உருவகங்களின் ஊர்வலம்- 43

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #43

43. மூன்றாம் கண் திறந்தது.

    உன் ஒரு காதை மூடிக்கொண்டு இன்னொரு காதில் மென்மையாகச் சொன்னால் அதை உடனே நடத்திக் கொடுத்துவிடுவாயாம்.

    கண்களை இறுக மூடிக் கொண்டிருக்கிறாய். நீ கடைசியாகக் கண்ட காட்சி உன்னை அப்படிச் செய்ய வைத்திருக்கும். பற்களை நற நறவென கடித்துக்கொண்டு பாய்வதற்காகக் காத்திருக்கிறாயா? கண்களில் பெருகிய கண்ணீர்க் கடலை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறாயா?

    உன் மெளனம் உள்ளூர நடுங்க வைக்கிறது.

    *

    உனக்குப் பின்னால், ஒவ்வொரு கல்லாக எடுத்து அடுக்கி ஒரு கட்டடம் எழுப்பப்பட்டிருக்கிறது.

    அதே பிரகாரங்கள் போல, அதே கோபுரங்கள் போல, அதே உச்சியில் பறக்கும் கொடி போல, அதே உன் ஆரூடரின் அரு உருவம் போல அனைத்தையும் கொண்ட ஒரு கட்டடம்.
    உன் கோபம் இப்போது யார் மீது என்று தெரியவில்லை; உன் சோகம் இப்போது யாரால் என்று தெரியவில்லை.

    உன் கண் முன்னே நடந்தவையா… உன் முதுகுக்குப் பின்னே நடப்பவையா… உன்னைக் கல்லாகவே எது உறையச் செய்திருக்கிறது?

    *

    எங்கு எழுப்ப வேண்டுமோ அங்கு எழுப்பாமல், எங்கு முடிந்ததோ அங்கு எழுப்பியதை ஏமாற்று வேலை என்பதா?

    எதையும் யாரும் மறக்காமல் இருக்க, எதிரிலே எழுப்பியதை எழுச்சியின் முதல் எக்காளம் என்பதா?

    மறப்போம், மன்னிப்போம் என்ற நல்லிணக்கத்தின் வெளிப்பாடா? குட்டக் குட்டக் குனியும் கோழைத்தனத்தின் குறியீடா?

    *

    மிகவும் விசித்திரமான, வேதனையான, வேடிக்கைதான் இல்லையா..?

    கண் முன்னே ஒருவர், நீருக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்; கைகள் மட்டுமே வெளியே தெரிகின்றன. எப்போதாவது முழு பலத்தையும் கூட்டி முகத்தை காட்டுகிறார். பின் முங்கிவிடுகிறார்.

    ஆயிரக்கணக்கில் அனுதினமும் அன்புக்குரியவர்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள். ஒருவர் கூட ஒரு சிறு கயிறைக்கூட வீசாமல், ஒருவர் கூட உள்ளுக்குள் பாய்ந்து காப்பாறாமல் கரை வழியாக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

    *

    சந்திர சூரியர்கள் இருக்கும்வரை, இந்த சன்னிதியில் இருந்து அருள்பாலிப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்தவர் எப்படியும் உன் முன்னால் எழுந்தருளிவிடுவார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறாயா?

    உன் கண்கள் தான் மூடியிருக்கின்றன; காதுகளுமா மூடிவிட்டன. இதோ நான் வந்திருக்கிறேன்.

    எழுமின்…விழிமின்…

    உன் மூச்சுக் காற்றின் வேகத்தில் பறந்துவிடாதா, முன்னால் இருக்கும் மூர்க்கங்கள் எல்லாம்.

    நீ எழுந்திருக்கும் வரை இந்த இடம் விட்டு நகர மாட்டேனென்று கண்ணீர் மல்க அவர் காதுக்கு மட்டும் கேட்கும்படிக் கதறினேன்.

    நந்திகேஸ்வரர் மெள்ளக் காதை அசைத்தார்.
    பிரமை என்று பேசாமல் இருந்தேன்.
    மீண்டும் அசைத்தார்; முன்னால் வா என்பதுபோல
    மீண்டும் மீண்டும் அசைத்தார்.
    ஆனந்த அதிர்ச்சியில் முன்னால் சென்றேன்.
    மெள்ளக் கண் திறந்தார்.

    எம் பெருமானே…
    உன் திரு உருவம் அல்லவா… உனக்கு நேர்ந்தது அல்லவா அந்தக் கண்ணில் அழியாத கல்வெட்டாக அழுந்தப் பதிந்திருந்தது!

    கண்களை மூடிப் பெருமூச்செறிந்தவர், ’என்ன நடக்கிறது’ என்றார் மென்மையாக.
    மெளனமாக இருந்தேன்.

    கண் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தவர், எதுவுமே நடக்கவில்லையா என்றார் சோகமாக.

    இஸ்லாமியப் புனித நூல், பிற வழிபாட்டு மையத்தை இடித்துக் கட்டும் தொழுகை மையத்தை ஹராம் என்றே சொல்கிறது. நம் ஆகமங்களும் எம் பெருமான் ஒரு இடத்தில் எழுந்தருளிவிட்டால் யுக முடிவு வரை அது அவருடையதே என்கின்றன.

    அப்படியானால், இன்னும் ஏன் எதுவும் மாறவில்லை? ஏன் எதுவும் மாற்றப்படவில்லை?

    மதங்களின் காலம் முடிந்துவிட்டதாம்.

    அப்படியென்றால்…

    அதாவது, நம் மதங்களின் சார்பின்மையே நம் தேசத்தின் இலக்காம்.

    புரியவில்லை.

    எங்களுக்கும்தான் புரியவில்லை. நமக்கு இழைக்கப்பட்ட அத்தனை கொடுமைகளுக்கும் யாரும் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டாம். நாம் மட்டும் செய்யாத கொடுமைகளுக்கும் சேர்த்து பிராயச்சித்தம் செய்துகொண்டே இருக்க வேண்டுமாம். திட்டமிட்டுப் புகுத்தப்பட்ட திடீர் சட்டம் என்ன சொல்கிறதென்றால், விடுதலைக்கு முன் எப்படி இருந்ததோ வழிபாட்டு மையங்கள் எல்லாம் அப்படியே இருக்க வேண்டுமாம்.

    அது என்ன விடுதலைக் கணக்கு?

    அது ஒரு தறுதலைக் கணக்கு. எஜமானர் தீர்க்க விரும்பாத பிரச்னையென்றால் அடிமைக்கும் அதைத் தீர்க்க அனுமதி கிடையாதுதானே?

    எல்லா விஷயங்களிலுமே இந்த விடுதலைக் கோடு உண்டா?

    அடிமைப்படுத்தியவர்களின் பிரதிநிதிகள்தான் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தனர் என்பதால் சகல விஷயங்களிலும் அதுவே சட்டமாகியிருக்கிறது. திடீரென்று மதச்சார்பின்மை என்றனர்; அதைவிட திடீரென்று எழுந்து, எதையும் திருப்பித் தர வேண்டாம் என்றனர். ஓராயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன; எல்லா கோயிலையும் கட்டித் தரமுடியுமா..? என்று எதிரியின் வாதம் பேசுகின்றனர்.

    இடித்தது உண்மையென்றால் கட்டித் தருவதுதானே நியாயம்; அதற்குத்தானே நீதிமன்றம்?

    வழக்குகள் தொடுத்து, சான்றுகள் கொடுத்துவிட்டால் அதைத்தான் செய்தாக வேண்டியிருக்கும் என்பதால், வழக்கே தொடுக்கவிடாமல் தடுக்க வாகாக ஒரு சட்டம் வகுத்துவிட்டனர். ஒற்றைக் கோயிலுக்கு மட்டுமே விதிவிலக்கு கொடுத்துவிட்டு ஓராயிரம் கோயில்களுக்கு அநீதி இழைத்துவிட்டனர்.

    இங்கு இப்போது எல்லாமுமே சட்டப்படிதானா?

    ஆம், நமக்கு விரோதமான சட்டங்களின்படிதான்.

    சாதகமான சட்டங்களும் உண்டோ?

    தேடிப் பார்த்தால் இருக்கும். ஆனால், அதையெல்லாம் தெளிவாக மீறிக் கொள்வார்கள். ஆலயங்களில் அரசுக்கு அரசியல் சாசனப்படி இடமில்லை. ஆனால் ஆக்கிரமித்துக் கொள்வார்கள்….

    இந்து ஆலயங்களில் இந்துக் கடவுள்களை வழிபடுபவர்களுக்கு மட்டுமே பதவி என்பதை, கண்ட நாய்களும் ஊடுருவ வாகாக கடவுளை வழிபடுபவர்கள் எல்லாரும் என்று நாத்திக அரசு நயவஞ்சகத் திருத்தம் செய்தது….

    அப்படியாக, சட்டப்படியும் நம்மை ஒடுக்குவார்கள்; சட்டத்தைத் திருத்தியும் ஒடுக்குவார்கள்; சட்டத்தை மீறியும் ஒடுக்குவார்கள்….

    இன்னொரு நியாயமும் நீதிமான்கள் கேட்டனர்; இந்துக் கோயில்கள் மட்டுமா இடிக்கப்பட்டன; புத்தர் கோயில்களும்தான் இடித்து மாற்றப்பட்டுள்ளன.

    கடவுளே இல்லை என்றவருக்குக் கோயிலா..? யார் கட்டினார்கள்? எப்போது கட்டினார்கள்?…

    கண் முன் இருக்கும் சான்றை இல்லை என்பவர்கள், இல்லாத சான்றை இருக்கலாம் என்றும் சொல்வதும் இயல்புதானே?…

    அப்படி ஏதேனும் சான்றுகள் இருந்தால் அவற்றைத் திருப்பிக் கொடுக்கலாம் அல்லவா?

    நிச்சயமாக. ஆனால், ஆதி யோகியை அருகர் என்பார்கள்; ஆதி மூலனை அவலோகிதேஸ்வர் என்பார்கள்; தாமரை உள்ள இடமெல்லாம் தமதென்று சொல்வார்கள்; ஆல மரத்தடியில் அமர்ந்திருப்பவர் அவரே என்பார்கள்.
    அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் எதுவும் இருக்காது; அவர் தம்(ம) நூல்களிலும் அப்படி எதுவும் இருக்காது; அயல் நாட்டினர் எழுதிய ஆவணம் எதிலும் அவை சொல்லப்பட்டிருக்காது ஆனாலும் எல்லா கோயிலும் புத்தர் கோயிலே என்பார்கள்
    ஒரேயடியாகப் பூட்டிப் போட ஒற்றை குதர்க்கம் போதும் அவர்களுக்கு; நம் பக்கம் ஓராயிரம் சான்றுகள் இருந்தாலும் ஓரங்கட்டிவைக்கவும் முடியும்.
    ஆக, இந்த மதங்கள் சொல்லும் நியதியை இந்திய சட்டம் அங்கீகரிக்காது; எஜமானர் கிழித்த கோட்டைத் தாண்டாது; ஓராயிரம் தப்பு செய்தவரை எப்படி தண்டிக்க என்று சொல்லி ஒரு தப்பைக்கூடச் சரி செய்யாது.

    ஆம். ஆநிரைகளையெல்லாம் கவர்பவன் அமைதியாக வாழ்வோம் என்று சொல்கிறான்; மீட்கப் புறப்படுபவர்களை சட்டத்தை மீறுபவர்களென்று பழிக்கிறான். அதனால் நந்தியம்பதியே உமக்குரியதை நீரே மீட்டுக்கொடுங்கள். கோமாதாவின் மூச்சுக் காற்றில் முப்பதினாயிரம் வீரர்கள் வந்தனரென்றால் உன் மூச்சுக் காற்றில் முப்பது கோடி வீரர்கள் வருவாரன்றோ… அதற்குத்தான் அப்படி அழுது உம்மை அழைத்தேன்.

    இந்துவுக்கு மட்டும்தான் இப்படியா பக்தனே?

    இல்லை நந்திகேஸ்வரரே… புத்தன் பிறந்த பூமியில் பெளத்தர்கள் இல்லை; யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய புனித இடங்களில் ஆப்ரஹாமிய ரத்தம் ஆறாக ஓடுகிறது; அன்னையின் ஆலயங்களுக்கு அருகில் ஹலால் இறைச்சிக் கடைகள்; கயிலையம்பதி கம்யூனிஸக் கடுங்காவலுக்குள்; லெனின் சிலை லெனின் தேசத்தில் உடைப்பு; சோவியத் ஒன்றியம் சுக்கு நூறாக உடைப்பு. கன்ஃபூசியனுக்கு கம்யூனில் இடமில்லை. பாற்கடலைப் பரந்தாமன் பால்வெளியில் அமைத்துக்கொண்டதால் தப்பிவிட்டான். எனினும் அவன் ஆலயம் முன்பே அவனை எதிர்க்கும் அரக்கனின் சிலை.

    ஆக, அத்தனை அடையாளங்களின் கோட்டைகளில் ஆயிரம் பொத்தல்கள். உலகை வென்ற எவருக்கும் ஊருக்குள் மரியாதை இல்லை. இதுதானே உலக வரலாறு?

    ஆனால், நந்திகேஸ்வரரே, ஆதிக்க சக்திகளுக்கு அப்படி நடந்தால் அது அவை செய்த அநீதிகளுக்கான தண்டனை; அல்லாத சக்திகளுக்கு அப்படி நடந்தால் நிரபராதிக்கு விதிக்கப்படும் இரட்டைத் தூக்கு தண்டனையன்றோ அது?

    என்ன செய்ய பக்தனே… உச்சியில் இருக்கும் எம்பிரானும் கடுங்காவலுக்குள் கட்டுண்டு கிடக்கிறான். ஊருக்குள் இருக்கும் நானும் காட்சி விலங்காகக் கூண்டுக்குள் கிடக்கிறேன். இரட்டை இயந்திரங்கள் இருந்துமே இப்படியென்றால் இந்துஸ்தானின் கதி இனி என்னவாகும்?

    அது சரிதான் ’சட்டங்களின்’ படி ஆளப்படும் ராஜ்ஜியத்தில் தர்மத்துக்கு இடமேது? கள்வர்களின் நீதிபதி வழங்கும் தீர்ப்பில் களவாடியவனுக்குத்தான் எல்லாம் சொந்தம்.
    இறைவன் படைப்பில் எல்லாரும் சமம்; எல்லாருக்கும் எல்லாமும் சொந்தம் என்று அவர் காட்டும் மேற்கோளை எவரால் மறுக்க முடியும்?…

    வரும்போது எதைக் கொண்டுவந்தோம்; போகும்போது எதைக் கொண்டுபோகப் போகிறோம் என்று அவர் யாக குண்டத்தில் சிறுநீர் கழித்தபடியே வேதாந்த முத்துகள் உதிர்க்கும்போது யார் அதைத் தடுக்க முடியும்?…

    எல்லா தெய்வங்களும் அன்பையே போதிக்கின்றன என்று, அவர் எச்சில் துப்பித் தரப்படும் உணவைத் தின்றுவிட்டு ஏப்பம் விட்டபடியே சொல்லும்போது யாரால் அதை மறுக்க முடியும்?…

    தொழில்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டியது காவலர்களின் கடமை; களவும் ஒரு தொழில் கடத்தலும் ஒரு தொழில்தானே என்கின்றனர்….

    விவசாயம் ஆதி தொழிலன்றோ; அத்தனை சலுகைகளும் அவர்களுக்கும்தானே தர வேண்டும்? கஞ்சாவும் ஒரு பயிர்தானே என்கின்றனர்….

    ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட்டு அத்தனை வாகனங்களும் விலகித்தானே நிற்க வேண்டும்; அவற்றை நிறுத்த எந்த சிக்னல் விளக்குக்கும் அதிகாரம் இல்லையே; அவற்றுக்கு ஏது வேகக்கட்டுப்பாடு; சிவப்பு விளக்கு அச்சுறுத்த சாலையில் சைரன் ஊதியபடி தடதடத்துக் கடக்கும் எல்லா ஆம்புலன்ஸ்களும் உயிர் காக்கும் மருத்துவமனைக்கு உயிருக்குப் போராடும் நோயாளியைச் சுமந்து செல்வதாக நம்பிக்கொள்வதுதானே வாழ்க்கை?

    சரியாகச் சொன்னாய் பக்தனே… கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்; இடிக்கப்பட்ட கோயில்கள் இருந்த இடத்தில் மட்டுமா இருக்கிறார்? அப்புறம் தூய பக்தருக்கு ஆலயமெதற்கு? பக்தி வீட்டோடு இருக்க வேண்டும்; மனதோடு இருக்க வேண்டும். அப்படி வெளியில் காட்ட வேண்டுமென்றால் நடு நோட்டில் நமாஸ் செய்துகொள்ளுங்கள். புண்ணிய யாத்திரை எதற்கு? புஷ்கரணிகள் எதற்கு?

    என் காதோரம் குனிந்து சொல்லும் பக்தர்களில் யாரேனும் ஒருவர் தன் சுயநலம் விடுத்து ஒரே ஒரு கோரிக்கையாக என்னை எழுந்து நிற்கச் சொல்லி ஒரு முறையாவது வேண்டிக்கொள்ள மாட்டாரா என்று காத்திருந்தேன்.

    பக்தர் கூட்டத்தின் பிரார்த்தனைகளையெல்லாம் கேட்டுக் கேட்டுச் சலித்த நான் யாரேனும் ஒருவராவது யாரேனும் ஒருநாளாவது எனக்கு என்ன தேவை என்று என்னிடம் கேட்பாரா என்று இத்தனை தலைமுறை காத்திருந்தேன்.

    இதோ நீ வந்து எழுப்பினாய்; எழுந்துவிட்டேன்.

    என் மனக்கண்ணில் இருக்கும் எம்பெருமான் ஆலயம் எந்நாளும் அழியாது; அழிக்கப்பட முடியாது. உங்களுக்கான கட்டடத்தை நீங்கள் கட்டிக் கொண்டுவிட்டீர்கள். என் அப்பனின் ஆலயம் என் கண் முன்னே இருக்கிறது. நம் அப்பன் எங்கு வழிபட்டாலும் எல்லாமும் அருள்வான்….

    காசியில் இருப்பவரேதான் காபாவிலும் இருக்கிறார்; அவனருள் இருந்தால்தான் அவன் தாள் வணங்க முடியும்; அவனருள் இருந்ததால்தான் அவன் ஆலயத்தை சிதைக்கவும் முடிந்தது…..

    மாயக் கண்ணன் நல் மேய்ப்பனாக அவதரித்திருக்கிறான்… ஏதேனும் ஒன்றில் இனிதே ஐக்கியமாகிவிடுங்கள் – என்றபடியே,

    கால் மடக்கி உட்கார்ந்திருந்த நந்தி மெள்ள எழுந்து நின்றபோது ஒட்டகமாகியிருந்தது.

    காலோரம் அமர்ந்து காதோரம் வேண்டிக்கொண்ட பக்தன் அதிர்ந்து கழுத்தை உயர்த்திப் பார்த்தபோது, விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்திருந்தது.
    பாலைவன சூட்டுக்குப் பழகிய அதன் கால்களில் ஒன்றை பக்தனின் தலையில் மெள்ள வைத்து, கறை படிந்த பற்களைக் காட்டி இளித்தபடியே அழுத்தியது.

    கோயில் நிலம் எப்போதோ பாலைப் புதைமணலாகியிருந்தது. இறுதி பக்தன் அதற்குள் மெள்ள அழுத்தப்பட்டான்.

    முதலில் கால்கள் புதைந்தன;
    இடுப்பு கொண்டு திமிறினான்; அதன் பின் இடுப்பு புதைந்தது.
    தோள் கொண்டு திமிறினான்; அதன் பின் தோள்வரை புதைந்தான்.
    மூக்குவரை புதைகையில் மென் பாலை மணல் ஊடுருவியது சுவாசக் குழாய்க்குள்.
    கண்கள் பிதுங்கின; நிலைகுத்தி நின்றன.

    அப்போது,
    அந்த அதிசயம் நடந்தது.
    அவனுடைய
    மூன்றாம் கண் திறந்தது.
    அந்த பக்தருக்குள் அவர் இறங்கினார்.
    அதன் பின் புதைந்தது அவரல்ல.
    அதன் பின் விஸ்வரூபம் எடுத்தது அந்த ஒட்டகமல்ல.

    இம்முறை அவதாரம் எடுக்கப் போகிறவருக்கு
    இன்னொரு அவதாரம் தேவைப்படாது.
    பகையையும் தீயையும்
    மிச்சமின்றி அழித்தாக வேண்டும்
    என்பதே அவரின் வேதம்.

    ஓம்
    ஓம்
    ஓம்

    $$$

    Leave a comment