-கருவாபுரிச் சிறுவன்
காலத்தின் கோலத்தால் வார்த்தை வியாபாரியாக மாறிவிட்ட ஆன்மிக மேடைப் பேச்சாளர் திரு.சுகி.சிவம் அவர்கள் பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் வழக்கம் போல சர்ச்சைக் கருத்துகளை உதிர்த்திருக்கிறார். அவருக்கு, இலக்கிய ஆதாரங்களுடன் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் நமது ஆசிரியர் குழு உறுப்பினரான திரு. கருவாபுரிச் சிறுவன்....

அஞ்சல் என்ற கரதலமும் கணபணக் கங்கணமும் அரைக்கிசைந்த புலியுடையும் அம்புலிச் செஞ்சடையும் கஞ்சமலர் சேவடியும், கனைகழலும் சிலம்பும் கருணைபொழித் திருமுகமும் கண்களொரு மூன்றும் நஞ்சுண்ட மணிமிடறும் முந்நூலும் மார்பும் நலந்திகழ் வெண்ணீற்றொளியும் மறிமானும் மழுவும் பஞ்சடிச்சிற்றிடையுமை ஒப்பனை பாகமுமாய்ப் பால்வண்ணன் உளத்திருக்கப் பயமுண்டோ எமக்கே.
இப்பாடலை யார் ஒருவர் பெருமானின் சன்னிதியில் திரிகரணத் துாய்மையுடன் பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சகல செளபாக்கியங்களையும் பெறுவர். இதை இயற்றிய வரதுங்கராம பாண்டிய மன்னர் பிரான் சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த சில ஆண்டுகளில் புதிதாக அமையப்பெற்ற தென்காசி மாவட்டம், சங்கர நயினார் கோயில் வட்டத்தில் அமைந்துள்ள கரிவலம் வந்த நல்லுாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். சிவபக்தி, குருபக்தி மிக்கவர். புவியரசராகவும் கவியரசராகவும் திகழ்ந்தவர். வடமொழி- தென்மொழி என்ற இரண்டிலும் கரை கண்ட கல்வியாளர். நாட்டு மக்களிடம் புழக்கத்தில் உள்ள மொழியைப் பிரச்னையாக்கி அரசியல் செய்யும் தந்திரத்தை ஒரு போதும் அணுகளவு கூட அறியார். சதா நேரமும் மக்கள் நலனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்.
ஒரு நாள் அதிகாலை அரண்மனையில் இருந்து திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சதாசிவ மூர்த்தமாகிய பால்வண்ணநாதரைத் தரிசிக்க வருகிறார் மன்னர் ஸ்ரீமான் வரதுங்கர். அப்போது ஊரின் எல்லையில் ஒதுக்குப்புறமான மரத்தின் அடியிலே சிலர் சீட்டாடிக்கொண்டும், போதையில் தள்ளாடிக் கொண்டும் இருப்பதை பார்த்து வேதனை அடைகிறார். (நாட்டையாளுபவர்களுக்கு எங்கள் மன்னர் சிறந்த உதாரணம்) நமது மக்கள் தவறான பாதையில் போதைக்கு அடிமையாகி வாழ்வினை சீரழித்து கொண்டு இருக்கிறார்களே! அவர்களுக்கு நல்ல புத்தியை வழங்கு பரம்பொருளே! என அந்த இடத்திலேயே வேண்டிக் கொள்கிறார். அப்போது அவரது சிந்தையில் இருந்து ஒரு கவி வெளிப்பட்டது. இதோ அது…
சிவகருமம் செய்யார் திருநீறு சாத்தார் தவநிலையாம் சைவ நெறி சாரார் - அவனிதனில் கான் பரந்த பச்சைக்களா நிழலைக் கைதொழார் ஏன் பிறந்தார் மனிடரா யின்று.
பூமியில் மனிதர்களாக பிறந்தால் சிவகருமமாகிய சிவச்செயல்களில் ஒன்றையாவது செய்ய வேண்டும். இல்லையா… தினந்தோறும் சிவநாமம் சொல்லி திருநீற்றையாவது அணிய வேண்டும். அதுவுமில்லையா, அடியார்களுடன் உறவாடி ஞான விஷயமான ஸத் சங்கங்களில் ஈடுபட வேண்டும். அதுவுமில்லையா… ஆதி நாளில் சிவப்பரம்பொருள் காட்சி தந்த களாமரத்திற்காவது (இவ்வூரின் ஸ்தல விருட்சம்) வணக்கம் செய்ய வேண்டும்.
இந்நான்கில் ஒன்றைக் கூட செய்யவில்லை எனில் உங்களுக்கு எதுக்கு இந்த பிறப்பு எனச் சொல்லி அவர்களை கடுமையாகக் கோபிக்கிறார் மன்னர் பெருமான். அந்தச் சிவகருமம் என்ன என்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
அலகிலாக் கருணை என்னும்
அந்தளிர் ஈன்று தொல்லை
உலகெல்லாம் பூத்துக் கங்கை
உவட்டெடுத் தொழுகும் சென்னி
மலையினில் படர்ந்த பச்சை
மரகதக் கொடியை ஞானக்
கலையமு தொழுகு தீஞ்சொற்
கனியினைக் கருத்துள் வைப்பாம்.
-அதிவீரராம பாண்டியர்
மன்னர் பெருமானின் மகத்தான பணி
வரதுங்கராம பாண்டிய மன்னரின் சகோதரரான அதிவீரராம பாண்டியரும் சிவபக்தி, குருபக்தியில் தலைசிறந்தவர். கூர்ம புராணம், லிங்கபுராணம், காசிக்காண்டம், வெற்றிவேற்கை என்னும் ஞான நூற்களை உருவாக்கியது இம்மன்னரின் இரு மொழிப்பற்றிற்கு அடையாளம். அதிவீரராம பாண்டியனால் கட்டப்பட்ட தென்காசி காசி விஸ்வநாதர்கோயிலே அவருடைய அருமைக்கும் பெருமைக்கும் சான்று. மேலும் சில ஸ்திரமான சாசனங்களை அங்கு வெளிப்படையாகவே கல்வெட்டுக்களில் எழுதி வைத்துள்ளார். அதில் ஒரு பாடலைப் படித்தால், வணங்காதவருக்கும் கூட சிவபெருமானை வணங்க வேண்டும் என்கிற நற்குணமாகிய சிவகருமச்செயல் மனதில் உண்டாகும். பாடலின் பொருளோ வெளிப்படை.
ஆராயினும் இந்தத் தென்காசி மேவும் பொன் ஆலயத்து வாராத தோர் குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்து அதனை நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன் பாரோர் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே!
தன்னால் எழுப்பிய கோயிலுக்கு இடையூறு வராது. வந்தால் அதை முறையாக திருப்பணி செய்து காப்பவர்களைப் பணிந்து இவ்வுலகறிய வீழ்ந்து வணங்குகிறேன். தன்னைப் போலவே இச்சிவப்பணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே அவரின் உயரிய குறிக்கோள்.
அம்மன்னர் பிரானே வடக்கேயுள்ள காசிப்பதியின் சிறப்புகளைப் பற்றி நுால் ஒன்றை தமிழில் மொழிபெயர்த்து இவ்வுலக மக்கள் உய்வடைய வேண்டும் என்ற பெருநோக்கோடு ஈடுபட்டு வெற்றியும் காண்கிறார். அந்நுாலே காசிக்காண்டம். (இதன் சிறப்புகளையெல்லாம் மற்றொரு சமயத்தில் இனிது காண்போம்) அதில், இந்த பாரத தேசத்தில் எண்ணற்ற தலங்கள் பல இருந்தாலும் முக்தி தலங்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படக்கூடியது இந்த காசிமாநகரம் என்கிறார்.
காசி மாயாபுரி அவந்தி காஞ்சி மற்றும் ஓசை கொள் அயோத்தி வண் துவரை ஒப்பாறும் ஏசிலா மதுரை என்றிசைக்கும் ஏழ்பதி மாசறு முத்தியை வழங்கும் என்பவே
மேற்கண்ட செய்யுளின் மூலமும், வாரணாசி என்ற காசியம்பதியின் சிறப்புக்களை கீழ்க்கண்ட இலக்கியங்கள் வழியேயும் அறியலாம்.
தமிழ் இலக்கியங்களில் காசி
* கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலையில் இத்தலம் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
* சமயக்குரவர்கள் நால்வர் பெருமக்களும் ஏனைய அருளாளர்களும் திருக்கயிலாய மலையைப் போற்றிய பாடல்கள் கிடைத்துள்ளன. அதே சமயத்தில் நமது குறைவான தவத்தின் பயனாக காசியை போற்றிப் பாடிய தேவாரங்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. ஆனால் சமயக்குரவர்களில் இருவராகிய ஞானக்கன்றும் ஞானஅரசும் தம் பதிகங்களில் தேவார வைப்புத்தலமாக இக்காசிமாநகரைப் போற்றுகிறார்கள்.
* திருமூலதேவ நாயனாரும் திருமந்திரத்தில் இத்தலத்தினைக் குறிப்பது இங்கு நோக்கத்தக்கது.
* சிவனடியார்களுக்கு ஆவணக்கருவூலமான பெரிய புராணத்தில், தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் வாரணாசி விருப்பினோடு பணிந்தார் என ஆளுடைய அரசரின் பக்திப்பணிவினை நமக்கு படம் பிடித்து பாடமாகக் காண்பிக்கிறார்.
* அதிவீரராம பாண்டியர் மொழி பெயர்த்தருளிய காசிக்காண்டம் 3,717 பாடல்களும் காசியைப் போற்றுகின்றன.
* சிவஞான யோகிகள் அருளிய காஞ்சி புராணத்திலும், கச்சியப்ப முனிவர் அருளிய விநாயக புராணத்திலும் அதன் சிறப்புகள் விதந்து போற்றப்படுகிறது.
* அருணகிரிநாதர் பாடிய காசித்தலத் திருப்புகழ், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய காசி ரகசியம் 1012 பாடல்கள், திருப்பனந்தாள் திருமடத்தின் குருமுதல்வர் குமரகுருபர சுவாமிகள் பாடிய காசிக்கலம்பகம், காஞ்சிபுரம் சிதம்பரநாத முனிவர் அருளிய சேத்திரக்கோவை பிள்ளைத்தமிழ் ஆகியவையும் காசியின் சிறப்பை விதந்தோதும்.
* தருமையாதினம் 10வது பட்டம் சிவஞானதேசிகர் பாடிய காசி துண்டிவிநாயகர் திருவருட்பா, காசி கதிர்காமவேலவர் திருவருட்பா, காசி விஸ்வநாதர் திருவருட்பா, காசி விசாலாட்சியம்பாள் திருவருட்பா, காசி அன்னபூரணி திருவருட்பா இன்னும் சில திருவருட்பாக்கள், காசி விஸ்வநாதர் பேரில் பதிகம் – சுப்புராஜ ஐயர் போன்றோரின் துதி நூல்கள் யாவும் காசி தலத்தின் சிறப்பினை எடுத்தியம்பும்.
இவை தவிர சைவ வைணவத்தார்கள் பேதமின்றி போற்றப்படும் தமிழகத்திலுள்ள பல ஸ்தல புராணங்களில் இதன் பெருமையை விவரித்து விரித்துக் கூறும். மேலும் பல்வேறு வட மொழி நூற்களில் இதன் சிறப்புகள் பேசப்பட்டாலும் ஆதிசங்கரர் அருளிய காசிமாநகர் தொடர்புடைய அஷ்டகங்கள், ஸ்லோகங்கள், துளசிதாச சுவாமிகளின் பிரபந்தங்கள் யாவும் முக்கியமானவை.
* காசி மான்மியம் – பதிப்பித்தவர் பறங்கிப்பேட்டை தெய்வநாயக முதலியார்
* காசி மகாத்மியம் உரைநடை – செங்கல்வராயப் பிள்ளை
* காசியாத்திரை விளக்கம் – மெளன தேசிகராதினம் சபாபதி சுவாமிகள்
* சமீபத்தில் உழுவலன்பர் பி. எஸ்.வெங்கட்ரமணன் எழுதிய காசி தலம் பற்றிய நுால்
-இவை யாவும் காசியின் சிறப்பினை வசன வடிவில் புகழும் திருநுாற்களாகும். மேலும், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் இன்னும் பல மொழிகளில் எழுதப்பட்ட காசித்தல நுாற்கள் பற்பல.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தபின் நமக்கெது வேண்டும்?
-மகாகவி சுப்பிரமணிய பாரதி
தேச ஒற்றுமையின் அடையாளம் காசி யாத்திரை
மக்களின் துன்பத்திற்கு காரணம் அறியாமை. அவர்களின் இன்பத்திற்கு காரணம் அறிவு அதனால் ஞானிகள் துன்பப்படுவதில்லை. ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும் என்பார் அதிவீரராம பாண்டியர். துன்பத்தை துடைக்க ஞானம் அவசியம். அதைப்பெற வழிகள் மூன்று.
- ஞானிகளோடு தொடர்பு கொள்ளுதல்,
- ஞான நுாற்களை ஓதுதல்,
- புண்ணிய நதிகளில் நீராடி புண்ணியத்தலங்களைத் தரிசித்தல்.
இம் மூன்றும் ஹிந்து மதத்திலுள்ள முக்கிய சிவபுண்ணியச் செயல்களாகும். முன்னுள்ள இரண்டும் அந்தந்தத் தலங்களில் நிகழ்ந்து வருகின்றன; மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் புண்ணிய நதிகளில் நீராடி புண்ணிய தலங்களை தரிசித்தல் என்பது இல்லறத்தாரும் துறவத்தாருக்கும் உரிய பொதுவான நிகழ்வாகும். இதனை தலயாத்திரை, தீர்த்த யாத்திரை என்பர்.
வடக்கிலுள்ள ஷேத்திரங்களை தெற்கிலுள்ள மக்களும், தெற்கிலுள்ள தலங்களை வடதேசத்து மக்களும் வந்து தரிசிக்கும் முறைமை தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையக இன்றும் உள்ளது. பண்டைய காலம் தொட்டே தர்மப் பாதையில் இருந்து மீறியவர்கள் காசி வரை சென்று மீண்டும் திரும்பும் விதி வழக்கத்தில் இருந்துள்ளது.
* நாயன்மார்களை ஞானாசிரியராகக் கொண்ட குருமுதல்வர்களில் ஒருவரான நமசிவாய மூர்த்திகள், வீதியில் சூரியனார் கோயில் ஆதின தம்பிரான்களைக் கண்டும் நமஸ்காரம் செய்யாத தன் சிஷ்யர்களை காசி மாநகர் சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்து வருமாறு உத்தரவிட்டது சைவ மக்கள் அறிந்த விஷயம் தான்.
* மேலும் இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பு வட நாட்டு அந்தணர் ஒருவர் தமிழக சேதுக்கரை ராமேஸ்வரத்திற்கு யாத்திரை வந்த போது அவருக்கு ஏற்பட்ட துன்பதை ராமநாதபுரம் சேதுபதி மன்னரிடம் சொல்லி முறையிட , அதற்குக் காரணம் சொந்த மருமகன் என்று கூட பாராமல் சிரச்சேதம் செய்த வரலாற்றுச் சம்பவத்திற்கு அக்காள் மடம், தங்கச்சி மடம் ஆகியவை இன்றும் சாட்சியாக நின்று சத்தியத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
* வடக்கே தோன்றிய அருளாளர்கள் பலர் தமிழகத்திலுள்ள சைவ, வைணவக் கோயில்களுக்கு பாடல்கள் இயற்றி உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படி ஆன்மிக உறவில் பிணைக்க முடியாத சிறப்புகள் பல கொண்டது ராமேஸ்வர – காசியாத்திரை நிகழ்வு.
* 1801 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் ஆங்கிலேய அலுவலர் பெஞ்சமின் டோரினுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையிலான பாதையில், வழி நெடுகிலும் உள்ள சத்திரங்களை (தருமச்சாலைகள்) பிரித்து விட வேண்டாம் என்றும் விண்ணப்பித்து இந்தச் சத்திரங்கள், யாத்திரிகர்களுக்கும் பயணிகளுக்கும் வணிகர்களுக்கும் நாள்தோறும் இலவச உணவு வழங்குவதையும், மருத்துவ வசதிகள் அளிப்பதையும் பற்றி அதில் குறிப்பிட்டுள்ளார் என மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஓரிடத்தில் மேற்கோள் காட்டிய செய்தி இங்கு சிந்திக்கத் தக்கது.
ஆக தேசத்தின் ஒற்றுமை, நலனை மனதிற்கொண்டே நம்முடைய ஞானிகளும் மகான்களும் நாயன்மார்களும் அருளாளர்களும் நாட்டையாண்ட மன்னர்களும், பிரபுக்களும் பாடல்கள் பாடியும், வழிகாட்டியும் உள்ளார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது. ஆனால் இன்றைய நிலையோ வேறு.
தேசப்பற்று
நாகப்பட்டினம் நகரில் வாழ்ந்த ஒரு பண்ணையாருக்கு வாடிக்கையாக முடி திருத்துவது ஒரு நாவிதரின் (மருத்துவர்) வழக்கம். தம் முதலாளி தேசப்போராட்டங்களில் கலந்து கொள்வது, உண்ணாவிரதங்களில் பங்கேற்பது போன்றவற்றைப் பார்த்த அவர் இந்த தேசத்தின் சுகந்திரத்திற்காக தானும் பங்காற்ற வேண்டும் என விரும்பினார். அன்றில் இருந்து ஒரு முடிவெடுத்தார். பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு சவரம் செய்வதில்லை என்பது அவருடைய கொள்கை. தன்னிடம் வரும் அதிகாரிகளிடம் வெளிப்படையாகவே தெரிவித்து அவர்களுக்கு சவரம் செய்வதை மறுத்தார்; நிறுத்திக் கொண்டார்.
ஒரு நாள் வேண்டுமென்றே மாறுவேடம் அணிந்த ஒரு அதிகாரி மருத்துவரிடம் சவரம் செய்ய வந்தார். அவருக்கு சவரம் செய்து கொண்டிருக்கும் போது தான் மருத்துவருக்கு தெரிந்தது இவர் ஆங்கில அதிகாரி என்று. அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு அவரை எழச்செய்து தன் கத்தியை மடித்து வைத்தார். எவ்வளவு கெஞ்சிக்கேட்டும் அவர் சவரம் செய்யவில்லை. முடியாது என்று மறுத்தார். பின்னர் ஊர் தலைவரின் வேண்டுதலுக்கு இணங்க மற்றொருவர் சவரம் செய்து அதை நேர் செய்தார். இதுவல்லவோ தேசபக்தி என திருவாவடு துறை ஆதினத்தில் இருந்து வெளிவரும் மெய்கண்டாரில் படித்ததாக ஞாபகம். அந்த மருத்துவரிடம் இருந்த தேச பக்தி இன்று தமிழகத்தில் எத்தனை பேரிடம் இருக்கிறது என்பதற்கான விடை தெரியவில்லை.
கன்னிய குமாரியருள் காந்திமதி மீனாட்சி
கருணை பருவதவர்த்தனி
கமலைப் பராசத்தி சிவகாம சுந்தரி
காழியுமை பிரமவித்தை
தன்னிகரி லாஞான வயபவர தாம்பிகை
தையல் அபிராமி மங்கை
தந்த அகிலாண்ட நாயகி அறம் வளர்த்தவள்
தன்னருள் செய் காமாட்சி இங்கு
என்னையாள் கெளரி ஜ்வாலாமுகி உண்ணாமுலை
இங்கு நீலாயதாட்சி
எழிற்பிரம ராம்பிகை இலங்கு பார்வதியாதி
எண்ணிலா நாமரூப
அன்னையாய் காசி முதலாகிய தலத்துவிளை
யாடிடும் விசாலாட்சியாம்
அண்ட கோடிகள் பணி அகண்டபூரணியென்னும்
அன்னபூரணியன்னையே.
– சிவஞான தேசிகர்
காசி ஹிந்து பல்கலைக்கழகம்
அன்னிபெசன்ட் அம்மையாரால் ஏற்படுத்தப்பட்ட ஹிந்து கல்லுாரி 1918 ஆம் ஆண்டு ஹிந்து பல்கலைக்கழகமாக வாரணாசியில் உருவெடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் பண்டிதர் மதன்மோகன் மாளவியா. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக 1919 முதல் 1938 வரை பணியாற்றியவர். இவர் இந்தியக் கல்வியாளரும், விடுதலை இயக்கத்தில் முதன்மை பங்களித்த விடுதலை வீரரும் இந்து தேசியத்தை வளர்த்தெடுத்தவரும் ஆவார். செல்வாக்குப் பெற்றிருந்த ஆங்கில நாளிதழ் த லீடரை 1909இல் அலகாபாத்திலிருந்து வெளியிட்டவர் இவரே.
மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி
இறைவர் தம் பெயரை நாட்டி இலக்கணம் செய்யப் பெற்றே
அறைகடல் வரைப்பிற் பாடை அனைத்தும்வென் றாரியத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை உள்நினைந் தேத்தல் செய்வாம்.
-வீரை ஆனந்தக்கூத்தர்
ஞானத்தின் திருவுரு
ஆதி சைவர்களின் குலகுரு, சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தாயார் வழித்தோன்றல், ஞானத்தின் திருவுரு, நான்மறையின் தனிவடிவம், வடமொழியும் தென்மொழியையும் ஒருசேரக் கற்ற ஞானபானு, சிவாசாரியார்கள், அந்தணர்கள், குருக்கள், பிராமணர்கள் என்போரின் நலம்விரும்பி, பரமயோகி, வேதம் விரும்புவதை விளம்புபவர், விவேகமாக உபதேசம் செய்பவர், ஆகமம் சொல்வதையும் கேட்பவர், ஆதினகர்த்தாக்களின் மனங்களில் நிறைந்தவர், திருமுறைகளில் ஊறித்திளைத்தவர், சாஸ்திர நுணுக்கங்களில் கரை கண்டவர், தலப்பனுவல்களில் பேரார்வம் கொண்டவர். பெரிய புராணம் பேசும் பேராசிரியர். பேரின்ப வாழ்வுக்கு வழிகாட்டும் பெருந்தகையாளர். முன்னோர் சொன்ன வழிமுறைகளை அப்படியே பின்பற்றும் அப்பழுக்கற்ற ஞானத்துறவி. இத்தனை அழியா புகழ் மொழிகளுக்கும் சொந்தக்காரர் தான் காசி, சென்னிமலை, பழநி ஆகியவற்றை வாசஸ்தலமாகக் கொண்ட பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள்.
சிவாசி, சித்தாந்த சரபம், மஹாமஹோபாத்தியாய, சிவாகமஞானபானு என்கிற பட்டங்களைப் பெற்ற இப்பெருமானை எண்ணற்ற சிவாசாரிய பெருமக்கள் தம்முள்ளத் தாமரையில் வைத்து பூஜித்து வருகிறார்கள். இப்பெருமானின் திருவடியை எண்ணற்ற சைவர்கள் தம் இருதயத்தில் வைத்து வழிபடுகிறார்கள் என்பதை அவரவரின் செயல்திறனில் காணலாம். மேலும் இப்பெருமான் சூல சரீரத்துடன் வாழும் காலத்தில் அன்றைய தமிழக அரசு சுவாமிகளின் ஆலோசனையும், இசைவும் கேட்ட பின்னரே, திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேக தேதியை குறிப்பார்கள் என்ற அறநிலைத் றையின் வெளியீடு ஆவணத்தின் வழி பெருமானின் அருமையையும் பெருமையையும் அறிந்துணரலாம்.
சிவக்கடலில் திளைத்திடுவார் செய்ய
திருவைந்தெழுத்தே திகழும் நாவார்
சுவைத் தமிழும் வடமொழியும் துய்த்துணர்ந்தார்
வெண்ணீறு துதைந்த மெய்யார்
தவத்துயர்ந்தார் தண்ணளியார் சிவபூஜைக்கு
உறுதுணையார் தன்னேரில்லார்
பவக்கடல் நின்று எமையேற்றும்
ஈசான குரு பாதம் பணிந்து வாழ்வாம்.
-தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம்
இருபெரும் தலைவர்களின் சந்திப்பு
பழநி ஈசான சிவாச்சாரிய சுவாமிகள் எண்ணற்ற ஆகமச்சுவடிகளைத் தேடி தேசமெங்கும் அலைந்த தருணங்கள் பல. அதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார்கள். நீதிமன்றம் வரை சென்று போராடி ஆகமச்சுவடிகளை சேகரித்துள்ளார்கள். இப்பணிகளுக்காக பல ஆண்டுகள் வட நாடு சென்றுள்ளார்கள். அப்படி ஒரு சமயம் சென்ற போது, பண்டிதர் மதன் மோகன் மாளவியாவைச் சந்தித்து அளவளாவி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களிடம், ஞானவிசாரங்கள் பல செய்துள்ளார்கள். அவற்றில் ஒன்று தவத்திரு ஆறுமுக நாவலரின் பால பாட போதனை. அதைக்கேட்டு மெய் மறந்து எழுந்து யாழ்ப்பாணம் திருக்கேதீஸ்வரம் திசை நோக்கி தன் வணக்கங்களையும் வந்தனங்களையும் செய்தார் மதன் மோகன் மாளவியா அவர்கள் என தன் சீடரான மதுரை தி. சு. கோவிந்தசுவாமி பிள்ளையிடம் சிவாசாரிய சுவாமிகள் தெரிவித்தார்கள் என்ற செய்தியை திருவாவடுதுறை மதுரை கிளை மடத்தில் வைத்து அடியேன் கேட்டு இருக்கிறேன்.
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்.
-நக்கீரதேவ நாயனார்

முதுகெலும்பற்ற பேச்சு, பெரியவருக்கு மூச்சு
சமீபத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பாக பழநியம்பதியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே. அதில் மேடைப் பேச்சாளர் அன்பர் சுகி.சிவம் அவர்கள் பேசிய ஒரு செய்தி எழுத்து வடிவமாக…
இந்த பழநியிலே ஈசான சிவாசாரியார் என்ற ஒரு பெருமகனார் வாழ்ந்தார்கள். அவர் யார் என்று கேட்டால் வணக்கத்திற்குரிய வாரியார் சுவாமிகளுக்கு சிவதீட்சை கொடுத்து பூஜை எடுத்து வைத்தவர்கள். அந்த ஈசான சிவாசாரிய சுவாமிகள் காசி செல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அப்படி காசி செல்வதற்கு முன்பு பழநி ஆண்டவரைத் தரிசித்து விட்டு புறப்படும் எண்ணத்தில் பழநி ஆண்டவரை வந்து வணங்குகிறார்கள் ஈசான சிவாசாரியார். அப்போது திருக்கோயிலிலே ஓதுவார் பெருமகனார் திருப்புகழ் பாடுகிறார். இந்த பழநி திருப்புகழைப் பாடினார். அதில் ஒரு வரி ‘காசியில் மீறிய பழநி’ என்று வந்தது. காசியில் மீறிய பழநி என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் ஈசான சிவாசாரிய சுவாமிகள் கண்களில் கண்ணீர் பெருகியது. அதை விட பெரிய இடத்தில் இருந்து கொண்டு நாம் அந்த இடத்திற்கு ஏன் போக வேண்டும் என்று இந்த பழநியம்பதியை தன் உயிர்த்தலமாகக் கொண்டார் ஈசான சிவாசாரியார். எப்போதுமே நான் பேசுவதில் வேறு ஒரு பொருளும் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். காசியில் மீறிய பழநி. இது சிலருக்கு மட்டும் தான் புரியும். காசியில் மீறிய பழநி. எனவே அத்தனை சிறப்புடைய பெரிய தலம் இந்த பழநித் திருத்தலம். பழநியில் மாநாடு நடத்தாமல் வேறு எங்கு நடத்துவது? காசியில் மீறிய பழநி...
-எனச் சொல்லி விட்டு இரண்டாவது செய்திக்காக தன் பேச்சினைத் தொடருகிறார். இந்தப் பேச்சு சற்றும் ரசிக்கத் தக்கதும் அல்ல, உண்மையானதும் அல்ல.
எது அழகு?
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹிந்துக்களின் திருவிழாக் காலங்களில் சுவாமி வீதியுலாக்கள், வழிபாடுகள் நடத்துவதற்கு அப்பகுதியில் வசிக்கும் மாற்றுமத சகோதரர்களிடம் தடையில்லா இசைவினை ஹிந்து மக்களை பெறச் சொல்லும் காவல் துறையைப் போல தமிழகஅரசு பழநியில் மாநாடு நடத்துவதற்கு ஹிந்து மக்கள் யாராவது தடையில்லா இசைவு பெற சொன்னார்களா… அல்லது ஹிந்துக்கள் இம்மாநாட்டைத் தடுக்க தடையோ, இடையூறோ செய்தார்களா… அப்படி எங்காவது ஊடகங்களில் செய்தி எதுவும் வந்துள்ளதா, இல்லையே பின்னர் ஏன் அந்த வார்த்தை?
இதைத் தான் கிராமத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது எனச் சொல்லுவார்கள். இவ்வுலகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருக்கும் ஆன்மிக மக்கள் மத்தியில் தாங்கள் நாலாந்தரத்தாரைப் போல விஷமப்பேச்சுக்களை ஆன்மிக மேடையில் உதிர்ப்பது நல்ல பேச்சாளருக்கு அழகல்ல. நல்லதும் அல்ல.
முருகா என உனை ஓதும் தவத்தினர் மூதுலகில்
அருகாத செல்வம் அடைவார் வியாதி அடைந்து நையார்
ஒரு காலமும் துன்பம் எய்தார் பரகதி உற்றிடுவார்
பொரு காலன் நாடுபுகார் சமராபுரிப் புண்ணியனே!
-திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
திருப்பூர் கிருஷ்ணரின் கீதா உபதேசம்
வணக்கத்திற்குரிய அமுதசுரபி ஆசிரியர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் அண்மையில் ‘இலக்கிய பேச்சாளர்கள் கவனத்திற்கு…’ என்று சூசகமாக ஒரு செய்தியை தனது தினமணி கட்டுரையில் பதிவிட்டிருந்தார்கள். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே கோர்வையாக்கி குறிப்பிடுவது நல்லது:
கட்சிச் சார்புடைய சில இலக்கியப் பேச்சாளர்கள் இலக்கிய மேடைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் கட்சியை முன்னிலைப் படுத்தியும் அடுத்த கட்சியை விமர்சித்தும் பேசும்போது பார்வையாளர்கள் பலர் சலிப்படைகிறார்கள். அத்தகைய பேச்சுக்கள் அந்தந்தக் கட்சி சார்புடைய பார்வையாளர்கள் சிலருக்குச் சிறிதுநேரம் சற்று உற்சாகத்தைத் தரலாம். ஒருவேளை அவர்களில் சிலர் கைதட்டித் தங்கள் பாராட்டைத் தெரிவிக்கவும் கூடும். ஆனால் அதே நேரம் மாற்றுக் கட்சிகளைச் சார்ந்தவர்களும் எந்தக் கட்சியையும் சாராத பொதுமக்களும் யோசனையோடு மெளனம் காக்கிறார்களே, அந்த மெளனம்தான் அத்தகைய பேச்சாளர்களின் பேச்சுக்கான சரியான விமர்சனம்.
இலக்கிய முன்னோடிகளான வள்ளுவரோ, கம்பரோ, வள்ளலாரோ, பாரதியாரோ எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் எல்லாக் கட்சிக்கும் பொதுவானவர்கள்.
அரசியலில் இலக்கியம் கலக்கலாம். அதில் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் அரசியல் மேடைகளில் இலக்கியம் கலப்பதுபோல, இலக்கிய மேடைகளில் அரசியல் கலப்பது சரியல்ல. இலக்கிய மன்றம், நீதிமன்றத்தைப் போன்றது. நீதிமன்றம் போலவே இலக்கிய மன்றமும் அரசியலுக்கு அப்பாற்பட்டதுதான்.
அரசியல் மாறக் கூடியது. இலக்கியம் மாறாதது. என்றும் மாறாத இலக்கியத்தில் அன்றன்று மாறக் கூடிய அரசியலைக் கலக்காதிருப்பதே இலக்கிய வளர்ச்சிக்கு நல்லது. இதை இலக்கிய மேடைகளில் பேச வரும் பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டியது அவசியம். இலக்கிய அமைப்புகளின் உன்னதமான இலக்கியப் பணி அரசியல் கலப்பில்லாமல் தொடரட்டும்.
(தினமணி- 25.08.2024)
-இவ்வரிகளைச் சொன்ன திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் அன்பர் சுகி.சிவம் அவர்களுக்கு எடுத்துரைத்த கீதா உபதேச அற(றி)வுரையாகக் கொள்ளுதல் சாலவும் பொருந்தும்.
காசியை குறித்துச் செல்லும் கால்களே கால்கள் ஆகும்.
காசியை வழுத்தும் நாவே நாவெனக் கழறலாமால்
காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகள் ஆகும்.
காசியின் இனிது காணும் கண்களே கண்கள் ஆமால்.
-அதிவீரராம பாண்டியர்
சந்தர்ப்பமா… சாமர்த்தியமா…?
பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகளைப் பற்றிய கூற்றில் அன்பர் சுகி.சிவம் அவர்கள் சொல்ல முயலுவது, பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள் காசி போகவில்லை என்பது. ‘காசியை மீறிய பழநி’ என்ற திருப்புகழ் வரியை மீண்டும் மீண்டும் சொல்லி தன்னுடைய பேச்சு சாதுர்யத்தால் சனாதனக் கொள்கைக்கும், ஹிந்து மதத்திற்கும் எதிரான கட்சிகளை (ஆளும் தி.மு.க.வை) மகிழ்விக்கும் விதமாகப் பேசிய பாங்கு அவருடைய கடைமட்ட எண்ணத்தையே அந்த நேரத்தில் வெளிப்படுத்திக் காட்டியது.
இவ்விழாவினை சந்தர்ப்பமாக்கி, இப்பேச்சினை சாமர்த்தியமாக்கி மத்திய அரசினைச் சாடுகிறார் என்பது, நாட்டுப்பற்றாளர்களும், தேசிய உணர்வினை உடையவர்களுக்கும் அப்போதே புரிந்து இருக்கும். அன்பர் சுகி.சிவம் அவர்கள் சொன்ன செய்தியில் உள்ள அழுக்குகளை நீக்கி அச்செய்தியை பளிச்சிடச் செய்வதே இக்கட்டுரையின் மையக் கருத்தாகும்.
சென்னிமலையில் வசித்த பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள் பல காலம் எங்கு சென்றார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. பின்னர் தான் அவர்கள் காசி மாநகரத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது என அவர்களது வாழ்க்கை சரித்திரத்தை தொகுத்த சுவாமிகளின் சிஷ்யர் செ.கு.சிங்காரவேலு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எனவே பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுவாமிகள் காசியில் வசித்திருக்க வேண்டும் என்பது அவர்களது உள்ளக்கிடக்கை. பொதுவாக தன் பெயருக்கு முன்னால் காசிவாசி என்ற பெயரினை முன்னொட்டாக சேர்த்துக் கொள்பவர்கள் ஒரு வியாழ வட்டம் காசியில் வசித்திருப்பார்கள், வசித்திருக்க வேண்டும் என்கிறது ஹிந்து தர்மம்.
பழநி ஆதினம், தருமை ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம் (காசிமடம்) இவற்றை அலங்கரித்த தலைவர் பலரும் காசிவாசி என்றே தன் பெயருக்கு முன்னால் சேர்த்து இருக்கிறார்கள். அதைப்போலவே, பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகளுடைய பெயருக்கு முன்னால் அவர்களது காலத்திலும், பின்னர் அவர்களது பெயரை சிஷ்யர்கள் குறிப்பிடும் போதும் காசிவாசி என்று சொல்லும் முறை இருந்துள்ளது. நுால்களிலும் அச்சிட்டுள்ளார்கள். ஆக, பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள் பல ஆண்டுகள் காசியம்பதியில் வசித்தவர்கள் என்றாலும் தனது நிறைவுக் காலத்தை பழநியில் கழித்தார்கள் என்பது மேற்கண்ட செய்திகள் வழி நமக்கு உறுதியாகிறது.
தென் தமிழகத்திலுள்ள சிவஸ்தலங்களில் கரிவலம்வந்த நல்லுார், தென்காசி, சிவகாசி, திருப்புவனம்… இன்னும் பல்வேறு தலங்கள் காசியை விட கால்பங்கு கூடிய தலம், காசிக்கு நிகரானவை என அந்தந்த ஊர் தலபுராணங்கள், தலப்பனுவல்கள் பேசுகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள அவிநாசியும் ‘காசியில் வாசி அவிநாசி’ என்று புகழப்படுகிறது. இந்த ஒப்பீடுகள் அனைத்துமே, காசியை தரம் குறைப்பவை அல்ல, மேலும் உயர்த்துபவை என்பது இலக்கியத்தை அரசியல் கலக்காமல் படித்தவர்களுக்குப் புரியும்.
மேலும் பண்டைய காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் மக்களின் நலன் கருதி காசி மாநகரிலிருந்து பிடிமண் எடுத்து வந்து தமிழகத்தில் பல சிவாலயங்களை எழுப்பி விசாலாட்சி சமேத விஸ்வநாதப்பெருமானுக்கு கோயில்கள் எழுப்பியுள்ளார்கள். அதற்காக அத்தனை தலங்களும் அன்பர் சுகி.சிவம் அவர்கள் சொன்ன வரிகளுக்கு ஒப்பாகுமா என்ன…
அவர்கள் ஒரு சிறப்புக் கருதி சொல்லியிருக்கிறார்கள். அப்படியாவது அந்த தலத்தில் வசிக்கும் ஆன்மாக்கள் தெய்வ பக்தியில் உண்மையாக ஈடுபடுவார்களே என்ற உயர்ந்த எண்ணத்தில் அருளப்பட்ட வரிகள் அவை. வேறு காரணங்கள் எதுவும் இருக்க முடியாது என்பதை இங்கு மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், ஞானிகள், அருளாளர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் அனைவரும் பக்தியினுடைய பதினாறு வகை படிநிலைகளில் முதன்மை இடத்திலுள்ள ஞானத்தில் ஞானம் என்கிற உச்சநிலையில் இருந்து பரம்பொருளை பாடித் துதித்துள்ளார்கள். அந்த உயர்ந்த ஞானத்தினை அடைந்தவர் சற்குரு அருணகிரிநாதர் சுவாமிகள். அப்பெருமானால் பழநியம்பதிக்குப் பாடப்பெற்ற திருப்புகழ் 97 என்பர். அதில் இடம் பெற்ற காசியை மீறிய பழநியோடு, பதினாலு உலகோர் புகழ் பழநி, பிரகாசம்புரி பழநி என்று புகழ் பெற்ற வரிகளையும் சேர்த்து சொல்லி கேட்பவர்களுக்கு விளக்கியிருந்தால் அன்பர் சுகி.சிவம் அவர்கள் சொன்ன செய்தியில் ஒரு தெளிவு இருக்கிறது என்பதை அறியலாம். அதை விடுத்து ஆன்மிகப் பேச்சில் அரசியலைக் கலந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல…
அருணகிரிநாத ஸ்வாமிகள் பாடிய திருப்புகழ் அனைத்தையும் எழுத்தெண்ணிப் படித்தவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். முருகப்பெருமான் புகழ் பாடும் திருப்புகழுக்கு அருள்மொழி அரசு எழுதிய உரையே சிறந்த உரையென சைவத்தமிழுலகம் கொண்டாடி மகிழ்கிறது.
காசியிலும் மீறிய பழநி (82) என்ற திருப்புகழ் வரிகளுக்கு வாரியார் சுவாமிகள் எழுதிய உரை உங்கள் பார்வைக்கு…
காசி - ஆக்ஞை. அது புருவ நடு. அங்கு வீற்றிருப்பவர் சதாசிவமூர்த்தி. அவர் பழம் நீ என்று சுட்டிக்காட்டிய மூர்த்தி ஞான தண்டாயுதபாணி. எனவே, ஆக்ஞையில் அமர்ந்த சதாசிவ பெருமான் பழநி என்று உணர்த்தியதால், பழநி காசியிலும் மேம்பட்டது எனவுணர்க. காசிவாசி பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள், திருக்கோயில் திங்களிதழ் ஆசிரியர் முருகவேள் ஆகியோர் எழுதிய பழநி - காசி தொடர்புடைய இரண்டு கட்டுரையிலும் காசியை மீறிய பழநி வரிகளுக்கான நுட்ப திட்பமான பசுமையான விரிவான விளக்கங்கள் உள்ளன கண்டு தெளிக.
அருளாளர்களான அருணகிரிநாத சுவாமிகள், பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் அந்தத் திருப்புகழ் வரியை என்ன நினைத்துப் பாடினார்களோ, எதை எண்ணி கண்ணீர் சிந்தினார்களோ, எந்த உயர்ந்த நோக்கத்திற்காக உரை எழுதினார்களோ, அந்த உயர்வான செய்தியை அந்த ஞானத்தின் உச்சத்தில் நின்று யோசித்து ,யூகித்து அனைத்துலக முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற அனைத்து அன்பர்களுக்கும் செவி குளிரப் பகிர்ந்திருக்கலாம்.
அதை விட்டுவிட்டு அகண்ட பாரதத்தை உருவாக்கி கொண்டிருக்கும் ராஜ ரிஷிக்கு இழுக்கை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அச்செய்தியை அங்கு பகிர்ந்துள்ளார் மேடைப் பேச்சாலர் சுகி.சிவம் அவர்கள்.
எனினும், அப்போது பல முறை பரமகுருநாதரின் திருநாமத்தை தங்களை அறியாமலே சொல்லிச் சொல்லி அந்த இடத்திலேயே அங்கு மனதில் ஏற்பட்ட சிறிது நேர சலனத்தில் நிகழ்த்திய இழுக்கான செயலுக்கு கழுவாய் தேடிக் கொண்டார். நன்று. இதைத் தான் தெய்வாதினச் செயல் என்பார்கள் நம் முன்னோர்கள். பழநி திருத்தல ஓதுவாமூர்த்திகள் பாடிய திருப்புகழ் வரி நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திய அவர்,
அன்னபூரணியும் அகிலநாயகன் போல் அன்னையும் அப்பனுமில்லை
பின்னல் வார்திரையம் கங்கைபோல் தீர்த்தம் பிறக்கும் முப்புவனத்துமில்லை
என்னையாம் உரைப்போம் காசிபோல் தலமற்ற எவ்வகை அண்டத்துமில்லை
முன்னரும் அனைய காசியை நினைப்போர் மூடராய் உழல்வதுமில்லை
-காசி யாத்திரை விளக்கம்
-என்ற காசித்தலத்தின் சிறப்பினைச் சொல்லும் இச்செய்யுளை எப்படி காட்சிப்படுத்தினால் பொருள் காணலாம், படிப்பவருக்கு எவ்வாறு புரிய வைப்பது என்பதைத் தெரிவித்தால் நல்லது.
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதுாஉம் அன்று
-திருக்குறள் (641)
என்ற திருவள்ளுவரின் போதனைக்கேற்ப தங்களுடைய சொல்லினை வலிமையுடையதாக பரம்பொருள் அருள் செய்துள்ளார். அதுவே சிறந்த செல்வம். அதை சுகி.சிவம் அவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
சுகி.சிவம் அவர்களே, தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமேயானால் நிதானமாகப் படித்து சிந்திக்க; இனிமேலாவது கண்டபடி செய்திகளைப் பேசாமல், கண்டதைப் பேசுக என நினைவுறுத்தி, இது போன்று இனி நடக்கும் நிகழ்ச்சிகளில் சேரி, குக்கிராமம், கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், தேசம் ஆகியவற்றின் ஒற்றுமைக்கு வலுசேர்க்கும் விதத்தில் பேசுவீர்கள் என நினைக்கிறோம்.
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு எய்தவும் இது இயம்புவது யாது எனின் பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல் தெய்வ மாக் கவி மாட்சி தெரிவிக்கவே
என்ற கம்ப நாட்டாழ்வார் கவிச்சக்கரவர்த்தியின் திருவாக்கினை மனம் மொழி,மெய்களால் அப்பெருமானின் திருவடியை நினைந்து நினைந்து எண்ணற்ற சிவபுண்ணியச் செயல்களில் ஒன்றான தேசத்தின் ஒற்றுமைக்கு இம்மி அளவிலும் இடையூறு ஏற்படாதவாறு மக்களின் சிந்தனையை ஒன்றிணைப்பதும் சிவகருமச்செயல் தான் என்பதை இவ்விடத்தில் நினைவூட்டி கீழ்க்கண்ட தெய்வத்துதிகளைப் பாடி உய்வுபெற முயற்சிப்போமாக.
பரம்பொருள் துதி
ஊரிலான் குணம் குறியிலான் செயலிலான் உரைக்கும்
பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர்
சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு
நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்
-கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்.
முருகப் பெருமான் துதி
பகல் இரவினில் தடுமாறா பதி குரு எனத் தெளிபோத
இரகசியம் உரைத்து அனுமதி இரத நிலைதனைத் தருவாயே
இகபரம் அதற்கு இறையோனே இயல் இசையில் முத்தமிழோனே
சக சிரகிரிப் பதிவேளே சரவணப் பெருமாளே.
-சற்குரு அருணகிரிநாத சுவாமிகள்
திருப்புகழ் அடியார் துதி
திருப்புகழ் வல்ல சூரர் மகள் நாயகன், சங்கரற்குக்
குருப்புகழ் வல்ல குமரேசன், சண்முகன், குன்று எறிந்தோன்,
மருப்புகழ் வல்ல அருணகிரிப்பெயர் வள்ளல் சொன்ன
திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் துாளிஎன் சென்னியதே.
-அபியுக்தர் வாக்கு
ஓசைமுனிவர் துதி
வரைக்குள் உயர்வுற்ற திருத்தணிமால்
வரைக்கோர் அறுபான் ஒருநால் மகிழ்பா
உரைத்தார் அருணாசல உத்தமர்
தாமரைத்தாள் இணைமா முடிமேல் வனைவாம்.
-தவத்திரு சாதுராம் சுவாமிகள்
கிருபானந்த வாரியார் சுவாமிகள் துதி
காலையில் ஓரூர் கடும்பகல் ஓரூர் கங்குலில் பிறிதோரூர்
கதிர் வேல் இறைவன் அருள்பாடிடவே காலமும் கருதாதே
வாலைக்கிழத்தி வள்ளிக்குறத்தி வளமார் கருணையினால்
மலை நாட்டினில் திருப்புகழ் நாட்டியசெம்மதலாய் வந்தருள்க!
சீலஞ் செழித்த செல்வா வருக! எம் செய்தவப்பயன் வருக!
செயலும் சொல்லும் சிறிதும் பிறழாச் செம்மால் வந்திடுக!
ஞாலம் செழிக்க ஞானம் விளைக்கும் நாயக! வந்திடுக!
நாவலத் தாலிப் பூவலங் கொள்ளும் நலமே வந்தருளே!
-க.தியாகசீலன்
பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள் துதி
சிவனருளும் ஆகமத்தை நன்றாய்க் கற்று
தேசமெலாம் சைவ நெறி சிறப்புற்றோங்க
பவம்போகச் சிவனடியை சேரு மாறு
பாக்கியமாம் சிவதீக்கை தந்து காத்தாய்
நவமான சென்னிமலை பழனி காசி
நாடெலாம் சென்று சிவநெறி வளர்த்த
தவவடிவே ஈசான சற்குருவே போற்றி
தருமமே சிவஞானத் தலைவா போற்றி
-சைவ.சு.ராமலிங்க தத்புருஷ சிவம்
வாழ்த்து
விண்முகில் பொழிக வேதம் விளங்குக மறையோர் வாழ்க!
மண்முக அரசர்நீதி வளர்க! ஆனினங்கள் நல்க!
பண்முக நால்வர் பாடல்பதி தோறும் நிறைக பார்மேற்
சண்முகர் அருளும் சைவசமயமும் தழைக மன்னோ!
-பாலசுப்பிரமணியக் கவிராயர்
அருமறை முனிவர் வாழ்க! ஆனினம் வாழ்க தெண்ணீர்
விரிதிறை உலகம் காக்கும் விறல்கெழு வேந்தன் வாழ்க!
மருவிய திங்கட்தோறும் மழைவளம் சுரக்க வெங்கோன்
பொருவற மொழிந்த தொன்னுால் பொற்பொடும் பொலிக மாதோ!
-அதிவீரராமபாண்டியர்
ஸ்ரீ கார்த்திகேய நாம சங்கீர்த்தனம் சிவசுப்பிரமணியோம்
ஸ்ரீ வள்ளி காந்தஸ்வரணம் ஜெ ஜெ சுப்பிரமணியோம்
திருச்சிற்றம்பலம்
வாழ்க பாரதம்! வாழிய தாய்த்திருநாடு!
$$$