சொன்னாலும் விரோதம்! சொல்லாவிட்டாலும் விரோதம்!   

-கருவாபுரிச் சிறுவன்

இன்னிசை அணிந்த பொன்னிளம் செல்வி
          இனிமையே தன் பெயர் ஆனாள்
மன்னுலகு எல்லாம் வணங்கிடத் தக்க 
         பொதுமறை அருளிய வாணி 
பன்மொழிக்கு உயர்ந்த தென்மொழி அரசி 
          பரமனின் வரம் பெற்ற புதல்வி 
தன்னிகர் அற்ற தமிழென்னும் அமுதத் 
          தாய்மலர் அடிபணிந்து உய்வாம். 

                  -கவியோகி சுத்தானந்த பாரதி. 

என்றும் பதினாறு:

பெற்றோர்கள், பெரியோர்கள் தம் குழந்தைகளையும், மணமக்களையும்  ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவது மரபு.  திருவையாற்று புராண ஆசிரியர்  நந்தியெம்பெருமான் மூலம் சிவபெருமானிடம் வரங்களாகப் பெற்ற பேறுகள் பதினாறு என்பதும், அப்பேறுகளைப் பெற  ஆன்மாக்கள் சிவபிரானை வழிபடக்கூடிய சணிகலிங்க வகை பதினாறு என்றும், அதற்கு உபச்சாரமாக காட்டக்கூடிய தீபதுாபங்கள் பதினாறு என்றும், மேற்கண்ட சிவபூஜா வழிபாட்டு பத்ததி என்னும் வழிமுறைகளை வகுத்தவர்கள்  அகோர சிவம் உட்பட பதினாறு பேர் என்பதும் தெளியக் கிடைக்கும் செய்தி.

காலந்தோறும் புலவர்கள்  பெருமக்கள் வழிபடும் கடவுள் மீது சோடச பிரபந்தங்கள் என்ற பெயரில் நுாற்கள் பல இயற்றியுள்ளார்கள். அந்நுாற்கள் யாவும் பதினாறு கால் மண்டபத்தில் வைத்து அரங்கேற்றம் செய்யப்பெற்றன என்பது கல்வெட்டு கூறும் வரலாறு.  அதைப் போலவே, பெயர், இனிமை, எளிமை, தனிமை, தொன்மை, சுழி, எழுத்து, சொல், ஒலி, கவிதை, கலை, மருத்துவம், இசை, நாடகம், இலக்கியம், இலக்கணம்  ஆகிய பதினாறிலும்  தமிழின்  சிறப்பு  மிளிர்ந்துள்ளது  என்கிறார் அறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள்.

தமிழின் பதினாறு சிறப்புகளில்  ஒன்றாகிய அதன்  தொன்மையைப்  பற்றி எட்டையபுரத்தினை பூர்வீகமாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி,

ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
   ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
   மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்!

என வியந்து போற்றுவார். அது மட்டுமா… சிவபெருமானைப் பாடிய நாயன்மார்களும் ஆழ்வார்களும் தன் பெயருடன் தமிழை இணைத்து பதிகங்களில் பாடிப் போற்றி இருக்கிறார்கள். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட உயர்தனிச் செம்மொழியாகிய தமிழை வழிபடும் கடவுளாக பாவிப்பவர்கள் நம்மவர்கள். அதனால்தான் ஆறுமுகச்சிவனாரான முருகப் பெருமானை தமிழோடு இயந்து வியந்து போற்றுகிறோம். அவன் திருவடியை நாவழுத்த வந்தித்து வணங்குகிறோம்.  

முருகப் பெருமானின் சிறப்புகளையுடைய  அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியம்பதியின் அருமை, பெருமையும் அனைவரும் அறிந்தே. 

அங்கு சமீபத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டு நாட்களாக நடைபெற்றது.  அதில் மாநாட்டு ஆய்வு மலர் ஒன்றை வெளியீடு செய்தார்கள். அம்மலரின் நறுமணத்தினை நுகர்வதே இக்கட்டுரையின்  நோக்கம். 

உங்களிடம் உள்ள மிகச் சிறந்தவற்றை உலகிற்கு அளியுங்கள். இவ்வுலகம்  உங்களை காலால் மிதித்து தள்ளிவிடும். இருந்தாலும் உலகுக்கு உங்களிடம் உள்ள சிறந்தவற்றையே வழங்குங்கள் என்கிற சிவானந்தரின் பொன்மொழிகளை இவ்விடத்தில் நினைவில் கொள்வோமாக.  

குன்றக்குடி அடிகளாரின் திருவாக்கு:

மானுடத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் புத்தகங்களின் வரலாறு மகத்தானது. மாண்புகள் நிறைந்தது. ஒரு வகையில் புத்தகங்கள் தான் வரலாற்றைப் புனிதப்படுத்தி இருக்கின்றன. ஒரு நூல் அதாவது ஒரு புத்தகம் வெளியாகிறது என்றால் அதற்கு முன்னால் எத்தனை எத்தனை ஆக்கப்பணிகள் நடந்துள்ளன என்று நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். முன்னோட்டம், தேடுதல், தொகுத்தல், பகுத்துக் கொள்ளுதல், கட்டுமானம், காலத்தேர்வு என்ற பின்னணியில் பல்வேறு பணிகள் திட்டமிடப்பட்டு முறையாக நடைபெற்ற பின்னர் தான் அது  ஒரு நூலாக, அது ஒரு புத்தகமாக வெளிவந்து நம்முடைய கைகளுக்குக் கிடைக்கிறது. வெள்ளைத் தாளில் மை பூசுவது அல்ல நுால் வெளியீடு என்பது.

-என்ற செய்தியை வழங்கியவர்  குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார். தனது படைப்பிலும் இதை  பதிவு செய்துள்ளார்.   

அப்படியானால் ஒரு கல்லுாரியோ, பல்கலைக்கழகமோ, அரசின் சார்பில் நடக்கும் நிகழ்வில் வெளியிடப்பெறும் விழா மலர் எவ்வளவு சிறப்பும் மகத்துவமும் பொருந்தியதாக இருக்க வேண்டும் என்பது  உங்கள்  சிந்தனைக்குரியது. 

காதிலகுங் குண்டலமாக் குண்டலகே  சியுமிடையே கலையாத் சாத்தன்
ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை யாவளையா பதியும் மார்பின்
மீதணிசிந் தாமணியாச்  சிந்தாம ணியுங்காலில் வியன்சி லம்பாத் 
தீதில்சிலப் பதிகார மும்புனைந்த தமிழணங்கைச் சிந்தை செய்வாம்!

        -தி.சங்குப்புலவர். 

அத்தாரிட்டி’யான நூல்கள்: 

சாதாரண ஒரு நிகழ்ச்சி நிரலில் தொகுத்து வழங்கும் செய்திக்கு எவ்வளவு தன்னார்வம் கொள்கிறோம் என்பதை நினைத்தால்  இங்கே முன் வைக்கப்படும்  கூற்றுகள் சரியானதாக இருக்கும்; சரியாகத்தான் இருக்கும். 

தமிழுக்கு அத்தாரிட்டியான முதல் மூன்று நூல்கள்,  திருவள்ளுவ தேவ நாயனார் அருளிய திருக்குறள், ஒளவையார் அருளிச்செய்த பாடல்கள், தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் என ஒளவை துரைசாமி  பிள்ளையவர்கள்  உள்பட பல தமிழ் அறிஞர் பெருமக்களும் தத்தம் படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார்கள். 

முன்னிரண்டு இலக்கியம், பின்வருவது இலக்கணம். அதில் தொல்காப்பியத்திற்கு மதிப்புரை தரும் தொல்காப்பியரின்  நண்பரான  பனம்பாரனார்

 ..... எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவனிய நிலத்தொடு
முந்து நுால் கண்டு முறைப்பட எண்ணி
புலந் தொகுத் தோனே.... 

என்ற பாயிரச் செய்யுளால் தொகுப்புப் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். 

சங்க இலக்கிய நூற்களில் எட்டுத்தொகை ஒரு  தொகுப்பு நூல் தானே? அதனோடு இணைந்து கூறப்படும் பத்துப்பாட்டு நூற்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை என்றாலும் அதனை ஒன்றுபடுத்தி அறிஞர்கள் உரை வழங்கியுள்ளார்கள். மேலும்,   

சைவ நூற்களில் முதன்மையான பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தளித்தவர் நம்பியாண்டார் நம்பிகள். 

வைணவ நூற்களில் முதன்மையான திவ்விய பிரபந்தங்களை  நம்மாழ்வாரை தரிசனம் செய்து நமக்கு தொகுத்து வழங்கியவர் நாதமுனிகள். 

முத்தமிழ் முருகனது புகழ்பாடும் திருப்புகழைத் தொகுத்தளித்தவர் திருத்தணிகை செங்கல்வராயப் பிள்ளையவர்கள். 

பின்னாளில் தோன்றிய அருளாளர்களில் துறைமங்கலம் சிவப்பிரகாசர், சிவஞான யோகிகள், குமரகுருபரர், திருவருட்பிரகாச வள்ளலார், தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், கல்லல் குகமணிவாசக சரணாலய சுவாமிகள், வாரியார் சுவாமிகள், பாரதியார் போன்றோரின் படைப்புகளை எல்லாம் ஒருசேரத் தொகுத்து, தெள்ளிய அமுதமாக  நாமெல்லாம் அருந்த  வெளியீடு செய்தவர்கள் தமிழைக் கசடறக்கற்றவர்கள்  என்பது தமிழ் நுால் வரலாற்றில் காணக்கிடைக்கும் செய்திகளாகும்.

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே

      -திருமூலதேவ நாயனார்

வெளியீட்டின் சிறப்பம்சங்கள்: 

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு  – 2024 ஆய்வு மலரினை அதில் பங்கேற்ற  அடியேனது மாணவன் வந்துவந்து  கொடுக்க, அதைப்பார்க்கும் வாய்ப்பினை பழநி ஆண்டவர் அருளிச் செய்தார் என்பதை  எண்ணி மகிழ்ந்தேன். அதில்… 

 * 344 தலைப்புகளில் இடம் பெற்ற தமிழ் ஆய்வுக் கட்டுரைக்குப் பதிலாக ஆய்வுச் சுருக்கத்தோடு 41 ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளையும்  விலையுயர்ந்த தாளில் அச்சிட்டி வெளியீடு செய்திருந்தமை கண்டு அளவில்லாத  மகிழ்ச்சி அடைந்தேன். 

* வரிசை எண், ஆய்வுப்பொருள், பக்க எண்  என தலைப்பிட்டு  விவரமாக அச்சிடுவதற்கு நேரமில்லாமல் உழைத்த அனைத்துலக முருகன் மாநாடு ஆய்வு மலர் குழுவினரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

* நுாலாசிரியரின் கருத்துக்கு துறை பொறுப்பன்று என பொத்தாம் பொதுவாக நுால்விவரக் குறிப்பில் பதிப்பாசிரியர் பதிப்பித்து இருப்பது போற்றற்குரியது. 

* ஆய்வாளர்களைப் பற்றிய சிறு குறிப்பும் கூட இல்லாதது  ஆய்வு உலகத்திற்கு புதுமையான வழிகாட்டியாக அமைந்துள்ளது இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மலர் என்பதை  எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

* இடம் பெற்ற தலைப்புகள் மீண்டும் இடம் பெற்றிருப்பதும், இடம் பெற்ற செய்திகள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவதும், பதிப்புலகில் புதியதொரு சாதனை. 

*  ‘அதிகம் அறியப்படாத முருகன் அடியார்கள்’ தலைப்பில்  அருணகிரிநாதர், அகத்தியர், நக்கீரர், பகழிக்கூத்தர் போன்றவர்களை அறிமுகம் செய்து வைக்கும் பாங்கு போற்றத் தகுந்தது 

* பழநி முருகப் பெருமானை நவபாஷண மூர்த்தமாக செய்த போகரைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பினை தனி பதிப்பாக வெளியீடு செய்ய முடிவெடுத்த முயற்சி பாராட்டத்தக்கது.  

* தமிழுக்காகவே, முருகப் பெருமானுக்காகவே வாழும் அறிஞர் பெருமக்கள் எத்தனையோ பேர் அயராது அரும்பாடுபட்டு உண்மைத்தொண்டர்களாக தொண்டு செய்து  இம்மாநிலத்தில் வாழ்ந்தும்,  வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எள்ளளவு கூட சிரமம் கொடுக்காமல் விழாக்குழுவினர்  தன்முனைப்போடு செயல்பட்டு வெற்றி கண்ட  விதம் அருமையிலும் அருமை. 

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
           கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
            பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
           நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
           என்னுயிர் என்பேன் கண்டீர்!                                                           
                 -பாரதிதாசன்

முக்கிய பணி எது?

மாநாட்டுக் குழுவினர் எந்தப் பொருளுண்மை  அடிப்படையில் நூலினைத் தொகுத்துள்ளார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இந்த்த் தொகுப்பு தற்காலத்திற்கு ஏற்றாற்போல நாங்கள்தான் மாற்றி  வழங்கியுள்ளோம் தங்களுக்குத் தான் (கட்டுரையாளர்) புரியவில்லை எனில் புரியுமாறு விளக்குவது விழாக் குழுவினரின் கடமை.

* எழுத்து, சொல், பொருள் என்ற இலக்கணத்தின் படியும், இலக்கியங்கள் வகுத்துக் காட்டும்  அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றினை ஆதாரமாகக்கொண்டும் தொகுக்கப்பட்டுள்ளதா… 

* தமிழின் அங்கமாகிய இயல், இசை, நாடகம் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதா…

* தமிழாகிய முருகப் பெருமானின் அவதாரம்  முதல் அவனது ஏனைய திருவிளையாடல்கள், திருக்கல்யாணத்தைப் பறை சாற்றும் புராணங்களை  அடிப்படையாக  வைத்து தொகுக்கப்பட்டுள்ளதா…

* அன்னை பார்வதிதேவியின் வாக்காகிய  ‘குன்றிருக்கும் இடங்கள் தோறும் குவலயத்தோர் வந்து வழிபடட்டும்’ என்பதற்கு  இணங்க முருகப்பெருமான் குடியிருக்கும்  தலங்கள் தோறும் சென்று அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழ் பாடி வழிபட்டாரே, அந்த திருப்புகழ் இடம் பெற்ற தலங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதா… 

* பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதா…  

* முருகப் பெருமான் புகழ் பாடும் இலக்கியங்களில் முதலில் தோன்றியவை, இரண்டாவது தோன்றியவை  என இலக்கியத்தின் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளதா….

* பொதுவாக இன்றைய நடைமுறையில் புழக்கத்தில் இருக்கும் பிரபல பக்தி இலக்கியங்களின் வரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளதா… 

* நூற்றாண்டு காலவரிசைப்படி ஆய்வு தரவு செய்யப்பெற்று தொகுக்கப்பட்டுள்ளதா… 

* அடியார்களுக்கு முருகப் பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள், பழநி ஆண்டவர் நிகழ்த்திய அற்புதங்கள் என்ற  அடிப்படையின்படி தொகுக்கப்பட்டுள்ளனவா…

* அறுபடை வீடுகள், புகழ் பெற்ற முருகப் பெருமான் திருக்கோயில்கள் ஆகியவற்றை மையமாக வைத்து  அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதா… 

* முருகப் பெருமான் கோயில் கொண்டு இலங்கும் திருத்தலங்கள் வட நாட்டில்  இருந்து தென்நாடு வரையிலும், இன்ன பிற நாடுகளிலும் உள்ளன. அவற்றை  வகைப்படுத்தி அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதா… 

* மாநாடு நடத்தப்பட்ட முருகப் பெருமானுடைய தலத்தினை மையமாக  வைத்து தொகுக்கப்பட்டுள்ளதா… 

* சித்தர்களின் தலைவன் முருகப் பெருமான்; அதனால் சித்தர்களை மையப்படுத்தித் தொகுக்கப்பெற்றுள்ளதா… 

* கட்டுரைத் தலைப்புகள், கட்டுரையாளர்களின் பெயர்களை மையமாக வைத்து அகர வரிசைப்படி தொகுக்கப் பெற்றுள்ளதா… 

* தமிழ் இலக்கிய வரலாற்றில்  தொல்காப்பியத்தில் தொடங்கி, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பன்னிரு திருமுறைகள், திவ்விய பிரபந்தங்கள் முதல்  பாம்பன் சுவாமிகள் வரை இடம் பெற்ற பல்வேறு இலக்கியங்கள் யாவும் தொகுப்பினை மையமாகக் கொண்டதுதான் என்பது விழாக்குழுவினருக்கு தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போனது, விழாவில் ஏற்பட்ட நெருக்கடிச் சூழல் போலும்.

இதையே  தமிழன்னை தாங்கள் செய்த  பெரும் மரியாதையாக கருதிக்கொள்வாள்.

தமிழ் அன்னை வாழ்க!  தமிழன்னையின் திருவடி  வாழ்க!

பழநி ஆண்டவருக்கே வெளிச்சம்!

அரசு கோடிக்கணக்கில் பொருட்செலவு செய்து நடத்தப்பட்ட இவ்விழா கடைக்கோடியில் உள்ள முருகபக்தருக்குச் சென்று நல்லவிதமாகச் சேர்ந்திருக்க  வேண்டும் என்ற எண்ணம் விழாக்குழுவினருக்கு ஒருவேளை இருந்திருந்தால், இம் மலரினை மேற்கண்ட ஏதாவது ஒரு வழிமுறையைப்  பின்பற்றி ஒன்றன்பின் ஒன்றாகத் திரட்டித் தொகுத்திருப்பார்கள். என்ன காரணத்தினால் அவ்வாறு செய்யாமல் விட்டார்கள் என்பது பழநி ஆண்டவருக்கே வெளிச்சம். 

தமிழகத்திலுள்ள பல்வேறு கல்லுாரிகள், பல்கலைக்கழகம், தமிழ் அமைப்புகளின் சார்பாக  நடத்தப்பெறும் கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கும் ஆற்றல் மிகுந்த பேராசிரியர்கள் விழாக் குழுவினருக்கு  தெரியாமல் போனது தான் ஆச்சரியத்தின் உச்சம். 

இனி வரும் காலங்களில் அரசால் நடத்தப்பெற்று  வெளியீடு செய்யப்பெறும் மாநாட்டு மலர்கள் எதுவாயினும்  எடுத்துக் கொண்ட பொருண்மை அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட கடமைப்பட்டு இருக்கிறோம்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்;
           நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்!
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்;
           இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை!
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
           சங்கரன் நற்சங்க வெண் குழைஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்
             மலர்ச் சேவடி குறுகினோமே

              -திருநாவுக்கரசு சுவாமிகள் 

மற்றொரு மலரினை  உருவாக்க விருப்பமா?  

பழநியம்பதியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திய மாண்பாளர்களே!  இலக்கிய ஆய்வாளர்களே! தமிழ்ப் பற்றாளர்களே!  உங்கள் கனிவான கவனத்திற்கு… 

பழநி தல இலக்கியங்களை  இலக்கண, இலக்கிய நோக்கில் வரிசைப்படுத்தி  வகைப்படுத்தி தொகுத்து அனைவரும் பயனுமாறு செய்வீர்களா?

ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் இப்பட்டியலை  கையில் எடுத்து இதன் தன்மை இது தான் என்பதை உறுதிப்படுத்துவார்களா? 

தேவையில்லாத விஷயத்திற்கு எல்லாம்  நிதி ஒதுக்கும்  அரசு இந்நூற்பட்டியலில் உள்ள தமிழ் நூற்களையும் அதன் சிறப்புகளையும்  செம்மைபடுத்த முயற்சி மேற்கொள்ளுமா? 

இக்கட்டுரையின் நோக்கம் புரிந்துணர்ந்து கொள்ளப்படுமா…  அல்லது அப்படியே இருந்து விடுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

மாதா பிதா குரு தெய்வங்கள் எல்லாம் இங்கெனக்கு 
நீதான் எனை விலக்கல் நீதியன்றால் - ஆதாரம் 
வேறுணர்கிலேன் பழநி வித்தகா வெவ்வினையை
நீறுசெயல் வேண்டும் இன்றே நேர்ந்து. 

     -மாம்பழக் கவிச்சிங்க நாவலர்

பழநி தல இலக்கியங்கள்:

ஒவ்வொரு தலத்தின் அருமையையும் பெருமையையும் அறிந்துகொள்ள உதவுவது அவ்வூரில் வாழ்ந்த  புலவர் பெருமக்களால் இயற்றப்பெற்ற இலக்கியங்கள். அவர்களாலும்,  பிற ஊர்களில் வாழ்ந்த  பண்டிதர்களும் அங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் மீது ஏற்பட்ட பேராத அன்பு, தீராத காதலினாலும்  உண்டான பக்தியின் மூலம்  அவர்களுக்கு ஏற்பட்ட அருள் அனந்த அனுபவத்தையும், அக்கடவுளின் பாராக்கிரம திருவிளையாடல்களையும் மற்றவர்களும் அறிந்துணர்ந்து கொள்ளும் பொருட்டு  ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற திருமூல தேவ நாயனாரின் திருவாக்கினை  உணர்த்தும் விதமாக இயற்றப்படுவதை அத்தல இலக்கியங்கள் என்றும்,  பனுவல்கள் என்றும் சொல்லுவர். 

அறுபடை வீடுகளில் ஒன்றான திருவாவினன்குடி என்னும் பழநிமலையின் மீது கோயில் கொண்டுள்ள தண்டபாணி தெய்வத்தின் மீது அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழ் 96 . அவற்றைத் தவிர  பல்வேறு காலங்களில் வாழ்ந்த  புலவர்களால்  விரும்பி இயற்றப்பட்ட பாமாலைகளின் பெயர்கள் முடிந்த அளவு அதன் ஆசிரியர் பெயர்களுடன்  சேகரிக்கப்பட்டுள்ளன. சைவத்தமிழ் இலக்கிய உலகம் ஏற்றருளும் என நினைக்கிறோம்.  

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

* பழநி திருவாயிரம் 
* பழநி அலங்காரம் 
* பழநி நடுவொலி அந்தாதி
* பழநி யமக அந்தாதி 
* பழநி வெண்பா அந்தாதி 
* பழநி பதிற்றுப்பத்து அந்தாதி
* பழநி குருபர மாலை 
* பழநி ஆண்டவர் மாலை 
* பழநி சித்தி மாலை 
* பழநி வெண்பா மாலை 
* பழநி நவமணி மாலை
* பழநி ஒருபா ஒருபது
* பழநி கலம்பகம் 
* பழநி அகப்பொருள் கோவை
* பழநி நவரசம் 
* பழநி பிள்ளைத்தமிழ் 
* பழநி தெய்வத்துணை பதிகம்
* பழநி திரிபு மஞ்சரி 
* பழநி வகுப்புகள் 
* பழநி கலவி மகிழ் வண்ணம் 
* பழநி முருகானந்த லாகரி 

மாம்பழக் கவிச்சிங்க நாவலர் 

* பழநி சிலேடை வெண்பா 
* பழநி வெண்பா அந்தாதி
* சிவகரி யமக அந்தாதி
* பழநி குமரன் அந்தாதி  
* பழனாபுரி மாலை  
* பழநி நான்மணி மாலை
* பழநி நவமணி மாலை 
* பழநி பதிகம்
* சிவகரி பதிகம்
* சிவகரி சந்தத்திருப்புகழ் 
* திருவாவினன்குடித் திருப்புகழ் 
* பழநி கோயில் விண்ணப்பம்

விசயகிரித் துரை 

* குமரவடிவேலன் வண்ணம் 
* முருகையன் வண்ணம் 
* பழநியாண்டவர் சமயமாலை 
* பழநியாண்டவர் காவடிப்பாட்டு
* பழநியாண்டவர் வருகைப்பத்து 

மண்ணிவாக்கம் மனோன்மணியம்மையார்  

* பழநிப்பாமாலை
* பழநி சிங்காரமாலை 
* பழநி சந்நிதி முறை
* பழநி இரங்கல் 
* பழநி வெண்பா பதிகம் 

குமாரசாமி முதலியார்  

* தண்டபாணி கடவுள் பஞ்சரத்ன மாலை 
* பழநி மும்மணி மாலை 
* பழநி ஆண்டவர் சதகம் 
* பழநி ஆண்டவர் வண்ணம் 

உ.வே.சாமி நாதையர் 

* தண்டபாணி விருத்தம்
* பழநி இரட்டை மணிமாலை 
* பழநி பிள்ளைத்தமிழ் 

துரைசாமி கவிராயர் 

* பழநி ஆண்டவர் வெண்பா அந்தாதி
* பழநி நடுவொலி அந்தாதி 
* பழநி ஆண்டவர் திருவருட் பாசுர அந்தாதி

வை.அகிலாண்டநாயகி அம்மாள்

* பழநி ஆண்டவர் பாமாலை 
* வடிவேலன் சந்நதி முறை 
* பழநி பதிற்றுப்பத்து  

 பேரா.கண்ணப்பன்

* பழநி அலங்காரம் 
* பழநி கலிவிருத்தம் 
* திருஆவினன் குடி முருகன் பதிகம்

வே.முத்தன் ஆசாரி 

* பழநி குறவஞ்சி நாடகம் 
* பழநி ஆண்டவர் பவளக்கொம்பு 
* பழநி ஆண்டவர் விறலிவிடு துாது 

பழநி பாலசுப்பிரமணியக் கவிராயர்

* பழநித் தல புராணம்
* பழநி அந்தாதி

தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்  

* திருவாவினன் குடி பதிற்றுப்பத்து அந்தாதி 
* பழநி குழந்தை வேலவர் பஞ்சரத்ன மாலை

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

* தண்டபாணி பதிற்றுப்பத்து அந்தாதி 
* பழநி யமக அந்தாதி 

விஜயகிரி சின்னோ வேலவையன் 

*  பழநி பிள்ளைத்தமிழ் 
* வையாபுரிப்பள்ளு 

சிவசூரியம் பிள்ளை 
* பழநி அந்தாதி 
* பழநி ஆண்டவர் வெண்பா அந்தாதி

குன்றத்துார் குமாரசாமி முதலியார்   
* பழநி மும்மணிக்கோவை
* பழநி தண்டபாணி ஒருபா ஒருபது 

மெளனகுரு மூர்த்தி
* பழநி சிவசுப்பிரமணியர் பேரில் கவித்திரட்டு 
* பழநி ஆண்டவர் இசைப்பாடல்கள்

நா.முருகேச கவிராயர்
* பழநியாண்டவர் பாமாலை
* பழநியாண்டவர் திருப்பள்ளி எழுச்சி

பூவை. கல்யாணசுந்தர முதலியார்
* இடும்பன் கவசம், கடம்பன் கவசம் 
* பழநியாண்டவர் பண்டாரப்பாட்டு

மேலும் சிலரது நூல்கள்:

துறைமங்கலம் சிவப்பிரகாசர் – பழநி மலை அந்தாதி 
பாலசுப்பிரமணியர் ஐயர் குரு – பழநி பதிற்றுப்பத்து அந்தாதி 
சரவணப் பெருமாள் படையாச்சி – பழநி பதிற்றுப்பத்து அந்தாதி
பெ.அண்ணாமலைக்கவிராயர் – பழநி பதிற்றுப்பத்து அந்தாதி 
பாலகவி வே.ராமநாதன் செட்டியார் – பழநி பதிற்றுப்பத்து ஆவினன்குடி அந்தாதி
குமரர்சுப்பையா நாயக்கர் – சிவகரி பதிற்றுப்பத்து அந்தாதி 
 
கே.எம்.பாலசுப்பிரமணியம் – திருப்பழநி வெண்பா அந்தாதி
பாலசுப்பிரமணியன் – பழநி யமக அந்தாதி 
க.மு.சுந்தர கணேசன் – பழநி அந்தாதி   
சண்முகானந்த அடிகள்  – பழநி சோடச மாலை  
சண்முகம் செட்டியார் – பழநி ஆண்டவர் மாலை
கொற்கையூர் பாவலன் பாரதியார் – பழநி மாலை 

பழநி சின்னப்ப நாயக்கர்  – பழநி பிள்ளைத்தமிழ் 
தெய்வப்பெருமாள் பிள்ளை – பழநி சுப்பிரமணியர் பதிகம் 
மாணிக்கவாசக சரணாலய சுவாமிகள் – திருப்பழநி பதிகம்
சொக்கலிங்க தேசிகர் – பழநியாண்டவர் பதிகம்
நாராயண முதலியார் – தண்டபாணி பஞ்சரத்ன பதிகம்
முத்துக்குமாரசாமி முதலியார் – பழநிப்பத்து பதிகம்

கு.துரைசாமி வாத்தியார் – பழநியாண்டவர் பதிகம்
வீராச்சாமி பிள்ளை – பழநி பதிகங்கள்     
ஞானபதி கவிராயர் – பழநி சிவகிரி சதுரங்க சிலேடை வெண்பா
ருத்திரகோடி பிள்ளை  – திருப்பழநி பாமாலை வெண்பா
நாராயணப்பிள்ளை – பழநி வெண்பா
முதுகுளத்துார் சரவணப்பெருமாள் – பழநி சிலேடை வெண்பா 

வே.மகாதேவ முதலியார் – பழநி நான்மணி மாலை 
குருசாமி முதலியார் – பழநி ஆண்டவர் தோத்திர பாமாலை 
நா.ந.சி. குருசாமி முதலியார் – பழநி ஆண்டவர் தோத்திர மாலை
அத்தனுார் சுவாமிகள் – பழநிவேல் மெய்ஞான மாலை
அ. சிவசங்கர மூர்த்தியா பிள்ளை – சிவகிரி பழநிப் பாமாலை
பொன்னம்பலப்பிள்ளை – பழநி குமரன் பாமாலை 

எஸ்.கோவிந்த ஐயங்கார் – பழநிகுமரன் பாமாலை  
காதர் மொய்தீன் மஸ்தான் – பழநியாண்டவர் மாலை
கோவை. கந்தசாமி முதலியார் – பழநிமலை உயிர் வருக்க மாலை
சுப்பிரமணிய முதலியார் – பழநி முருகக்கடவுள் பஞ்சரத்ன மாலை  
டி.கே.ராமானுஜ ஐயங்கார் – பழநிக்கோவை 
ஆர்.எஸ்.மயில் சாமி – பழநி ஆண்டவர் திருப்பள்ளி எழுச்சி
 
கோவிந்த சாமி உபாத்தியாயர் – பழநி ஆண்டவர் பஞ்சரத்னம்
 நடேசக் கவுண்டர் – பழநி ஆண்டவர் மயில் விடுதுாது
சீனிசர்க்கரை புலவர் – புகையிலை விடுதுாது (பழநிமலை தொடர்புடையது) 
வாகு சிங்கன் – பழநி நொண்டி நாடகம்
கவியோகி சுத்தானந்த பாரதியார் – பழநி அருளமுதம்
பழநி பச்சையண்ண வேள் – முருக நிலைய மயில் சிந்து

பழநி துர்கைமுத்துப் புலவர்  –  பழநி தண்டபாணி காவடிச் சிந்து
பெரியசாமி தூரன் – பழநி முருகன் காவடிச்சிந்து 
 ரா.முருகேசக் கவிராயர் – பழநியாண்டவர் அம்மானை
இளங்கம்பன் – பழநியாண்டவர் சந்நிதி விண்ணப்பம்
சின்ன ஆறுமுகசாமி – பழநி ஆண்டவர் பாராயணம் 
திரு.கணபதிபண்டாரம் – பழநியாண்டவர் கீர்த்தனை 

சித்திரகவி பழநிசாமி – பழநியாண்டவர் அட்ட நாக பந்தனம் 
கோவை. சி.கு.நாராயணசாமி முதலியார் – தண்டபாணி பஞ்சரத்ன பதிகமும் திருப்புகழும் 
திண்டுக்கல் எல்.ஏ.வெங்குசாமி ஐயர் – பழநியாண்டவர் புகழ்
நெல்லையப்ப பிள்ளை – பழநி ஆண்டவர் தோத்திரம் 

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுால் நிலையம் – பழநி வேலவர் தோத்திரம்
கு.சுப்பிரமணிய வாத்தியார் – பழநி ஆண்டவர் கடவுள் தோத்திரத்திரட்டு
ஞா.தேவநேயன் – பழநி தமிழ்த்திரட்டு 
நல்லப்பிள்ளை – இடும்பேசர் துதி
தனிப்பாடல்கள் – புத்தனேரி ரா. நடராஜன், செளந்திர கைலாசம் 

ஆசிரியர் பெயர் தெரியாத நூல்கள்:

* பழநியான் காதல் 
* பழநிக் குறவஞ்சி

வசன நூல்கள்: 

* பழநி தல மகாத்மியம் – பி.நடராஜ பண்டாரம் 
* பழநி மலை மகத்துவம் – நாராயணசாமி முதலியார்
* பழநி தல புராண வசனம் – நா.கதிரைவேற் பிள்ளை
* பழநி தல புராண வசனம் – பாலக்காடு கந்தசாமியா பிள்ளை 
* பழநியாண்டவர் ஸ்தல வரலாறு – என்.கே.முகம்மது ஷெரீப் 
* கும்பாபிஷேகத்தின் போது வெளியீடு செய்யப்பட்ட ஞாபகார்த்த மலர்கள்.

ஓலைச்சுவடியில் உள்ள நூல்கள்:

பழநி அடைக்கலப்பத்து, 
பழநி வேலவர் வருகைப்பத்து, 
பழனி இரட்டை மணிமாலை, 
பழனிக் காவடிச் சிந்து, 
பழனிக்கிரியின் உச்சிவகுப்பு, 
பழனிக்கோவை, 

பழனி கலித்துறை மாலை, 
பழனி சந்தப்புகழ் வண்ணம், 
பழனி சுப்பிரமணியர் மாலை,
பழனிப் பதிகம், 
பழனிப் பன்னிரு பதிகம், 
பழனிமலை வடிவேலர் பதிகம்,  

பழனிமலைக் குமரன்துதி,  
பழனி மாதப் பதிகம், 
பழனிமாலை, 
பழனியந்தாதி, 
பழனியாண்டவர் அகவல், 
பழனியாண்டவர் ஆனந்தக்களிப்பு,

பழனியாண்டவர் கலித்துறை மாலை, 
பழனியாண்டவர் காவடிச்சிந்து, 
பழனியாண்டவர் திருவிருத்தம்,  
பழனியாண்டவர் பேரில் விருத்தம், 
பழனியாண்டவர் மாதப் பதிகம், 
பழனியாண்டவர் வண்ணம், 

பழனி லாலிப்பாட்டு,
பழனிவடிவேலர் பள்ளு, 
பழனி வாரப் பதிகம், 
பழனி வெண்ணீற்றுப் பதிகம்,
பழனிவேலவர் துதி, 
பழனிவேலவர் தோத்திரம், 

பழனிவேலன் மாதாந்திர தோத்திரம், 
பழனிவேலன் வாரப்பதிகம்,
பழனி பரமசற்குரு பதிகம், 
பழனி மகுட ஆசிரியப் பதிகம், 
பழனி குமரகுருபர தேசிகப்பதிகம், 

பழனித் திருப்புகழ்ப் பதிகம், 
படைவீட்டுப் பதிகம், 
படைவீட்டுத் திருப்புகழ், 
பழனிமலைக் கந்தசுவாமி கலித்துறை மாலை 

இவை தவிர, காகிதக் கையெழுத்துப்படிகள், தற்கால நூலாசிரியர்களின் பழநித்தலம் பற்றியும் பழநிமலை முருகப் பெருமானைப் பற்றியும் எழுந்த நூல்கள் எண்ணிக்கையில் அடக்க இயலாதவை.

இவற்றை யெல்லாம் ஒன்றாகத் திரட்டி  ‘பழநிமலை முருகப்பெருமான்  இலக்கியக் களஞ்சியங்கள்’ என்ற பெயரில் ஆக்கப்பூர்வமான தொகுப்பு நுால் ஒன்றை கூடுதலாக உருவாக்கி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு குழுவினர் வெளியீடு செய்ய முயற்சி எடுத்திருப்பார்களேயானால், அவர்களுக்கு புண்ணியமாகவும், மற்றவர்களுக்கு அதீத புண்ணியமாகவும் என்னைப் போன்றவர்களுக்கு மிக்க  பயனுடையதாக அமையும்.

நிறைவாக, தமிழின் மீது பேரார்வம் கொண்டவர்கள், தமிழையே உயிர்மூச்சாக நினைத்து வாழ்பவர்கள், முருகனே முழுமுதற் தெய்வம்; அவனைத் தவிர மற்றொரு தெய்வத்தை கனவிலும் நினையேன் என வைராக்கியமாக வாழ்பவர்கள் தமிழ், முருகனோடு சம்பந்தப்பட்ட அத்துணை நல்லுள்ளங்களும்  இச்செயலை 

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

என்ற திருவள்ளுவதேவ நாயனாரின் திருவாக்கிற்கு நிகராகக் கருதி இச் செயலை விட்டுவிட்டார்கள் போலும் என நினைத்து ஒருவாறு  அமைதி கொள்கிறேன்.  

தெய்வச் சேக்கிழார் சுவாமிகளின்  அருள் வாக்குகளில் ஒன்றாகிய  ‘முன்னவனே முன் நின்றால் முடியாத பொருளுளதோ?’ என்ற திருமொழியை நினைவு கூர்ந்து இந்த சிந்தனைக்குத் தோன்றாத துணையாக நிற்கும் தமிழாகிய முருகப்பெருமானை

உலகத்தின் முதலாய் நின்ற ஒரு தனிப்பொருளே போற்றி 
கலைகட்கும் உணர ஒண்ணாக் கருணை வாருதியே போற்றி 
மலைவிற்கைப் பெருமான் கண்ணின் வந்தமா மணியே போற்றி 
புலமைக்கும் தலைமையான புண்ணியா போற்றி! 

பேரழகுடைய தெய்வப் பிடிபுணர் களிறே  போற்றி 
கோர வெஞ் சிலைக்கை வேடர் குலமுய்ய வந்தாய் போற்றி 
ஆரமு தனைய எம்மான் அருளுமான் கணவா போற்றி 
சூருடற் குருதி மாறாச் சோதிவேற் கடம்பா போற்றி!

என துதி செய்து பரம்பொருளின் திருவடியை மனம் மொழி மெய்களால் வணங்குவோமாக!

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! 
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
வேலும் மயிலும் துணை!
வாழ்க பாரதம்! வாழ்க தாய்த் திருநாடு!

$$$

One thought on “சொன்னாலும் விரோதம்! சொல்லாவிட்டாலும் விரோதம்!   

Leave a comment