குறளைப் போற்றிய பெரியார்களும், ஓர் அரசியல் பதரும்-1

-கருவாபுரிச் சிறுவன் 

அண்மையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை எம்.பி. திரு. சு.வெங்கடேசன், “1949இல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகே பள்ளிப் பாடங்களில் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டது” என்று பேசியுள்ளார். இதுபோல ஆதாரமில்லாதவற்றைப் பேசுவது அவருக்குப் புதியதல்ல. அவருக்கு இலக்கியங்களின் ஆதாரத்தில் சவுக்கடி கொடுத்திருக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்… இது கட்டுரையின் முதல் பகுதி…
காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
        யாபதியும், கருணை மார்பின் 
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில் 
        மேகலையும், சிலம்பார் இன்பப் 
போதொளிர்பூந் தாளிணையும், பொன்முடி 
         சூளாமணியும் பொலியச் சூடி 
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் 
         தாங்கு தமிழ் நீடு வாழ்க! 

தமிழ் அன்னையைப் போற்றும்  கவியோகி சுத்தானந்த பாரதியாரின் திருவாக்கினை நாம் மனம் மொழி மெய்களில் பதித்து இச்சிந்தனையை சிந்திப்பது சிறப்பு.     

சத்தியத்தின் வழியில் வாழ்வதே மனிதப் பிறவியின் முக்கிய நோக்கம். வாய்மையைக் தன் வாழ்நாளில் கைக்கொண்டு அறவழியில் ஒழுகுதல் வேண்டும். உள்ளத்தில் பொய்ம்மையை, வஞ்சகத்தை வைத்துக் கொண்டு எத்தகைய  அறங்களை ஒருவர் செய்தாலும், அவற்றிற்குரிய பலன்களை உறுதியாகப் பெற முடியாது. உள்ளத்தில் கொண்டிருந்த பொய்க்கும், வஞ்சகத்திற்கும் உரிய  பலனை  அவரவர் கர்மாவிற்கு ஏற்ப பெற்றே தீர வேண்டும் என ஹிந்து தர்ம சாஸ்திரங்களும் அறநுால்களும் போதிக்கின்றன.

தொண்டை நாட்டைச் சார்ந்த பெருந்தேவனார் வியாசரின் மகாபாரதத்தை வெண்பா, அகவல், உரைநடையிலும் கலந்து  பாடி வெளியிட்டமையால்  ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என அழைக்கப் பெறுகிறார்.  ஐந்து தொகை நுால்களிலுள்ள இவர் பாடிய  கடவுள் வாழ்த்துப் பாடல்களில் புறநானுாறு, அகநானுாறு,  ஐங்குறுநுாறு ஆகிய மூன்றிலும் சிவபெருமானையும், குறுந்தொகையில் செவ்வேளையும், நற்றிணையில் திருமாலையும் வாழ்த்தியுள்ளார்.

இவர் பாடிய  பாடல் ஒன்று திருவள்ளுவ மாலையில் இடம் பெற்றுள்ளது. அதில்,

எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் – முப்பாற்குப்
பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்.

    -பாரதம் பாடிய பெருந்தேவனார்
     (திருவள்ளுவ  மாலை - 30)

ராமாயணம், மகாபாரதம் இரண்டும் வேதத்திற்கு நிகராவை  என சொல்லுவது  ஈண்டு சிந்திக்கத் தக்கது. 

ஹிந்து மதத்தின் சிகரமான வேத வாக்கியம்  ‘சத்யம் வத; தர்மம் சர’ என முழங்குகிறது. இத் தேசத்தில்  வாழும் ஹிந்து  சமய மக்களுக்கு பொது நூற்களாகவும், பெரும் இதிகாசங்களாகவும்  திகழக்கூடிய  ராமாயணமும், மகாபாரதமும் பழங்காலம் தொட்டே  மக்கள் மத்தியில் நன்கு புழக்கத்திலும்  செயல்முறை கல்வியாகவும்  போதிக்கிப்பட்டு வந்தன.  இவை இரண்டும் தர்மத்தை போதிப்பவை; சத்தியத்தை  நிலைநிறுத்துபவை. தமிழகம் செய்த தவப்பயனின் காரணமாக இவ்விரு காப்பியங்களையும் செந்தமிழில் தமிழ்ப்படுத்தித் தந்துள்ளார்கள் நம் முன்னோர்.  அதனால்தான் இதன் தத்துவக் கருத்துக்கள்  எவ்வித வேறுபாடும் பார்க்காமல்  கிராமங்களில் வாழும் தனி மனிதர்  வரையிலும்  சென்றடைந்துள்ளன. அங்கு ஸத் சங்கத்திற்காக அவர்கள்  கூடும் இடத்தை பொதுவாக  ராமாயணச் சாவடி என சொல்லும் வழக்கம் இன்றும் உள்ளது. இச்சாவடிகளில்  தொடர்ச்சியாக  மகாபாரதம், அரிச்சந்திர புராணம், நீதி நுாற்கள் யாவும் உபதேசிக்கப் பெற்றன.  சத்தியம்,தர்மம் இவ்விரண்டின் சிறப்புகள் பற்றி போதிக்கும்  மகாபாரதத்தினை வில்லிபுத்துாரார் என்னும் பெரும்புலவர் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார்.  அந்நுாலில் அவர்  தமிழ்த்தாயை வணங்கி வந்தித்து அதன் சிறப்பினை அழகுற எடுத்துரைக்கிறார். 

பொருப்பிலே பிறந்து தென்னன்
     புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வைகை
     ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
     நினைவிலே நடந்துஓ ரேன
மருப்பிலே பயின்ற பாவை
     மருங்கிலே வளரு கின்றாள்

     (1 – பாயிரம், வில்லி பாரதம்) 

பஞ்ச பூதங்களையும் ஒருங்கே உள்ளக்கிடக்கையாக வைத்து போற்றி, தமிழின் தொன்மையும் பழமையும் தனிச் சிறப்பினையும் பறை சாற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.  மதுரையம்பதியில் பல புலவர்களும் பண்டிதர்களும் அருள்ஞானிகளும் பன்நெடுங்காலமாக தமிழைப் பாதுகாத்து போற்றி வருவது யாவரும் அறிந்த ஒன்றாகும். 

தன் தாய்மொழிக்கு  ஒரு நூலை மொழிபெயர்க்கும் புலவர்கள் அம்மொழியிலும், கூடுதலாக மற்ற மொழியிலும்  பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், தெய்வத்தின் திருவருளும் இருந்தால்  மட்டுமே தெளிவான முறையில் நூல் இயற்ற முடியும் என்பது அடிப்படை.  இத் தேசத்தின் இருகண்களாக வடமொழியும் தென்மொழியும் பன்னெடுங்காலமாகத் திகழ்கின்றன. வடமொழியிலான  வேதத்தில் கூறப்பட்ட  சத்தியம், தர்ம சிந்தனைகளையும் தமிழ்ப் படுத்தி இவ்வுலகமே கொண்டாடுமாறு ஒரு திருநூலை,  அங்கயற்கண்ணியம்மை ஆலவாய் அண்ணல் வளாகத்தில், எண்ணற்ற தமிழ் புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார் திருவள்ளுவ தேவ நாயனார்  என தமிழ் கூறும் நல்லுலக வரலாறு சான்று பகிருகிறது.  

இவ்விடத்தில்… 

வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனையது உயர்வு

-என்ற  595  வது திருக்குறளை சிந்தையில் இருத்துவது உத்தமத்திலும் உத்தமம். 

திருவள்ளுவ தேவ நாயனாரின்  பெருமையையும், அருள்கொடையான அவரின் திருக்குறளின்  அருமையையும்  சமகாலத்தில் வாழ்ந்த பெரும் புலவர்களும் பின்னாளில் அதன் மகத்துவம் அறிந்தவர்களும் திருவள்ளுவர் மாலையில்  போற்றியுள்ளார்கள். அவற்றுள், சத்தியலோகத்தில் வாழும் பிரம்மதேவரே  திருவள்ளுவராய் வந்து இப்பூவுலகில் அவதரித்து திருக்குறளை அருளிச் செய்தார்  என்ற  வாக்குகள் முறையே,  ஹிந்து சமய மக்களுக்கு பக்க பலமாய் நின்று அனைவரது  உள்ளங்களிலும் இல்லங்களிலும் இன்று மட்டுமல்ல என்றும் ஞானச்சுடர் விட்டு இவை பிரகாசிக்கும்.  

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி.

    -பாண்டியன் உக்கிரப்பெருவழுதி.
     (திருவள்ளுவ மாலை - 4)
ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் – பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தாமரை மேல் அயன்.

     -காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
      (திருவள்ளுவ மாலை – 28)

எல்லா உயிர்களும் பொதுவான நூல் வேதம். சிறப்பான நுால் ஆகமம். இரண்டும் சைவ  சமய மணிமகுடத்தினை  அலங்கரிக்கும் ரத்தினக் கற்கள் என்பார் சைவசித்தாந்த அறிஞர் துாத்துக்குடி பொ. முத்தையா பிள்ளையவர்கள்.   நமது நீதி நுாற்களில் ஒன்றான நல்வழியில்…  

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவைத்
திருவாசகமும் திருமூலர் சொல்லும் 
ஒரு வாசகம் என்றுணர்.

   -நல்வழி (40)

என்று ஒளவை  பிராட்டியார் அருளிச் செய்துள்ள பாடலில்…   நுாலின் பெயரையும் இயற்றிய ஆசிரியர் பெயரையும் நுட்பமாக எடுத்துக்காட்டும் பாங்கு அவருக்கே உரிய சிறப்பு. அதில் முதலில் திருவள்ளுவ தேவ நாயனார் இயற்றிய திருக்குறளையும், அதன் பிறகே மற்ற ஏனைய நூற்களையும் வரிசைப்படுத்தியுள்ளார். முறையே, திருவாகிய சிவபெருமான் அருளிய வேதத்தின் முடிவையும், மூவர் முதலிகளின் தேவாரமும், மாணிக்க வாசகரின் திருவாசகமும், திருமூல தேவரின் திருமந்திரம் கூறும் கருத்துக்கள் அத்தணையும் ஒன்றைத்தான் அறுதியிட்டுச் சொல்லுகிறது என்பதை உணர்ந்து கொள் என கட்டளையிடுகிறார்.  

மேற்கண்ட  நூற்களின் சாராம்சக் கருத்துக்களை எல்லாம் தன்னுடைய  ஞானத்தால் உணர்ந்த நம் ஒளவைப் பிராட்டியார்  இந்த உண்மைக்  கருத்துக்கள் எல்லாம் அவரது பிள்ளைகளாகிய  நாமும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே குறிக்கோளாகிய அவளது வைராக்கியம் தான்  என்றுணர் என   கட்டளையிட்டு துணிந்து  சொல்லச் சொல்லியது என்பதை இவ்விடத்தில் உணர்ந்து கொள்வோமாக. 

காப்பியத்தில் தெய்வப்புலவரின்  வாக்கு 

முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் இயற்றிய காலம் பொ.யு.பி. இரண்டாம் நுாற்றாண்டு என்பது,  ஆய்வாளர்கள் பெரும்பாலும் கண்ட முடிபு. அவருடன் ஒருங்கே வாழ்ந்த தண்டமிழ்ச் சாத்தனார் மணிமேகலை என்ற மற்றொரு காப்பியத்தை இயற்றினார். அக்காப்பியத்தின் ஓரிடத்தில்… 

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுமவள் 
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்னப் 
பொய்யில் புலவன் பொருளுரை தேராய் 

-என்று கூறியிருப்பதில்,  திருவள்ளுவ தேவ நாயனார் ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்ற அதிகாரத்தில் கூறிய

தெய்வம் தொழா அள் தொழுநற் றொழு  தெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை

     (திருக்குறள்- 55)

என்ற சொற்களை அப்படியே பொதித்து வைத்து தருகிறார் என்பது தெள்ளிய செய்தியாகும்.

ஒளவை பிராட்டியார், சாத்தனாரைத்  தொடர்ந்து இதைப் போலவே தமிழகத்தில் பிறந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் திருக்குறளை தத்தம் படைப்புகளில் கையாண்டு திருக்குறளின் தனிச் சிறப்பினை மேலும் மெருக்கேற்றி உள்ளார்கள்  என்பது வெள்ளிடை மலை போல விளங்கும் தெள்ளிய செய்தியாகும். 

வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.

     -செயலுார்க் கொடுஞ்செங்கண்ணனார்
      (திருவள்ளுவ மாலை- 42)

திருக்குறளை எடுத்தாளும்  அருளாளர்கள்

திருஞானசம்பந்த நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்க வாசகர்,  திருமூல தேவ நாயனார், தெய்வச் சேக்கிழார் சுவாமிகள், மெய்கண்ட  தேவர், மனவாசகம் கடந்தார், உமாபதி சிவாசாரியார், தாயுமானவர்,  அருணகிரிநாத சுவாமிகள், வடலுார் ராமலிங்க சுவாமிகள் மற்றும் ஆழ்வார்கள்  உட்பட பல்வேறு அருளாளர்களின் படைப்புகளில் திருக்குறளும், அதன் சாயலும் ஆங்காங்கே மிளிரும்.   திருக்குறள் ஒரு தனி மகத்துவம் மிக்க நூல் என்பதை  அத்தகைய திருநூலினை கசடறக் கற்பவர்கள் நன்கு உணர்வார்கள். 

முதலமைச்சர் மொழிந்த திருக்குறள் 

சான்றோர் உடைத்தது தொண்டை நாடு என்பது ஒளவை பிராட்டியாரின்  திருவாக்கு.  கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய  அநபாயச் சோழனுக்கு நீண்டநாட்களாக மனதில் உதித்த சந்தேகத்தை தம் அவையில் ஒரு நாள் கேள்வியாக வைக்கிறார். அங்குள்ள அவைப்புலவர்களுக்கு இது  தமிழ் நூல்களைப் பற்றியவை என்பதைச் சிறிதும் எண்ணவில்லை.   ‘மலையிற் பெரியது எது? கடலை விடப் பெரியது எது? உலகத்தை விடப் பெரியது எது?’ என மன்னர் கேட்ட இக்கேள்விகளுக்கு யார் பதில் சொல்ல முடியும்? முடியாது! முடியாது!  என தமக்குள் பேசிக் கொண்ட நேரத்தில்,  அக்கேள்விகள் தொண்டை நாடு முழுவதும்  பரவின.  புலவர்கள் யாவரும் யோசித்து விடை காண முயன்றனர்; முடியவில்லை.

இக்கேள்விகளை ஒரு பணியாளர்  மூலமாகச் சேக்கிழார் கேள்விப்படுகிறார்.  திருக்குறளைப் படித்துப் பாக்களை நினைவில் கொண்டவரே இவற்றிற்கு எளிதில் விடை கூற முடியும் என தனக்குள்  எண்ணினார்.  அக்கேள்விகளுக்குரிய பதில்களையும் ஒரு ஓலையில் எழுதினார் அவை:

  • மலையிற் பெரியது எது?
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

    (அடக்கமுடமை - 124)

(பொருள்: அடக்கமும் ஒழுக்கமும் உடையவரது வாழ்வு  மலையின் உயர்வினை விட பெரியது. )

  • கடலிற் பெரியது எது?
பயன் துாக்கார் செய்தஉதவி நயன்துக்கின்
நன்மை கடலிற் பெரிது.

     (செய்நன்றி அறிதல் - 103)

(பொருள்:  பயனையும் கருதாமல் செய்யப்படும் உதவியின் சிறப்பு, யோசிக்கும் பொழுது, கடலை விட  பெரியது.)

  • உலகிற் பெரியது எது?
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

     (செய்நன்றி அறிதல் - 102)

(பொருள்:  உரிய காலத்தில் செய்யப்படும் உதவி, சிறியதாக இருந்தாலும், அது செய்யப்படும் சந்தர்ப்பத்தை பொருத்து, உலகத்தை விடப் பெரியதாகும்) 

பரந்துபட்ட தொண்டை நாடு முழுவதும் விடை தேடப்பட்ட இக்கேள்விக்கு தெய்வச்சேக்கிழார் சுவாமிகள் சிறுவயதிலே திருக்குறளைக் கற்றிருந்த காரணத்தினால் தான் மன்னனுடைய சந்தேகத்தை தீர்க்க முடிந்தது என்றால், அந்த காலத்தில் திருவள்ளுவ தேவ நாயனாரின்  திருக்குறளை  அந்நாடு முழுவதும் யார் பரவச் செய்திருப்பார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளுதல்  அவசியமான ஒன்றாகும்.   

 தனது அவையில் இருந்த எல்லோரையும் பார்த்து “தொண்டை நாட்டுப் பெரும் புலவராகிய அருள்மொழித் தேவர் இன்றுமுதல் நமது சோழப் பெருநாட்டிற்கு  முதலமைச்சராக இருப்பார். நான் அவருக்கு உத்தம சோழப் பல்லவராயர் என்னும் பட்டத்தை மனமுவந்து அளிக்கிறேன்!” எனக் கூறி அவர் கழுத்தில் மலர் மாலை அணிவித்தார் சோழ மன்னன். ஆக சாதாரணக் குடியவர் முதலமைச்சராக காரணமாக இருந்தது திருக்குறள் என்பதை வரலாற்று நுாற்களின் ஆசிரியர்களில் ஒருவரான  டாக்டர் மா.ராசமாணிக்கனார் தம் படைப்புகளில் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளார். இத் தெய்வத் தமிழ் இலக்கிய நிகழ்வினை  உலக  தமிழ் அறிஞர்களும்  நன்கு அறிவார்கள். 

(இன்றைக்கு  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டத்தின் வடக்கு – தென்பகுதியில் உள்ள சில குழுக்கள், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம், கடலுார் மாவட்டத்திலுள்ள சில பகுதி, மற்றும் ஆந்திராவிலுள்ள சித்தூர், நெல்லூர் பகுதிகள் ஆகியவற்றை  ஒருங்கிணைந்ததே தொண்டை நாடு). 

பெரியார்கள் போற்றிய பொய்யாமொழி:

  • காசி மாநகர் சென்று தமிழின் சிறப்பினை மாற்று மதத்தவர்க்கு உணர்த்தி  ‘சகலகலாவல்லி மாலை’ பாடி சைவத்தமிழை நிலைநிறுத்தியவர் தாமிரபரணிக் கரை தந்த ஞானபானுக்களில் ஒருவரான ஸ்ரீ வைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் ஆவார்கள். அவர்கள் அருளிச் செய்த நீதிநெறி விளக்கத்தை திருக்குறள் சாரம் என்பர். 
  • சித்தாந்த அட்டகத்தின் ஆசிரியர், சைவ சித்தாந்தக் குரவர்கள் நால்வரில் ஒருவர்,  ‘பெரிய புராணச் சாரம்’ எழுதிய சிவாசாரியார் குலத்திலகம், பணிவுக்கு இலக்கணம் காண்பித்த நம்முடைய சற்குரு கொற்றவன் குடி உமாபதி சிவாசாரிய சுவாமிகள் அருளிய திருவருட்பயன் என்னும் சித்தாந்த நூலை திருக்குறளின் ஒழிபு என போற்றுவர். 
  • புறநானுாற்றை திருக்குறளுக்கு முன்னோடி என்றும், நாலடியாரை திருக்குறளின் விளக்கம் என்றும் துணிந்து தமிழக அரசு போட்டித்தேர்வு பாடத்திட்டத்தில்  குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இவ்விடத்தில்  நினைவில் கொள்க.
ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன 

     -பெருஞ்சித்திரனார்
      (திருவள்ளுவ மாலை- 32)

நேர்மையாளர்கள் கையாளும் நேரிசை

 தமிழிலுள்ள மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றான வெண்பாவின் துணைப் பா வகை, நேரிசை வெண்பா. 

பொதுவாக வெண்பாவுக்கு உரிய இலக்கணங்களைக் கொண்டும், நான்கு அடிகளை உடையதாகவும், இரண்டாவது அடியில் தனிச்சொல்லும், நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ, முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகை உடையனவாக இருக்க, அடுத்த இரண்டு அடிகளும் வேறுவகை எதுகை உடையனவாகவோ இருப்பதை நேரிசை வெண்பா என்பர்.  இதன் அடிப்படையில் வெண்பா செய்யுளில் முன்னிரண்டு அடிகளை  இயற்றி நூலாசிரியர்கள் பின்னிரண்டு அடிகளை அதற்கேற்ற பொருத்தமான  கருத்துடைய  திருக்குறளை வைத்து பூர்த்தி செய்து நூல் இயற்றியுள்ளார்கள். 

வேறு எந்த நூலிற்கும் இல்லாத தனிச்சிறப்பினை நம்நாட்டில் வாழ்ந்த புலவர்கள்  திருக்குறளுக்கு இவ்வாறு தந்துள்ளார்கள். அவை: 

  • சென்னை மல்லையரின் சிவசிவ  வெண்பா 
  • பிறை சாந்தக்கவிராயரின் இரங்கேச வெண்பா 
  • மாதவ சிவஞானயோகிகளின் சோமேசர் முதுமொழி வெண்பா
  • சிதம்பரம் ஈசானிய மடம் ராமலிங்க சுவாமிகள் முருகேசர் முதுநெறி வெண்பா
  • வெள்ளியம்பலவாண முனிவர் அருளிய முது மொழி மேல் வைப்பு
  • கட்டபொம்மனின் பரம்பரையில் வந்த ஜெகவீரபாண்டியரின் திருக்குறள் குமரேச வெண்பா
  • சோழவந்தான் அரசன் சண்முகனார் இயற்றிய வள்ளுவர் நேரிசை
  • மேலும், சினேந்திர வெண்பா, தினகர வெண்பா,  வடமலை வெண்பா,  திருமலை வெண்பா, பெரிய புராண சரித்திர வெண்பா, பழைய விருத்த நுால்,  வைணவ நுாற்களில் ஒன்றான  திருப்புல்லாணி மாலையாகிய இந்நூற்களின்  ஆசிரியர் இன்னார் என உறுதிபடத் தெரியவில்லை.  மேற்கண்ட நூற்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கதாகும்.  
  • சொற்பொழிவாளர்களுக்கு எல்லாம் திலகமாகவும், பூஷணமாகவும்  திகழும் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் திருக்குறள் உரைகளில் முதலில்  படிக்க வேண்டியது பரிமேலழகர் உரை என தனது சொற்பொழிவுகளில்  எடுத்துரைப்பார்.  அவரது உரைக்கு உரையாக உள்ள நூல்  ‘திருக்குறள்  நுண் பொருள் மாலை’. இதனை இயற்றிவர் திருமேனி காரி இரத்தினக் கவிராயர்.   இவர் இராசை வடமலையப்ப பிள்ளையின்  மேல் புலவராற்றுப்படை  பாடிய  ரத்தினக் கவிராயரின் பரம்பரையினர். மாறனலங்காரத்திற்கு பேருரை கண்ட பெரும் புலவர். திருக்குருக்கை பெருமாள் செய்த மும்மணிக்கோவைக்கு விருத்தியுரை  செய்தவர். தொல்காப்பிய நுண்பொருள் மாலையும் இவர் செய்தார் என்றும் கூறுவர். இவரே திருக்குறளுக்கு  ‘நுண்பொருள் மாலை’ என்னும் நுாலினைச் செய்த பெருமைக்குரியவர் ஆவார்கள்.   

திருக்குறளின் சிறப்பினைக் கூறும் மேற்கண்ட நூற்களும் அதன் ஆசிரியர்களும் சைவ வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  திருவள்ளுவ தேவ நாயனாரின் திருக்குறள் முதலில் ஹிந்து சமயத்திற்குச் சொந்தமானது. அதன் பிறகே அது மற்ற சமயத்திற்குரியது என கொள்வது பொருத்தமான  சொற்றொடர்.

கூடுதலாக,  ஹிந்து மதத்தின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றான  சைவ சமயத்தின் சாரம்சத்தைக் கொண்டது திருக்குறள் என கடந்த ஆண்டுகளில் வெளிவந்த  சில நுாற்களும் ஒரு சில செயல்பாடுகளும் வாசிப்பவர்கள் உள்ளத்தில் உள்ளவாறு பதித்துக் கொள்வதற்காக  இங்கே தொகுக்கப்பட்டுள்ளன:

  • தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழத்தின் சார்பாக வெளிவந்த   ‘செந்தமிழ்செல்வி’ இதழில் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என 1926 – 27 இல் கொரடாச்சேரி வாலையானந்த சுவாமிகள்  கட்டுரை ஒன்றினை  எழுதியுள்ளார்..
  • திருமிகு பட்டுச்சாமி ஓதுவார் அவர்களைக் கொண்டு திருப்பனந்தாள் காசித்திருமடம் வெளியீடு செய்த திருக்குறள் உரைக்கொத்து. 
  • திருநெல்வேலி பேட்டை ஆ.ஈஸ்வர மூர்த்தி பிள்ளையவர்கள் திருக்குறள் பொது நுாலா… என்ற வினாவினை எழுப்பி அதற்கு விடை காண்கிறார்கள். 
  • திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனக்கே உரிய பாணியில் திருக்குறள் சைவ நூலா? என்ற கேள்விக்கு சகலவிதமான ஆதாரங்களையும் எடுத்துக்காட்டுகிறார். 
  • காஞ்சிபுரம் சைவ சித்தாந்தப் புலவர் வச்சிரவேலு  முதலியார்  ‘ திருக்குறளின் உட்கிடை  சைவசித்தாந்தமே, திருக்குறள் துலக்கும் ஒழுக்க நெறி’   என்ற இரு  நூற்களை எழுதியுள்ளார்.
  • சமூக நீதி, சமத்துவத்திற்கு முதலில் குரல் கொடுத்தவர்கள் ஹிந்து சமயத்திலுள்ள உயர்வகுப்பினரே. 1942 ஆம் ஆண்டு வெளியான நந்தனார் திரைப்படத்தில் நந்தனாராக நடித்த திருவாவடுதுறை ஆதின வித்துவான் ச.தண்டபாணி தேசிகர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வாயிலாக  ‘திருக்குறள் உரை வளம்’ என்ற நூலையும் வெளியீடு செய்துள்ளார். 
  •  ‘திருக்குறளில் சைவ சிந்தாந்தம்’ என்ற பெயரில் கு.வைத்தியநாதன் தொகுத்த நுாலை திருவாவடுதுறை ஆதினம் சைவ சித்தாந்த பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக வைத்துள்ளது 
  • பி.எல். சுப்பிரமணிய சாஸ்திரிகள், பி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர், ஆர்.நாகசாமி ஆகியோர்  எழுதிய திருக்குறள் தொடர்புடைய நூற்கள் யாவும் வாசிக்க வேண்டியவை  

மேலும் பலரும் அவரவர் தகுதிக்கு ஏற்றியும் போற்றியும் திருக்குறள் பற்றி உரை நுாற்களை எழுதியும், புதிய நுாற்களையும்  செய்துள்ளார்கள்.  

கடந்த மூவிரு மாதங்களாக தினமலர் நாளிதழ் உடன்  வரும் ஆன்மிக மலர் இதழில் பகவத்கீதையும் திருக்குறளும் என்ற தொடர் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

சான்றோர்களால் ஆசி பெற்ற தென்காசி திருவள்ளுவர் கழகம், ராஜபாளையம் திருவள்ளுவர் கழகம், மதுரை திருவள்ளுவர் கழகம் ஆகியவை,  திருக்குறள் கருத்துக்களை எல்லாம் இன்றும் உயிர்ப்போடு மக்களிடையே விதைத்து பரப்பிக் கொண்டிருக்கின்றன. இக்கழகங்கள் நுாற்றாண்டை எட்டியுள்ளன.

இவை தவிர கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக  கம்பர்,  திருவள்ளுவர் பெயரில் தமிழகத் தலைநகர் உட்பட பல்வேறு இடங்களில்  சங்கங்கள் அமைத்து சைவத்தமிழை பேணிக் காத்து வருபவர்களின் தொண்டினை பட்டியலிட பக்கங்கள் போதாது.  

அதுமட்டும் அல்லாது உள்நாடு, வெளிநாட்டிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லுாரிகள் போன்றவற்றில் திருக்குறள் இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அது தொடர்பாக ஆய்வு கருத்தரங்குகள் நடத்தப்பெற்று அவையாவும் நூலாக்கம் செய்யப்பெற்றுள்ளன. 100க்கு மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

திருவள்ளுவ தேவ நாயனார் சொற்படி அப்படியே அப்பழுக்கு இல்லாமல் வாழும் மனிதர்கள்  எத்தனையோ அன்பர்கள்  வாழ்ந்து காட்டி, தன்னைச் சார்ந்தவர்களையும் நல்வழியில் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்காலத்தில் அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மதுரை திருமங்கலத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி  பெ.ராமையா பிள்ளை அவர்களின் திருமகனார் கனகசுப்புரத்தினம் அவர்கள்.  

பலரும் வெளியில் முகம்  காட்டாமல் பெட்டிக்கடைகள், குளிர்பானக்கடைகள், ஹோட்டல்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்  திருக்குறளை  மனனம் செய்து ஒப்புவித்தால் அதற்கு ஊக்கமாக ஆரோக்கிய பொருட்களை  மாணவர்கள் விரும்பிப்  பெறலாம் என சத்தமில்லாமல் திருக்குறளுக்கு தொண்டு செய்து வருகிறார்கள். 

சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் – தோற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல்.

    -ஆசிரியர் நல்லந்துவனார்
     (திருவள்ளுவ மாலை- 18)

(தொடர்கிறது)

$$$

One thought on “குறளைப் போற்றிய பெரியார்களும், ஓர் அரசியல் பதரும்-1

Leave a comment