிவிட்டது.
அழகிய தேச வதனத்தில்
திலகம் இருந்த இடத்தில்
இன்று இருப்பது ஸ்டிக்கர் பொட்டு.
அதில் நறுமணம் இல்லை.
ஒவ்வொரு முறை குளித்த பின்னும்
ஒரே பொட்டையே திரும்பத் திரும்ப ஒட்டிக்கொள்வதால்
முடை நாற்றமே அடிக்கிறது.
அதில் ஒளி இல்லை.
எரிமலை வெப்பம்போல சுட்டெரிப்பதால்
சுந்தர வதனத்தில் சுருக்கங்கள் விழுந்து
சீரிளமை குன்றத் தொடங்கிவிட்டது.
திலகத்தை அழிப்பவன்
திலகவதியின் மகனாக எப்படி இருக்க முடியும்?
அவன் ஆளும் மாநிலத்தில்
ஆதித் தாய் எப்படி இருப்பாள்?
திலகம் தரித்தவரெல்லாம் தமிழரல்ல.
ஆனால்-
திலகம் தரிக்காதவர் எவரும் தமிழரல்ல என்று
பாழ் நெற்றிக்காரரையெல்லாம்
பகுத்தறிந்து பிரித்து வைத்திருக்கிறார்கள்,
பைந்தமிழ் அன்னையும்
அவர்தம் ஆருயிர் மைந்தர்களும்.
பாருக்கெல்லாம் இது புரியும் வண்ணம்,
தரித்த நறும்திலகமாகப் போற்றிப் பாடும்
அற்புதத் தமிழ்த் தாய் வாழ்த்தை இனியேனும்
அர்த்தம் புரிந்து பாடுவோமாக!
தானாக உலர்ந்து உதிரும்வரை காத்திருந்தால்
நெற்றியில் நீங்காத தழும்பையே விட்டுச் செல்லும்.
போலி திராவிட ஸ்டிக்கர் பொட்டு உதிர்ந்த பின்
பாழ் நெற்றியில் சவக்களையே மண்டும்
சூனியக்காரியின் வதனம் போல் ஆகும் தேசம்.
நாமாகவே ஸ்டிக்கர் பொட்டைப் பிய்த்தெறிந்து
நறுமணம் கமழும் திலகத்தை
நல்ல நாள் பார்த்துத் தரித்துக் கொண்டாக வேண்டும்.
(திலகம் தரித்துக்கொள்ளும் நாளே
நல்ல நாளாகவும் ஆகும்)
நெற்றியை மட்டுமல்ல…
வதனத்தை மட்டுமல்ல…
உலக மடந்தையையே
சூனியக்காரியாக ஆவதிலிருந்து காக்க,
நாம் தமிழர்கள் முதலில் செய்ய வேண்டியது
நம் இந்துத் திலகத்தை மீண்டும் தரிப்பதுவே!
$$$