உருவகங்களின் ஊர்வலம்- 49

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #49.. தமிழக அரசியலை சுயபகடி செய்யும் நவீனக் கவிதை....

49. பதில் சொல்வானா விக்கிரமாதித்தன்?

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்யன்
வேதாளத்தை முருங்கை மரத்தில் இருந்து இறக்கித்
தன் தோளில் போட்டுக்கொண்டு புறப்பட்டான்.

ஒரு கதை சொல்வேன்…
இறுதியில் ஒரு கேள்வி கேட்பேன்…
வாய் திறந்து பதில் சொன்னால்
நான் மரத்தில் ஏறிவிடுவேன்.
பதில் தெரிந்தும் சொல்லாவிட்டால்
உன் தலை சுக்கு நூறாகிவிடும்….
டீல் ஓக்கேவா என்றது வேதாளம்.

விக்ரமாதித்தனும்
மிகுந்த எச்சரிக்கையுடன்
மெதுவாகத் தலையசைத்து ’சரி’ என்றான்.

வேதாளம் தொண்டையைக் கனைத்துக்கொண்டு,
’எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த கதைதான்.
இருந்தும் சொல்லித் தொலைக்கிறேன்’
என்று சொல்ல ஆரம்பித்தது.

ஒரு நாட்டில் ஒரு பெரிய ஹோட்டல் இருந்தது
நாடு முழுவதும் அதன் பல கிளைகள்
நல்லவிதமாக இயங்கிக் கொண்டிருந்தன.
ஆனால்,
சில நகரங்களில் இருந்த கிளைகள் மட்டும்
செல்ஃப் எடுக்கவே இல்லை.
இத்தனைக்கும் எல்லாக் கிளைகளிலும்
ஒரே தரமான உணவு வகைகள்,
ஒரே மாதிரியான பயிற்சி பெற்ற சமையல்காரர்கள்,
ஒரே மாதிரியான சர்வர்கள்,
ஒரே மாதிரியான டேபிள் க்ளீனர்கள்,
ஒரே மாதிரியான விலை,
ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி.,
இருந்தும் சில கிளைகளில்
என்ன செய்தும் எதுவும் பலிக்கவே இல்லை.

கதை நடக்கும் ஊரில்
இன்னொரு ஹோட்டலும் இருந்தது.
பெயரில்தான் ஹோட்டல் இருக்குமே தவிர,
காபரே டேன்ஸ் தொடங்கி
கழைக்கூத்தாடி வித்தைவரை அனைத்தும் அங்கு நடக்கும்.

சம உயரமுள்ள நாற்காலிகள்
எங்கள் கடையில் மட்டுமே போடப்பட்டிருக்கின்றன –
என்ற சவடால் வாசகம் முகப்பில் எழுதி மாட்டியிருக்கும்.

நயமான,
தரமான,
சுத்தமான பொருட்கள்
எங்களிடம் மட்டுமே கிடைக்கும் என்று
மூத்திரச் சந்துகளில் எல்லாம்கூட
முழுச் சுவரிலும் எழுதி வைக்கப்பட்டிருக்கும்.

சாப்பிட்டுவிட்டு நீங்கள் பணம் தரவேண்டிய அவசியமே இல்லை…
(அவர்களே எடுத்துக்கொண்டு விடுவார்கள்)
பாதிப் பொருளை இலவசமாகத் தருவார்கள்…
மீதிப் பொருளில் விலையை
மீட்டர் வட்டிபோல ஏற்றிவிடுவார்கள்.

அவர்களுடைய பவுன்சர்கள்
வேறு கடைக்குப் போகிறவர்களை
ஏறுடா வண்டியில என்று
கொத்தாக அள்ளுவதில் கில்லாடிகள்.

பெரிய கடையில வாங்கித் தின்றால்
வயத்தால போகும்…
வாந்தியா வரும்…
குடல் கெட்டுப் போகும்…
குஷ்ட ரோகம் வரும்…
கை கால் முடங்கிப் போகும்…
எய்ட்ஸ் கூட வரும் என்றெல்லாம்
வீதி முழுக்க விளம்பரத் தட்டிகள் வைத்திருப்பார்கள்.

கையில கம்பு வெச்சிருக்கறவன் சொன்னால்
கரெக்டாத்தான் இருக்கும் என்று
எல்லாரும் நம்புவார்கள்தானே?

குடும்ப, வாரிசு அறைகளுக்குள் மட்டும்
குளிர்பதன வசதி உண்டு.
என்றாலும்
அதை ஒரு குறையாக யாருமே நினைக்க மாட்டார்கள்.

க்ரிப்டோக்கள் சாப்பிட்டதுபோக எஞ்சியவையே
அங்கு பரிமாறப்படும் என்றாலும்,
அதைக் கேள்வி கேட்டால்
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள்
எனவே,
சோற்றால் அடித்த பிண்டங்கள்
சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று
அந்த ஹோட்டலிலேயே
ஆயுசு முழுவதும் அடைந்து கிடக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக
அந்த ஊரில் இருக்கும் கூத்துக் கலைஞர்களைக் கொண்டு
அந்த ஹோட்டலின் உணவே
அகிலத்தில் சிறந்தது என்று
நாளொரு புராணம்,
பொழுதுதொரு நாடகம் நடத்திக்கொண்டே இருப்பார்கள்.

அதுதான் அந்த ஹோட்டலின் வெற்றிக்கு
ஆதியிலிருந்தே காரணம் என்று தெரிந்த பின்னரும்
அவர்களை அம்பலப்படுத்தவோ
அப்புறப்படுத்தவோ யாரும் எதுவுமே செய்ய மாட்டார்கள்.

பெரிய ஹோட்டல் பெரிய புள்ளிகள்
நாம் உண்டு; நம் ஹோட்டல் உண்டு என்று
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்பார்கள்.

நாலு பேர் வந்து சாப்பிடத்தான்
ஹோட்டல் நடத்துகிறார்களா என்று சந்தேகம் வரும்வகையில்,
பிரம்மாஸ்திரத்தைக்கூடப் பிரயோகிக்க மாட்டேன் என்று
பீஷ்ம பிரதிக்ஞை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
அப்படியாக…
எதிர் ஹோட்டலில் கூட்டம் எப்போதும் அம்மும்.
இந்த ஹோட்டலில் கூட்டம் எப்போதும் பம்மும்.

*

பெரிய ஹோட்டல் பெரிய மனிதர்கள்
தங்கள் கிளையை தங்கக் கிளையாக்குவதற்காக
புதிய வகை டிஷ்களை அறிமுகம் செய்யலாம் என்று
ஒவ்வொரு முறையும் திட்டமிடுவார்கள்.

பைடக், ஷிபிர், மண்டல், பண்டல்
எல்லாம் களை கட்டும்.
பயப்பட வேண்டாம்…
இவையெல்லாம் புதுவகை டிஷ்கள் அல்ல
என்னவகை டிஷ் என்று
எல்லாரும் கூடி முடிவெடுக்கும் கூட்டங்கள்!

இனிப்பு மட்டுமே கொடுத்தால் போதாது.
அவற்றுடன் கொஞ்சம் உப்புப் பண்டங்களையும் சமைத்து வைப்போம்
என்று ஒருவர் சொல்வார்.

வேண்டாம்;
கொஞ்சம் புளிப்புப் பண்டங்களைச் சமைத்து வைப்போம்
என்று அடுத்தவர் சொல்வார்.

வேண்டாம்;
கொஞ்சம் காரப் பண்டங்களைச் சமைத்து வைப்போம்
என்று இன்னொருவர் சொல்வார்.

வேண்டாம்;
அவற்றுடன் கொஞ்சம் கசப்புப் பண்டங்களையும் சமைத்து வைப்போம்
என்று வேறொருவர் சொல்வார்.

கடைசியாக அனைவரும் சேர்ந்து
கொஞ்சம் உப்பு,
கொஞ்சம் புளி,
கொஞ்சம் காரம்,
கொஞ்சம் கசப்பு என
அறுசுவை பண்டங்களையும் அங்கு
அருமையாக உற்பத்தி செய்து வைப்பார்கள்.

ஆனால்,
இவர்கள் அண்டா அண்டாவாகச் செய்து வைத்தும்,
தெருத்தெருவாகச் சென்று கூவிக் கூவி அழைத்தும்,
ஒரு பிக்கியும் இவர்கள் கடையில் சாப்பிட வர மாட்டார்கள்.

ஒரு முறையாவது கடைக்குள் ஒருவராவது வந்து
சாப்பிட்டுப் பார்த்தால்தான் சுவை தெரியும்;
ஆனால்,
சுவை தெரிந்தால்தானே சாப்பிட வருவார்கள்?

முட்டையா… கோழியா…
முதலில் வரப்போவது எது?

*

தப்பித் தவறி யாரேனும் சாப்பிட வந்தால்
அவர்கள் கார உணவுப் பிரியர்களாக இருந்தால்
அவர்கள் அமர்ந்து சாப்பிடும் மேஜைக்கு எதிராக
இருக்கும் தொலைகாட்சியில்
உப்புப் பண்டங்களின் பெருமை
கசப்புப் பண்டங்களின் பெருமை…

சொல்ல மறந்துவிட்டேனே,
கார உணவைப் பற்றி
பெரிய ஹோட்டல்காரர்கள் சொன்ன சில கண்டனங்கள்
பைட் பிசகாமல் ஒளிபரப்பாகும்.
அல்லது அங்கு ஓடும் ஃபேன்
திடீரென்று ஆஃப் ஆகிவிடும்.

ட்யூப் லைட் மினுக் மினுக் என்று கண் மூட ஆரம்பித்துவிடும்.
பெரிய ஹோட்டலின் மெயின் ஸ்விட்ச்
எதிர் ஹோட்டலில் இருப்பது
யாருக்கும் தெரியாது.
(அல்லது)
எல்லாருக்கும் தெரியும்.

இப்படியாக,
எல்லாம் எப்போதும்போல நடந்துவரும் காலையில்
உன்னைப் போலவே சற்றும் மனம் தளராத
பெரிய கடைக்காரர்கள்
தங்கள் கடையைத் தங்கக் கடையாக்க
மீண்டும் புதிதாக ஒரு நபரை நியமித்தனர்.
அவர்
என் கடையில் இனிமேல் இனிப்பை மட்டுமே கொடுப்போம்…
எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எதுவும் தேவையில்லை என்றார்.

அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
முன்புபோலவே அரும்பாடுபட்டு சமைத்தனர்.
இந்த முறை வெல்லப்பாகு உருக்கிய மணமும்
நெய் காய்ச்சிய மணமும் வீதியெங்கும் நிரம்பியது.
பக்கத்துத் தெருவில் சாப்பிடப் போனவர்கள் கூட
இந்த ஹோட்டல் இருக்கும் தெரு நோக்கி வர ஆரம்பித்தனர்.

பெரிய ஹோட்டல்காரர்களுக்கு ஒரே கொண்டாட்டம்
பழைய சமையல்காரர்களும்
பரிமாற ஓடோடி வந்தனர்
ஆனால், வந்த வாடிக்கையாளர்கள்
கடைக்குள் எட்டிக் கூடப் பார்க்காமல்
வழக்கமான கடைக்கே வரிசை கட்டிச் சென்றுவிட்டனர்.

பழைய ஆட்கள் வந்ததால்
பழைய மாதிரியேதான் இருக்கும் என்று நினைத்து
யாரும் வராமல் போனார்களா?

யாரும் வராமல் போகத்தான் செய்வார்கள் என்று
பழியைப் பழைய ஆட்கள் மீது போடத் தோதாக
பழைய ஆட்கள் உள்ளே வர வைக்கப்பட்டனரா?

மெய்யாகவே
கடை பிக்அப் ஆகிவிடும் என்று நம்பி
கூட்டாகச் சேர்ந்து குதித்தனரா
தெரியவில்லை.
கடை வழக்கம் போலவே ஈயாடிக் கொண்டிருக்கிறது.

இன்று இந்தத் தெரு வழியாகப் போக ஆரம்பித்திருப்பவர்கள்
நாளை நம் ஹோட்டலுக்குள் வருவார்கள் என்று
சமாதானப்படுத்திக் கொண்டனர்.
நம்பிக்கைதானே வாழ்க்கை?

*

ஆனால்,
அந்த ஊரில் இருந்த
பழம் தின்று கொட்டை போட்ட ஹோட்டல் சுதாரித்துக்கொண்டது
இந்தச் சோற்றாலடித்த பிண்டங்களுக்கு
வேறு உணவு கிடைக்காதது வரைதான்
நம் ஹோட்டலில் கல்லா நிரம்பும்.
வேறு சுவைக்குப் பழகிவிட்டால்
நம் முகத்தில் காறித் துப்பி விடுவார்கள்.
காறித் துப்பினாலும் கூடப் பரவாயில்லை
துடைத்துக் கொண்டுவிடலாம்;
ஆனால்,
கடையைக் காலி பண்ண வைத்துவிடுவார்கள்.

எனவே வழக்கம்போல
கூத்துக் கட்டுபவர்களைக் கொண்டும்
பவுன்சர்களைக் கொண்டும்
கற்ற வித்தைகள் அனைத்தையும்
களம் இறக்க ஆரம்பித்தனர்.

அங்கு கிடைக்கும் உணவு
வாயில் வைக்க முடியாதபடித் தான் இருக்கும்
அங்கும் உப்பு, புளி, காரம் கோஷ்டிகள் எல்லாமே உண்டு
என்றாலும்
அவர்களுடைய ஹோட்டலுக்குள் வரும்போது
அந்த ஹோட்டலில் என்ன கொடுக்கிறார்களோ
அதை வைத்து மட்டுமே சமைக்க உதவுவார்கள்.
அவர்களுடைய சொந்த உப்பு, புளி மூட்டைகளையெல்லாம்
உள்ளே எடுத்துவர விட மாட்டார்கள்.

பெரிய ஹோட்டலின் கிளையில்
புதிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியதும்
அவர்கள் சிம்பிளாக சோலியை முடித்தனர்.
உப்புப் பண்டங்கள் வேண்டும் என்று சொன்னவர்
உப்பையே சேர்க்கிறார் என்றும்,
புளிப்புப் பண்டம் வேண்டும் என்று சொன்னவர்
புளிப்பையேயே சேர்க்கிறார் என்றும்,
கசப்புப் பண்டம் வேண்டும் என்று சொன்னவர்
கசப்பையேயே சேர்க்கிறார் என்றும்
ஒரு பிட்டைப் போட்டனர்.

மக்கள் இதை முதலில் நம்பவில்லை.
ஆனால்
பெரிய ஹோட்டலின் ஒரு குழுவினர்
நீ ஏன் உப்பைச் சேர்ந்தாய்?
நீ ஏன் கசப்பைச் சேர்த்தாய்?
நீ ஏன் காரத்தைச் சேர்த்தாய்? என்று
ஆளாளுக்கு அடித்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

இத்தனைக்கும் அத்தனை பேருமே
அவரவர் பங்குக்கான இனிப்பைத்தான் சேர்த்திருந்தனர்.
ஆனால்,
சந்தேகப்பட வேண்டியவர்கள் சொல்வதை நம்பினால்
நம்ப வேண்டியவர்களைச் சந்தேகப்படுவதில்தானே போய் முடியும்?

நம் பக்கத்து ஒற்றுமையைப் பலப்படுத்தவேண்டுமென்றால்
எதிர் பக்கத்துப் பகைமையைத் தூண்டினாலே போதும்
என்ற எளிய தத்துவத்தின்படி
அவர்கள் கோடு போடுவார்கள்.
ஊரைத் திருத்துவதைவிட முதலில்
வீட்டைத் திருத்தவேண்டும் என்ற போர்வையில்
உள்ளுக்குள் இவர்கள் ரோடே போட்டுவிடுவார்கள்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்
எதிர் ஹோட்டலில் புளிமூட்டைக்காரர்
ஏதேனும் புகார் தெரிவிப்பார்.
ஆஹா
அந்த ஹோட்டல் கூட்டணி இனி அதோ கதிதான் என்று
பெரிய ஹோட்டல்காரர்கள் புளகாங்கிதம் அடைவார்கள்.

புளிமூட்டைக்காரருக்கு புரோக்கர்கள் மூலம்
கேட்டதையெல்லாம் கொட்டிக் கொடுப்பார்கள்
புளிமூட்டைக்காரர் கிடைத்ததையெல்லாம் வாங்கிக் கொண்டு
புன்முறுவல் பூத்தபடியே எதிர் ஹோட்டலுக்குள் கொண்டு சென்று
தசம பாகம் கொடுத்துவிட்டுத்
தமக்குள் பங்கிட்டுக் கொள்வார்கள்.

இலவு காத்த கிளி
இழவு காத்துக் கொண்டே இருக்கும்
ஆக
இப்போதும் பெரீய்ய ஹோட்டலில்
சமைத்து சமைத்து வைக்கப்போகிறார்கள்.
மக்கள்
எதிர் ஹோட்டலில் போய்
சப்பிச் சப்பிச் சாப்பிடப் போகிறார்கள்.

அப்படியாக அந்த ஊரில்
நடக்கும் ஹோட்டல்களும்,
பரிமாறப்படும் உணவும்,
பந்தியில் உண்பவர்களும்,
இப்படியாகவே இருந்துவர யார் காரணம்?

நல்ல உணவை நயமாகத் தயாரித்தும்
நல்லெண்ணத்தை ஏற்படுத்தத் தெரியாமல்;
அழிக்க நினைக்கும் எதிர் ஹோட்டலிடம்
அன்பு பாராட்டியபடி;
அவதூறு பேசும் அல்லக்கைகளுக்கு
அங்கீகார ஆதரவு தந்தும் வருவதோடு
உள்ளுக்குள் உருண்டு புரள்வதாக
ஊர் முன் உருட்டப்படுவதை
உறுதிப்படுத்துவதுபோல நடந்துகொள்ளும்
பெரிய ஹோட்டல்காரர்களா…?

எதிர் ஹோட்டல்
என்ன வடித்துக் கொட்டினாலும்
எதுவும் பேசாமல்
புறங்கையை நக்கியபடித் தின்றுவிட்டுச் செல்லும்
பொற இருநூற்றுக் கூட்டமா?

அத்தனை பேர் வந்து
அமைதியாகத் தின்றுவிட்டுச் சென்றாலும்
உருப்படியாகச் சமைக்க
ஒரு நாளும் விரும்பாதவர்களா?

யார் திருந்தினால்
இந்த ஊரில் நல்ல சாப்பாடு பரிமாறப்படும்?
இதற்கு பதில் தெரிந்தும் சொல்லாவிட்டால்
உன் தலை சுக்கு நூறாகிவிடும் என்று வேதாளம் சொல்லி முடித்தது.

விக்கிரமாதித்தன் சொன்ன பதில்
என்னவாக இருக்கும்?

$$$

Leave a comment