-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #51...

51. நாமாக இருப்போமா?
அர்ச்சனைத் தட்டு ஏந்தி பக்தி சிரத்தையுடன்
அம்மனை வழிபடச் செல்கையில்
கருவறைக்குள் எரியும் ட்யூப் லைட்
நம்மைக் கதிகலங்க வைப்பதில்லை.
(யார் இதை மாட்டியிருப்பார்கள்?
யார் இதைப் பழுது பார்ப்பார்கள்?)
பிரகார இருட்டு அறையில் பூட்டப்பட்ட
கருவறை குத்துவிளக்குகள் முன்னால்
நம் தெய்வங்கள் நீர் கோத்த விழிகளுடன்
அடைந்து கிடப்பதும் நமக்குத் தெரிவதில்லை.
பொட்டு வைத்து பூச்சூடி பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகள்
பாழ் நெற்றியுடன்
விரித்த தலையுடன் திரும்பி வருவதை
வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
குடும்பத்துடன் குதூகலமாக நேரத்தைக் கழிக்க
குத்துப் பாடல்கள் நிறைந்த திரைப்படங்களுக்குச்
சென்றுவிட்டுத் திரும்புகையில்
குழந்தைகளின் கழுத்தில்
குட்டிக் குருசு முளைப்பதைக் கவனிப்பதே இல்லை.
குலதெய்வக் கோயிலுக்குப் புறப்படும்
நீண்ட நெடிய பயணத்துக்கான வாடகை டாக்ஸியில்
‘என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்’ ஸ்டிக்கர்
ஒட்டப்பட்டிருப்பதைக் கவனிப்பதே இல்லை.
(புனித யாத்திரையின் முதல் காணிக்கையே தசம பாகம் தான்).
ஒருவேளை கவனித்து
அடுத்தமுறை எச்சரிக்கையுடன்
இந்து பெயருள்ள வாகன ஓட்டியைத் தேர்ந்தெடுத்து அழைத்தால்,
அவருக்கான வங்கி கணக்கில் குல்லா மின்னும்
(அது நம் தலையில் வைத்த குல்லாதான்).
மருத்துவப் பரிசோதனைகளுக்கு முன் கழற்றப்படும் தாலி…
விளக்கேற்றும் மாலை நேரங்களில்
மூடப்படும் வீட்டுக் கதவுகள்…
விழாக் காலங்களில் நடுவீட்டில் கேட்கும்
தொலைகாட்சி ஒப்பாரிகள்…
விரத நாட்களில் அறிவிக்கப்படும் பிரியாணி ஆஃபர்கள்…
சுற்றுலா மையங்களாகும் மலைக் கோயில்கள்…
டிசம்பர் மாதம் முழுவதும்
கிறிஸ்மஸ் கொண்டாடும் கார்ட்டூன் கதாபாத்திரகள்….
மதச்சார்பற்ற அரசுகளின் முடிவற்ற சலுகைகள்…
மூன்று பக்கம் கடல்… நான்கு பக்கம் க்ரிப்டோக்கள்!
கண்டத் தட்டுகள்
கண்ணுக்குத் தெரியாமல் நகர்கின்றன.
பனி மலை உருகி
கரைபுரண்டு ஓடிய நதி
மெள்ள மெள்ள வற்றுகிறது.
முழுவதும் வற்றினாலும்
சூட்சும நதியாக ஓடிக்கொண்டு தான் இருக்கும்.
ஆனால்
கண் முன் ஓடும் நதிகள் எல்லாம் கூவங்களாகி வருகின்றன.
பச்சிளம் பாலகனைச் சுற்றிலும் பாய்மார்கள்.
சிந்து சாகரம் அரபிக் கடலாகிவிட்டது
நம் சிந்தையில் உறைக்கவே இல்லையே!
இந்துஸ்தான் இந்தியாவானதும் புரியவே இல்லையே!
ஆனால்
இந்துஸ்தான் பெயர் மீண்டும் சூட்டவும் படலாம்.
(இந்தோனேஷியாவில் பெயர்ப் பலகைகளில் எல்லாம்
இன்றும் இந்து மயம்தானே).
காவிக் கொடி பறக்க வேண்டிய கோட்டையில்
வெண்ணிறக் கொடி பறந்தால் வேறென்ன நடக்கும்?
தர்ம சாஸ்திரம் கோலோச்ச வேண்டிய தேசத்தில்
ஆப்ரஹாமிய அரசியல் சாசனம் கோலோச்சினால்-
தேசம் இருக்கும்…
கட்சிகள் ஜெயிக்கும்…
வளர்ச்சிகள் இருக்கும்…
நாமும் இருப்போம்…
ஆனால்,
நாமாக இருக்க மாட்டோம்.
$$$