குறளைப் போற்றிய பெரியார்களும், ஓர் அரசியல் பதரும்-2

-கருவாபுரிச் சிறுவன் 

அண்மையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “1949இல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகே பள்ளிப் பாடங்களில் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டது” என்று பேசியுள்ளார். இதுபோல ஆதாரமில்லாதவற்றைப் பேசுவது அவருக்குப் புதியதல்ல. அவருக்கு இலக்கியங்களின் ஆதாரத்தில் சவுக்கடி கொடுத்திருக்கிறார், இது கட்டுரையின் இறுதிப் பகுதி…
மயிலை திருவள்ளுவர் கோயில் மூலவர்
காண்க: முதல் பகுதி

திருக்குறளின் பெருமைக்கு அழகு செய்த பெரியார்கள்

  • பூவாளூர் தியாகராஜ செட்டியார் 

பூவாளூர் தியாகராஜ செட்டியார் அவர்கள் தமிழிலக்கியத்தில் போதிய பயிற்சி பெற்றதும் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடமே  ஓலை எழுதுவோராகவும் மாணவர்களுக்குத் தொடக்கப் பாடங்களைக் கற்பிக்கும் சட்டாம்பிள்ளையாகவும் பணியாற்றினார். 1865 ஆம் ஆண்டில் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய அவர்,  அக்கல்லூரியில் உ..வே.சாமிநாதையருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தார். பனைவோலை எழுதுவதிலும் இலக்கணத்தைக் கற்பிப்பதிலும் விற்பனர் அவர். பிள்ளையவர்களைப் போலவே திருவாவடுதுறை ஆதினத்தில் மிகப் பெரிய மதிப்பைப் பெற்றவர் செட்டியார் அவர்கள். அதுமட்டுமின்றி அன்றைய தமிழ் உலகில் செட்டியாரின் தீர்ப்பை அனைவரும் மதித்தனர். அவர் ஒரு தமிழ்ப்பாட நுால் சரியில்லை என தள்ளி விட்டால் அனைத்துப் பள்ளி நிர்வாகிகளும் அந்தப் பாடத்தை தங்கள் பள்ளிகளில் வைக்க மாட்டார்கள். அவர்களும் திருக்குறளுக்குமான உணர்வினை சுருக்கமாகக் காண்போம். 

செட்டியார் அவர்கள் ஒருநாள் சிவபூஜை,  போஜனம் எல்லாம் முடித்துவிட்டு ஒரு விசிறியுடன் திண்ணையில் அமர்ந்திருந்தார்கள். அப்போது வாசலில் நின்ற வண்டியில் இருந்து ஐரோப்பிய பாதிரியார் ஒருவர் இறங்கி  தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.  நான் திருக்குறளைப் புதுக்கி எழுதியுள்ளேன். அதற்கு சாற்றுக்கவி தர வேண்டும்  என சொன்னார், அதைக் கேட்ட செட்டியாரின் கண்கள் சிவந்தன. காதுகளும் நாசிகளும் துடித்தன. பின்னர், ’சிவ சிவ’ என சொல்லிக் கொண்டு, என்ன ஏது என்று கூட சரிவர கேட்காமல் வீட்டிற்குள் சென்று அவர் போகும் வரை முகத்தில் கூட விழிப்பதற்கு விருப்பம் இல்லாமல் தாழிட்டுக் கொண்டார் என்றால்…  நமது நாட்டில் வாழ்ந்த சான்றோர்கள் எந்த அளவு திருக்குறளின் மீது பெரும் பற்று உடையவர்கள்  என்பதை  யூகித்து தெரிந்து கொள்ளலாம். 

ஆற்றல் அழியுமென்(று) அந்தணர்கள் நான்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார் – ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று

     –கோதமனார்
      (திருவள்ளுவ மாலை- 15)
  • பாண்டித்துரை தேவர்

பாண்டித்துரை தேவர் பெருமகனாரால் நிறுவப்பெற்ற மதுரை நான்காம் தமிழ் சங்கத்தின் வாயிலாக நடத்தப்பெறும் பண்டிதர் தேர்வுகளில் திருக்குறள் பாடமாக அன்றே  இடம்பெற்றிருந்து என்பது தமிழ் கற்ற அனைவருக்கும் தெரியும் என்பது வெளிப்படை. இச்செய்தியைச் சொல்வதற்கு விளம்பரம் தேவையில்லை. 

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் தமிழ்மொழியில் மீது கொண்ட  அதீத ஆர்வத்தினால்  இலக்கண, இலக்கியங்களையும் படிக்கத் தொடங்கினார். தமிழ் அணி இலக்கணம் பேசும் எதுகை மோனைகளில் பெரும் ஈடுபாடு கொண்ட அவர்  திருக்குறளில் எதுகை மோனை சரியாக அமையாத இடங்கள் என எண்ணிக் கொண்டு  அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை உருவாக்கினார்.

ஒரு முறை வள்ளல் பாண்டித்துரை தேவரை இவர்  சந்தித்து தாம் செய்த இந்த  ‘அரிய’  பணியைப் பற்றிச் சொல்லி நுாலின் ஒரு பிரதியைக் கொடுத்தார். அதைக் கண்டு உள்ளுக்குள்  மனம் நொந்தார் பாண்டித்துரை தேவரவர்கள். 

திருக்குறளின் முதல் குறட்பா கீழ்க்கண்டவாறு  திருத்தப்பட்டிருந்தது:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
உகர முதற்றே உலகு.

இப்படியே நூல் முழுக்க நெடுகவும் எதுகை மோனைகள் திருத்தப்பட்டு  இருந்தன. இதனால்  ஸ்காட்டிடம்  இருந்த பிரதிகள் மொத்தத்தையும் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஸ்காட்டும் புளகாங்கிதம் அடைந்து  சொச்சம் பிரதிகளையும் தேவரிடம் கொடுக்க உரிய விலையையும் அவருக்கு வழங்கப்பட்டது.  அவற்றில் பிழை மலிந்துள்ள செயல் கல்வியாளர்களுக்கு தெரிந்து விட்டால் தமிழ் பயில ஆர்வாமாயிருக்கும் ஸ்காட் அவர்களின் மதிப்பு குறைந்து விடுமே எனக் கருதி தீயிட்டுக் கொளுத்தி திருக்குறளின் மேன்மையும், துரையவர்களின் மானத்தையும்  காத்தார் தேவர் அவர்கள்.

மேற்கண்ட செய்திகள் வாயிலாக, ஒளவை பிராட்டியாரில் தொடங்கி, காப்பியம், திருமுறை திவ்ய பிரபந்தம், திருப்புகழ், தலபுராணம், தலப் பனுவல் போன்றவற்றின் ஆசிரியர்கள் வரையுள்ள எத்தனையோ ஹிந்து சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு சிறப்புக்குரியவர்  திருவள்ளுவ தேவ நாயனார்  என்றும், ஹிந்து சமயம் அல்லாத மற்றவர்களுக்கு பொதுவானவர்  என்பதும் மறுக்க, மறக்க முடியாத உண்மையாகும்.  

இது புரியவில்லை என சந்தேகத்தை எழுப்புவர்களின்  கனிவான கவனத்திற்கு… 

ஒரு முத்து மாலையை ஒரு சேரக் கோர்க்க எப்படி ஒரு கண்ணுக்கு தெரியாத நூல் பயன்படுகிறதோ அதைப்போல, உலகிலுள்ள எல்லா சமயக் கருத்துக்களையும் தன்னுள் அடக்கி, தன் சமயக் கருத்துக்களோடு இன்றும் என்றும் இளமையோடு இருக்கக்கூடியது திருக்குறள் என்பதை மனதில் கொள்க.

அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
திறம்இருபத் தைந்தால் தெளிய – முறைமையால்
வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதஅழக் கற்றது உலகு.

     -மதுரைப் பெருமருதனார்
      (திருவள்ளுவ மாலை-37)

மதுரை எம்.பி. சித்தம் கலங்கலாமா?

புத்தகம் நுாறு புரட்டிக் களைப்புற்றுச் 
சித்தம் கலங்கித் திகைப்பதேன் - வித்தகன்
தெய்வப் புலவன் திருவள் ளுவன் சொன்ன 
பொய்யில் மொழியிருக்கும் போது.

மக்களுக்கு மாநிலத்தில் வாழ்க்கை வழிகளெல்லாம்
சிக்கலறக் காட்டி நலம் செய்wஊலாம் - மிக்க புகழ்ச்
செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே 
சிந்தனை செய்வாய் தினம்.

-என்ற கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்  பாடலை இவ்விடத்தில் மனனம் செய்து கொள்வது நல்லது.  

சமீபத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன்   மதுரையில் நடந்த புத்தகத் திருவிழா நிகழ்ச்சி ஒன்றில்  திருக்குறள் தொடர்பாக பேசிய விபரம் எழுத்து வடிவமாக… 

சில நூற்கள் தான் மிக முக்கியமான திறப்புகளை உருவாக்கியது. மிக முக்கியமான பொருளை பொது சமூகத்தில்  பேசியது.  உங்களுக்கு ஒரு வேதம் என்றால் உங்களின் வேதத்திற்கு நிகராக எங்களின் வாழ்க்கை நெறியைப் பேசுகின்ற புத்தகம் எதுவுமில்லையா...  என்ற கேள்வி ஆயிரத்து தொள்ளாயிரங்களின் துவக்கங்களில் எழுந்த போது, உங்களது பண்பாட்டை உங்களது சிந்தனையை  பேசுகிற  புத்தகமாக வேதங்கள்  இருக்கும் என்றால்... எங்களது பண்பாட்டை எங்களது சிந்தனையைப் பேசும் புத்தகமாக இருக்கிறது ஒன்று அது தான் திருக்குறள் என்று தந்தை பெரியார் 1949 இல் முதன்முறையாக  திருக்குறள் மாநாட்டை நடத்தினார். இன்றைக்கு நடைமுறையாக இருக்கிற எல்லாம் அந்த மாநாட்டுத் தீர்மானங்கள் தான்....

முதன்முறையாக திருக்குறளை பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது அந்த மாநாட்டின் முதல் தீர்மானம். கடந்த ஐம்பது ஆண்டு, எழுபது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடைமுறையாகி கொண்டிருக்கிற இந்த மிகப்பெரிய செயலுக்குp பின்னால் இருந்த முதல் விதை  1949  இல் தந்தை பெரியார் கூட்டிய   திருக்குறள் மாநாடு. அது தான் திருவள்ளுவருக்கு உருவம் வடிமைக்கப்பட வேண்டும்  என்றும் தீர்மானிக்கப்பட்டது. உங்களுக்கு வேதம் என்றால் எங்களுக்கு திருக்குறள்  என்று திருக்குறளை தமிழ்ப் பண்பாட்டு பொது வெளியில் தமிழ் அரசியல் உரையாடலின்  பொது வெளியில் கொண்டு வந்து நிறுத்தினார் தந்தை பெரியார்.

-என்று பேசி இருக்கிறார்.

 எம்.பி. சு.வெங்கடேசன் சிறந்த நூலாசிரியர் தான். பின்னர் ஏன் இவ்வாறு பேசுகிறார் என்பது அவருடைய மனச்சாட்சிக்குத் தான் தெரியும்.  அன்னாருக்கு சில கேள்விகள்:

  • நாட்டின் நலனிலும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களது நன்மைக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபடும் பொறுப்பில் இருக்கும் எம்.பி.  பொது இடங்களில்  பேசும்போது  எங்களது- உங்களது என பிரித்துப்  பேசலாமா?.
  • திருக்குறள் மாநாட்டினை அவர் சொல்லும் பெரியவர்  நடத்தினார் என்று சொல்வது  உண்மைதானா? 
  • இந்த மாநாட்டிற்குப்  பிறகு தான் திருக்குறள் பள்ளிக்கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டது என்ற கூறுவது பொருத்தமாக தெரிகிறதா?. 
  • திருக்குறளின் கருத்துப் படித்தான் தமிழக அரசியல் உள்ளதா?. 
  • 1949 க்குப் பிறகு தான் திருவள்ளுவருக்கு உருவம் கிடைக்க… அப்பெரியவரின் பேச்சு விதையானது எனப்  பிதற்றுவது நியாயமா?

-இவையெல்லாம் அவரது பேச்சிய கருத்தில்  இருந்து எடுக்கப்பட்ட  சாதாரண  கேள்விகள். இன்னும் எடுக்கலாம். வேண்டாம் என விட்டு விடுகிறோம்.  

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
சீரியது என்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து.

     -வண்ணக்கஞ் சாத்தனார்
      (திருவள்ளுவ மாலை-43)

மேடைப் பேச்சிற்கு லட்சணம் கொடுத்து லட்சியவாதிகள் வாழ்ந்த மண் மதுரையம்பதி. அங்குதான் இப்படி ஒரு அற்பமான பேச்சு!

தேவர் திருமகனும் மூதறிஞரும்…

பசும்பொன் தேவர் பிரானும், மூதறிஞர் ராஜாஜி அவர்களும் அரசியல் வாழ்வில் எதிர்எதிர்த் துருவங்கள். ஆனால், இருவரும் ஓரே மேடையில்  சந்தித்த போது சபை நாகரிகத்துடன் நடந்து கொள்கிறார்கள். இதைத் தான் மேடை நாகரிகம் எனச் சொல்வர். (இன்றைய சூழலில் அரசியலுக்கு முழுநேரமாகவோ, பகுதிநேரமாகவோ வரும் அரசியல்வாதிகள் இது போன்ற அடிப்படையான ஆக்கப்பூர்வத்திற்கு முக்கியமான  விஷயங்களை நன்கு தெரிந்து கொள்வது கட்டாயமானால் நல்லது) . 

மதுரை மீனாட்சியம்பிகை  ஆலயத்தில் ஆடி வீதியில்  மூதறிஞர் ராஜாஜி எளிய தமிழில் எழுதிய  ‘வியாசர் விருந்து’  நுால் வெளியீட்டு விழா. மேடைக்கு  எதிர்பாராத விதமாக தேவர் திருமகனார் வருகிறார். ராஜாஜி அவர்கள் பேசி முடித்ததும் தேவர் பிரானை  பேசச் சொன்னார். வியாசர் விருந்தினை  கையில்  வைத்து அதைப் பற்றி மட்டும் பேசுமாறு சைகை மூலம் தெரிவித்தார். அதைப் புரிந்துகொண்ட தேவர்பிரான் அவர்கள்   “அடியேன் எப்போதும் எடுத்துக கொண்ட பொருள் மீது எல்லை மீறாமல் பேசுகிற பழக்கம் உள்ளவன்” என சொல்லிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

மேடைப் பேச்சிற்கு லட்சணம் கொடுத்த மண் மதுரை. இத்தொகுதி எம்.பி.யாக இருக்கும் தாங்கள் புத்தகத் திருவிழாவில் பேசியிருப்பது கோர்வையாக இல்லை; ஆவணப்படுத்தும் படியும் இல்லை.   அவற்றில்  எங்களது வேதம் – உங்களது வேதம் என சொல்வது சாமானியர்களுக்கே  ரசிக்கும்படியாக இல்லை.  

வடமொழியிலுள்ள சாராம்சக் கருத்துக்களையெல்லாம் திரட்டி தமிழ் நூல் செய்தார் என திருவள்ளுவர் மாலை பன்மொழிப் புலவர்களின் பாடல்களே  சாட்சியாக இன்றும்  மிளிர்கின்றன. 

திருவள்ளுவ தேவ நாயனார் இயற்றிய திருக்குறள் உருவான காலம் தொட்டு இன்று வரை  (இனிமேலும்) பலரும் திருக்குறளைக் கொண்டாடி வருகிறார்கள் என்பது தெரிந்தும்,  தாங்கள் பள்ளிப்பாடங்களில் 1949 பிறகு தான் முன்னெடுக்கப்பட்டன எனச் சொல்லுவது ஏற்புடையது தானா? 

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வரைந்த ஓவியம்

திருக்குறள் இயற்றப்பட்ட  காலம் தொடங்கி தற்காலம் வரை பல தரப்பட்ட பிரிவினர்கள்  குருகுலமுறை, ஆதினங்களின் பாடசாலை கல்வியியல் முறை, குடும்பம், கழகம், பொது இடங்கள் வாயிலாக திருக்குறளைப் படித்தும் பலருக்குப் பயிற்றுவித்தும் அதன்படி வாழ்ந்து காட்டுவதெல்லாம்  தாங்கள் படித்த இலக்கண, இலக்கிய வரலாற்றில் இடம் பெற வில்லை போலும்.  

தாங்கள் சொல்லும் பெரியவர் மாநாடு நடத்துவதற்கு முன்னதாகவே திருக்குறள் பல ஆண்டுகளாக பள்ளிக்கூடங்களில்  பாடமாக வைக்கப்பட்டு  தமிழக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு வந்தன என்பதை தாங்கள் சொல்லும் ஆண்டிற்கு முன்னதாக உள்ள  அன்றைய  தமிழ்ப் பாட நூற்களை தேடிப் பிடித்து படித்துப் பார்க்க. 

ஒரு திருத்தம். தமிழகம் எங்கும் தாங்கள் சொல்லும் பெரியவரோடு சாதாரண மக்கள் முதல் இணையம் வரை பேசப்பட்டு வரும் (தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, திருக்குறள் தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம்) கீழான வார்த்தைகளை  உதிர்த்தவர் 1949இல் திருக்குறள் மாநாடு நடத்தினார் எனச் சொல்வது சற்றும் பொருத்தமானதாக இல்லை.

இருந்தாலும்  அந்த மாநாட்டில் பார்வையாளராகவும், ஒருவராகவும்  கலந்து கொண்டிருக்கலாம் அல்லது  கடைசி நேரத்தில் ஒரு அங்கத்தினராக இடம்பெற்றிருக்கலாம்.  ஏன் என்றால் அதற்கு முன்னும் பின்னும் தமிழகத்தில் நடத்திய திருக்குறள் தொடர்புடைய அரும்பெரும் நிகழ்வுகளில் தாங்கள் சொல்லும் பெரியவரின்  பங்கு, என்ன பணி செய்தார் என்பதை தெளிவுறப் புரியுமாறு எதிர் வரும்  புத்தகத் திருவிழாவில் விளக்கிச் சொன்னால் நன்று.

கற்பகமே கற்பகமாய் அருள்பொழிந்து 
           உலகமெலாம் ஈன்றெடுத்துக் காக்கின்ற 
அற்புதமே கபாலிமகிழ் அன்புருவே 
           மயிலைவாழ்வே  அழகுவடி வாய்விளங்கும்
பொற்கொடியே கூத்தாடும் விநாயகனும்
           சிங்கார வேலவனும் போற்றுமுன் றன் 
நற்பதங்கள் நான்பணிந்தேன் நலமெல்லாம்
           கருணையுடன் எனக்கிங்கே நல்குவாயே 

என ம.ப.பெரியசாமித் துாரன் அவர்கள்  சென்னை  மயிலாப்பூர் கற்பகம்பாள் சமேத  கபாலீஸ்வரப் பெருமானிடம்  வரம் வேண்டிப் பணிவார்.  இத்தலத்தில் பல  நூற்றாண்டுகளைக் கடந்துள்ள திருவள்ளுவர் கோயிலில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் திருவள்ளுவ தேவ நாயனார், வாசுகி அம்மையார் மற்றும் அங்குள்ள பஞ்சலோகத் திருமேனி ஆகியவை எப்போது பிரதிஷ்டைசெய்து  ஸ்தாபிக்கப் பெற்றன  என்பதை இந்திய – தமிழக தொல்லியல் துறையின் வழியாக கேட்டுத்தெரிந்து கொள்க.  

இலங்கையில் பயன்பாட்டில் உள்ள திருவள்ளுவர் ஓவியம்
  • திருமயிலை சே.வே.சோமசுந்தரம் பிள்ளையவர்கள் வீட்டிலுள்ள திருவள்ளுவ தேவ நாயனாரின் வண்ணப்படம். 
  • தமிழ் இலக்கிய உலகிற்கு பல அரிய நூற்களை அச்சிட்டு வழங்கிய தென்னிந்திய சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகம் வரைந்து வெளியீடு செய்த திருவுருவப் படங்கள்
  • இந்தியா, வெளிநாடுகளில் திருவள்ளுவர் திருவுருவம் என்ற தலைப்பில் முனைவர் ப.தேவி அறிவுசெல்வம் அவர்களால் எழுதப்பெற்ற கட்டுரையைப்  படித்து, திருவள்ளுவரின் வடிவம் பற்றி செய்திகள் எப்போதிருந்தே தொடங்கப்பட்டது என்பதை  தெரிந்துணர்க .
ஓதற்(கு) எளிதாய் உணர்தற்(கு) அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் – தீதற்றோர்
உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.
 
     -மாங்குடி மருதனார் 
      (திருவள்ளுவ மாலை-24)

நிறைவாக, 

  • பொது வெளியில் பேசும் தாங்கள், நமக்கு-  நம்முடையது என பதவிக்கு ஏற்றாற்போலப் பேசியிருந்தால் தங்களுடைய கருத்துரைகள்  கண்ணியமாக  இருந்திருக்கும். 
  • வரலாறுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் போது புள்ளிவிவரமாக உரையாற்றி பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழுங்கள். கேட்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது,  இங்கே நாம் பேசுவது மட்டுமே உண்மை என்ற அளவில் தொடர்பில்லாத, ஆரோக்கியமற்ற செய்திகளை அள்ளித் தெளிக்காதீர்கள். 
  • பாரதி கண்ட கனவு  நனவாக்கிக் கொண்டிருக்கும் காலம் இது. விஞ்ஞானத்தில் அபார வளர்ச்சியை எட்டியுள்ளது  பாரத நாடு. தாங்களைப் போல அரசியல்வாதிகள் பலரும் மேடையில் பேசி  விட்டு இறங்குவதற்கு முன்பாகவே,  தாங்கள் பேசியது உண்மை தானா என தெரிந்து கொள்ளும் அளவிற்கு தகவல் தொடர்பு சாதனங்கள் எல்லாம் இன்றைய இளைஞர்கள் கையில் சர்வ சாதாரணமாக  உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.
  • இனிவரும் நிகழ்ச்சிகளிலேனும் இது போன்று அவலமாகப் பேசுவதைத் தவிருங்கள்.  

பாரத தேசத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் எத்தனையோ திருநூற்களை தமிழ் அன்னை அருளியுள்ளார். வேதாகமக் கருத்துக்களை தன்னுள் வாங்கி அத்தலத்தில் வாழும்  புலவர்களால் இயற்றப்பட்ட   தல புராணங்கள் தலமுறையை காக்கும் தர்மத்தின் மற்றொரு வடிவம். 

தொண்டை நாட்டிலுள்ள  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் முதன்மையாக இருப்பது  திருமயிலை. இக்கோயில்  தல புராணத்தின்  முதற்பதிப்பில்  திருவண்ணாமலை ஆதினம் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய திருவள்ளுவதேவ நாயனார்  துதியையும், எந்தை  திருமயிலை கபாலீஸ்வரப் பெருமானின்  அருள் சக்தியாம் அன்னை கற்பகவல்லியம்மை நம் எல்லோருக்கும் நல்லருள் புரிய கீழ்க்கண்ட துதியை பாராயணம் செய்து இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக:

திருமுடிமிசையார் மயிர் முடியழகும்
    தீர்க்க புண்டர நுதலழகும்
        திரண்மணி புயந்தை வருஞ்செவியழகும்
            திகழ் நெடுஞ் தாடியினழகும்

அருமுடி செப மாலிகை சின் முத்திரை சேர் 
     அபய நேர் வலக் கையினழகும்
          அமிழ்துறழ் தமிழ்மா மறை முறை 
               வரதமமை தரும் இடக்கையினழகும்

கருமுடியோகப் பட்டையினழகும்
    கடி கொள்கீட்கோவண அழகும்
        கழல் களிற்றிகிரி வளைவரை யழகும்
             கமல நல்லாதனத்தழகும்

தருமுடி முகில் தோய் மயிலையினிடை
     மாதவர்கள் கண்டு இறைஞ்ச வீற்றிருக்கும்
             தழைபுகழ் திருவள்ளுவர் எனுநாம 
                 சற்குரு சரணமே சரணம்!

      -அமிர்தலிங்கத் தம்பிரான் 
நடத்தையில் அடக்கமும் இணக்கமும் வணக்கமுறு
                     நற்குணமும் நற்செய்கையும்
        நலந்தரும் கல்வியும் செல்வமும் அதற்கான
                      நல்லோரிடத்தில் உறவும்

திடத்து மனமும் பொறுமையும் திறமையும் தரும
                     சிந்தனையும் மதிநுட்பமும்
         தீனர்களிடத்தில் விசுவாசமும் என்றுமவர்
                      தீப்பசி தணிக்க நினைவும்

கடக்கவரி தான ஜனனக்கடல் கடந்து கதி
                    காண மெய்ஞான மோனக்
         கம்பலுந் தந்துதவி செய்து ரக்ஷித்துக்
                     கடைத்தேற அருள்புரிகுவாய்

விடக்கடு மிடற்றனன் இடத்தில்  வளரமுதமே
                    விரிபொழில் திருமயிலை வாழ்
        விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப்பத வல்லி
                      விமலி கற்பகவல்லியே!

     -அருணாசல முதலியார்.

வாழ்க பாரதம்! வளர்க தாய்த்திருநாடு!

(நிறைவு)

$$$

Leave a comment