திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -106

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நூற்றாறாம் திருப்பதி...

106. கண்ணன் வளர்ந்த திருவாய்ப்பாடி  

யமுனை நதி கடந்து, யசோதா மடி கிடந்து,
நஞ்சுமுலை உண்டு, நர்த்தனங்கள் காளிங்கன் மீது ஆடி,
கோவர்த்தன மலை கொண்டு, மாயங்கள் புரிந்த கண்ணன்
கோபால கிருஷ்ணனாய் நின்ற இடம் திருவாய்பாடியே!

தாய்மாமன் கம்ஸனின் கோரப்பிடியில் இருந்து தப்பி கண்ணன் சிறு குழந்தையாக வளர்ந்த இடம், கோகுலம் எனப்படும் திருவாய்ப்பாடி (ஆயர்பாடி). வாசுதேவனும் தேவகியும் ஈன்ற பெற்றோர் என்றாலும், வளர்த்த பெற்றோர் நந்தகோபரும் யசோதையும் தான். ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்த கிருஷ்ணன், இங்குதான் பத்தாண்டுகள்  பல திருவிளையாடல்கள் புரிந்தான். நந்தக்கிராமம், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய பகுதிகள் இதில் அடங்கும்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட கோயில்களோ மூர்த்திகளோ இங்கு தற்போது இல்லை; படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டுவிட்டன.  இப்போது உள்ளவை எல்லாம் பிற்காலத்தவை. கோகுல் என்ற இடத்துக்கு சுமார் முக்கால் மைல் தூரத்தில்  புராணா கோகுல்’ (பழைய கோகுலம்) என்று ஓர் ஆலயத்தை ஸ்தாபித்துள்ளனர். கோயில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது. நந்தகோபர், யசோதை, பலராமர் விக்ரஹங்களுக்கடியில் குழந்தை கிருஷ்ணன் ஒரு சிறிய மரத்தொட்டிலில் சேவை சாதிக்கிறார். இவை எல்லாம் மர விக்ரஹங்கள். இந்த இரண்டு கோகுலங்களில் எது உண்மையானது என்று தெரியாததால், இரண்டையும் சேவித்துவிடுவது நல்லது.

கிருஷ்ணனின் இளமைக் கால வாழ்க்கையோடு தொடர்புடைய இடம் விரஜ பூமி என்று அழைக்கப்படுகிறது. விரஜபூமியின் பெரும்பகுதி உத்தரப்பிரதேசத்திலும், சில பகுதிகள் ராஜஸ்தான், ஹரியாணாவிலும் அமைந்துள்ளன. மகாவனம், காம்யவனம், மதுவனம், தாளவனம், குமுதவனம், பாண்டிரவனம், பிருந்தாவனம், கதிரவனம், லோஹவனம், பத்ரவனம், பஹுளாவனம், பில்வவனம் ஆகிய 12 காடுகள் பிருந்தாவனத்தில் உள்ளன. இவற்றுள் 7 வனங்கள் யமுனைக்கு மேற்குக் கரையிலும், 5 வனங்கள் கிழக்குக் கரையிலும் உள்ளன.

கிருஷ்ணர் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர்பாடியான கோகுலம் ஆகியவை விரஜபூமியில் உள்ளன. 285 கி.மீ. சுற்றளவு கொண்ட விரஜபூமியை வலம் வருவது ‘விரஜ் பரிக்ரமா’ என்று அழைக்கப்படுகிறது. இதை முழுவதுமாக வலம் வர இரண்டு மாதங்கள் வரை ஆகும். நிம்பார்க்கர், வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள் ‘பரிக்ரமா’வை முக்கியமாகக் கருதுகின்றனர்.

மூலவர்: நவமோகனகிருஷ்ணன் (நின்ற திருக்கோலம் – கிழக்கே திருமுக  மண்டலம்)
தாயார்: ருக்மணி – சத்யபாமா
விமானம்: ஹேமகூட விமானம்
தீர்த்தம்: யமுனை நதி
மங்களா சாசனம்: பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?

உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில், மதுரா நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவாய்ப்பாடி (கோகுலம்). யமுனை நதி கடந்து அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். 

சேவிப்பதன் பலன்கள்:

குழந்தை இல்லாதவர்களும், வறுமையில் வாடுபவர்களும் நோய்வாய்ப் பட்டவர்களும் வந்து கிருஷ்ண பரமாத்மாவை    நிவாரணம் அடையலாம். 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும், 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment