-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #58...

58. கீதாச்சார்யனிடம் கற்றுக் கொள்ளுங்கள்!
அன்பார்ந்த மாணவச் செல்வங்களே,
அத்தனை துறையிலும் ஊழல்மயமான
அரசையும் அதிகார வர்க்கத்தையும்
அந்நிய அடிமை கார்ப்பரேட்களையும்
அறப்போரில் வென்று காட்டிய பிராமணரை
அயோக்கிய ஈவெராயிஸ்டாகக் காட்டினார்கள்…
எனவே
நீங்கள் ஒருபோதும்
கண்ணால் பார்ப்பதை நம்பாதீர்கள்.
லாக் அப் கொலை செய்த
கிறிப்டோ போலீஸின் வீட்டிலிருந்த
காலண்டரை மாற்றி வைத்துவிட்டு
ஜெய் பீம் என்று முழங்கினார்கள்…
எனவே
நீங்கள் ஒருபோதும்
காதால் கேட்பதை நம்பாதீர்கள்.
அடையாளம் தெரியாத பிணங்களுக்கு
இறுதிச் சடங்குகளை இன்முகத்துடன் செய்த ஹிந்துவை
இஸ்லாமியனாக இளித்துக்கொண்டே காட்டினார்கள்…
எனவே
நீங்கள் எப்போதும்
தீர விசாரித்தே உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.
கயவர்களை நிஜத்தில் போராடி அழித்த
காட்டிலாக்கா ஹிந்து அதிகாரியை
கயமையுடன் கன்வர்ட் செய்து காட்டினார்கள்…
எனவே
நீங்கள் எப்போதும்
திரையுலகப் பிரபலங்களை நம்பாதீர்கள்.
இடதுசாரி அதிகார வர்க்கத்தால் அடிபட்ட ஹிந்து
சீறி எழுந்து வென்று காட்டியதை
‘சிறுபான்மை’ ஒருவரின் வெற்றியாகக் காட்டினார்கள்…
எனவே
நீங்கள் எப்போதும்
தணிக்கைத் துறையை நம்பாதீர்கள்.
பெளத்த விஹாரைகள் கட்ட
பட்டயங்கள் பல வழங்கியவனே
பட்டாக்கத்தியால் வெட்டியதாகப்
படம் காட்டுகிறார்கள்…
எனவே
நீங்கள் ஒருபோதும்
கலைஞர்களை நம்பாதீர்கள்.
ஆகாய விமானத்தைக் கடத்தும் முன்
அல்லாவைத் தொழுதவர்களுக்கு
ஹிந்து தெய்வப் பெயர்களைச் சூட்டுகிறார்கள்…
தென்னாடுடைய சிவனைத் துதித்தபடி
திருட்டுத்தனங்கள் செய்கிறார்கள் நம் வில்லன்கள்…
ஆனால்
அத்தனை காயங்களுக்கும் மருந்திடுவதெல்லாம்
அன்பே கிறிஸ்தவம் என்ற போர்வையில்
பிற மத அழிப்பையே புனிதமாகக் கருதும்
பாதிரிகளும் கன்யாஸ்த்ரீகளுமே.
அன்பார்ந்த மாணவச் செல்வங்களே,
பள்ளிக்கு வெளியில்
வேண்டாததைக் கற்றுக் கொள்கிறீர்கள்…
பள்ளிக்கு உள்ளே
வேண்டியதைக் கற்றுக் கொள்ளாமலும் இருக்கிறீர்கள்…
இது ஏதோ இப்போதுதான் நடப்பதாக நினைக்க வேண்டாம்.
பூர்வகுடி ஆரியர்களை வந்தேறிகள் என்றார்கள்.
வந்தேறி மதங்களை தொப்பூள் கொடி உறவென்றார்கள்.
அன்றே இது ஆரம்பித்துவிட்டது.
ஊற்றருகில் நடும் மரம்தானே
நதி பாயும் கரையெங்கும் தலை விரித்தாடும்?
நாலாயிரம் ஜாதிகளை நான்காக ஒன்று சேர்ந்த நம் மரபே
நம்மையெல்லாம் பிரித்தாண்டதாகத் திரித்தார்கள்.
சமூக, மத, ஜாதி, மொழி சார் நம் தனித்தன்மைகளை
பகைமையாக்கிப் பிரித்தழித்தவனை-
தேசத்தையே உருவாக்கி
ஒன்றிணைத்ததாகச் சொல்கிறார்கள்.
அது
அநேகத் தலைமுறைகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது.
அன்பார்ந்த மாணவச் செல்வங்களே,
500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை
அன்றைய அகிலத்திலேயே
அதி சிறந்த நிலையில் இருந்த நம் தர்மத்தை
ஆகப் பெரிய அழிவு சக்தியாக
அவதூறு செய்து வருகிறார்கள்…
அறம் தனை அழித்து
ஆலயங்களை ஒழித்து
ஹிந்துவை இகழ்ந்து
ஈத் முபாரக் சொல்லி
உன்னதங்களைப் பழித்து
ஊருக்கு உலை வைத்து
எடுபிடியாக வாழ்ந்து
ஏசுவைத் தொழுது
ஐயனை வெறுத்து
ஒற்றுமையைக் குலைத்து
ஓம்காரத்தை ஒழித்து
ஒளவையை அகற்றி
ஆட்டம் போடுகிறார்கள்…
*
நம் வரலாறை
நம் எதிரிகள் எழுதிக் கொடுத்த புத்தகங்களில் தேடாதீர்…
நம் கலை ரசனைகளை
நம் எதிரிகளின் கலைகளில் காவு கொடுக்காதீர்…
நம் தர்மத்தை
எதிரியின் தர்க்கத்தால் அளக்காதீர்…
நம் பள்ளிகளில்
எதிரி நாட்டின் தேசியக் கொடியை ஏற்றாதீர்…
ஆசிரியர்கள் நம்மவர்களே-
பாடங்களோ எதிரிகளுடையவை.
ஐந்தில் வளையாது ஐம்பதில் வளையுமா?
ஐந்து வயதிலேயே நம் குழந்தைகளை
அவர்கள் பக்கம் வளைக்கிறார்கள்.
தீண்டாமை பாவம் என்று
முதல் பக்கத்திலேயே
நம்மை முடக்குகிறார்கள்.
மத மாற்றம் பாவமென்பதை
மாஸ்டர் டிகிரி வரையும் கற்றுத் தர மாட்டார்கள்.
ஹிந்துவாகப் பிறந்தேன்…
ஹிந்துவாகவே வாழ்வேன்…
ஹிந்துவாகவே இறப்பேன் என்பதே
இன்றைய நம் பள்ளிகளின்
உறுதிமொழியாக இருக்க வேண்டும்.
இல்லாத தீண்டாமைக் கொடுமையை
இன்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதும்
இருக்கும் மதமாற்ற அபாயத்தை
என்றைக்கும் மறைத்துக்கொண்டே இருப்பதும்
யாருடைய கல்வி?
இன்று உங்கள் ஆசிரியர்கள் இவர்களே.
இன்று நீங்கள் கற்கும் பாடம் இதுவாகவே இருக்கிறது
இதை நீங்கள்
என்றைக்குப் புரிந்துகொள்கிறீர்களோ அன்றைக்கே
அரிசியில் அகரம் எழுதி ஆரம்பமாகும்
உங்கள் அக்ஷராப்பியாசம்.
இதை உங்களுக்குக் கற்றுத் தருபவர் எவரோ
அவரே உங்களின் உண்மையான ஆசிரியர்.
அதைக் கற்றுத் தராத கல்வி நிலையங்கள் எல்லாம்
களை மண்டும் களர் நிலங்களே.
இறுதியாக ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்:
துரோணாச்சார்யர்களிடம் கற்றுக்கொள்பவை அல்ல;
கீதாச்சார்யனிடம் கற்றுக் கொள்பவையே
குருக்ஷேத்திரப் போரில் வெற்றியைத் தீர்மானிக்கும்.
$$$