-டாக்டர் மன்மோகன் வைத்யா
மகாத்மா காந்தி பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றி ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவரின் மிக முக்கியமான கட்டுரை இது; ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் மகாத்மா காந்திக்குமான உறவை ஆவண ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் எழுதியுள்ளார். சங்க வெறுப்புக் கொண்ட ‘மங்கி’ளும், காந்தி வெறுப்புக் கொண்ட ‘சங்கி’களும் படிக்க வேண்டிய கட்டுரை இது...

ஒரு நாளேட்டின் ஆசிரியராக இருக்கும் ஸ்வயம்சேவகர் என்னிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். அவரது நாளேட்டில் காந்திய சிந்தனையாளர் ஒருவர் தொடர் கட்டுரை எழுத உள்ளதாகவும், அவர் தன்னுடன் பேசும் போது, ‘காந்திக்கும் சங்கத்திற்குமான உறவின் தன்மை பற்றி எனக்குத் தெரியும். இருந்தாலும் பலரும் அறியாத வேறு பல விஷயங்களை பற்றி நான் எழுத உள்ளேன்’ என்று கூறியதாகவும் சொன்னார்.
அதைக் கேட்டவுடன், காந்திஜிக்கும் சங்கத்திற்கும் இடையேயான உறவு எப்படி இருந்தது என்பதைப் பற்றி அந்த சிந்தனையாளருக்கு உண்மையிலேயே தெரியுமா? என்ற கேள்வியை நான் எழுப்பினேன். சங்கத்தைப் பற்றிய பல விஷயங்களைப் போலவே காந்திஜிக்கும் சங்கத்திற்குமான உறவு பற்றியும் மக்கள் உண்மையைப் பார்க்காமல் அனுமானத்தின் அடிப்படையிலேயே கருத்து கொண்டுள்ளனர்.
அறிஞர்கள் என கருதப்படுகின்றவர்கள் கூட இந்த விஷயத்தை பரந்த, முழுமையான பரப்பில் பார்க்காமல் தங்கள் கருத்துக்களை எழுதி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட கருத்தியல் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர்களது ஆய்வுகள் கிளர்ந்து எழுவதாக உள்ளன. பல நேரங்களில் அவை அனைத்தும் ‘உண்மை’க்கு வெகு தூரத்தில் உள்ளன.
காந்திஜியின் கருத்துக்கள் சிலவற்றுடன் தீவிரமாக முரண்பட்டாலும், சங்கத்திற்கும் காந்திஜிக்கும் இடையேயான உறவு பற்றி ஆதாரத்துடன் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. முஸ்லிம் மத தீவிரவாதிகளிடமும் ஜிஹாதிகளிடமும் காந்திஜி சரணடைந்து சென்றது அறிவார்ந்தது அல்ல என்று ஆர்எஸ்எஸ் உறுதியாக நம்பிய போதிலும், பாரதத்தின் விடுதலைப் போராட்டத்தில் வெகு ஜனங்களை பங்கேற்கச் செய்ய காந்திஜி மேற்கொண்ட சுயமான யுக்திகளை ஆர்எஸ்எஸ் வெகுவாகப் பாராட்டி, வரவேற்கிறது.
நூற்பு சக்கரம் போன்ற எளிய கருவிகளைக் கொண்டும், தோல்வியே இல்லாத, முட்டாள்களுக்கும் புரியக்கூடிய ‘அகிம்சை போராட்டம்’ என்ற வழிமுறையின் மூலம் சாதாரண மக்களையும் விடுதலைப் போராட்டத்தில் பெருவாரியாக கலந்துகொள்ள வைத்தார். இவை அவரது உயர்வுக்கும் சாதனைகளுக்கும் சான்றாக உள்ளன. இதைப் புரிந்து கொண்டால் கிராம ஸ்வராஜ்யம், சுதேசி, பசுப் பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற பல்வேறு நேர்மறையான திட்டங்களை அவர் வலியுறுத்தியதையும் எவரும் மறுக்காமல் ஏற்றுக் கொள்வார்கள்.
அழிவற்றதாக இருக்கும் ஹிந்து சிந்தனைகள் மீது அவருக்கு இருந்த பற்றும் அவற்றைக் காப்பதில் அவருக்கு இருந்த உறுதியும் போற்றத் தக்கவை. அவரது நெறி சார்ந்த வாழ்க்கை பல இளைஞர்களை தேச சேவையில் தங்கள் வாழ்க்கையையும் அர்ப்பணிக்க தூண்டுவதாக இருந்தது.
ஆர்எஸ்எஸ்ஸின் ஸ்தாபகரான டாக்டர் ஹெட்கேவார் காந்திஜியின் தலைமையில் 1921இல் நடந்த ஒத்துழையாமைப் போராட்டத்திலும் 1930இல் நடந்த சட்டமறுப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டார். அதற்காக, 1921 ஆகஸ்ட் 19 முதல் 1922 ஜூலை 12 வரையிலும் அதன் பிறகு 1930 ஜூலை 21 முதல் 1931 பிப்ரவரி 14 வரையிலும் இரண்டு முறை தீவிர சிறைத் தண்டனை பெற்றார்.
1922 மார்ச் 18 ஆம் தேதி மகாத்மா காந்திஜிக்கு ஆறாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு மாதமும் 18 ஆம் தேதி ‘காந்தி தின’மாக அனுஷ்டிக்கப்பட்டது. காந்திஜி சிறையில் இருந்த போது காந்திஜியின் சீடர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டவர்கள், தேசபக்தியின் பெயரால் சுயநலத்துடன் செயல்பட்டனர்.
1922 அக்டோபர் 18 ஆம் தேதி நடந்த காந்தி தின நிகழ்வில் மேற்கண்ட சுயநலவாதிகளை இடித்துரைக்கும் வகையில் டாக்டர் ஹெட்கேவார், ‘இந்த நாள் ஒரு புனித நாள். மேன்மையான ஆத்மாவான மகாத்மாஜி தன் வாழ்வில் கடைபிடிக்கும் உயர்ந்த பண்புகளை பற்றி கேட்கவும் அதைப்பற்றி சிந்திக்கவும் வேண்டிய நாள். அவருடைய சீடர்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள் அந்த நற்பண்புகளை தங்கள் வாழ்விலும் பின்பற்றி காட்ட வேண்டிய கூடுதல் பொறுப்பு உள்ளது’ என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
1934 இல் வார்தாவில் ஜமன்லால் பஜாஜ் வீட்டில் காந்திஜி தங்கி இருந்தார். அதற்கு அருகில் ஆர்எஸ்எஸ்ஸின் குளிர்கால பயிற்சி முகாம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்தார். அதை நேரில் பார்க்க விருப்பப்பட்டு வந்தார். முகாம் பொறுப்பாளர்கள் அவரை அன்புடன் வரவேற்றனர். முகாமில் இருந்த ஸ்வயம்சேவகர்கள் பலரும் காந்திஜியுடன் உரையாடினர்.
அந்த உரையாடல்களில் இருந்து, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஸ்வயம்சேவகர்களும் அந்த முகாமில் கலந்துகொண்டு இருப்பதுடன் அங்கிருந்த எல்லோரும் சகஜமாக கலந்துறவாடுவதை காந்திஜி அறிந்து கொண்டார். அங்கிருந்த ஸ்வயம்சேவர்கள் எந்தவித வேறுபாடும் இல்லாமல் பழகுவதையும் கண்டார். இந்த உண்மை அவருக்கு பெரிய மகிழ்ச்சியை அளித்தது. அந்த மகிழ்ச்சியை அவர் திறந்த மனத்துடன் வெளிப்படுத்தினார்.
தேச விடுதலைக்குப் பிறகு காந்திஜி தில்லியில் தங்கியிருந்தார். அவர் தங்கி இருந்தது பங்கி காலனி எனப்படும் தூய்மைப் பணியாளர் குடியிருப்பு. அவர் தங்கி இருந்த இடத்திற்கு நேர் எதிரே ஆர்எஸ்எஸ்ஸின் பிரபாத் (காலை) ஷாகா நடந்து வந்தது. காந்திஜியின் வேண்டுகோளுக்கிணங்கி 1947 செப்டம்பர் 16 ஆம் தேதி அந்த பகுதியை (மண்டல்) சேர்ந்த ஐநூறு ஸ்வயம்சேவகர்கள் கூடினர்.
அவர்களிடையே உரையாற்றிய காந்திஜி தனது பேச்சை இப்படித் தான் தொடங்கினார், “பல ஆண்டுகளுக்கு முன்பு வார்தாவில் ஆர்எஸ்எஸ் முகாமிற்கு வந்திருந்தேன். அப்பொழுது (சங்க) ஸ்தாபகர் திரு. ஹெட்கேவார் உயிருடன் இருந்தார். காலம் சென்ற ஜமன்லால் பஜாஜ் ஜி என்னை அந்த முகாமிற்கு அழைத்துச் சென்றார். அவர்களிடையே இருந்த கட்டுப்பாட்டையும் எளிமையையும் தீண்டாமை அறவே இல்லாத நிலைமையையும் கண்டு வியந்து பாராட்டினேன்.”
“அப்போது இருந்ததை விட சங்கம் இப்பொழுது மேலும் வளர்ந்துள்ளது. சேவை மனப்பான்மையும் சுய தியாகத்தையும் உந்துசக்தியாகக் கொண்ட எந்த ஒரு அமைப்பும் நிச்சயம் வலிமை பெறும் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை” என்றார்.
(ஆதாரம்:
மகாத்மா காந்தியின் முழுமையான நூல் தொகுப்பு: பாகம் 86 – பக்கம் 193 -194)
***
1948 ஜனவரி 30 ஆம் நாள் ஆர்எஸ்எஸ்ஸின் சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி சென்னையில் இருந்த போது அவருக்கு காந்திஜி கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. அன்றே அவர் காந்திஜியின் முதல் மகனான திரு. தேவதாஸ் காந்திக்கும் பண்டித ஜவஹர்லால் நேருக்கும் வல்லபபாய் பட்டேலுக்கும் தனது இரங்கல் செய்தியை தந்தி மூலம் அனுப்பினார்.
அதில், ‘மகத்தான ஆளுமை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள சோகமான பேரிழப்பையும் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இக்கட்டான நேரத்தில் தேசத்திற்கு ஏற்பட்டுள்ளது சொல்லொணாப் பேரிழப்பாகும். அனைவரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்துச் செல்பவரின் இழப்பு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பவும், தங்கள் தோள்களில் மேலும் கூடியுள்ள பாரமான பொறுப்பை தாங்கவும் இறைவன் அருள் புரிவானாக’ என்று குறிப்பிட்டிருந்தார்.
மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் 13 நாட்களுக்கு தங்களது இயக்கச் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கும்படி சொல்லிவிட்டு, தனது பயணத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு, உடனடியாக நாகபுரிக்குத் திரும்பினார் ஸ்ரீ குருஜி.
1948 ஜனவரி 31 ஆம் தேதி பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினார். அதில், ‘ஒரு வக்கிரம் பிடித்த மனிதன் தனது கொடூரமான செயலின் மூலம் பூஜ்ஜிய மகாத்மாஜியின் வாழ்வை திடீரென்று ஒரு தோட்டா மூலம் முடித்து விட்டான் என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தியை நேற்று சென்னையில் இருந்த போது அறிந்தேன். அருவருக்கத்தக்க அந்த செயல் உலகின் பார்வையில் நம் சமுதாயத்தின் மீது ஒரு கரும்புள்ளியாகும்’ என்று எழுதியுள்ளார்.
இது விஷயமான கடிதத் தொடர்புகளை முழுமையாக, ‘ஜஸ்டிஸ் ஆன் ட்ரையல் மற்றும் ஸ்ரீ குருஜி’ முழுமையான தொகுப்பில் காணலாம்.
***
மகாத்மா காந்தியின் நூற்றாண்டை முன்னிட்டு 1969 அக்டோபர் 6 ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள சாங்கிலியில் காந்திஜியின் சிலையைத் திறந்து வைத்தார் ஸ்ரீ குருஜி. அப்போது நிகழ்த்திய உரையில், ‘முக்கியமான, ஒரு புனிதமான நிகழ்வுக்காக நாம் இங்கு கூடியுள்ளோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு சௌராஷ்டிராவில் ஒரு குழந்தை பிறந்தது. அதே நாளில் பல குழந்தைகள் பிறந்திருக்கலாம். ஆனால் அவர்களின் நூற்றாண்டை நாம் கொண்டாடவில்லை. மகாத்மா காந்தி மற்ற சாதாரண மனிதர்களைப் போலப் பிறந்திருக்கலாம். ஆனால் அவரது இதயத்தில் ஊறிய அன்பினாலும் அவரது செயல்களினாலும் அவர் மாமனிதரனார். அவர் வாழ்ந்து காட்டியபடி நாமும் அதே கொள்கைகளை பின்பற்றி நம் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வோமாக’ என்றார்.
மேலும் பேசுகையில், “மகாத்மா காந்தி மண்ணைப் பொன்னாகியவர். சாதாரண மனிதனில் இருந்து அசாதாரணமான மனிதரை வெளிக்கொணர்ந்தவர். இந்தக் காரணத்தால் தான் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதானது. மகாத்மா ஜி அடிக்கடி சொல்லியுள்ளார், ‘நானொரு தீவிரமான ஹிந்து. அதனால் மனிதர்களை மட்டுமல்ல வாழ்வின் எல்லா வெளிப்பாடுகளையும் படைப்புகளையும் நேசிக்கிறேன்’. அவர் வாழ்க்கையில் சத்தியமும் அஹிம்சையும் முதன்மையாக இருந்தது. இந்துத்துவத்தின் மீதிருந்த ஆழ்ந்த பிடிப்பிலிருந்தே அவரது அரசியல் கொள்கைகள் முளைத்தெழுந்தன….”
“…இன்று நாம் அடிக்கடி விவாதிக்கின்ற ‘ஹிந்து தர்மம்’ என்ற விஷயத்தைப் பற்றி அவர் தனது கருத்துக்களை ‘ஹிந்துயிஸத்தின் எதிர்காலம்’ என்ற நூலில் எழுதியுள்ளார். அதில் அவர் ‘ஹிந்து தர்மம் மட்டுமே ஞானத் தேடலுடன் தொடர்ந்து, எங்கும் நிற்காமல், வளர்ந்து வருகிறது. இன்று இந்த தர்மம் தொய்வடைந்ததாக, நமக்கு முன்னேற உத்வேகம் அளிக்காமல் இருப்பதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் நாம் தொய்வடைந்து, களைத்துப் போய் உள்ளோமேயன்றி தர்மம் தொய்வடையவில்லை’என்று குறிப்பிட்டுள்ளார். ‘ நாம் அசதியிலிருந்து விடுபடும் அந்தக் கணமே ஹிந்து தர்மமும் பீறிட்டுக் கிளம்பும். இதுவரை நிகழாத வண்ணம் மிகப்பெரிய அளவில் ஹிந்து தர்மமானது தனக்கே உரிய பிரகாசத்துடன் ஒட்டுமொத்த உலகம் காணும்படி ஒளிரும்’ என்றும் காந்திஜி எழுதி உள்ளார். மகாத்மாஜியின் தீர்க்கச் சொல்லை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது…”
“….நாட்டிற்கு பொருளாதார, அரசியல் சுதந்திரம் தேவைப்படுகிறது. அதுபோல மதச் சுதந்திரமும் தேவைப்படுகிறது. மற்றொரு மதத்தை, மதப் பிரிவை எவரும் அவமரியாதை செய்யக் கூடாது. எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டும். அந்நிய நாட்டு சிந்தனைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும். இதுவே காந்திஜியின் போதனைகளின் சாரமாகும்…”
“…நான் அவரை பலமுறை சந்தித்துள்ளேன். அவருடன் பல விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளேன். அவர் கூறிய கருத்துக்களைப் பற்றி என் புரிதலை, அலசலைத் தான் நான் சொல்லியுள்ளேன். எனவே, என் மனசாட்சியின் படி சொல்கிறேன், நான் காந்திஜியை மிகவும் மதிக்கிறேன்.”
குருஜி சொல்கிறார், “நான் கடைசியாக காந்திஜியைச் சந்தித்தது 1947 இல். ஆட்சி அதிகாரம் கைவரப் பெற்றதும் அரசியல் தலைவர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். அதே வேளையில் தில்லியில் கலவரம் வெடித்தது. மரபாகவே வன்முறை அற்றவர்களாக இருந்தவர்கள்கூட மிகவும் கொடூரமாகவும் அயோக்கியத்தனமாகவும் இதயமே அற்றவர்களாகவும் நடந்து கொண்டனர். நான் அப்போது அதே தில்லியில் அமைதி ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தேன். உள்துறை அமைச்சரான சர்தார் பட்டேலும் அதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். இந்த பின்னணியில்தான் நான் மகாத்மா காந்தியைச் சந்தித்தேன்…”
“என்ன நடக்குது பார்த்தீங்களா?’ என்று மகாத்மாஜி என்னிடம் கேட்டார் . அதற்கு நான், ‘இது நமது துரதிர்ஷ்டம். பிரிட்டிஷார் சொல்வார்கள், நாங்கள் போய்விட்டால் நீங்கள் ஒருத்தர் கழுத்தை மற்றொருவர் அறுத்துக் கொள்வீர்கள் என்று. இன்று அது நடக்கிறது. இது ஒட்டுமொத்த உலகின் முன்பு நமக்கு அவமரியாதையை ஏற்படுத்துகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்’ என்று பதிலளித்தேன்….”
அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி என் பெயரைக் குறிப்பிட்டு, என்னுடைய உயர்ந்த நோக்கத்தையும் சிந்தனைகளையும் கூடி இருந்தவர்களின் முன்வைத்தார். தேசத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். மகாத்மாஜி என் பெயரை குறிப்பிட்டுப் பேசியது தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைத்த கௌரவம். இவைதான், காந்திஜியை நாம் பின்பற்ற வேண்டுமென நான் வற்புறுத்தி கூற காரணம்….”
“…நாம் காந்திஜியின் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்பட்டால் மகத்தான ஹிந்து தர்மத்தை விழித்தெழச் செய்து, இதுபோன்ற பாடங்களைக் கற்கலாம். தர்மம் இல்லாவிட்டால் மனித சமுதாயம், விலங்குகளை போல, ஒருவர் மற்றவரை அழித்து விடுவோம். ஹிந்து தர்மத்தை விழிப்புறச் செய்வதன் மூலம் சமுதாயத்தின் உள்ள ஒவ்வொரு தனி நபரிடமும் சிறந்த பண்புகளை மிளிரச் செய்ய முடியும்…”
“…உலக அரங்கில் நாம் முன்மாதிரியான சமுதாயமாக, அன்பான ஒத்திசைவு கொண்ட தேசமாக நிற்க நாம் முடிவெடுக்க வேண்டும். இதற்காகத் தான் மகாத்மாஜி போன்ற உயர்ந்த ஆளுமைகளைப் பற்றி என்னுடைய உணர்வுகளை, மதிப்புகளை வெளிப்படுத்தி வருகிறேன்” என்று குருஜி பேசியுள்ளார்.
(ஆதாரம்:
ஸ்ரீ குருஜியின் முழுமையான தொகுப்பு: பாகம் 1 -பக்கம் 208-221.)
***
நான் வதோதராவில் பிரசாரக்காக (1987-90) இருந்தபோது சக சர்காரியவாஹ் (துணைப் பொதுச் செயலாளர்) யாதவ்ராவ் ஜோஷி ஒரு உரை நிகழ்ச்சியில் காந்திஜியைப் பற்றி மிக உயர்வாகப் பேசினார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு காரியகர்த்தா அவரிடம், ‘நீங்கள் மகாத்மா காந்தியைப் பற்றி உயர்வாகப் பேசியது அனைத்தும் நெஞ்சாழத்தில் இருந்து உண்மையாகத்தான் பேசினீர்களா?’ என்று கேட்டார்.
அதற்கு யாதவ்ராவ் ஜி, ‘நான் அரசியல்வாதி அல்ல. எனவே நான் இதயப்பூர்வமாக நம்பாத விஷயத்தைப் பேசுவதில்லை. ஒருவரை மதிப்பது என்றால் அவரது கருத்துக்கள் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வது என்றாகாது. அவரது சிறப்பான பண்புகளை நினைவு கூர்வதும் போற்றுவதுமாகும்’ என்றார்.
ஆர்வத்துடன் கேள்வி கேட்ட அந்த ஸ்வயம்சேவகருக்குப் புரிய வைக்கும் விதமாக, அவர் தன் கருத்தை மகாபாரதத்தில் வரும் பீஷ்ம பிதாமகரின் உதாரணத்தைக் கொண்டு மேலும் விளக்கினார். அவர் சொன்னார், “பீஷ்மரை நாம் அவர் மேற்கொண்ட உறுதியான சபதத்திற்காக நினைவு கூர்கிறோம். அரசவையில் கௌரவர்கள் திரௌபதியை அவமானப்படுத்தும் போது அவர் அமைதியாக இருந்தார் என்பதை நினைவு கூர்வதில்லை.”
“அது போலவே, காந்திஜி இஸ்லாமிய மத வெறியர்களுடனும் ஜிகாதி முஸ்லிம் தலைவர்களுடனும் சமரசம் செய்து கொண்டதைப் பற்றி நமக்கு கடுமையான கருத்து வேறுபாடு இருந்த போதிலும், சாதாரண மக்களின் மனதில் அந்நிய அரசுக்கு எதிரான ‘ஒத்துழையாமை’ என்ற தீயை ஏற்றி, விடுதலை வேட்கையை அவர்களிடம் ஏற்படுத்தினார். பாரதிய வாழ்க்கை முறையின் அடிப்படையில் பல விஷயங்களை வலியுறுத்தினார். ‘சத்யாகிரஹம்’ என்ற வடிவில் பொது ஜனங்களின் எதிர் உணர்வை வெளிப்படச் செய்தார். இவையெல்லாம் பாராட்டத்தக்கது மட்டுமல்ல, உத்வேகம் அளிப்பவை” என்று விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் காந்திஜிக்கும் சங்கத்துக்குமான உறவு பற்றி விமர்சிப்பது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது; விரும்பத்தக்க செயலும் அல்ல.
சங்கம் காந்திஜியின் கருத்துக்களை தனது கிராம மேம்பாட்டுத் திட்டங்கள், இயற்கை விவசாயம், பசுப் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு, சமுதாய நல்லிணக்கம், சமூக சமத்துவம், தாய்மொழியில் கல்வி, சுதேசிப் பொருளாதாரம், சுதேசி வாழ்வியல் போன்றவற்றின் மூலம் முன்னெடுத்து வருகிறது. இவற்றை நாம் தொடர்ந்து செயல்படுத்துவோம்.
தேர்தல் நேரத்தின் போது மட்டுமே அவரை நினைவு கூர்பவர்களுக்கு இதை விட அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரது நினைவுக்கு எனது புகழஞ்சலியைச் செலுத்துகிறேன்.
குறிப்பு:
திரு. டாக்டர் மன்மோகன் வைத்யா, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அகில பாரத இணை பொதுச் செயலாளர்.
ஆங்கில மூலம்: இண்டியன் எக்ஸ்பிரஸ் (12.04.2019).
தமிழாக்கம்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$