திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -104

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நூற்று நான்காம் திருப்பதி...

104.  கண்ணன் ஆண்ட துவாரகை

முடியாதது எதுவுமில்லை, அறியாதது எதுவுமில்லை,
கிட்டாதது எதுவுமில்லை, கிருஷ்ணனின் பார்வை பட்டால் – நீ
அணுவுக்குள் அணுவாய் உள்ளாய், அகண்டத்தையே அளந்து நிற்பாய்,
தூணுக்குள் சிங்கமானாய், துவாரகையில் கண்ணன் ஆனாய்,
மீனுக்கு நீரைப்போல மனதுக்கு நீயே ஆனாய்!
தேவகி பெற்றவனே, தேடி நான் துவாரகை வந்தேன்…
வானவர் போற்றும்படி வாழ வைப்பாயே!

மோட்சத்தை அடைய வழி (துவாரம்) காட்டும் இடம் என்பதால் துவாரகை என்று காரணப்பெயர் பெற்ற தலம். முக்தித்தலங்களில் கடைசியான ஏழாவது ஷேத்திரம். கோமதி நதி மேற்குநோக்கி ஓடி சிந்துசாகரில் (அரபி கடல்) கலக்கும் இடம் இது. இங்கு கோமதி துவாரகை, டாகுர் துவாரகை, பேட் துவாரகை, மூல துவாரகை, ஸ்ரீநாத துவாரகை என்று பஞ்ச துவாரகைகள் உள்ளன.

கம்ச வதம் முடிந்ததும் மதுராவுக்கு உக்கிரசேனன் அரசனாக்கப்பட்டான். இது கம்சனின் மாமனார் மகத தேச மகாராஜாவான ஜராசந்தனுக்கு கோபத்தை உண்டாக்கியது.  அவர் கிருஷ்ணர் (மதுரா) மீது 16 முறை படையெடுத்து தோற்றுப் போனார். அதையடுத்து காலயவனன் என்ற அரசன், மதுராவைத் தாக்க வந்தான். மீண்டும் கிருஷ்ணரோடு போரிட ஜராசந்தனும் வந்தான். இரண்டு எதிரிகளை ஒரே சமயத்தில் சமாளிக்க இயலாது என்பதை உணர்ந்த கிருஷ்ணர், மதுராவில் இருந்த யாதவ மக்கள் அனைவரையும்  யாதவ சேனைகளையும்  அழைத்துக் கொண்டு மேற்குக் கடற்கரைப் பக்கம் குடிபெயர்ந்தார்.

அப்போது சமுத்திரராஜனிடம் பன்னிரண்டு யோசனை தூரம் கடலில் இடம் வேண்டும் என்று கேட்டார். அதன்படி 12 யோசனை தூரம் கடல் உள்வாங்கியது. அவ்விடத்தில் தேவதச்சன் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரே இரவில் தங்கத்தால் ஆன நகராக துவாரகையை கோட்டை நகரமாக உருவாக்கினார் கிருஷ்ணர். சௌராஷ்டிரா தேசம், ஜாம் நகர் அருகில் கடலோரத்தில் ஆட்சி புரிந்து வந்த மகாராஜாவின் மகள் ருக்மணியை மணம் முடித்து 100 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்பது ஐதீகம். மகாபாரத (துவாபர யுகத்தின் இறுதி- கலியுகத் தொடக்கம்) முடிவில் துவாரகையை கடல் கொண்டுவிட்டது. இப்போது இருப்பது கடற்கோளில் மிஞ்சிய பகுதியும் அதையொட்டி உருவான நகருமே ஆகும். தற்போது கடலுக்கடியில் மூழ்கிய துவாரகையில் அகழ்வாராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ள துவாரகாதீசர் கோயிலுக்கு பல படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். நான்கு நிலை கொண்ட 51.8 மீட்டர் உயர கோபுரத்துடன் அமைந்துள்ள கோயிலுக்குள் 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபம் உள்ளது. மென்மையான சுண்ணாம்புக் கற்களால் ஆன இக்கோயில் கருவறை, ரேழி, பெரிய மண்டபம், அதைச் சுற்றி மூன்று தலைவாசல்களையும் கொண்டுள்ளது. கருவறையில் சங்கு, சக்கர, கதாபாணியாக தாமரையுடன் ராஜ அலங்காரத்தில், தலையில் முண்டாசுடன் துவாரகாதீசர் அருள்பாலிக்கிறார்.

கோயிலின் பின்வாயில் வழியாக 56 படிகள் இறங்கினால் கோமதி நதியை அடையலாம். கோமதி நதியில் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சங்கர மடம் துவாரகையில்  உள்ளது.

காலையில் பாலகிருஷ்ணனாகவும், பகலில் அரசரைப் போலவும், மாலையில் பூஜிக்கத்தக்க அலங்காரத்துடனும் துவாரகாதீசர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். துவாரகா நகருக்கு அருகில் உள்ள துவாரகா தீவில் உள்ள அரண்மனையிலும் கிருஷ்ணர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இங்கு கிருஷ்ணரின் பட்டத்தரசிகள், அண்ணன் பலராமர், குரு துர்வாசர், தேவகி, கல்யாணராமர், சுதாமர், துளசி, திரிவிக்கிரம மூர்த்தி, லட்சுமி நாராயணர் கோயில்கள் உள்ளன. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் சங்க தீர்த்தம் அமைந்துள்ளது. தீவு துவாரகையில் ருக்மணிக்கு தனிக் கோயில் உள்ளது.

மூலவர்: கல்யாண நாராயணன், துவாரகாதீசன் (நின்ற திருக்கோலம் – மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: கல்யாண நாச்சியார், பாமா, ருக்மணி, ராதை
விமானம்: ஹேமகூட விமானம்
தீர்த்தம்: கோமதி ஆறு  சமுத்ர சங்கமம் 
மங்களா சாசனம்: பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் திருமழிசையாழ்வார், நம்மாழ்வார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை
மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை

எப்படிச் செல்வது?

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் துவாரகை உள்ளது. மும்பை- அகமதாபாத்- வீராமகாம் – ராஜ்கோட் -ஜாம்நகர் வழியாக ஓசா துறைமுகம் செல்லும் பாதையில் துறைமுகத்திலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். 

சேவிப்பதன் பலன்கள்:

எதிர்ப்புகள், தோல்வி பயம், மனக்குழப்பம், பணக்கஷ்டம், நோய்க் கொடுமை யாவுயும் தீரும் இத்தலம் வந்து பிராத்தனை செய்தால். 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களும், 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment